M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

நான் பாடத் தெரிந்தவள் என்பதினால் எனக்குக் கிடைத்த ஒரு சலுகையும் உண்டு. பள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவேன். அங்கே பலகாரம் விற்பதுடன். எந்தக் காட்சியிலும் எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு. 'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டுவிடுவார்கள். நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன்.

அதோடு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது படம் பார்க்கப் போனால், "பாப்பா வா" என்று என்னையும் படம் பார்க்கக் கூட்டிப் போவார்கள்.

இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது.

இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்ததது. மனக்கவலை - வறுமை - தினந்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான உழைப்பு - இவை எல்லாமாகச் சேர்ந்து இந்த நோயைக் கொடுத்துவிட்டன.

உள்ளூரிலோ மருத்துவ வசதி இல்லை என்ன செய்வது?

இக்கட்டான இந்த நேரத்தில் தயாள மனம் கொண்ட ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் அம்மாவை இராமனாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.

எனக்கு என் அம்மாதான் உலகம். என் அம்மாவுக்கு நான்தான் உலகம். எங்களுக்கு என்று வேறு யாரும் கிடையாது. அதனால் என் அம்மா சேர்ந்திருந்த அரசாங்க மருத்துவமனைக்குப் போய் அம்மாவுக்குத் துணையாக இருந்து வந்தேன்.

அந்த நேரம் எனது பள்ளிச்கூட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். "நல்லாப் படிக்கிற பொண்ணு, இப்படி வீணா படிப்புக் கெட்டுப் போகுதே!" என்று வருந்தினார்கள். சில ஆசிரியர்கள் என்னைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் வைத்தப் படிக்க வைப்பதாகக் கூறினார்ககள்.

ஆனால், அந்தச் சின்னஞ்சிறு வயதில் அம்மாவைப் பிரிந்து எப்படி என்னால் தனியாக இருக்க முடியும். அம்மாவுக்கும் வேறு துணை யார் இருக்கிறார்கள்? அதனால் அம்மா கூடவே இராமனாதபுரம் போய்விட்டேன்.

அம்மாவின் கடுமையான ரத்தப் போக்கைக் கட்டப்படுத்த சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.

இந்த ஒரு வருடமும் தினசரி என் அம்மாவின் சேலைகளை இரண்டு முறை துவைத்து, காயவைத்துக் கொடுப்பேன். இன்னும் சொல்லப் போனால் அந்தச் சேலைகள்கூட மருத்துவமனையில் தரப்பட்ட சேலைகள் தான். சொந்தமாக உள்ளது ஒரேயொரு சேலைதான்.

எப்போதும் என் அம்மா ரத்தம் தோய்ந்த சேலையோடேயே இருப்பார். அப்படி எந்த நேரமும் ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருக்கும்.

இந்த ஒரு வருடமும் நாங்கள் பட்ட துன்பத்திற்கு ஒரு எல்லை கட்டிச் சொல்லவே முடியாது.

என் அம்மாவுக்குத் தரப்படும் மருத்துவனைச் சாப்பாட்டைத்தான் இருவரும் பங்கு போட்டுச் சாப்பிடுவோம் அவர்கள் தருவதே கொஞ்சம் இதில் இரண்டு பேருக்கு எப்படிப் போதும்? தினசரி அரைப்பட்டினி, கால் பட்டினிதான்.

பகலில் அம்மா கூட இருப்பேன். இரவில் ஆஸ்பத்திரியின் வராந்தாவில் படுத்துக்கொள்வேன்.

எப்போதாவது தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் ஏதாவது உதவி கேட்டுப் பெற்றுக்கொள்வேன்.

மொத்தமாக, பிச்சை எடுக்க வில்லை, திருடவில்லை; மற்றபடி எல்லா விதத் துன்பங்களையும் அனுபவித்து விட்டோ ம். அதுவும் அந்த ஒன்பது, பத்து வயதில் பட்ட துன்பம் இருக்கிறதே - அதை எந்த வார்த்தையால் விளக்கமுடியும்?

ஓராண்டுக்கால மருத்தவமனை வாழ்க்கையில் ஓரளவு அம்மாவின் உடம்பு தேறியது. நாங்கள் மீண்டும் பள்ளத்தூர் வந்தோம். முன்போல் வேலை பார்க்கும் சக்தி அம்மாவுக்கு இல்லை.

இனி என்ன செய்வது அடுத்த நேரச் சாப்பாட்டிற்கு?

வறுமை எங்கள் முன் பெரிதாக உருவெடுத்து நின்றது!

இன்றைய தினம் மனோரமா மிகவும் வசதியாக வாழ்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் இந்த வாழ்க்கையை வந்தடைய எவ்வளவு கொடிய வழிப்பயணம் செய்திருக்கிறோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கையில் உடம்பு நடுங்குகிறது!

பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் குடும்பங்கள் நிறைய உண்டு. வசதியற்ற குடியானவர்கள் இந்தச் செட்டியார் குடும்பங்களில் மாதச் சம்பளத்திற்கு பண்ணை வேலை அல்லது வேறு வேலைகளில் சேர்ந்தறுப்பார்கள்.

அதேபோல் வீட்டு வேலைகளுக்கு பெண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வார்கள்.

எங்களின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்துக்காரர்கள் என் அம்மாவிடம். "உனக்கோ உடம்புக்கு முடியலை. பாப்பாவும் பட்டினி கிடந்து சாகிறதா! அதனால யாராவது ஒரு செட்டியார் வீட்ல பிள்ளை பார்த்துக்க அனுப்பி வை. மாதத்துக்குச் சம்பளமும் கிடைக்கும் பிள்ளைக்கு வயிறார மூணு வேளையும் சோறும் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பசி - பட்டினியின் துன்புறுத்தலால் மற்றவர்களின் சொல்லுக்கு செவிசாய்த்துவிட்ட என் அம்மா ஒரு செட்டியார் வீட்டில் குழந்தை பார்த்துக்கொள்ள ஒரு அம்மா மூலம் அனுப்பி வைத்தார்.

அங்கே உள்ள ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதும், அதற்குத் தேவையானதைச் செய்வதும்தான் எனக்கு வேலை.

நான் வேலைக்குப் போன முதல் நாள். கீழே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி என் தோள்பட்டையில் சாய்த்து செல்லமாகத் தட்டிக் கொடுத்ததுதான் தாமதம், அந்தக் குழந்தை 'சரக்' என்று என் தோள்பட்டையில் கடித்துவிட்டு, 'வீல்' என்று கத்தியபடி ஏற்கனவே அங்கே வேலை செய்யும் ஆயாவிடம் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டுவிட்டது.

முன்பின் பழக்கம் இல்லாததால் அந்தக் குழந்தை என்னிடம் வர மறுத்தது.

என்னை வேலைக்கச் சேர்த்தது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக. ஆனால் குழந்தையோ என்னிடம் வர மறுத்து வேலைக்கார ஆயாவிடம் ஓடுகிறது.

பிள்ளையை வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் வீட்டை விட்டுப் போகச்சொல்லி விடுவார்கள். பிறகு சாப்பிடச் சோறு கிடைக்காதே! இந்த எண்ணம் ஏற்பட்டதுமே எனக்கு அடி வயிறு 'பகீர்' என்றது. வறுமை எங்களை அந்த அளவிற்கு வாட்டி இருந்தது.

வேலைக்கு என்று வந்து ஒரு வேளைச் சோறுகூட ஒழுங்காகச் சாப்பிடாததற்குள் இந்த நிலைமையா!

எனக்கு கண்கள் கலங்கிவிட்டன! அந்த நிலைமையிலும் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது நான் வேலைக்குச் சேர்ந்த செட்டியார் வீடு மிகப்பெரிய வீடு. ஒரு நாளைக்கு ஏராளமான விருந்தாளிக்ள வந்து போகும் இடம். அதனால் அந்த வீட்டில் எப்போதும் பெரிய விருந்து போலவே சமையல் நடக்கும். வேலைப் பளு அதிகம்.

ஏற்கனவே உள்ள வேலைக்கார அம்மாவுக்கு 40 வயது இருக்கும். அந்த அம்மா, சமையல் பாத்திரங்கள் கழுவுவது. தண்ணீர் இறைப்பது, வீட்டைக் கூட்டுவது, சமையலுக்கான மிளகாய் - மற்றும் மசாலா சாமான்கள் அரைத்துக் கொடுப்பது மற்றும் சில்லரை வேலைகள் செய்வது வழக்கம்.

'அடுத்து சாப்பாட்டிற்கு என்ன செய்வது?' என்ற பய உணர்ச்சி ஏற்பட்டதுமே. உடனே அந்த அம்மாவிடம், "ஆத்தா, உங்க வேலைங்களை எல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க இந்தக் குழந்தையைப் பார்த்துக்குங்க. இல்லாட்டி என்னெ போகச் சொல்லிடுவாக" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

அந்த அம்மாவும் அன்று முதல் பிள்ளை பார்த்துக் கொள்ளவும், நான் அவருடைய வேலைகளைப் பார்க்கவும் ஆரம்பித்தோம்.

அதுமுதல் எனக்கு ஓய்வு ஒளிவு இல்லாத வேலை தொடங்கியது. பசியின் கொடுமை எனது வயதுக்கு மீறிய வேலைச் சுமையை என் தலையில் ஏற்றியது.

இதே நேரத்தில் எனது தாயாரும் வேறு ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.

பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப் பெண்களை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச் சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு. அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச் சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும். அதனால் அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும் "பாப்பா - பாப்பா" என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.

அந்த வீட்டில் எல்லோரும் என்னை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள். அவர்களைப்போலவே என்கூடப் படித்த, எப்போதும் "பாப்பா..பாப்பா" என்று குழையவரும் சகதோழியும் 'குட்டி' போட்டுக் கூப்பிட்டாள்.

மற்றவர்கள் கூப்பிட்டதைப் பற்றி நான் எதுவும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - 'பாப்பா - பாப்பா' என்றவள் வழக்கத்தை மாற்றி 'குட்டி' என்று கூப்பிட்டதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள் நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என்றாலும், என்னால் என்ன செய்ய முடியும்?

இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப் பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக்குறைவாகக் கூப்பிடவோ -நடத்தவோ இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும் என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும் அனுமதிப்பதில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச் சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு, "உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது மனம் வருத்தப் படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே' என்று கண்டித்திருக்கிறார்.

அதன்பிறகு அவள் என்னை 'குட்டி' என்று கூப்பிடவில்லை. ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக் காயப்படுத்தி விட்டது!.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles