M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

என் அம்மா, எது எப்படி இருந்தாலும் முதலில் தொழிலுக்குத் தான் முதல் இடம் தருவார் உறுதியாக இருப்பார். வாழ்க்கைக்கு ஆதாரமானது தொழில். அதை விட்டுவிட்டு நம்மைப்பற்றியே அக்கறை எடுத்துக் கொண்டுவிட்டால் பிறகு நம்மீது அக்கறை செலுத்த ஆளே இல்லாமல் போய்விடும்.

இந்த உணர்வு என் ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று. இதற்கு ஒரு நிகழ்ச்சியே உதாரணமாக உள்ளது.

'பாலும் பழமும்' படத்தின் ஒரு முக்கியமான காட்சி. அந்தப் படத்தில் எனக்கு ஒரு சிறு வேடம் தான். இருந்தாலும் அந்தக் காட்சியில் நானும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள் மற்றும் சிவாஜி, பாலையா, எஸ்.வி. சுப்பையா, சரோஜா தேவி, செளகார் ஜானகி, சுந்தரிபாய், சி.டி. ராஜகாந்தம், ஏ. கருணாநிதி ஆகிய பெரிய நட்சத்திரங்கள் வரும் கட்டம் அது.

முதல் நாள் இரவு படுக்கப் போகும்போது கடுமையாக காய்ச்சல் அடித்தது எனக்கு. காலையில் எழுந்தால் நெருப்பு போல் உடம்பு கொதிக்க முகம், கை தவிர உடம்பு முழுவதும் அம்மை கண்டிருந்தது.

என்ன செய்வது?

இதற்குள் படப்பிடிப்புக்குக் கூட்டிப்போக கார் வந்துவிட்டது. உடனே அம்மா "எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம். பேசாமல் புறப்படு. போவோம்" என்றார். நானும் புறப்பட்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டேன்.

மேக்கப்மேன் ரங்கசாமி மேக்கப் போட முகத்தில் கையை வைத்தவர் பட்டென்று கையை எடுத்துக் கொண்டு, "என்னம்மா இது, முகத்தில் கையை வைக்க முடியலை. தீ மாதிரி சுடுது எப்படி மேக்கப் போடுறது?" என்றார்.

இதற்குள் என் அம்மா, சுந்தரிபாய் அக்காவிடம் எனது உடல்நிலையைப் பற்றிக் கூறவே, அவர் பதறிப் போய் ஓடிவந்து மேக்கப்மேனை வெளியே போகச் சொல்லிவிட்டு. எனது ஜாக்கெட்டைக் கழற்றிப் பார்த்தவர் பதறிப் போய் விட்டார்.

உடம்பு முழுவதும் அம்மைக் கொப்புளங்கள்!

உடனே சுந்தரிபாய் அக்கா தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொல்ல அவர் வந்து பார்த்துவிட்டு, "ஏம்மா இதை முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. நாங்க என்ன ராட்சதர்களா? மனிதர்கள்தானே!" என்று வருத்தப்பட்டவர், உடனே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எவ்வளவோ சிரமங்கள் - துயரங்கள் - இடையூறுகளுக்கு மத்தியிலும் தொழிலையும், தயாரிப்பாளர்களையும் நாங்கள் மதித்தோம்; தயாரிப்பாளர்களின் சிரமங்களையும் அனுசரித்துப் போனோம்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களிடையே இந்த அளவு பக்குவ நிலை இருக்கிறதா என்றால் அது சர்க்சைக்குரியதாகக்கூட இல்லை, கேள்விக்குரியதாக இருக்கிறது என்கிறார்கள்.

இது இருதரப்பினரையும் துண்டித்து அழித்துவிடக் கூடிய ஒன்றாகும். 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அடுத்து, ஏ.பி.என். அவர்களின் 'கண்காட்சி' படத்தின் இறுதிகட்ட காட்சி நடந்து வந்தபோது நான் யூனிட்டி கிளப் என்ற நாடகமன்றத்தின் நாடகங்களில் நடித்து வந்தேன். என்னுடன் ஆர். முத்துராமன் வி. கோபாலகிருஷ்ணன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் நடித்தார்கள்.

சித்ராலயா கோபுவின் 'காசே தான் கடவுளடா' நாடகம் அப்போ நடந்து வந்தது. இந்த நாடகம் பொங்கல் தினத்தில் பம்பாய் சண்முகானந்த சபாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாவே மற்றவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள். 'கண்காட்சி' படத்தினால் அவர்களோடு என்னால் போக முடியவில்லை. ஆகவே எனக்கும், என் மகன் பூபதிக்கும் சேர்த்து இரண்டு விமான டிக்கட்டுகள் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள்.

அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நான் அன்று மாலை 6 மணிக்கு பம்பாயில் நாடகம். ஐதரபாத் வந்து வேறு ஒரு விமானத்திற்கு மாறவேண்டும் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

எனக்கு இதற்குமுன் விமானம் பயண அனுபவம் இல்லை படிப்பும் போதாது மொழி தெரியாதவர்களிடையே பிரயாணம். ஒரே குழப்பத்தோடு விமானம் ஏறினோம்.

நல்ல வேளையாக நான் ஏறிய விமானத்தில் பிரபல இசைமேதை எம்.எல். வசந்தகுமாரியும் வந்தார். அவருக்கு ஐதராபாத்தில் கச்சேரி என்று சொன்னார்.

அவரை மெதுவாக பழக்கப்படுத்திக் கொண்டேன். 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்த்திருக்கிறார். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது. என் நிலைமையை அவரிடம் சொன்னேன்.

அவர் ஐதராபாத் வந்ததும் என்னுடன் ஒருவரை அனுப்பி எனது டிக்கட்டை மாற்றி பம்பாய் விமானத்தில் அனப்பி வைத்துவிட்டு வரும்படி கூறினார்.

நாங்கள் போன நேரம், அன்று புறப்பட வேண்டிய காலை பம்பாய் விமானம் ரத்தாகிவிட்டதாகச் சொல்லி விட்டார்கள். மாலை 4 மணிக்குத்தான் இதை கேள்விப்பட்டதும் எம். எஸ். வி. என்னிடம், "நீ தனியாக எங்கே எவ்வளவு நேரம் இருக்கப்போறே? என்னோடு வந்து மாலையில் போகலாம் வா" என்றார். சரி என்று அவருடன் போய் விட்டேன்.

இதற்கிடையில் நான் குறித்த நேரத்தில் பம்பாய் வராததால் அங்கிருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு போன் போட்டு என்னைப்பற்றி விசாரித்து இருக்கிறார்கள்.

மாலையில் எம்.எல். வசந்தகுமாரி என்னுடன் ஒருவரை துணைக்கு அனுப்பி பம்பாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

விமான நிலையம் வந்தால் 4 மணிக்குப் புறப்பட வேண்டிய ஃபிளைட் மாலை 6 மணிக்குத்தான் புறப்படும் என்றார்கள். 6 மணிக்கு பம்பாய் நாடகம். நான் ஐதராபாத்தில் எனக்கு மயக்கமே வரும் போலாகியது.

மறுபடியும் விமான நிலையத்திற்கு பம்பாயிலிருந்து தொலைபேசித் தொடர்பு கொண்டு என்னைக் கூப்பிட்டார்கள். என்னிடம், நாடகத்திற்கு வேண்டிய சாமான்களை மாத்திரம் ஒரு பையில் போட்டு கையில் எடுத்துக்கொண்டு மற்றவைகளை 'லக்கேஜில்' போட்டு அதற்கான கார்டை பம்பாய் விமான நிலையத்தில் தந்து விடுமாறும், ஆள் வரும் என்றும் கூறினார்கள்.

மாலை 6 மணிக்கு விமானம் புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பம்பாய் போய்ச் சேர்ந்தது. இதற்குள் நான் விமானத்திலேயே மேக்கப் போட்டுக்கொண்டு விட்டேன்.

விமானம் போய் நிற்கவும், என்ன ஏற்பாடு - எப்படிச் செய்தார்களோ, விமானத்தையொட்டி ஒரு கார் வந்து என்னை ஏற்றிக்கொண்டு 8.30 மணிக்கு நாடக அரங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது.

அடுத்த சில நிமிடங்களில் நாடகம் தொடங்கியது.

இதில் என்ன விசேஷம் என்றால், அந்த இரண்டரை மணி நேரமும் அந்த ரசிகப் பெருமக்கள் மிக அமைதியாக அரங்கத்திற்குள் உட்கார்ந்து இருந்ததுதான்.

அன்று நாடகம் மிக அருமையாக அமைந்துவிட்டது. பார்த்தவர்களுக்குப் பரம சந்தோஷம்.

இந்த நிகழ்ச்சியின்போது நான் பட்ட சஞ்சலத்தைப் போல வேறு எப்போதுமே பட்டதில்லை!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles