M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

ஆரம்ப கால திரை உலக வாழ்க்கையில் எனக்கு அதிகப் படங்கள் வரக் காரணமாக இருந்தது 'அபலை அஞ்சுகம்' படம் என்று கூறலாம். அதில் மெட்ராஸ்காரியாக வேடம் ஏற்று நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றேன். குறிப்பாக தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களோடு எல்லாம் நடித்துவிட்டேன்.

ஆனால், என்னை நல்லதொரு குணச்சித்திர நடிகை என மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய படம் 'தில்லானா மோகனாம்பாள்' தான்.

இந்தப் படத்தில் மிகவும் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் நன்றாக நடிப்பேன் என்று எதை ஆதாரமாக வைத்து 'ஜில்ஜில் ரமாமணி'யாக என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் எனக்குப் புரியாத ஒன்றாகவே இருக்கிறது.

இதில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு முழுக் காரணமும் அண்ணன் ஏ.பி. என். தான்.

முதல் நாள் படப்பிடிப்பின் போது, தனியாக என்னிடம் 'மற்ற நடிகர் நடிகைகளைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதே. அவர்கள் எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் எல்லாரையும்விட நீதான் பெரிய ஆள் என்பது போல நெனைச்சுக்கிட்டு நடி, நல்ல பேர் வாங்கணும்" என்று உற்சாகப்படுத்தி விட்டார்.

அவரைப் போல இனி யாரால் தனித்திறமைமிக்க படங்களை உருவாக்க முடியும்?

எனக்கு மனக் கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஏ.பி.என். அவர்களிடம் போய் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தால் எல்லாக் கவலையும் மறைந்துவிடும். அந்த அளவிற்கு ஆறுதலும் அறிவுரைகளும் சொல்லுவார். மிக அற்புதக் கலைத்திறன் படைத்த மனிதர் அவர்!

எனது வாழ்க்கையில் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் உசிலம் பட்டி நிகழ்ச்சியைப் போல் என்னைத் திகைக்க வைத்தது வேறு எதுவும் இல்லை.

உசிலம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் கல்லூரி வளர்ச்சி நிதிக்காக எனது நாடகம் நடைபெறவிருந்தது.

நாங்கள் மதுரையில் தங்கியிருந்து மேக்கப் போட்டுக்கொண்டு மாலை நாலரை மணிக்குக் காரில் புறப்பட்டோ ம். புறப்பட்ட அந்த விநாடியில் இருந்து பயங்கர மழை கொட்டத் தொடங்கியது. எதிரில் இருக்கும் எதுவுமே தெரியவில்லை வழியும் சரியாகப் புலப்படவில்லை.

எனக்குப் பெரும் கவலையாகிவிட்டது. ஏனென்றால் நாடகம் திறந்த வெளி அரங்கில் நடைபெறுவதாக இருக்கிறது. எப்படி நாடகம் நடக்கும்?

எப்படியோ ஒருவழியாக உசிலம்பட்டிக்குள் எங்கள் கார் போய்விட்டது.

என்ன ஆச்சரியம்!

உசிலம்பட்டியைச் சுற்றி ஒரு வளையம் போட்டது போல சுத்தமான ஒரு பொட்டுத் துளி மழைகூடப் பெய்யவில்லை. திரும்பிப் பார்த்தால் பின்னால் மழை கொட்டிக் கொண்டிருந்கிறது.

நாடகம் நடக்கும் இடத்தில் ஆண்களும் பெண்களும் பல ஆயிரம் பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம் மேலிட்டது.

நாடக முடிவில், நாடகத்திற்குத் தலைமை வகித்த மூக்கையாத் தேவர் என்னையும் பேசச் சொன்னார். நான் மழையைப்பற்றிச் சொல்லிவிட்டு, வானத்தில் காயும் முழு நிலவைச் சுட்டிக் காட்டி, "தேவர் நம்மையெல்லாம் அந்த முழு நிலவு வடிவத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்கிறார். அதனால்தான் இந்த நாடகம் எந்த இடையூறும் இல்லாமல் இன்று நடந்து முடிந்திருக்கிறது" என்றேன்.

இப்படி நான் சொல்லி முடித்ததும் உட்கார்ந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களும் ஏககாலத்தில் 'குலவை'யிடத் தொடங்கி விட்டார்கள். அதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.

உடனே பக்கத்தில் இருந்த மூக்கையாத் தேவர், "பயப்படாதீர்கள் அவர்கள் எல்லாம் நீங்கள் கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள் என்றார். அதன்பிறகுதான் எனக்கு உயிரும் வந்தது மகிழ்ச்சியும்" ஏற்பட்டது.

டைரக்டர் ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் உள்ள பீச்சிடாமிற்கு போயிருந்தோம். இந்தச் சந்தர்பத்தில் நான் மார்டன் தியோட்டர்ஸின் 'யாருக்குச் சொந்தம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதுவரையில் ஒரு முறைக் கூட டி.ஆர். சுந்தரம் அவர்களைப் பார்த்ததே இல்லை செட்டிற்கு விஸ்வநாதன் என்பவர்தான் வருவார்.

எனக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம். என்னை ஒரு முறைகூட நேரில் பார்த்திராமல், நான் நடித்த ஓரிரு 'குளோசப்' காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு என்னைக் கதாநாயகி என்றால் திடீர் என்று எப்படியிருக்கும்!

நான் கதாநாயகியாக நடித்த பட ஆரம்ப விழாவிற்கு முன்னதாக விஸ்வநாதன் இறந்து விட்டார். அதனால் டி.ஆர்.எஸ். அவர்களே நேரடியாக செட்டிற்கு வரத் தொடங்கினார்.

முதல் நாள் படப்பிடிப்பு எனக்கு டி.ஆர்.எஸ். யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவரைப்போலவே வேறு இரண்டு பேர்களும் செட்டிற்குள் இருந்தார்கள். அதனால் அவர்கள் மூன்று பேரில் யார் ஒரிஜினல் டி.ஆர்.எஸ். என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு முதன் முதலில் அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டு, படப்பிடிப்பில் பங்கேற்கச் சொன்னார் அம்மா அதேபோல செய்தேன்.

அது மாடர்ன் தியேட்டர்ஸின் 97-வது படம். அடுத்த 98, 99-வது படங்களிலும் நானே கதாநாயகியாக நடிக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால் அதற்குள் இயற்கை டி.ஆர். எஸ். அவர்களைப் பறித்துக்கொண்டுவிட்டது.

எத்தனையோ பேர் 'நானா கதாநாயகி' என்று வியப்பும் மறுப்பும் தெரிவித்த போதும் கூட எந்தவித சலனத்திற்கும் இடம் தராமல், யாரையும் பொருட்படுத்தாமல் என்னை நடிக்க வைத்தார்.

நான் தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை அறியாதவள் ஆனால், அவரிடம் பணியாற்றிய அந்த இரண்டு மாத காலத்தில் அந்த தந்தை பாசத்தை முழுமையாக உணர்ந்தேன். ஆனால் என்ன கொடுமை அந்தப் பாச உணர்வை என்னால் நடித்துப் பெற முடியாமல் போய்விட்டது.

அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுது அழுது 106 டிகிரி காய்ச்சலே வந்து விட்டது மரணச் செய்தி கேட்ட போது என் இருதயம் இரண்டாக பிளந்துவிட்டது போல் இருந்தது.

அந்தப் படத்தில் வாங்கிய சம்பளப் பணம் முழுவதையும் குருவாயூர் கோவிலுக்கு லட்ச தீபம் ஏற்றியும், பழனி, திருப்பதி கோவில்களில் கல்யாண உற்சவம், அபிஷேகம் செய்யவும், மாடர்ன் தியோட்டர்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் வேட்டி - சேலை வாங்கித் தந்தும் செலவிட்டேன். ஒரு காசுகூட என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles