M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

எத்தனையோ நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நான், என்னுடைய வாழ்க்கையில் என் அடிமனத்தில் ஆனந்தப் பெருவெள்ளத்தைப் பாய்ச்சிய நிகழ்ச்சியொன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சி தாய்மை உணர்வு என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி! எனது மகன் பூபதியை பல இடங்களுக்கும் 'என்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறேனே தவிர, அவனை எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளச் செய்ததில்லை.

அவனுக்குப் பாட வரும் என்பதும் எனக்குத் தெரியாது. அதனால் மலேசியா சென்றிருந்தபொழுது தானும் பாடுவதாகக் கேட்டான். நான் மறுத்துவிட்டேன்.

பின்னால் கும்பகோணத்தில் ஒரு முறை ஜெய்சங்கரின் 'ஜெய் ஜாய் நைட்' நடந்தது. அதற்கு நாங்கள் போயிருந்தோம்.

நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. நான் மேடையின் பின்புறம் ஏதோ வேலையாக இருந்தேன். திடீர் என்று மைக்கில் ஒரு இனிமையான புதுக் குரலிசை ஒலிக்கத் தொடங்கியது.

நான் ஆச்சரியப்பட்டு அருகில் இருந்தவரிடம் "யார் புதுக் குரலா இருக்கே? நல்லா பாடறாங்களே!" என்று கேட்டேன்.

"நம்ம பூபதிதான் பாடுது" என்று பதில் கிடைத்ததும் எனக்குச் சற்று நேரம் ஒன்றுமே ஓடவில்லை. ஆனந்தத்தில் என்னையே நான் மறந்து இருந்து விட்டேன்.

என்னுடைய இரண்டாவது வயதில் நான் பாடியதைக் கேட்டு என் அம்மா எத்தகைய உணர்வை - தாய்மை இன்பத்தைப் பெற்றிருப்பார் என்பதை இப்போது நான் அந்தத் தாயின் இடத்தில் இருந்து உணர்ந்தேன். அந்த உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் தருவது சிரமம்!

அதன் பிறகுதான் 'மியூசிரமா'வை ஆரம்பித்தேன்.

நட்சத்திரங்களாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நிலையாக இந்தத் துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வர வேண்டும்.

அப்போதுதான் எதையும் எதிர் கொள்ள முடியும். சகித்துச் சமாளிக்க முடியும்.

ஏதோ வந்தோம், பணம் சேர்த்தோம், போனோம் என்ற பாணியில் இருக்கக் கூடாது.

மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல கலைஞரின் லட்சியமாக இருக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களிடம் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளவும் வேண்டும்; அதே நேரத்தில் சில தயாரிப்பாளர்களிடம் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

எந்தத் தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அதில் முழுதாக ஏமாந்து விடக்கூடாது.

சில தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தில் நஷ்டம், அடுத்த படத்தில் சேர்த்துத் தருகிறேன் என்பார்கள். அடுத்த படத்தில் அதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்!

இன்னும் சிலர் வரவே மாட்டார்கள்!

வேறு சிலரோ கண்டும் காணாதது மாதிரிப் போய் விடுவார்கள்!

சில படங்களில் எனக்கு குறைவாகக் கொடுக்கிறார்கள் என்பதற்காக எனது நடிப்பை அதற்கு ஏற்ப குறைத்துக்கொள்ள மாட்டேன். அதிக சம்பளம் கொடுக்கிற இடத்தில் அதிகமாக நடிப்போம் என்றும் நடிக்க மாட்டேன். பிறகு நடிப்பைப் பிடித்துக்கொள்ள காமிரா கொள்ளாமல் வழிந்துவிடும்!

எந்தச் சந்தர்ப்பத்திலும் எவ்வளவு பிரஷராக இருந்தாலும் எனது தொழிலை நான் முழு மன நிறைவோடு - செம்மையாகச் செய்துவிட்டுத்தான் போவேன்.

நான் படத்துடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் மாலையில் நாடகம் இருக்கும். நான் காலையில் போனதுமே என்னைச் சற்று முன்னதாகவே அனுப்பிவிடும்படி டைரக்டர்களிடம் கேட்டுக் கொள்வேன்.

ஆனால், கடைசி நேரத்தில் ஒரு சீனை முடித்துவிட்டுப் போக வேண்டியது ஏற்படும். அப்போது மாலை 5.45 மணிகூட ஆகிவிடும். 6 மணிக்கு நாடகம் இருக்கும்.

அப்போது மிகுந்த டென்ஷனாக இருக்கும் என்றாலும், காமிரா முன் நிற்கும்போது நிதானமாகவும் முழுமையாகவும் எனது பாகத்தை நடித்து முடித்துவிட்டுத்தான் செல்வேன்.

அதற்குப் பிறகு பரபரப்புடன் சென்று நாடகத்தில் கலந்து கொள்வேன். இதற்கிடையில் மேக்கப் வேறு மாற்றிப் போட வேண்டியது இருக்கும்!

நாங்கள் - குறிப்பாக சிரிப்பு நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் மற்றவர்களைச் சிரிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்யை஢ல் எப்போதாவது சிரித்துக் கொள்கிறேன்.

சர்க்கஸில் கோமாளி பலர் அதி தீவிரத்துடன் செய்யும் வேலைகளை எல்லாம் மிக அனாவசியமாகச் செய்து ரசிகர்களை மகிழ்விப்பான். சில நேரம் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல கீழே விழுந்தும் சிரிக்க வைப்பான்.

ஆனால் உண்மையில் கோமாளி தான் சர்க்கஸில் மற்ற எல்லாக் கலைஞர்களையும்விட ஓரளவு எல்லா விளையாட்டுக்களையும் சிறப்பாகக் கற்று வைத்திருப்பான். அவன் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் நிலையிலும் இருப்பான். ஆனால், அவனைக் கூப்பிடுவதோ கோமாளி என்று கேலியாக!

அதே நிலைதான் சிரிப்பு நட்சத்திரங்களின் நிலையும், திரை உலகில்.

எல்லாவித நடிப்பும் கைவரப் பெற்றவர்கள்தான் சிரிப்பு நடிப்பில் பிரகாசிக்க முடியும்.

என்றாலும், பெரும்பாலும் மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்களின் அடித்தளத்தில் சோகமே மிகுந்து கிடக்கும்.

இதற்கு ராஜ்கபூரின் 'மேரே நாம் ஜோக்கர்' இந்திப் படத்தில் வரும் கோமாளி ராஜ்கபூரின் கதாபாத்திரத்தை உதாரணம் காட்டலாம். மேடையில் சிரிக்க வைக்கும் அவர் மேடைக்குப் பின்னால் கண்ணீரில் மிதப்பார்.

அதுதான் எனது வாழ்க்கையில் அகப்பகுதியும்!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles