விழா  எடுத்துப்பார்...  

                            

     ப.சிதம்பரம்:  

     கதைகளை நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து எழுதிவிடலாம். கற்பனையில் உலகத்தையே சுற்றலாம்.

  ஆனால், செய்தி தொகுப்பதோ, பேட்டி எடுப்பதோ அப்படி முடியாது. ஊரெல்லாம் சுற்றி அலைந்து –களைந்து செயல்பட வேண்டியிருக்கும். ஒரு விழாவை ஏற்பாடு செய்வதிலும் கூட இதே அலைச்சல்தான்.

   கதைகள், நாவல் என்றிருந்த என்னை, முதலீடு எனும் பத்திரிகையின் ஆசிரியர் அரிதாசன், ``குவைத்திலிருக்கிற பிசினஸ்மேன்களை சந்தித்து தொடராக எழுதித்தர முடியுமா?” என்று கேட்டார்.

   குவைத்தில் என்றில்லை, உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பல பெரிய பதவிகள் வகித்தாலும் கூட, அது சரியாய் வெளிப்படுவதில்லை. இந்தியா என்றால் ஏழைநாடு –என்கிற துச்சமான கண்ணோட்டமே பொதுவாய் இருந்து வருகிறது.

   குவைத்தை எடுத்துக்கொண்டால் –எழுபது சதவிகித கம்பெனிகளிலும், பிசினஸ்களிலும் இந்தியர்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர். அவற்றை பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும். என்கிற தாக்கம் மனதில் நீண்டநாளாகவே இருந்து வந்தது.

   அதற்கு இதை ஒரு வாய்ப்பாய் பயன்படுத்த பல துறைகளிலும் வெற்றிப்பெற்ற இந்தியர்களை சந்தித்து அவர்களின் வெற்றிபெற்ற வரலாறை எழுதி தொகுத்து ஃப்ரண்ட்லைனர்ஸ் என்று ஆங்கிலத்தில் புத்தகமாக தொகுத்தேன்.

   அப்புத்தகத்தை வெளியிட வேண்டி குவைத்திற்கு யாரை அழைத்து வரலாம் என்று யோசித்தபோது முன்னாள் மத்திய நிதி அமைச்சர்களான டாக்டர் .மன்மோகன் சிங் அல்லது ப.சிதம்பரத்தை அனைவரும் சிபாரிசு செய்தனர்.

   மன்மோகன் சிங்கை அணுகியபோது நாங்கள் கேட்ட தேதியில் அவர் பிஸி. சரி சிதம்பரம்தான் சரியான நபர் என்று அவரை ஏற்பாடு செய்ய தீர்மானித்தோம். சிதம்பரம் ரொம்ப கறார் என்று அவரை எளிதில் அணுகமுடியாது –பிடிகொடுத்தே பேசமாட்டார் என்றும் கேள்விபட்டிருந்தேன்.

   அது உண்மை என்கிற மாதிரி –நான் அனுப்பின நபர்கள் எல்லாம் அவரை சந்திக்க முடியாமல் திரும்பிவிட்டனர். எப்படியும் அவரை ஏற்பாடு செய்துவிடுவது என்று விடுமுறைக்கு வைராக்கியத்தோடு வந்தேன். அவர் டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று எப்போதும் ஆகாயத்திலேயே இருந்தார்.

   எனக்கு அவரை முன்பின் அறிமுகமில்லை. விஷயத்தை தினமலர் வாரமலரின் பொறுப்பாசிரியிடம் தெரிவித்தபோது,``கவலைப்படாதீங்க –நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்று நூருல்லா எனும் சீனியர் ரிப்போர்ட்டரை அழைத்து அறிமுகப்படுத்தினார். நூருல்லா பம்பரமாய் சுழன்று –தூர்தர்ஷன் முன்னாள் நியூஸ் எடிட்டரான திருநாவுக்கரசு அவர்களை போய் பாருங்கள் என்றார்.

    திருநாவுக்கரசு, சிதம்பரத்தின் குடும்ப நண்பரும், ஆலோசகரும் ஆவார். அவரே சற்று தயங்கி, ``நான் சிதம்பரத்தை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்கி தருகிறேன். நீங்களே நேரில் பேசிக்கொள்ளுங்கள்” என்றார்.

   அன்றைய பாரதி கலைமன்ற துணைத்தலைவி திருமதி ஆனந்தி நடராஜன், இனியவனுடன் மறுநாள் சிதம்பரத்தை அவரது வீட்டில், அவர் கொடுத்திருந்த நேரத்தில் சந்தித்தோம். குவைத்திற்கு வர ஒப்புக்கொண்டவர்.

   ``தேதி பின்னர் தருகிறேன்’’ என்றார்.

   ``சரி பாஸ்போர்ட் காப்பி கொடுங்கள். விசா எடுத்து அனுப்புகிறேன்’’ என்றேன்.

    உடன் அவர் ``விசாவா- எனக்கா?” என்று சிரித்தார். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்? என்று எழுந்துவிட்டார்.

   அரபு நாடுகளுக்கு அவர் முன்பின் வராததால் விசாபற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விசாவானாலும் இங்கிருந்து தான் எடுக்க வேண்டும் இந்தியாவிலிருந்து எடுக்க இயலாது.

  டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருக்கிற அவரே இந்தியாவில் அப்ளை பண்ணி நொந்துப் போகும்படியாயிற்றாம்.

  சிதம்பரம் பல விஷயங்களில் ரொம்ப கறார். அனாவசிமாய் யாருடனும் பேசுவதில்லை யாரிடமிருந்தும் எதுவும் எதிர்ப்பார்ப்பதுமில்லை. பெறுவதுமில்லை.

   அவரிடம் தேதி வாங்குவதில் சற்று சிரமம் இருக்கவே செய்தது ``அதான் தரேன்னு சொன்னேனே. ஏன் போனுக்கு வீணாய் செலவு பண்றீங்க்க?’’ என்பார்.

   ``இல்லை. இங்கு குவைத்தில் நிகழ்ச்சி நடத்த அதிகமாய் அரங்குகள் இல்லை. தேதி கொடுத்துவிட்டால் அரங்கம் புக் பண்ண வசதியாயிருக்கும்.

   ``என்னால் ரொம்ப முன்னாடி தேதி தர இயலாது. நிகழ்ச்சிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தருகிறேன்’’ என்றவர் அதன்படியே தந்தார்.

   இந்ததேதி வாங்குகிற விஷயத்தில் மூப்பானாரை விட இவர் மேல் என்று சொல்லலாம். சென்னையில் இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நடத்த இலக்கியவீதி அமைப்பு மூலம் ஏற்பாடு நடந்தது.

   அதற்கு மூப்பனார் அவர்களை அழைக்க வேண்டி நானும், இலக்கியவீதி இனியவன் அவர்களும் அணுகினோம். விழாவிற்கு வரசம்மதிக்க மூப்பனார். தேதி பிறகு தருவதாகச் சொன்னார்.

   அவரிடம் தேதி பெற வேண்டி, ஜேடிசி பிரபாகரன் மூலமும் , மற்றவர்கள் மூலமும், மூப்பனார் போகுமிடமெல்லாம் துரத்திச்சென்று, சென்னையிலிருக்கும் போது தேதிதராத அவர் திருநெல்வேலியில் கூட்டம் ஒன்றிற்கு சென்று அங்கிருந்து தேதி கொடுத்தார்.

   அவரது தேதி உறுதி செய்வதற்குள் ஏற்கனவே பதிவு செய்திருந்த அரங்குகளை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. (தலைவர் அரசியல் முடிவு என்றில்லை-எல்லா விஷயத்திலுமே அப்படித்தான் போலிருக்கிறது. ஆற அமர-நம்மை ஆறப்போட்டு-விடுவதில் வல்லவர்.)

   குவைத் வருகை குறித்து சிதம்பரம் எந்தவித கண்டிஷனும் போடவில்லை. ஆனால் புத்தக வெளியீடு தவிர வேறு எந்த நிகழ்ச்சி என்றாலும் என்னை கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

   அதன்படியே அவர் குவைத் வந்தபின்பு மணி வாரியாக அவரது நிகழ்ச்சியை பட்டியலிட்டு அவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றேன்.

   இதில் என்ன ஆச்சர்யம் என்றால் –அந்த பட்டியலில் உள்ள நேரத்தை நாங்கள் மறந்துவிட்டாலும், அவர் மறப்பதாக இல்லை.

   ``மோகன்தாஸ்! பத்துமணிக்கு பிரஸ்மீட்டா. சரி பத்துமணிக்கு பார்க்கலாம்!” என்று அறை கதவை மூடிக் கொள்வார்.

   பத்துமணிக்குப் போனால் அவர் ரெடியாயிருப்பார். அது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் அவர் கறார். எல்லாவற்றையும் விட அவரது துணிச்சலையும், கம்பீரத்தையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.

   அவரது நிகழ்ச்சி குறிப்பில்- குவைத்திலுள்ள பிரபல வங்கி ஒன்றில் சேர்மனை பார்ப்பதாக இருந்தது. சிதம்பரம், ``அவர் எப்போ பார்க்க வரார்?” என்று கேட்டார்.

   ``இல்லை சார். அவர் இங்கு வரலை. நாம்தான் அவரை பார்க்கச் செல்லவேண்டும்’’ என்றேன்.

    ``ஏன்?”

     ``அவர் அரசபரம்பரையை சேர்ந்தவர், அதனால்”

     ``ஸோ வாட்? நான் பர்சனல் விசிட்டில்தான் வந்திருக்கிறேன். அரசாங்க அழைப்பில் வரவில்லை அரசாங்க விருந்தினராக வந்திருந்தால், அவர்கள் அழைக்கும் இடத்திற்கு போய் பார்க்கலாம். ஸாரி! நான் அங்கு வருவதாக இல்லை. வேண்டுமானால் அவர்களை ஹோட்டலுக்கு வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்!”

   அவர் சொன்னதும் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. அருகிலிருந்த இந்திய தூதுவரும் இவரது துணிச்சலை பார்த்து ஆடி போய்விட்டார்.

   சிதம்பரம் தொண்டர்களிடம் எளிதாய் பழகுகிறாரோ என்னவோ தெரியாது. பொருளாதாரத்தைப் பற்றி பிரமாதமாய் பேசுகிறார். குவைத்தில் அவர் கலந்துக் கொண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலுமே அவருடைய பேச்சு வானத்தை தொட்டுவிட்டது.

   சிதம்பரத்தை எத்தனையோ உள்ளூர் வி.ஐ.பிகளும், இந்திய பிசினஸ்மேன்களும் சந்திக்க வந்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த பரிசு பொருட்கள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோருக்குமே ``ஸாரி!”

   வி.ஐ.பி.கள் என்றில்லை –நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்கிற முறையில் நாங்கள் கொடுத்த பரிசைகூட அவர் மறுத்திவிட்டார்.

   (அவரது மகனின் திருமண அழைப்பிதலில் பரிசளிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தும் கூட பலரும் பரிசளித்துவிட –திருமணம் முடிந்து அவற்றையெல்லாம் –ஆள்வைத்து சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைத்தவராயிற்றே சிதம்பரம்!) பரிசு என்றில்லை-

   ``ஏதாவது வாங்கலாம் –ஷாப்பிங் அழைத்துப் போங்கள்!” என்றார். சரி என்று அழைத்துப் போனோம். சில அரபிவகை பொருட்கள் வாங்கினார். நான் பில் பே பண்ணினேன். அவர் மறுக்கவில்லை. அட இதாவது வாங்கிக் கொண்டாரே எங்களுக்கு திருப்தி.

    ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ரூமிற்கு வந்ததும் நான் கொடுத்த தொகையை கணக்கு பண்ணி தன் பெட்டியிலிருந்து டாலராக திருப்பி தந்துவிட்டார்.

    ``என்ன சார் இதெல்லாம்?”

    ``நோ...நோ..பிடிங்க!’’ என்று ஒரு முறை முறைத்து டாலரை கையில் திணித்துவிட்டார்.

     இந்த காலத்திலும் இப்படியும் ஒரு அரசியல்வாதி! நேர்மையாகவும் கறாராகவும் இருப்பதால்தான் எலக்‌ஷனில் அவர் தோற்றுப்போக வேண்டி வந்ததோ!

      திரு.ப.சிதம்பரம் குவைத்தில் ஃப்ரண்டலைனர்கள் புத்தகத்தை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய கெளரவத்தை ஏற்படுத்தி தந்தது உண்மை. இந்த நிகழ்ச்சி பாரதி கலை மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

 

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles