HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

 

   அண்ணனோட செலக்‌ஷன் சூப்பர்! என்று நகைகளைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து குதித்தாள். குதூகலித்தாள்.

   ஒவ்வொன்றின் நேர்த்தியையும் பார்த்து ஆச்சரியப்பட்டவள், ஏதோ ஒன்றைப் பிரித்தபோது கோபி தலையை துவட்டிக் கொண்டு வர, ``இது என்னண்ணா? என்றாள்.

    அறை முழுக்க இறைந்து கிடந்த சாமான்களைப் பார்த்தவனுக்குச் சட்டென கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, ``பிஸ்கட் என்றான்.

   ``பிஸ்கட்டா...நல்ல கனமா இருக்கு!

   ``கழுதை! அது சாதா பிஸ்கட் இல்லை, தங்கம்!

   `` தங்கமா....? சுதா கேட்டுவிட்டு உருகிப்போனாள்.

   ``ஆமாம். இருபத்து நாலு கேரட் தங்கம்.

   அதற்குள் அம்மாவும் வந்து கண்விரித்து, ``அம்மாடி! சினிமாவுலதான் இது மாதிரி கட்டிக் கட்டியா பார்த்திருக்கேன். இவ்ளோவும் நமக்கா கோபி?

   அந்தக் கேள்வியில் இருந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவனை உஷாராக்கிற்று. ``இல்லைம்மா. என் நண்பன் ஒருவனோடது. அவங்க வீட்டுக்கு வாங்கிக் கொடுத்திருக்கான்.

    ``இதெல்லாம் எத்தனை லட்சம் பெறும்னான்?

    ``சரியா தெரியலை. நிறைய இருக்கும். அம்மா! எனக்குப் பசிக்குது. சுதா! என்னைக் கேட்காம இனி எதையும் தொடாதே!

   அந்தக் கண்டிப்பு அவளது முகத்தைக் கறுக்க வைத்தது.

   இதுவரை வீட்டில் யாரும் சுதாவைக் கடித்து பேசினதில்லை. கோபியும் அப்படித்தான். இப்போது அவனுக்கு என்னாச்சு? பணம் வந்ததும் மாறிவிட்டானா என்று நினைத்தபோது சுதாவின் கண்கள் கலங்கிவிட்டன.

   அவள், துணிமணிகளையும் பெட்டியையும் அப்படியே போட்டுவிட்டு அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள். சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிக்கொண்டிருந்த கவுசல்யாவிற்கு மனது இளகிப் போயிற்று.

   கோபி எதைப்பற்றியும் சிந்திக்காமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.

   வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு இரண்டு ஆண்டாயிற்று. துபாயில் எப்போதாவது நண்பர்களின் வீட்டில் சாப்பிடுவதுண்டு. மற்ற நேரங்களில் மெஸ்! கெட்டியான இட்லி, கடினமான பூரி, புட்டு, ப்ரோட்டா என்று வயிறு மரத்துப் போயிருந்தது. நாக்கில் உணர்வில்லை.

   வேலைக்குப் போனால் `குட்பூஸ் எனப்படும் பிரட்! மிக மலிவாகக் கிடைக்கும். அதுதான் அங்கு வசதியில்லாத சம்பளம் குறைந்த தொழிலாளிகளுக்கு உணவு. உயிரும்கூட.

   அங்கே உடலும் மனமும் வசதிகள் தேடுவதில்லை. அதிகபட்ச வெயிலோ அதிகபட்ச குளிரோ எதுவானாலும் ஏற்று அடிமையாக நடத்தப்பட்டாலும்கூட பணம் வருகிறதா அது போதும் என்கிற பக்குவம். நாம் சுகம் தேட வரவில்லை. சம்பாதிக்க, சம்பாதித்து ஊருக்கு அனுப்ப அங்கே நம்மை நம்பிக் குடும்பம்! தாய்-தந்தை, சகோதரிகள் என்ற நினைப்பும் எழும். பெரும்பாலான தொழிலாளிகளின்  கனவும், கற்பனையும் இப்படிதான் இருக்கின்றன.

   ``இன்னும் கொஞ்சம் பொரியல் போடட்டுமா?

   ``என்னடி கேட்டுகிட்டு... அவனுக்குத்தான் வாழைக்காய் பிடிக்குமே. போடு! சாமிநாதன் அதைத் தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாகக்  கருதி மனைவியை விரட்டினார்.

   ``அப்படியே எனக்கும் கொஞ்சம் போடு!

    கோபிக்கு சிரிப்புதான் வந்தது. அப்பாவுக்கு வேண்டும் என்றால் நேராகக் கேட்கவேண்டியதுதானே? பயம், தயக்கம்!

   இதற்கிடையில் கவுசல்யா, சைகையில் அவரிடம் என்னவோ சொல்வதும், அவர் கண்களாலும் உதடுகளாலும் மறுப்பதும் அவனுக்குப் புரிந்தது. அவன் சட்டென நிமிர அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்து அடுப்படிக்கு நழுவினாள்.

   `` ``என்னப்பா?

    ``வந்து...நீ சாப்பிடு.

    ``பரவாயில்லை...சொல்லுங்கப்பா!

    ``ஏரிக்கரை பக்கத்துல ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோமில்லே. அது இன்னும் பூர்த்தியாகலே. நீ திரும்பிப் போறதுக்குள்ளே முடிச்சு கிரகப்பிரவேசம் பண்ணிட்டா தேவலை...

   ``முடிச்சுடுங்களேன். அதுல என்ன சிக்கல்?

   ``பணம்...

   ``அதான் அனுப்பியிருந்தேனே!

   ``அது பத்தலை. மாடியையும் சேர்த்து முடிக்கணும்... இன்னும் ரெண்டு மூணு லட்சம் அதிகமாகும் போலிருக்கு...

   கோபி அதற்குப் பதில் சொல்லவில்லை. கை கழுவி எழுந்தான். அம்மா சைகை காட்ட, அப்பா அவனிடம் தன் துண்டை நீட்டி,``அதுமட்டுமில்லாம-அந்த வீட்டோடு சேர்ந்த நிலத்தையும் பேசி அட்வான்ஸ் கொடுத்திருக்கோம். நீ வெளிநாட்டுக்குப் போனபின்னால் நம்ம குடும்பத்தோட கவுரவம், அந்தஸ்து எல்லாமே உசந்துபோச்சு! ஊரே உன்னைப் பற்றிப் பெருமையா பேசுது!

  கோபிக்கு அந்த வார்த்தைகள் மகிழ்ச்சி தரவில்லை. `தறுதலை... பொறுப்பில்லாதவன் குடும்பத்துக்கு கிடைத்த சூனியம். பெத்தவங்களோட உயிரை வாங்குறான் என்று இதற்குமுன்பு சபித்த அதே வாய் இப்போது போற்றுகிறது. அதற்குக் காரணம் பணம்!

   பணம் தேவைதான். ஆனால் அதுவே ஒருவனின் தராதரத்தை எடை போடுவதாக அமைந்துவிடக்கூடாது! அவனுக்குப் புரிந்தது இந்தப் பாராட்டும் புகழ்ச்சியும் தனக்கில்லை. தனது பணத்திற்கு என்று.

   ஒருவன் என்றைக்குமே கெட்டவனாக இருந்து விடுவதில்லை.கெட்டவன் திருந்தலாம். நல்லவனாகலாம். சந்தர்ப்பச் சூழ்நிலையில் நல்லவர்கள்கூட கெட்டுப் போகலாம். ஊரார் அதைக் குற்றம் சொல்லலாம். புரளி பேசலாம். ஆனால், பெற்றோர் அப்படிச் செய்யக்கூடாது. தளர்ந்து போகும்போது தைரியம் சொல்லணும். தெம்பு தரணும். ஊக்கமும் உற்சாகமும் தந்து தூக்கிவிடணும்.

    எத்தனை பெற்றோர்கள் இதைச் செய்கிறார்கள்? ஊக்கம் தராமலிருந்தாலும் பரவாயில்லை.... ஏச்சும் பேச்சும் கொட்டாமலிருந்தாலே போதும்!

    பெற்றோர்கள், வேண்டும் என்றே பிள்ளைகளை வதைப்பதில்லை.அதிக எதிர்பார்ப்பு, ஆசைகளை, கனவுக் கோட்டைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்கள் அப்படிப் பேச வைத்துவிடுகின்றன. அவற்றைப் பெரிதுபடுத்தக்கூடாது. என்னைத் திட்டினாலும், எப்படி கோபித்துக் கொண்டாலும் அது அந்தந்த நேரத்துக்குதான். எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் வீணாகப் போகவேண்டும் என்று நினைப்பதில்லை.

   அவன் முன் அறைக்கு வர, தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாமிநாதன், மகனுக்கெதிரே அமர்ந்து,``நீ இன்னும் பதில் சொல்லலே? என்றார்.

   ``எதுக்கு...?

   ``நிலம்..வீடு!

   கவுசல்யா, ஈரக் கையைத் துடைத்தபடி வந்தாள். ``அவன் வந்தாலும் வராததுமாய் ஏன் இப்படி தொல்லை பண்றீங்க! அவன் என்ன முடியாதுன்னா சொன்னான்? நீ ஓய்வு எடுத்துக்கோ! அந்த அறையில் படுத்துக்கோ!

   ``அங்கே சுதா, படுத்து அழுதுட்டிருக்கா!

       ``அவ ஏன்...அழணும்...?

   ``நீதான் அவளைத் திட்டிட்டியே!

  ``நான் திட்டினேனா...எப்போ...? அம்மா! அந்தக் கழுதையை இங்கே கூப்பிடு!

   ``ஏய் ... சுதா! அண்ணன் கூப்பிடுறான் பாரு...!

    அவளிடமிருந்து பதிலில்லாமல் போகவே கவுசல்யா, அறைக்கதவைத் திறந்து உள்ளே போய்,``ஏய் ...என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்! முகத்தைத் துடைச்சுகிட்டு வெளியே வா!

   அவள் என்னவோ முணுமுணுப்பதும், விசும்புவதும் கேட்டது. ``ஏய்! அதான் சொல்றேன்ல..... நம்ம அண்ணன்தானே! உனக்கில்லாம வேறு யாருக்குடி அவன் வாங்கித் தரப்போறான்? மனசுல எதையும் வச்சுக்காம வெளியே வா!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles