'யார் மகன்? நாடகத்திற்குப் பிறகு தொடர்ந்து நாடகங்கள் வரத் தொடங்கின. இடைவிடாமல்
நடிக்கத் தொடங்கிவிட்டேன்.
திருச்சி டால்மியா புரத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி மதுரை
வரையில் அந்த நேரம் யாராலும் அசைக்க முடியாத நடிகையாகிவிட்டேன்.
அந்தக் காலத்தில் வடஇந்தியத் திரைஉலகில் புகழேணியில் இருந்தவர்களில் முதன்மையாளவர்
நடிகை சுரையா அவரது சிறந்த நடிப்புடன் அவருக்கு இருந்த விசேஷ தன்மை சொந்தக் குரலில்
பாடுவது. அதனால், என்னையும் அவரோடு ஒப்பிட்டு நாடக போஸ்டர்களில் 'தென்னாட்டு சுரையா
மனோரமா' என்று விளம்பரம் செய்வார்கள்.
இந்த உயர்வுக்கு வழிகாட்டியவர் பால்ராஜ் என்ற எலக்ட்ரீஷியன் என்று ஏற்கனவே
குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் கடந்த ஓராண்டுக்குமுன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் என்
மனது வேதனையால் துவளுகிறது.
கடந்த வருடத்தில் ஒருநாள் திரைஉலக புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா வேறு இரண்டு
பேர்களுடன் என் வீட்டிற்கு வந்தார். நான் காரைக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள வேண்டும் என்று கேட்டார்.
அவர் குறிப்பிட்டுக் கேட்ட நாளில் நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமற்போய் விட்டது. பிறகு சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து புறப்படும் நேரத்தில் மற்ற இரண்டு பேரில் ஒருவர்,
"என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
உண்மையிலேயே அவர் யார் என்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. அதனால் நான்
"தெரியவில்லை நீங்க யாருன்னு சொன்னாத் தெரிஞ்சுக்கிறேன்" என்றேன்.
அவர் "நான் தான் பால்ராஜ்" என்றார்.
அந்தப் பெயரைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
30 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவத்தில் எத்தனையோ மாறுபாடுகள்
வித்தியாசங்கள் காலச்சித்திரத்தின் வர்ணக் கலவையில் எனக்கு அவரைப் புரிந்து கொள்ளவே
முடியாமற்போய் விட்டது.
எனக்குக் கடும் கோபமும் மன ஆதங்கத்தில் ஒருவித அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டது.
அந்த வேகத்திலேயே "என் வீட்டுக்கு என்றுதானே இங்கே வந்தீர்கள்? நான் யார் என்று
தெரிந்துதானே வந்தீர்கள்? அப்படி இருக்க எப்படி நீங்கள் உங்களை சொல்லிக்கொள்ளாமல்
இவ்வளவு நேரமும் இருந்தீர்கள்" என்று கேட்டேன்.
பேசாமல் நின்றார்.
"நான் உங்களை அடையாளம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்தால் அது என் குற்றம். ஆனால்
உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாத போது நீங்களே சொல்லிக் கொண்டிருந்தால் நான்
எவ்வளவு சந்தோஷபட்டு இருப்பேன்" என்றேன்.
அப்போதும் ஒன்றும் பேசாமல் நின்றார்.
"நானே சினிமாவில் நடிக்காமல் வேறு எங்கேயோ ஒரு மூலையில் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து
கொண்டிருந்தால் என்னை உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்குமா?
நீங்கள் 30 வருஷத்துக்குமுன்னே பார்த்த மாதிரியேவா இருக்கீங்க அடையாளம் தெரிந்து
கொள்ள? இப்படி வந்து என்னை வேதனைப்படுத்திடீங்களே, நியாயமா?" என்று கேட்டேன்.
அவரால் எதுவும் பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமலேயே போய்விட்டார்.
வாழ்க்கையில் யாரை மறக்க கூடாது என்று நினைத்தேனோ, அவரே 'மறந்துவிட்டவள்' அல்லது
'தெரியாதவள் போல் நடிக்கிறாள்' என்று மற்றவர்கள் எண்ணத் தோன்றும் விதத்தில்
நடந்துகொண்டு விட்டாரே என்று நினைத்தபோது அப்படியே உடம்பு ஆடிப்போய் விட்டது.
இப்படியே சில ரசிகர்களும் கேட்பார்கள். எப்போதோ ஒருமுறை சந்தித்துப்
பேசியிருப்போம். அதன்பிறகு எத்தனையோ ஆயிரம் பேர்களைச் சந்தித்து இருப்போம். எவ்வளவு
காலம் ஓடிப்போய் இருக்கும்.
திடீரென்று ஒருநாள் முதலில் சந்தித்தவர் நம் முன் தோன்றுவார் 'என்னைத் தெரிகிறதா?'
என்பார். தன்னையும் யார் என்று சொல்லமாட்டார். 'கண்டுபிடியுங்கள்' வேலையாக
இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே அந்த நபர் யார் என்று தெரியாது, அல்லது நினைவுக்கு வராது.
உடனே பின்னால் ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பி விட்டு விடுவார்கள். "அவுங்களுக்கு
எல்லாம் நம்மையெல்லாம் தெரியாதுப்பா. ஆள் முன்ன மாதிரி இல்ல. இப்போ ரொம்ப மாறிப்
போயாச்சு. ஹூம்.. இன்னும் எவ்வளவு நாளைக்குனு பார்ப்போம்!" என்பார்கள்.
இந்த நிலையைத்தான் "பால்ராஜூம் ஏற்படுத்தி விட்டாரோ என்று நினைக்கும்போது வேதனையாக
இருக்கிறது.
நாடக உலக ராணி என்ற அளவுக்கு உயர்ந்திருந்த நேரம் அது.
ராம பால கான சபாவில் இருந்து பிரிந்து வந்த காலஞ்சென்ற நடிகர் சகோதரர் ஆர்.
முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வைரம் கிருஷ்ணமூர்த்தி, மணிநாதன் ஆகியோர்
'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தத்
தொடங்கியிருந்தார்கள். அவர்களது நாடகக்குழுவில் ஒரு கதாநாயகி ஏற்கனவே இருக்காங்க.
இரண்டாவது கதாநாயகி தேவை. ஆனால் அது முக்கியமான வேடம். நாடகத்தின் பெயர்
'புயலுக்குப்பின்' என்பதாகும்.
இதில் நடிப்பதற்காக என்னைத் தேடிக்கொண்டு நடிகர் ஆர். முத்துராமனும், வைரம்
கிருஷ்ணமூர்த்தியும் வந்து விவரத்தைக் கூறி "நாளைக்கு நாடகம், உடனே
புறப்படவேண்டும்" என்றார்கள்.
உடனே புறப்பட்டு திருமயம் போய் அங்கிருந்து ரயிலில் கொடுமுடி போனோம்.
ரயிலில் ஏறியபிறகுதான் எனக்கு என்னுடைய பாகத்தின் வசன நோட்டைக் கொடுத்தார்கள். அது
100 பக்கம் உள்ள பாடம்!
மறுநாள் காலையில் ரயிலைவிட்டு இறங்கும்போது அந்த நூறு பக்க பாடத்தையும் மனப்பாடம்
செய்து முடித்துவிட்டேன்.
பிறகு நாடகத்தின் பாடல்களையும் மனப்பாடம் செய்து பாடி நடித்தேன். நல்ல பெயர்
கிடைத்தது. பிறகு தினசரி நாடகம் இருந்தது.
வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் சென்னைக்குப் புறப்பட்டு
வந்தேன். இங்கு எஸ்.எஸ். ஆர். நாடக மன்றத்தின் 'மணிமகுடம்' போன்ற நாடகங்களில்
நடித்தேன்.
அதையடுத்து கே.ஆர்.ஆர். நாடக மன்ற நாடகங்களிலும், பிரண்டு ராமசாமியின்
நாடகமன்றத்திலும் கதாநாயகியாக நடித்தேன்.
இப்படி நாடகங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தேனே தவிர படங்களில் நடிக்கச்
சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.
எனவே, படங்களில் நடிக்க முடியாதபோது இனி சென்னையில் தொடர்ந்து இருப்பதில்
அர்த்தமில்லை, ஊருக்குப் போய்விடுவோம் என்று மூட்டைமுடிச்சுகளை எல்லாம் கட்டி
வைத்தோம். மறுநாள் புறப்படத் தயார்!
அப்போது ஜானகிராமன் என்பவர் என்னைத் தேடி வந்தார். தான் 'இன்ப வாழ்வு' என்ற
படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும்
கூறினார்.
எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு நாள் காத்திருந்து வராத பட சான்ஸ் ஊருக்குப்
புறப்படும்போது வந்திருக்கிறதே. இவருக்கு நம்மைப்பற்றி யார் சொன்னது?
இதற்குப் பதிலை ஜானகிராமனே சொன்னார். "நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள், எஸ்.எஸ்.
ராஜேந்திரன் நாடகமன்றத்தின் 'மணிமகுடம்' நாடகத்தில் உங்கள் நடிப்பைப் பார்த்தாராம்.
உங்கள் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவர்தான் உங்களை புக்பண்ணச்
சொன்னார். அவரை வைச்சுத்தான் நான் படத்தை எடுக்கிறேன்" என்று கூறி முன் பணம் ரூபாய்
நூறு கொடுத்துவிட்டுச் சென்றார்.
அந்த நூறு ரூபாய் எங்களுக்கு ஒரு லட்சம் போல் இருந்தது. ஏனெனில் அந்தக்காலத்தில்
(1958) படங்களில் நடிப்பது குதிரைக்குக் கொம்புமுளைத்த மாதிரி. அவ்வளவு கஷ்டம்
சான்ஸ் கிடைப்பது!
உடனே கட்டிய மூட்டைமுடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. படத்தில் நடிப்பது போல கனவுகள் கண்
முன்னாலேயே தோன்றத் தொடங்கி விட்டன.
ஆனால் என்ன துரதிரிஷ்டம் பாருங்கள் - அந்தப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதையடுத்து கவிஞர் கண்ணதாசனின் 'ஊமையன்கோட்டை' படத்தில் நடிக்க ஒப்பந்தம்
செய்யப்பட்டேன் என்ன ஆச்சரியம் - அந்தப்படம் பட ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது.
என்னடா இது, வாராது வந்த மாமணி போல ஏதாவது ஒன்றிரண்டு பட சான்சுகள் வந்தது.
வந்ததும் சப்பாணிப் பிள்ளையைப் போல ஆரம்பகட்டத்திலே நின்னு போச்சே. நமக்கு வர்ற
படமெல்லாமே இப்படியே நிக்கிற படமாவா வரணும். என்னடா கடவுளே! என்று யோசனையில்
ஆழ்ந்துவிட்டேன்.