HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

     

        ``நான் வியாபாரமாக்கினேனா ....என் மகளைத்தானே உங்களுக்கு..

   ``கெட்டுப் போனவளை!

    ``இல்லை, அது புரளி. நம்பாதீங்க!

    ``வேணாம், பொய், பித்தலாட்டம் வேணாம், என்னை மிருகமாக்கிடாம உண்மையை ஒத்துக்கணும். அவ கர்ப்பமானது, கரு கலைச்சதுக்கான ஆதாரமெல்லாம் திரட்டிட்டுதான் வந்திருக்கேன். உன் மகளைப் பற்றி பேசும் முன்பு என்னைப் பற்றி விசாரிச்சியா....?

   ``உங்க பெத்தவங்க சம்மத்தோடதானே.. இந்த ஏற்பாடு! அதுக்காகதானே  இத்தனை லட்சங்களை முடக்கினேன்!

   ``லட்சங்கள் உன் சுயநலம். போலி கணக்கு காட்ட இடம் தேடினாய். ஏமாளிங்க கிடைச்சாங்க. அதெல்லாம் போகட்டும். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கக்கூடாது!

    ``ஏன்?

    ``எனக்கு துபாயில் ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு....!

    அவர் சுதாரித்து, ``இவ்வளோதானா....? என்று நாற்காலியில் சரிந்தார்.

    ``பரவாயில்லை..அது பாட்டுக்கு அங்கே இருக்கட்டும். இங்கே ஊரில் என் மகள்...!

     ``யோவ்! இப்படிப் பேச வெட்கமாயில்லே உனக்கு? நீயெல்லாம் ஒரு அப்பான்! பெத்த மகளோட காரியத்துலயே இத்தனை அசிங்கம்!

     ``கோபி தம்பி! ஆவேசப்படாம அப்படி போய் உட்கார். சமாதானமாய்ப் போகலாம். வெட்கப்படவும், அசிங்கப்படவும் இதில என்ன இருக்கு? என் பேச்சை மீறி, எவனோடயோ ஓடினா. கர்ப்பத்தோட வந்தா. கலைச்சு கண்டிச்சு- புத்தி சொல்லி வீட்டுல வச்சிருக்கேன். அவள் திருந்திட்டாப்பா. இனி எந்த தப்பு தண்டாவுக்கும் போக மாட்டா!

   ``அடச்சீ ...மனுசனா நீ கெட்டுப்போன பொண்ணு யாருக்குய்யா வேணும்...

    ``அப்போ என் பணம்?

    ``யார்கிட்ட கொடுத்தாயோ....அவங்ககிட்டயே போய் வாங்கிக்க!

     ``யாரு... உங்க அப்பா அம்மாகிட்டேயா... அவங்ககிட்ட வாங்க என்ன இருக்கு? உயிருதான்!

     ``ஏய் ...தொலைச்சிடுவேன் தொலைச்சி! எனது எதிர்காலத்தைக் கெடுத்ததுமில்லாம எகத்தாளமா பண்றே?

    ``இல்லை.....உண்மையைப் பேசுறேன். இதுவரை அங்கே பத்து லட்சம் வரை முதலீடு செஞ்சிருக்கேன்!

   ``உன் முதலீடு யாருக்கு வேணும்?எடுத்துட்டுப் போ!

       ``அதுல கொஞ்சம் சிக்கல்! ஒண்ணு வருமான வரிக்கு `டேக்கா கொடுக்கவேண்டி உன் பேர்ல இடம் வாங்கி இருக்கேன். அடுத்தது. என் மகளை நீ கட்டிக்கப் போவதாக எனது சுற்றங்களுக்குத் தெரிவித்துவிட்டேன்.

   ``மன்னிக்கணும். உங்க மகளை நான் கட்ட இயலாது. அதை மறந்துடலாம். அதுக்காக அந்த இடத்தை உனக்குத் தரணும்ங்கிற  அவசியமில்லை. காரணம்-அதை இழந்தால் அப்புறம் என் பெற்றோர் செத்துப் போவாங்க! அதையும் மீறி உன் மகளைக் கட்டணும்னா கட்டலாம் அதன்பிறகு அவளைக் கொடுமை பண்ணி, கொடுமை பண்ணியே சாகடிப்பேன்!

   ``அப்போ பணம் முடக்கின நான் மடையன்! பொண்ணையும் கட்டமாட்டீங்க! பணமும் தரமாட்டீங்க!

   ``அப்படி நான் சொல்லலே... முழு தொகையும் என்னால இப்போ தரமுடியாது. பாதி இப்போது, இதற்கிடையில் என் பெற்றோருடன் உள்ள உங்க தொடர்பை முறிக்கணும். நான் வந்ததோ, நமக்குள் நடந்த பேச்சோ வெளியே வரக்கூடாது. அவர்களுக்கும் தெரியக்கூடாது. நேரம் பார்த்து உன் மகளை எனக்குக் கட்டி வைக்க முடியாதுன்னு நீங்களே தெரிவித்துவிட வேண்டும்.

    ``அவங்க கேட்டா-நான் என்ன காரணம் சொல்றது?

    ``ஏதாவது சொல்லுங்க..... கோபி ரவுடி! ஒரு ரவுடிக்கு என் மகளைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க......

    ``அது என்னால் முடியாது. நான் விடமாட்டேன்.

   ``வேணாம் மாமனாரே! எந்த விபரீத சிந்தனையும் வேணாம். மீறி ஏதாவது முயன்றால் வினையாகிவிடும்! அந்த இடம் என் பெயரில் இருக்கு. உங்கப் பணம் முழுக்க கோவிந்தா! அது மட்டுமின்றி என்னைப் பழையபடி ரவுடியாக்கி ஜெயிலுக்குப் போக வைச்சிட வேண்டாம். நான் ஏற்கனவே சொன்னபடி ஜெயில் எனக்கு புதுசுமில்லை, அதற்காகப் பயப்படுறவனும் இல்லை. ஜாக்கிரதை.

    கோபி அன்று போட்ட போடு, இன்று வேலை செய்தது. அது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. பணிந்து போவதைத் தவிர, காசிநாதனுக்கு வேறு வழியேயில்லை, சுமூகமாய் போனால் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்கிற புத்திசாலித்தனமான முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என்று நினைத்து கோபி அதற்காக மகிழ்ந்தான்.

(14)

   கோபியும், மதியும் இப்போது காவிரிக்கரையில் அமர்ந்திருந்தனர். படித்துறையில் சிலர் சிலிர்ப்புடன், தூரத்தில் கல்லணையின் சலசலப்பு கேட்டது.

    தார்ச் சாலையில் பேருந்துகள் உறுமிக்கொண்டு ஓடின, கோபி.கல் பொறுக்கி-ஆற்றில் எறிந்துகொண்டிருந்தான். நெஞ்சில் அகல்யாவின் நினைவே ஓடியது. அவனது முகத்தில் வாட்டமில்லை.

   மதி அவனது கையைத் தடுத்து, `ஏய்....கல் பொறுக்கிப் போடணும்னு என்ன பிரார்த்தனையா? என்று புன்னகைத்தான்.``இப்போ என்ன செய்யப் போகிறாய்? அகல்யாவைப் பெண் பார்க்க இன்னிக்கு வராங்க. தேதியும் நிச்சயம் பண்ணிடுவாங்க, அதுக்கு முன்னாடி ஏதாவது செஞ்சாகணும்.

    ``உம்....

    ``இன்னும் ஏன் தாமதம்? வாத்தியார் உனக்கென்ன அந்நியமா? நேராய் அவங்க வீட்டுக்குப் போ. பேசு, இல்லாட்டி வர்ற மாப்பிள்ளைகிட்டே வழியிலேயே விபரம் சொல்லி கல்யாணத்தை நிறுத்து!

    ``எதுக்காக நிறுத்தணும்?

     ``அதை நிறுத்தினாதானே அகல்யா உனக்குக் கிடைப்பாள்?

     ``நிறுத்தினாலும் கிடைக்க வாய்ப்பில்லை!

    ``ஏய் ...என்ன சொல்றே நீ?

    ``ஆமாம் மதி, எங்க வீட்டுல பங்களா மட்டுமில்லை, பெரிய கனவுக் கோட்டையும் கட்டிகிட்டிருக்காங்க. என்னால் அதுக்கு முன்னாடி அவங்களுக்கு எந்தச் சுகமும் கிடைக்கலே. படிக்க வச்சதுக்கு எந்த பிரதிபலனும் தராம கெட்ட பெயரும், தொந்தரவும் தான் தந்திருக்கேன். இப்போ அவங்களை மகிழ்ச்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை ஏன் கெடுக்கணும்? அதனால் அகல்யா கல்யாணம் நடக்கட்டும். அதை நிறுத்தி அந்தப் பாவத்தை வேறு சுமக்கணுமா?

    ``அப்போ ....நகைக்கடைக்காரனின் கெட்டுப்போன மகளைக் கட்டிக்க முடிவுபண்ணிட்டியா? ஏண்டா...உனக்கு புத்தி பிசகிப்போச்சா? பணம்தான் முக்கியம்னா துபாயில சம்பாதிச்சு அனுப்பு. பங்களா கட்டிக்கொடு.

   ``இல்லை நீ நினைக்கிற மாதிரி துபாயில நான் சுபிட்சமாயில்லை. அந்த வேலை நிரந்தரமில்லை. எல்லாத்தையும் உதறிட்டு வந்திடலாம்னுதான் இருக்கேன்.

    ``அதுக்காக? அந்தக் கேடு கெட்டவனை கட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை நீ பாழாக்கிக்கணுமா?

    ``இல்லை. அவளையும் நான் கட்டிக்கப்போறதில்லை.

    ``நீ என்னடா சொல்றே? நகைக்கடைக்காரரோட பணம் வேணும், பங்களா வேணும், ஆனா, அவர் மகளைக் கட்டிக்க மாட்டாய்! இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு எதுவுமே புரியலே!

    ``போகப் போக புரியும்.

    ``கோபி! உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. நீ இயல்பாயில்லை. மனசுல எதையோ வச்சுகிட்டு அல்லாடுறது புரியது. ஆனா என்னன்னு தெரியலை. என்ன பிரச்சினைன்னாலும் சொல்லு. என்னால் முடிஞ்ச அளவு உதவி பண்றேன்!

    ``மதி! உன்னோட உணர்வுக்கும் அன்புக்கும் நன்றி! நீ சொல்ற மாதிரி நான் ஒரு பிரச்சினையில், சிக்கல்ல மாட்டியிருப்பது உண்மை. இதுக்கு முன்னாடியெல்லாம் அடுத்தவங்களுக்காகத்தான் பிரச்சினைகளை ஏற்றுக்கிட்டு இருந்தேன். முதன்முதலா எனக்காக என் குடும்பத்துக்காக ஒரு விபரீத சவால்! இது நானே விரும்பி ஏற்றுக்கிட்டது. இதுல நீ உதவுறதுக்கு எதுவுமில்லை!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles