M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

நான் கஷ்டத்திலே பிறந்து கஷ்டத்திலேயே வளர்ந்தவள். அதனால் மற்றவர்களின் கஷ்டங்களைத் தெளிவாகப் புரிந்து அதற்கேற்பவே நடந்த வந்திருக்கிறேன்.

1000-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நான், இதுவரையில் எந்தத் தயாரிப்பாளரையும் கசக்கிப் பிழிந்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது இல்லை.

எனக்கு வரவேண்டிய பணத்திற்காக எந்தத் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என் சர்வீஸ்கூட இல்லை நான் வாங்கும் சம்பளம்!

முன்பெல்லாம் நட்சத்திரங்களிடையே கடும் போட்டி இருந்தது.

எதில்?

தொழிலில்!

அவரைவிட நாம் சிறப்பாக நடித்துப் பெயர் வாங்க வேண்டும் என்ற வேகம் இருந்தது.

ஆனால் இப்போது?

அந்த நடிகை ஒரு லட்சம் வாங்குகிறாரா? அப்படியானால் எனக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கொடு - என்கின்ற 'ரேட்' போட்டிதான் இருக்கிறதே தவிர, நடிப்பிலே போட்டியைக் காண முடியவில்லை.

இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்க வந்து விடலாம். எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால், அந்தக் காலத்தில் ஒரு வார்த்தை பேசவேண்டுமானாலும் அதற்குத் தகுதி, திறமை பார்ப்பார்கள். பரீட்சை வைப்பார்கள்!

நமது தொழிலில் நீடித்து இருக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களை அனுசரித்துப் போகவேண்டும். சிறு பையன்கூட நாளைக்கு உதவி செய்யக் கூடியவனாகவும் இருக்கலாம்; குறிப்பாக தயாரிப்பாளர்களைப் பகைத்துக் கொள்வது போன்ற பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

'வீர அபிமன்யூ' என்று ஒரு படம் இதில் எஸ்.எம். குமரேசன் என்பவர் கதாநாயகன். மிக அருமையான நடிகர் அற்புதமாகப் பாடக் கூடியவர். அந்தப் படத்தில் மிக நன்றாக நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்குப் பிறகு எஸ்.எம். குமரேசனால் திரையுலகில் பிரகாசிக்க முடியவில்லை. என்ன காரணம்? 'வீர அபிமன்யூ' படத் தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த அனாவசியத் தொல்லைகளும் இடையூறுகளும்தான்.

இவரது தொல்லையைக் கண்ட அன்றைய தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடிப் பேசி 'இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் எஸ்.எம். குமரேசனை வைத்துப் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.

போதுமா!

இதுபோன்ற சில விஷயங்களை நான் எனது சின்ன வயதில் கேள்விப் பட்டதினால் மிக ஜாக்கிரதையாகவே நடந்து வந்துள்ளேன். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஒரு பாடமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

மேலே கண்ட நிகழ்ச்சியைப் போன்று நானே நேரிடையாகக் கண்ட ஒரு காட்சியையும் உங்களுக்குச் சொல்லி வைக்கலாம் என்று விரும்புகிறேன்.

ஈரோடுக்குப் பக்கத்தில ஊஞ்சலூர் என்ற ஊர் 55 மைலில் உள்ளது. இந்த ஊருக்கு ஒரு படப்பிடிப்பிற்காகப் போனோம். நாங்கள் நாலைந்து போர்தான் நட்சத்திரங்கள்.

அதனால் அதே ஊரில் தயாரிப்பாளர் தனது நண்பர்களின் வீடுகளில் எங்களைத் தங்க வைத்திருந்தார். நாங்கள் அங்கேயே தங்கிக் கொண்டோ ம்.

ஆனால், கதாநாயகி மட்டும் "நான், 'ஏர்கண்டிஷன்' இருந்தால் தான் தங்குவேன். இங்கேயெல்லாம் தங்க முடியாது" என்று பிடிவாதம் பிடித்து ஈராட்டில் ஒரு லாட்ஜில் ரூம் போடச் செய்து தினசரி அங்கு போய் வந்து கொண்டிருந்தார்.

இந்த லட்சணத்தில் அவர் உயரத்திற்கு ஒரு நாற்காலியை வேறு தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்.

இதனால் என்ன லாபம்? மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் முடிந்து போய்ச் சேர எப்படியும் 9 மணியாகும். பிறகு காலையில்7 மணிக்கெல்லாம் ஷூட்டிங்கில் இருக்க வேண்டும். இடைப்பட்ட சில மணி நேரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதா?

இத்தனைக்கும் அப்போது அந்த நடிகை நடித்து ஒரேயொரு படம் தான் வந்திருந்தது. இந்தப் படம் இன்னும் வரவில்லை.

இதன் விளைவு? இப்போது அந்த நடிகை யார் என்பதே மறந்துபோச்சு!

ஒரு சமயம் நல்ல புகழோடு இருந்த வில்லன் நடிகர் டி.கே. ராமச்சந்திரன் என்னிடம் சொன்னார். "நீ பணத்தை எண்ணாதே, படத்தை எண்ணு" என்று.

இதைத்தான் நான் மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் என் மகனுக்கும் சொல்வேன்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles