M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

இந்த நேரம்தான் கவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தை ஆரம்பித்தார். அதில் எனக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் என்பதற்காக 'காமெடி' நடிகையாக கவிஞர் கண்ணதாசன் ஒப்பந்தம் செய்தார். சிரிப்பு நடிகையாக இதுவரையில் நடித்ததே இல்லை. திடீரென்று கவிஞர் இந்த வேடத்தில் என்னைப் போட்டதும் நான் பயந்துவிட்டேன். "இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே..." என்றேன்.

அதற்கு கவிஞர் கண்ணதாசன், பரவாயில்லை நடி எல்லாம் சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும் என்று ஆறுதலும் தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார்.

அன்று அவர் சிரிப்பு நடிகையாக அறிமுகப்படுத்திய வாழ்க்கை இன்றளவும் நிலைத்து நிற்கிறது. ஒருக்கால் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு எனது திரைஉலக வாழ்க்கை முற்றுப்பெற்றிருக்கும்.

கதாநாயகிகள் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் ஒதுங்கி விடுகிறார்கள். நகைச்சுவைக்கு காலவரையறையே கிடையாது. அதுவரைக்கும் எனக்கு இந்த சிரிப்பு நடிகையானதில் பெரும் மகிழ்ச்சி.

'மாலையிட்ட மங்கை' படத்தை முதன்முதல் நானும் அம்மாவும் பாரகன் தியேட்டரில் 'கியூ'வில் நின்று டிக்கட் வாங்கிப் பார்த்தோம்.

என் உருவத்தை திரையில் பார்த்ததும் என்னையறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. எவ்வளவோ கட்டுப்படுத்த முனைந்தும் முடியவில்லை.

நான்தான் இப்படி அம்மா எப்படி என்று திரும்பிப் பார்த்தேன். அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.

இதற்கு என்ன காரணம்? எட்ட முடியாத திரையுலகில் நமக்கும் ஒர் இடம் கிடைத்துவிட்டதே என்று கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சிதான் காரணம் என்று கருதுகிறேன்.

இந்தக்காலத்தில் எப்படியெப்படியோ படங்களில் சுலபமாக இடம் பிடித்து விடுகிறார்கள். அதேபோல் மிகச் சுலபமாகவே திரையுலகை விட்டும் வெளியேறிவிடுகிறார்கள்.

ஏன் இது?

திறமையால் முன்னுக்கு வருபவர்கள் குறைவாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடிப்பதற்கு இடம் பிடித்துக் கொள்பவர்கள் அதிகமாகவும் இருப்பது தான். அவர்களுக்கு தமது திறமையில் நம்பிக்கை இருப்பதில்லை. அப்போதைய கவர்ச்சியையே மூலதனமாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்தக் கவர்ச்சிக்குள்ள காலம் மிகக்குறைவு. திறமைக்கு காலவரையே கிடையாது.

நடிக்க வந்த பிறகாவது திறமையை வளர்த்துக் கொள்ள முயல வேண்டாமா? அதுவும் பல பேருக்குப் புரிவதில்லை.

கஷ்டம் இல்லாமல் வருகிறார்கள். கஷ்டம் இல்லாமல் போய் விடுகிறார்கள்.

இரண்டு முக்கிய பெரும்தலைவர்களோடு நடித்த பெருமை எனக்குண்டு. என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதவை அவை.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் நான் கதாநாயகி இந்துமதியாக நடித்தேன்.

இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எனது நடிப்பைப்பற்றி அண்ணா அவர்கள் பாராட்டிச் சொன்னார்கள்.

முரசொலி சொர்ணம் எழுதிய 'விடை கொடு தாயே' நாடகத்தில் நான்தான் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன். இந்த நாடகத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை தலைமை வகித்து என் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடந்த நாடகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து எனக்குப் படப்பிடிப்பு இருந்துவந்ததால் என்னால் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

அதனால், அந்த நாடகத்திற்கு வேறு ஒரு நடிகையைக் கதாநாயகியாகப் போட்டு நாடகத்தை நடத்தினார்கள். இந்த நாடகத்திற்கும் அண்ணா தலைமை வகித்துள்ளார். வழக்கம்போல் நாடகத்தைப் பாராட்டிப் பேசிவிட்டு அண்ணா வீட்டுக்குப் போகும்போது சொர்ணத்திடம் "நாளைக்கு என்னை வீட்டில் வந்துபார்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் சொர்ணம் அண்ணாவை வீட்டில் போய் சந்தித்துள்ளார்.

அவரிடம் அண்ணா "நாடகத்தினால்தான் நடிகர் - நடிகைகளுக்குப் பெருமை" என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் - நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது! இனிமேல் மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே" என்று சென்னாராம்.

இதை பிறகு சொர்ணமே என்னிடம் வந்து சொன்னார்.

இது என் வாழ்க்கையில் பெற முடியாத பாராட்டு என்று எண்ணியெண்ணி மகிழ்கிறேன்.

இதை அப்படியே என்னிடம் வந்து சொன்ன சொர்ணத்தின் பெருந்தன்மையை நான் பெரிதும் போற்றுகிறேன்.

தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடவை நடித்திருக்கிறேன். இதில் கலைஞர் கதாநாயகன். நான் கதாநாயகி. இதன் அரங்கேற்றம் தேவகோட்டை தி.மு. கழக மாநாட்டில் நடந்தது. கலைஞரிடம் நல்ல பேர் வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

இந்த நாடகத்தில் நடித்தபோது 'அன்பு எங்கே' படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் இரவு தேவகோட்டை நாடகம். ஆனால் முதல் நாள் இரவு வரை படப்பிடிப்பு இருந்தது. நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன் நாடகம் பற்றி. முக்கியமானதாலும், இறுதிக்கட்ட காட்சி என்பதாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

படப்பிடிப்பு முடிந்ததும் எனக்காக ஒரு தனி காரை ஏற்பாடு செய்து மறுநாள் நாடகத்திற்கு தேவகோட்டைக்குக் கொண்டுபோய் விட்டார்கள். இது அந்தக்காலத்தில் சாதாரணமாக நடந்துவிட முடியாதது.

அண்ணாவைப் போலவே கலைஞர் அவர்களும் சொர்ணத்தின் 'விடைகொடு தாயே' நாடகத்திற்கு தலைமை வகித்திருக்கிறார்.

ஒருமுறை இந்த நாடகம் கல்லலில் நடந்தது. கலைஞர் தலைமை வகித்தார்.

நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் "நம்ம மாவட்டத்துப்பொண்ணு ரொம்ப நல்லா நடிக்குது" என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞருக்கு இந்தப் பேச்ச கேட்டிருக்கு.

தனது பாராட்டுரையில் இதைக் குறிப்பிட்ட கலைஞர் அவர்கள், "மனோரமாவின் முன்னோர்கள் எங்கள் (தஞ்சை) மாவட்டத்துக்காரர்கள். அதை நினைக்கும்போது எனக்கும் பெருமையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார். இந்தப் பாராட்டுரையும் என்றும் என் நினைவில் நிலைத்திருப்பதாகும்!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles