HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

          

   ``இருந்தாலும்...கெட்டுப் போனவளை அண்ணன் தலையில் கட்டுறது அநியாயம்!

   ``இனி ஒரு வார்த்தை பேசினா அறைவேன் கழுதை! ஏது...கொஞ்சம் இடம் கொடுத்தால் வாய் நீளுது! நியாயம் அநியாயம் பார்த்தா உன் கல்யாணம் நடக்குமாடி? உனக்குப் பவுன் போட்டு சீதனம் கொடுத்து அனுப்ப வேணாம்? உங்கப்பா அதுக்கெல்லம் சம்பாதிச்சு கொட்டி வச்சிருக்காரா? என்று சாமிநாதன் பக்கம் பீரங்கியைத் திருப்பினாள்.

  அவர், `என்னடா இது வம்பு? என்று சுதாவை கெஞ்சுகிற மாதிரி பார்க்க, சுதா அப்பாவைப் பலிகடா ஆக்க வேண்டாம் என்று, ``சரிம்மா...நான் இனி பேசலை என்று நழுவினாள்.

  அவளுக்குத் தெரியும் கவுசல்யாவின் பிடிவாதம்.அவளிடம் பேசி வெற்றிபெற முடியாது. அப்படி தோற்கிற மாதிரி பேச்சு நகர்ந்தால் உடன் அழத் தொடங்கிவிடுவாள். அது அதைவிடக் கொடுமை! அந்த அழுகைக்குப் பயந்தே யாரும் அவளிடம் தர்க்கம் பண்ணுவதில்லை. அவளுக்காகவே விட்டுக்கொடுத்து விடுவார்கள். இந்தப் பேச்சுகள், அரசல் புரசலாய்க் காதில் விழுந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. குமரேசன் படுக்கையிலிருந்து பல் துலக்க வந்தவன், `நான் ஊருக்குப் புறப்படுகிறேன்! என்றான்.

  சாமிநாதன், கவுசல்யாவைப் பார்க்க, அவள்,``ஏன் தம்பி...என்ன அவசரம்? கோபியை நீக்க பார்க்க வேணாமா? என்றாள்.

   ``இல்லை.எனக்கு ஊரில் தலைக்கு மேல வேலை, அவன் எப்போ வர்றது...நான் பார்க்கிறது?

   ``இன்னும் ரெண்டு நாள் இருங்க, வந்திடுவான். நான் தகவல் சொல்லி இருக்கேன்! என்று அவனைச் சமாதானப்படுத்தினாள்.

    அவன் குளியலறைக்குள் நுழைந்ததும், சுதா கிசுகிசுப்பாய்,`` அண்ணன் எங்கே இருக்காருன்னு தெரியுமா உனக்கு? என்றாள்.

   ``ஊகூம்...

   ``அப்புறம் தகவல் சொல்லி இருக்கேன்னுது....?

  ``சும்மாதான் நீ போய் படிக்கிற வேலையிருந்தா பாருடி! என்று அவளை விரட்டினாள்.

(12)

   ஒரு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பும்போது கோபி, தாடி வழித்து, வழபழப்புடன் காணப்பட்டான். தனக்கு எந்தவித வருத்தமோ, சங்கடமோ இல்லை என்று வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியில் இருந்தான். ஆனால், கண்கள் மட்டும் ஒத்துழைக்க மறுத்தன.

   அகல்யாவின் வீட்டைக் கடக்கும்போது நெஞ்சம் கொஞ்சம் கனத்தது. `எங்காவது அவள் தென்பட மாட்டாளா? என்கிற ஏக்கம். அதைப் புரிந்துகொண்டது போல குடம் சுமந்த பெண்கள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பது தெரிந்தது.

    `அகல்யாவை ஏன் இன்னும் நினைக்க வேண்டும்? வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பின்பு அவளை நினைக்க நான் யார்? எனக்கென்ன உரிமை? ஊரை விட்டுத் தள்ளியிருந்தும்கூட எதையும் மறக்க முடியவில்லை.

   ஆண்டுக்கணக்காய் பிரிந்து துபாயில் இருந்திருக்கிறேன். அப்போது தோன்றாத துக்கம் இப்போது ஏன்? அன்று தள்ளியிருந்தும்கூட அகல்யா என்னவள் எனக்காகக் காத்திருப்பாள் என்கிற சமாதானமிருந்தது. அதனால் ஆர்ப்பரிப்பில்லை. கிணற்று நீர் எங்கே போய்விடப் போகிறது என்கிற ஆசுவாசம் இருந்தது.

    அவன் தெருமுனையில் நுழையும்போதே வாசலில் படர்ந்திருந்த மல்லிகைப் பந்தலில் பூப்பறித்துக் கொண்டிருந்த சுதா கவனித்துவிட்டாள். பூரித்தாள், `அய்....அண்ணன் என்று தாவிக் குதித்தாள்.

    மடியில் சேகரித்திருந்த மொட்டுகளைக் கூடையில் கொட்டிவிட்டு, உள்ளே ஓடி,``அம்மா! அண்ணன் வந்தாச்சு என்று தந்தியடித்தாள்.

   ``வரட்டுமேடி! அதுக்கு ஏன் சாப்பாடு போடுறே? என்று கவுசல்யா தன் ஈரக் கையை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

   `நான் அப்பவே சொல்லலே.....அண்ணன் வந்திடும்னு! சுதா திரும்பவும் வாசலுக்கு ஓடி, ``வாண்ணா! என்று குதூகலித்து அவனது பெட்டியை வாங்கி, ``உனக்கொரு அதிர்ச்சி செய்தி என்றாள்.

     ``என்னது?

    ``உனக்காக நம் வீட்டில் ஒரு ஆள் காத்துக்கிட்டிருக்கு.

    ``ஆளா?

    ``ஆமா. உன் நண்பர்!

    ``நண்பரா? என்று அவன் யோசனையுடன் முன்னறைக்குள் நுழைந்தான் `யாராக இருக்கும்? யோசித்தான். பிடிபடவில்லை.

    ``ஏய் ...வந்ததும் வராததுமாய் எதுக்குடி புதிர்?

     ``கோபி! என்ன இது? இப்படிதான் ஒரேயடியாய் தலைமறைவாயிடறதா?

     ``தலைமறைவா...அப்படியெல்லாம் எதுவுமில்லேம்மா. கொஞ்சம் வேலை இருந்தது! என்று அவன் இங்குமங்கும் கண்களை அலையவிட்டான்.

     சுதா, அதைப் புரிந்துகொண்டு, ``நீ யாரை தேடுறேன்னு தெரியும். அவரைத்தானே! அவர் இந்த அறையில்தான் என்று அந்த அறையைத் திறந்தாள். உள்ளே கட்டில் காலியாக இருக்கவே, `அம்மா! அதுக்குள்ளே அவர் எங்கே போனார்? படபடப்பாய் கேட்டாள்.

    ``தோட்டத்துல ஊஞ்சலாடுறார்!

            ``ஊஞ்சலா.....ஆடட்டும்! ஆடட்டும்! அண்ணா! அந்த ஆள் கல்லுளிமங்கன்! வாயைத் திறப்பதில்லை. ஆமாம்.... உன் நண்பர் யார்? என்று அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள்.

    ``எனக்கொரு சந்தேகம்ண்ணா....

    ``என்ன?

    ``துபாய் ஆசாமிகளெல்லாம் இப்படிதான் மவுனச் சாமிகளாய் இருப்பார்களா?

     ``சுதா! தொடங்கிட்டியா? உன்னோட பெரிய ரோதனை என்று கவுசல்யா அவளை அடக்கி,``அங்கே என்ன பண்றே.... இங்கே வந்து இந்த வேலையைக் கவனி என்று தடை போட்டாள்.

    கோபி, சிந்தனையுடன் பின்பக்கம் போனான்.

    கிணற்றடி தாண்டி, மாட்டுத் தொழுவம்! அதற்கு அப்பால் வைக்கோல் போர்! அதில் கன்றுக்குட்டி முண்டிக் கொண்டிருந்தது.

    தோட்டத்தில், தென்னைகள் கழுத்து வலிக்க உயர்ந்து மட்டைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.

    அங்கு ஓரமாயிருந்த புங்கமரத்தின் பலகை ஊஞ்சலில் முதுகு காட்டியபடி இருந்த இளைஞனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நெஞ்சுக்குள் படபடப்புடன் முன்னேறினான்.

    அதற்குள் கிணற்றடியிலிருந்து சுதா, `அலோ...மிஸ்டர் குமரேசன்! அண்ணன் வந்துட்டார். இன்னும் எதுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு? முகத்தைக் காட்டுங்க என்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள். அவளுக்கு அவசரம் தாங்கவில்லை. தானே முன்னின்று அவர்களை அறிமுகப்படுத்தி விடும் ஆர்வம்.

    அடுப்பில் பால் பொங்கி வழியவே, தாவணியை உதறி பாத்திரத்தை பிடித்து இறக்கினாள். அலமாரியில் காபி தூள் இல்லை. ``அம்மா! காபி தூள் எங்கே? என்று கத்தினாள்.

    அறைக்குள் சேலை மாற்றிக்கொண்டிருந்த  கவுசல்யா, ``அங்கேதான் அம்மி மேல வைச்சேன் பாரு.

    ``சே...காபிதூள் எதுக்கு அம்மிகல்லுக்குப் போகுது! இந்த அம்மாவுக்கு விவஸ்தையில்லை! என்று எடுத்து தம்ளரில் போட்டு ஆற்றி, சர்க்கரை சரியாய் இருக்கிறதாவென பார்த்து, ``உம்...அருமை! அருமை! என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டு, தாவணியைச் சரிபண்ணிக் கொண்டான்.

    `ல......லா.....லா... என்று மெட்டு போட்டபடி தம்பளர்களைப் பிடித்தபடி பின்பக்கம் வந்தாள். அங்கே ஊஞ்சலாருகே கோபியும், குமரேசனும் இடைவெளிவிட்டு நின்று என்னவோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

    ``கோபி எங்கே கோபி எங்கே என்று ஆலாய் பறந்த குமரேசனிடம் அவனைப் பார்த்ததும் உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகவேணாமா? அவனது முகம் இறுகி இருந்தது.

    கோபியின் முகத்தில் அதைவிட அதி இறுக்கம், சுதாவுக்கு எதுவும் விளங்கவில்லை. `இவர்களுக்குள் என்னாயிற்று?

        ``அண்ணா! காபி!

    அவளது குரலைக் கேட்டதும் கோபி வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்து, ``அப்புறம் ....இவதான் என்று தங்கை.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles