என்ன
மந்திரச் சொல்லோ அது தெரியவில்லை; திரையுலகில் அந்த 63-ம் ஆண்டிற்குப் பிறகு அந்த
சிரிப்பு நடிகரைப் படங்களில் பார்க்க முடியாமற் போய்விட்டது.
இதேபோல் இன்னும் ஒரு உதாசீனம் - பங்கப்படுத்திய நிகழ்ச்சி!
பிரபல நடிகர், மறைந்த கே.ஆர். ராமசாமி அவர்களின் நாடக மன்றத்திலும், மறைந்த
சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமி நாடக மன்றத்திலும் ஒரே சமயத்தில் நான் நடித்துக்
கொண்டிருந்த நேரம் அது.
திருநெல்வேலி கண்காட்சியில் 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ற நாடகத்தை
நடத்துவதற்கு பிரண்டு ராமசாமி தேதி வாங்கிவிட்டார்.
இதே நேரத்தில், அதற்கு முதல் நாள் கே.ஆர்.ஆரின் 'வேலைக்காரி' நாடகம் சேத்தியாதோப்பை
அடுத்த 'சங்கரன்பந்தலில்' நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் என்னிடம் தேதி
வாங்கியவர் பிரண்டு ராமசாமிதான். இதனால் கே.ஆர்.ஆரின் நாடகத்தில் நடிக்க நான்
ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டேன்.
ஆனால், கே.ஆர்.ஆர். "நீ இல்லாமல் நாடகம் இல்லை. எப்படியும் நீ வரவேண்டும். உன்னை
பிரண்டு ராமசாமி குழுவினர் வரும் திருநெல்வேலி ரயிலிலேயே அவர்கள் பெட்டியில்
ஏற்றிவிட ஏற்பாடு செய்கிறேன். அதற்கு ஏற்றாற்போல் முன்கூட்டியே நாடகத்தை ஆரம்பித்து
விடுவோம்" என்றார்.
இதை பிரண்ட் ராமசாமியிடம் சொல்லி எப்படியும் நாடகத்திற்கு வந்துவிடுகிறேன் என்று
கூறினேன். அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.
என்னைப் போலவே கலாவதி என்ற நடிகையும் இதே இரண்டு நாடக மன்றங்களிலும் நடித்துக்
கொண்டிருந்ததால் அவரும் அவரது தந்தையும் எங்களோடு கே.ஆர்.ஆர். நாடகத்தில்
நடித்துவிட்டு வருவதாக முடிவாயிற்று.
அதன்படி நாங்கள் முதல் நாளே சங்கரன்பந்தல் போய்விட்டோ ம். இரவு ஒன்பது மணிக்கு
நாடகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே நாங்கள் மேக்கப் போட்டுத்
தயாராக இருந்தோம். ஆனால், என்ன காரணத்தினாலோ கே.ஆர்.ஆர். வரத் தாமதமாகி, இரவு 11
மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். அதன் பிறகு அவசர அவசரமாக நாடகத்தைத் தொடங்கி
வேகமாக நடத்தி முடித்தோம்.
நாடகம் முடிந்ததோ இல்லையோ, அவசரமாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டோ ம்.
கே.ஆர்.ஆர். தனது காரைத் தந்து டிரைவரிடம் எங்களை மாயவரத்தில் நெல்லை ரயிலில்
ஏற்றிவிடுமாறு அனுப்பி வைத்தார்.
நாங்கள் புறப்பட்ட நேரம் பலத்த மழை பிடித்துக் கொண்டது. எப்படியோ கஷ்டப்பட்டு
மாயவரம் வந்தால் நெல்லை ரயில் போய் அரை மணி நேரமாகிவிட்டது என்றார்கள்.
உடனே அங்கிருந்து தஞ்சாவூரில் ரயிலைப் பிடித்து விடலாம் என்று காரைக் கிளப்பினோம்.
மறுநாள் இரவு நாடகம், எப்படியும் நெல்லை போயே ஆகவேண்டும்.
பலத்த மழை ஒருபுறம் சுழற்றி அடிக்க காரின் முன் லைட்டுகள் கெட்டுப்போய் வழி
தெரியாமல் தத்தளிக்க வேண்டியதாயிற்று. ஒரு இடத்தில் ரோடு என்று நினைத்து கார் ஒரு
குட்டைக்குள்ளேயே போய்விட்டது!