M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

1976 தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட நேரம். ஒரு நாள் மத்திய அரசு வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து சோதனை போட வேண்டும் என்று கூறி வீடு முழுவதையும் ஒரு நாள் முழுவதும் சோதனை போட்டார்கள்

எனக்கு ஏன், எதற்கு என்ற விபரம் எதுவும் தெரியாது. யாருடைய தூண்டுதலோ அல்லது யாருடைய ஆசையை நிறைவேற்றுவதற்கோ தெரியவில்லை. ஏராளமான அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் ஒரு அடி இடம் கூட விடாமல் சோதனை போட்டார்கள்!

நான் ஆயிரம் திரைப்படங்கள் வரை நடித்திருக்கிறேன். அதனால் பெருந்தொகை கருப்புப் பணம் என்னிடம் குவிந்திருக்கிறது என்று தான் யாரையும் கணக்குப் போட வைக்கும்.

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, ரசிகப் பெருமக்களின் உள்ளங்களையே நான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறேனே தவிர, பணத்தையல்ல என்பது!

நான் ஏற்கெனவே இலைமறைகாயாக கோடிட்டுக் காட்டியிருக்கிறேன் - பணம் தராமல் தலைமறைவாகிவிடும் தயாரிப்பாளர்களைப் பற்றியும், பாதி சம்பளத்தைக் கொடுத்து மீதியை அடுத்த படத்தில் சேர்த்துத் தந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு பிறகு கண்டும் காணாமல் போய்விடும் தயாரிப்பாளர்களைப்பற்றியும்.

எனது திரைப்பட உலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் சந்திப்புகளே அதிகம் பேசியபடி நடந்து கொள்ளும் நல்ல தயாரிப்பாளர்கள் இல்லை என்பது இதற்கு அர்த்தம் அல்ல முன்னவர்கள் அதிகம் என்பதே பொருள்!

நான் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறேன் ஒரு படத்திலாவது முழுமையாக ஒரு முப்பதாயிரம் ரூபாயைப் பெற்று விட முடியுமா என்று என்னத்தே.... எனக்கு வர வர சந்தேகமாக இருக்கிறது!

இப்படிப்பட்ட நிலையில் எப்படி என்னிடம் லட்சக்கணக்கில் பணத்தை எதிர்பார்க்கமுடியும்!

சரி; வந்துவிட்டார்கள் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

எவ்வளவோ துருவித் துருவிப் பார்த்தும் எந்த உருப்படியான எதிர்பார்ப்பும் கிடைக்காமல் போகவே அதிகாரிகள் சலித்துப் போய் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அவர்கள் போகும்போது என் மகனை அழைத்து, "தம்பி! உங்க அம்மாவை இனிமேலாவது, எங்களுக்காகவாவது கொஞ்சம் கூடப் பணம் வாங்கச் சொல்லப்பா!" என்று கூறிவிட்டுப் போனார்கள்!

எனக்கும் ஆசைதான் என் வீடு சோதனையிடப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு மதிப்பளித்து கொஞ்சமாவது மகிழ்ச்சி தரவேண்டும் என்று! ஆனால் பல தயாரிப்பாளர்களின் கண்ணீரிலும் வயிற்றெரிச்சலிலும்தானே அந்த மகிழ்ச்சியை அளிக்க முடியும்? அது தேவைதானா?

இப்போது வரும் இளைய தலைமுறைக் கதாநாயகிகளிடம் ஒரு நல்ல பண்பு இருப்பதைப் பார்க்கிறேன். 'நான் கதாநாயகி மற்றவர்கள் எல்லாம் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள்' என்கின்ற ஒருவித அலட்சிய மனப்பான்மை இவர்களிடம் இல்லை என்றே கருதுகிறேன்.

ஆனால் அந்தக் காலத்தில் இந்த மனோபாவம் ஒருசில கதாநாயகிகளிடம் அருவருக்கத்தக்க அளவிற்குக் குடிகொண்டிருந்ததை நான் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் சில கதாநாயகிகள் மற்ற நடிகைகளை அடிமைகளைப் போல நடத்தியிருக்கிறார்கள்!

குறிப்பாக சிரிப்பு நடிகை என்றால் அவர்களுக்குக் கிள்ளுக் கீரை என்ற நினைப்பு.

ஒரு சமயம் என்னுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த ஒரு கதாநாயகி, நான் தலையில் அழகான பூவும் அதற்கு ஏற்றாற் போல் கழுத்தில் நகையும் அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு, தயாரிப்பாளரைக் கூப்பிட்டு "மனோரமா தலையில் உள்ள பூவையும் கழுத்தில் உள்ள நகையையும் எடுத்துவிடச் சொல்லுங்கள். இல்லா விட்டால் இனி உங்கள் படத்திற்கு என் கால்ஷீட் கிடைக்காது" என்று பயமுறுத்தியிருக்கிறார். பிறகு அப்படியே நான் பூவை எடுத்துவிட்டு நடித்தேன்!

இத்தனைக்கும் எனது கதாபாத்திரத்திற்கு அது அவசியம் எனத் தரப்பட்டவைகள்தான். இப்போது அந்தக் கதாநாயகி தமிழ் நாட்டில் இல்லை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles