HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

   

  கவுசல்யா வெளியே வந்ததும் சுதா முகத்தைச் சுருக்கிக் கொண்டு வெளியே வந்து தெருவைப் பார்த்தபடி நின்றாள்.

   ``கோபி! ஆனாலும் உனக்குக் கோபம் ரொம்பவே வருது. பொட்டைப்புள்ள ஏதோ ஆர்வக்கோளாறுல சாமான்களை எடுத்துட்டான்னா அதுக்காக இப்படிதான் பேசுறதா? அவ யாரு. அன்னியமா? உன் தங்கைதானே! அவளைக் கூப்பிட்டு  ஆறுதல் சொல்லு!

   ``ஏய் ..கழுதை! இங்கே வா! நான் அப்படி என்ன உன்னைத் திட்டிட்டேன்? பெட்டியில் இருக்கிறதெல்லாம் நம் பொருள் இல்லை. யார் யாருக்கோ கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொடுத்தனுப்பினது. மத்தவங்க பொருட்களை நீ பாட்டுக்குப் பிரித்து, வீணாக்கிட்டா அப்புறம் அதை எப்படி அவங்ககிட்ட கொடுக்க முடியும்? நம்மைத் தப்பா நினைக்க மாட்டங்க....?

   ``அது மத்தவங்க பொருள்னு எனக்கெப்படி தெரியுமாம்!

   ``அதானே நானும் சொன்னேன்! மத்தவங்க சாமான் எல்லாம் இருக்கு. கலைக்காதே! நான் வந்து எடுத்துத் தர்றேன்னு...சரி, இங்கே வா! என்று கோபி அவளை அழைத்துத் தலையைக் கட்டிக்கொண்டு வருடினான்.

   அதைப் பார்க்கப் பார்க்க சாமிநாதனுக்கும், கவுசல்யாவிற்கும் கண்கலங்கிப் போயிற்று.

   கோபி மாறவில்லை, எதையும் மறக்கவில்லை என்கிற பெருமிதம் ஏற்பட்டது.

   ``ஏய் ...சுதா! இப்போ சமாதானமாயிடுச்சா.... என்னவோ பெரிசா பிணக்கிகிட்டுப் போனியே! என்று அப்பா சீண்டினார்.

   ``அப்பா! அவ பிணக்கினா...யாருக்கு நஷ்டம்!இந்த ஜப்பான் சேலை! கொலுசு, நெக்லசெல்லாம்....

   சுதா, `போண்ணா! என்று சிணுங்கியபடி அவனது நெஞ்சில் பொய்யாய்க் குத்தினான். அவனது மார்பிலும்,கழுத்துப் பகுதியிலும் கறுப்பு கறுப்பாய் தழும்புகள் தெரிய ``என்னண்ணா இது.... அம்மை போட்ட மாதிரி...?

  ``அம்மை இல்லே ...அங்கே வெயில் நாள்ல சூடு தாங்காம வரும் சூட்டுக் கொப்புளங்கள்!

   ``அங்கே அவ்ளோ வெயிலா...?

    ``ஆமா....!

    ``ஏசி இருக்குமே!

   ``கார் ஏசி ,வீடு ஏசி, கடைகள், அலுவலகங்கள் ஏசி ...ஆனா தொழிற்சாலையில் சுத்தணுமே! அதெல்லாம் போகட்டும் ...அம்மா... இந்தச் சாமானையெல்லாம் எடுத்து வை! என்று கோபி அறைக்குள் போனான். ``சுதா கழுதே! நீ என் கூட வா....!

    கோபி, கட்டிலில் தலையணையை வைத்துச் சரிந்து அமர்ந்து, ``அப்புறம்..? உன் படிப்பெல்லாம் எப்படியிருக்கு? என்றான்.

    ``அது அப்படியேதான் இருக்குண்ணா.. இது தேறாத கேஸ்!

    ``ஏன் ...என்னாச்சு? பீஸ் கட்டணம்... புத்தகம் வாங்கணும்னு பணம் கேட்டுக் கேட்டு வாங்கினே....

    ``அதுக்கென்ன பண்றது.... பணம் கொடுத்தால் புத்தகம் கிடைக்குது. மூளை கிடைக்குமா? இந்த அம்மா வேற அப்பப்போ .... படிச்சு என்ன கிழிச்சுறப் போற... சமைக்கக் கத்துக்கோ.. துவைக்க .. கோலம் போடக் கத்துக்கோன்னு ஒரே இம்சை! எப்போ பார்த்தாலும் என் கல்யாணப் பேச்சுத்தான்!

   அதைச் சொல்லும்போது அவளிடம் வெளிப்பட்ட வெட்கத்தைக் கோபி, கவனித்து ரசித்து,`` அம்மா சொல்றதும் சரிதானே! வாழ்க்கையில் கல்யாணமும் முக்கியமான ஒண்ணுதானே! அதுபோகட்டும்! ஊரில் வேற என்ன விசேஷம்?

  ``வேறு என்ன....? என் தோழிகளுக்கெல்லாம் என்னைப் பார்த்தா பொறாமை...உன் அண்ணன் வந்ததும் விருந்து தரணும், சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்னு தொல்லை பண்றாளுங்க.

   ``உம்..அப்புறம்?

    ``சினிமாவோட போச்சா? சாப்பாடும்....

    ``ஏய் ...மண்டு என்று கோபி தலையில் செல்லமாய்க் குட்டி அப்புறம் ஊரில் வேறு என்ன விசேஷம்?

    ``அப்புறம் வேறு என்ன? பஞ்சாயத்துல நூலகம் தொடங்க இருக்காங்க. புதுசா டி.வி.வாங்கி வச்சிருக்காங்க. வந்து...சொல்ல மறந்துட்டேனே! உன்னோட வரவை எதிர்பார்த்து நாலைஞ்சு ஆசாமிங்க காத்திருக்காங்க!

   ``எதுக்கு?

   ``வேறு எதுக்கு? ஒரே அமுக்காய் அமுக்கத்தான்! அதுல ஒருத்தர் வாத்தியார். பள்ளிக்கூடத்துக்கு ஏதோ வேணுமாம். அப்புறம் கோவில் தர்மகர்த்தா...

    ``உதவிதானே ...பண்ணினாப் போச்சு!

    ``எல்லாத்துக்கும் பண்ண உன்கிட்ட ஏது பணம்? நோட்டு அடிக்கிறியா?

    கோபி சிரித்து, ``அப்புறம் வேறு எதுவுமே விசேஷமில்லையா?

    ``வேறு என்ன? உம்....என்று சுதா தன் விரலால் உதட்டில் தட்டி யோசித்தாள்.

    ``வேறு எதுவும் இல்லையே.

   ``அக்கம் பக்கம் ....?

   ``அக்கம் பக்கம்?உம்...பக்கத்து வீட்டுல ஒரு டிராக்டர் வாங்கி இருக்காங்க. நம்ம பசு, கன்று போட்டிருக்கு.

   `ச்சை! பசு கன்று போட்டிருக்கு... பன்றி குட்டி போட்டிருக்கு! இதுவா எனக்கு முக்கியம்? வேற ஏதாவது... என்று அவன் கண்சிமிட்டினான்.

   ``ஓ....ஓ...இப்போ புரியுது என்று சுதா சிரித்தாள்.

   ``இப்போவாச்சும் புரிஞ்சுதே! சொல்லு! உன் தோழி எப்படியிருக்கா?

   ``என் தோழியா....அது யாரு?

   ``ஏய் ... இந்தக் குசும்புதானே வேணாங்கிறது! என்று அவளது காதைப் பிடித்துத் திருகினான்.

   ``அ...ம்...மா..

   ``ஏய் ..எதுக்கு இப்போ கத்துறே?

    ``அப்போ பயமிருக்கு

    ``பயப்படாம முடியுமா?

    ``அப்ப முதல்ல கையை எடு!

    ``எடுத்துட்டேன். பொறுமையைச் சோதிக்காம சொல்லு. அகல்யா எப்படியிருக்கா?

    ``ஓ..ஜோரா! நாலு கிலோ எடை ஏறி...விதவிதமா சுடிதார் போட்டு, அவங்களுக்கென்ன? பரமசுகம்!

    ``ஏன் உனக்குப் பெருமூச்சு?

    ``அண்ணா!அகல்யாவைப் பற்றி பேசுறதே வீண்... வேறு வேலை இருந்தா பாரு!

    ``ஏய்..ஏன் இப்படி சொல்றே?

    ``ஆமாண்ணா. அவளுக்கு வேறு வரன் நிச்சயிக்கப் பட்டுட்டதா கேள்வி! சுதா சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

(3)

   மோட்டார் சைக்கிள் நகரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. மதியின் தலைமுடி காற்றில் சிலுசிலுத்தது. அவனும் மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். மதியும் கோபியும் பால்யகாலம்தொட்டே நண்பர்கள்.

   கோபி வருகிறான் என்றால் மதி, தன் வேலையெல்லாம் போட்டுவிட்டு துணைக்கு வந்துவிடுவான். அவன் விடுப்பு முடிந்து போகும்வரை இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.

   பின் இருக்கையில் அமர்ந்திருந்த கோபி, ``நாட்டு நடப்பெல்லாம் எப்படி? என்றான். சாலையில் இரண்டு பக்கமும் காவிரியின் ஊட்டத்தில் தென்னையும் நெல்லும் பசுமை பரப்பியிருந்தன.

   ``ஏய்....எதுக்கு இந்த சுத்திவளைச்சு கேள்வி? நேராய் உன் அகல்யா எப்படியிருக்கான்னு கேளேன்!

   ``புரிஞ்சுக்கிட்டா சரி!

 ``நான் புரிஞ்சு வச்சு என்ன பண்றது? அவ புரிஞ்சுக்கலியே! கோபி! இனி அவளை நினைக்காம இருக்கிறது நல்லது!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles