அந்த வீட்டில் அதன்பிறகு சுமார் இரண்டு மாதம் வேலை செய்திருப்பேன்.
ஒரு
நாள் என் அம்மா நான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலையை வேண்டாம் என்று
கூறிவிட்டு, என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
நானோ, எனக்கு மேல் உயரமான அண்டா குண்டா பாத்திரங்களை உருட்டித் தேய்த்துக் கழுவிக்
கொண்டிருந்தேன். ஏராளமான பாத்திரங்களுக்கு மத்தியில் மிகவும் அவலமான நிலையில்
பார்த்த அம்மா, கண்ணீர் விட்டுப் புலம்பத் தொடங்கியதுடன், என்னை வேலையில்
சேர்த்துவிட்ட அம்மாவைக் கண்டுபிடித்து சண்டை போட்டு, உடனே என் பிள்ளையைக் கூட்டி
வா" என்று துரத்தியிருக்கிறார்.
அந்த அம்மாள் வந்து "உன்னோட பாட்டி செத்துப் போனதா தந்தி வந்திருக்குடி. உன் ஆத்தா
அழுதுக்கிட்டு இருக்கு. உன்னைக் கூட்டியாரச் சொன்னா வாடி" என்று சொல்லி கூட்டிப்
போய் என் அம்மாவிடம் விட்டு விட்டார்.
இப்போது எனக்கும் வேலை இல்லை. என் அம்மாவுக்கும் வேலை இல்லை. மீண்டும் வந்தது
சாப்பாட்டுக் கவலை.
அன்று நான் சாப்பாட்டிற்காக பட்ட கஷ்டங்களின் விளைவு - இன்று நான் சாப்பிட்டு
எழும்போது எனது தட்டில் இல்லது இலையில் ஒரு பருக்கையோ காய்கறிகளோ வீணாக இருக்காது.
இந்தப் பழக்கத்திற்கு மற்றோர் நிகழ்ச்சியையும் காரணமாகக் கூறலாம்.
ஒருமுறை ஏவி.எம்.மின் 'நானும் ஒரு பெண்' படத்தின் வெற்றியையொட்டி ஏவி. மெய்யப்ப
செட்டியார் எங்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தார்.
சாப்பாட்டின்போது ஏவி.எம். செட்டியார் என் கண் பார்வை படும் இடத்தில உட்கார்ந்து
சாப்பிட்டார். தனக்கு வேண்டியதை தேவையான அளவு கேட்டுக் கேட்டு வாங்கிச்
சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிந்து எழுந்தபோது. அவர் சாப்பிட்ட இலை
அப்போதுதான் புதிதாக போடப்பட்டது போல் இருந்ததே தவிர ஒருவர் சாப்பிட்ட இலை அது என்ற
அடையாளமே தெரியவில்லை.
அந்த அளவிற்கு எந்தப் பொருளையும் வீணாக்காமல் விரயம் செய்யாமல் சாப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் நாளொன்றுக்கு ஒரு ஓட்டலையே விரயம்
செய்யக்கூடிய சக்தி படைத்தவர். எவ்வளவு பக்குவமாகச் சாப்பிட்டிருக்கிறார் என்பதைக்
கண்டபோது நான் அசந்துவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. சாப்பாட்டில் என்னை மிக கச்சிதமாக
ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி அது!
இதுமட்டுமில்லை எந்த இடத்தில் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு மனத்திருப்தி
அடைந்துவிடும் பக்குவமும் எனக்குண்டு.
தாயும் மகளும் வேலையை விட்டு விட்டோ ம். இனி என்ன செய்வது?
மறுபடியும் அம்மா பலகாரக்கடையை ஆரம்பிக்கலாம் என்றால் மீண்டும் ரத்தப் போக்கு நோய்
வந்துவிட்டால் என்ன செய்வது?
ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் வழக்கம்போல் ஊரார்
வீடுகளில் மங்கள நிகழ்ச்சிகளில் எனது இலவச பாட்டுக் கச்சேரி தொடர்ந்து நடந்து
கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள கோட்டையூரில்
'ஏகாதசி' நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றையதினம் இரவு அந்த ஊரின்
செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'அந்தமான் காதலி' என்ற நாடகத்தை
நடத்தினார்கள்.
அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. அதனால் அவருக்காகப் பாடவும்
நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள் அப்போது "யாரோ"
என்னைப்பற்றி சொல்ல என்னை வந்து அழைத்து போனார்கள். என்னுடைய கலை உலகப் பயணம் இங்கே
இருந்து தான் ஆரம்பமானது.
அந்த நாடகத்தில் எனது பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும்
வெகுவாகப் பாராட்டினார்கள். இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின்
உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் என்னை ரொம்பவும்
பாராட்டி ஆசி கூறியதுடன் எனது பெயரை மாற்றி மனோரமா என்று வைத்தார்கள். அவர்கள்
பெயர் வைத்த நேரம் அந்தப் பெயரே நிலைத்தது.
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத - மறக்கக்கூடாத பெயர்களில் ஒன்று பால்ராஜ்
காரணம் இவர்தான் என்னை நடிகையாக அறிமுகம் செய்வித்தவர்.
நான் பாட்டுப்பாடிய கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ்.
அவர் எனது பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்து புதுக்கோட்டையில் நடந்த
'வீதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு
செய்துவிட்டு என்னிடம் வந்தார்.
முதலில் பயந்த என்னை தைரியம் சொல்லி பாடத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக
நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த நான் இதன் மூலம் நடிகையாக
மாறினேன். அதன்மூலம் படிப்படியாக எங்கள் பசிக் கவலை தேய்ந்தது.
இதையடுத்து 'யார் மகன்?' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தேன். இந்த நாடகத்தை
எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ்.
இந்த நாடகம் சித்தன்னவாசல் என்ற ஊரில் நடந்தது. இந்த நாடகத்திற்கு பிரபல வீணை
வித்வானும், முதன் முதலில் கதை, வசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல
துறைகளிலும் திரைஉலகில் சாதனை புரிந்தவருமான எஸ்.பாலசந்தர் தலைமை வகித்தார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு
வேண்டியவர்களால் இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி
டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.
அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், "இந்த
நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம்
ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத்
தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும்.
ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்" என்று
கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
அதன்பிறகு எனது நடிப்பைப் பாராட்டி தனியாக எனக்கும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை அப்போதே எஸ். பாலசந்தர் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் அதை
எப்படி மறக்க முடியும்.
இதேபோல் 'உதிரிப்பூக்கள்' படத்தின் 200-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.
அந்தப் படத்தில் நடித்த என் மகன் பூபதிக்கு அதே டைரக்டர் எஸ். பாலசந்தர் பாராட்டி
பரிசுகளை வழங்கினார். அந்தக் காட்சி, எனக்கு அவர் வழங்கிய பரிசோடு ஒப்பிட்டுப்
பார்த்து பெருமகிழ்ச்சி கொள்ள வைத்தது.
'உதரிப் பூக்கள்' படவிழாவின் போது என் மகனுக்கு எஸ். பாலசந்தர் பரிசு வழங்கும்
புகைப்படத்தை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.