இப்படி எத்தனையோ கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கி சகித்துக்கொண்டு என்
தொழிலில் முன்னேறி வரக் காரணம் நான் தெய்வமாக மதித்து வழிபடும் என் அம்மாதான் என்று
நம்புகிறேன். அவரது ஆறுதலும் தேறுதலும் தான் என்னை தன்னம்பிக்கை கொள்ள வைத்து,
தொழிலில் நிலைக்க வைத்தது!
ஒருமுறை
தேவர் பிலிம்ஸின் படம் ஒன்றின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. இதில் ஒரு
குறிப்பிட்ட கதாநாயகியின் கடுகடுப்புக்கும் சிடுசிடுப்புக்கும் ஈடுகொடுத்து
நடித்துக் கொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் கதாநாயகியும் நானும் குதிரையில் வரும்
காட்சி வேறு படமாக்கப்ட்டது. அதிலும் மற்றோர் தொல்லை கதாநாயகிக்குத் தரப்பட்ட
குதிரை கிழட்டுக் குதிரை, வேகமாக ஓடாது. எனக்குத் தரப்பட்டிருந்த குதிரையோ
சுறுசுறுப்பான குட்டிக் குதிரை. இது கதாநாயகியின் வயிற்றெரிச்சலை
இரட்டிப்பாக்கியிருந்தது. அதனால் எனக்கு என்று தனி 'ஷாட்' அல்லது குளோசப் எடுப்பதை
அந்தக் கதாநாயகி தடுத்துக்கொண்டேயிருந்தார்.
அதனால் மறுநாள் காலையில் அந்தக் கதாநாயகி வருவதற்குள் என் சம்பந்தப்பட்ட சில
தனிக் காட்சிகளைப் படமாக்கிவிட டைரக்டர் ஏற்பாடு செய்து அதன்படி மறுநாள்
படப்பிடிப்பு நடை பெற்றது. நான் குதிரையில் வருவதை 'ரிவர்ஸ்' (பின்னாலேயே போவது)
ஷாட்டாக எடுத்தார்கள். அதற்காக நான் ஒரு திருப்ப மறைவில் இருந்து குதிரையில் வேகமாக
வரவேண்டும் என்றார்கள். எனக்கு அதற்குமுன் குதிரை சவாரி செய்து பழக்கமே கிடையாது.
குதிரையோ படு சுறுசுறுப்பாக இருக்கிறது. வருவது வரட்டும் என்று துணிந்துவிட்டேன்.
குதிரைக்காரர் மறைவு வரை பிடித்து வந்து, படப்பிடிப்பு ரெடியானதும் அதன் காதில்
ஏதோ சொல்லிவிட்டு காமிராவில் தென்பட்டுவிடாமல் தன்னை மறைத்துக் கொண்டார்.
அவ்வளவுதான்! குதிரை எடுத்தது பாருங்கள் ஓட்டம் சிட்டுக்குருவியாட்டம்!
எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் குதிரையின் கடிவாளத்தை மட்டும்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது! வேகமாக வந்த குதிரை குறிப்பிட்ட
திருப்பத்தில் திரும்பியதுதான் தாமதம், அப்படியே நான்கு கால்களும் வாரியடித்தது போல
கால் பிசகி கீழே விழுந்து விட்டது. அதோடு சேர்த்து நானும் தூக்கி எறியப்பட்டேன்.
ஆனால் அப்போதும் குதிரையின் கடிவாளம் என் கையில் பலமாகச் சிக்கியிருந்தது.
ஆனால் அடுத்த கணம், விழுந்த குதிரை அதே வேகத்தில் எழுந்து ஓடத் தொடங்கி விட்டது.
அது எழுந்த வேகம் - என் கையில் இருந்த கடிவாளம் இழுபட்ட வேகத்தில் எனது இடது முன்கை
எலும்பு பட்டென்று முறிந்துவிட்டது. உடம்பு எங்கும் ரத்தக் காயங்கள்.
உடனே என்னை என் தாயாருடன் காரில் ஏற்றி கடும் மழையில் சென்னைக்கு டாக்டர்
நடராசனிடம் அனுப்பி வைத்தார்கள், கைக்கும் காயங்களுக்கும் சிகிச்சை பெற. எனது கை
எலும்பு முறிந்துவிட்ட சுயநினைவே எனக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது தான்
தெரியும். உடனே, "அம்மா என் கை முறிஞ்சு போச்சும்மா" என்றேன் அழுகையுடன். அப்போது
என் அம்மா, "பயப்படாதே பாப்பா! அண்ணன் (தேவர்) காப்பாத்துவார்" என்றார் மிகுந்த
நம்பிக்கையுடன்.
நாங்கள் சென்னைக்கு வந்து சேருவதற்கு முன்னதாக என்ன நினைத்தார்களோ, டாக்டர்
நடராசனிடம் கூட்டிப்போவதற்கு பதில் புத்தூர் கட்டுப் போடும்படி தேவர் பிலிம்ஸிற்கு
தகவல் கொடுத்துள்ளார்கள் ஊட்டியில் இருந்து! நாங்கள் வந்ததும் வராததுமாக புத்தூர்
கட்டுப் போடுபவர்களை தேவர் பிலிம்சார் அழைத்து வந்து கையில் கட்டுப் போடச்
செய்தனர். பயங்கரமான வேதனையில் துடிக்கவிட்டு ஒரு வழியாக அவர்கள் தங்கள் கட்டுப்
போடும் வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கோ கடுமையான வலியும்
மயக்கமும் ஏற்பட்டு பாதி சுயநினைவில் தேவர் பிலிம்ஸிலேயே படுத்துவிட்டேன்.
சிறிது நேரம் சென்றிருக்கும் படீர் என்று ஒரு சத்தம் கேட்டது போல் இருந்தது.
ஒன்று சேர்ந்திருந்த எலும்பு மறுபடியும் விலகிக் கொண்டு கை வளைந்துகொண்டுவிட்டது.
எனக்கோ தாளமுடியாத வேதனை உடனே டாக்டர் நடராசனிடம் போவது என்று மறுபடியும்
தீர்மானித்தோம். அதற்கிடையில் ஒரு 'எக்ஸ் ரே' எடுத்துக்கொள்வது நல்லது என்று
அதையும் எடுத்துக்கொண்டு போனோம். அவர் புத்தூர் கட்டுப் போடப்பட்டிருப்பதைப்
பார்த்து விட்டு, "நீங்கள் என்னை நம்பி வருவதாக இருந்தால் ஊட்டியில் இருந்து நேராக
வரவேண்டியது தானே. புத்தூர் கட்டைப் போட்டுக்கொண்டு 'எக்ஸ் ரே' யை வேறே
எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களே. இது மாட்டு வண்டிக்கு பெட்ரோல் போட்டு
ஓட்டுவது போல இருக்கு" என்று கூறி "என்னால் பார்க்க முடியாது, போய் வாங்க" என்று
கூறிவிட்டார்.
அதைக் கேட்டதும் என் அம்மா கதறி அழுது அவர் காலைப் பிடித்துக்கொண்டு,
"எப்படியாவது என் மகளைக் காப்பாற்றுங்க டாக்டர்" என்று கெஞ்சினார்.
அதனால் மனம் மாறிய டாக்டர் பிறகு எனக்கு வைத்தியம் செய்தார். இதில் பல நாட்கள்
தள்ளிப் போய்விட்டது. அப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நேரம், பல
படாதிபதிகள் தங்கள் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே
போல் தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கோ
குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற துடிப்பு.
அதனால் அங்குள்ளவர்கள் சிலரும் வேறு பல முக்கியஸ்தர்களும் கூடிப் பேசி என்னை
நீக்கிவிட்டு வேறு நடிகையைப் போட்டு படத்தை முடித்துவிட தீர்மானித்து
இருக்கிறார்கள்.
அப்போது தேவர் பிலிம்ஸ் மாரிமுத்து என்பவரும் தேவர் அவர்களும்தான், அது கூடாது,
குணமான பிறகே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம். நம்மைப் போலவே வேறு பல
தயாரிப்பாளர்களும்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நமது படத்தினால்
பாதிக்கப்பட்ட அவரை நாமே மாற்றி விட்டால் பிறகு மற்ற தயாரிப்பாளர்களும் அதையே
செய்யத் தொடங்கிவிடுவார்கள். பிறகு அந்தப் பெண்ணின் படவுலக வாழ்க்கை
பாதிக்கப்பட்டுவிடும். அதை அந்த முருகனே ஏற்கமாட்டான் என்று கூறியிருக்கிறார்கள்!
அன்று மட்டும் மற்றவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டு தேவரும், மாரிமுத்துவும்
செய்திருந்தால் இப்போது என்னுடைய கலை உலகப் பயணம் எப்படியிருந்திருக்கும் என்பதைப்
பல நேரங்களில் எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்!