M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

இதனால் கலாவதியின் அப்பா கையில் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து முன் சீட்டில் இருந்தபடியே வெளியே நீட்டிப் பிடிக்கச் செய்து அந்த வெளிச்சத்திலேயே நீண்ட நேரத்திற்குப் பிறகு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். எங்களுக்காக ரயில் காத்து நிற்குமா? இங்கே இருந்தும் போய்விட்டது! எப்படியும் ரயிலைப் பிடித்து நெல்லை போயே தீரவேண்டும், மறு நாள் நாடகத்தில் நடித்தே தீரவேண்டும்!

திருச்சி போனால் நெல்லை ரயிலை எப்படியும் பிடித்து விடலாம் என்றார்கள். உடனே கார் திருச்சியை நோக்கி நடக்கத் தொடங்கியது. ஆமாம்! அந்தக் கார் ஓடும் நிலையைத் தாண்டி நடக்கும் நிலைக்கு வந்துவிட்டது! ரிப்பேர்!

ஏற்கனவே மழையால் அடிபட்டுப் போய் இருந்த நாங்கள் இப்போது காரைத் தள்ளிக்கொண்டு திருச்சி போகவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோ ம்.

அப்படி இப்படி என்று அதிகாலையில் திருச்சி வந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அரக்கப் பரக்க ஓடியபடி நாங்கள் வந்தால் 'டாடா' சொல்லும்படி கூறிவிட்டு ரயில் போய்விட்டிருந்தது.

அப்போது அங்கே ஒருவர், 'மதுரைக்குப் போனால் அங்கே பிற்பகல் 2 மணிக்கு நெல்லைக்கு ஒரு ரயில் போகிறது அதைப் பிடித்துவிட்டால் எப்படியும் நாடகத்திற்குப் போய்ச் சேர்ந்து விடலாம்' என்றார்.

உடனே, காரை சரிபார்த்து திருப்பி எடுத்துக்கொண்டு போகுமாறு டிரைவரிடம் சொல்லிவிட்டு, நாலு பேரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினோம். எப்படியோ மதுரைக்கு ஒரு பஸ் கிடைத்தது!

அப்போது என் தாயார் என்னிடம், "நமக்கு ஏதாவது விபத்து நடந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறோம் என்ற தகவலை பிரண்ட் ராமசாமி கேட்காதவரைக்கும் என்ன பாடுபட்டாவது நாம் திருநெல்வேலி எக்ஸிபிஷன் நாடகத் தியேட்டருக்குள் போய் விழுந்து விடவேண்டும். அது வரைக்கும் எங்கேயும் ஒரு நிமிஷம் கூட தாமதிக்கக் கூடாது" என்றார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும், தொழிலின் மீதும் அவருக்கு அவ்வளவு உறுதியும் பக்தியும் இருந்தது!

காலையில் திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தோம். மறுபடியும் ஓட்டமும் நடையுமாக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று நெல்லை போகும் 2 மணி ரயிலில் போய் விழுந்தோம். அப்போதுதான் பாதி உயிர் வந்தது!

அந்த ரயில் மெதுவாகப் புறப்பட்டு ஒருவழியாக எட்டு மணி அளவில் நெல்லையைச் சென்றடைந்தது.

நாங்கள் அவசரக் கோலத்தில் கண்காட்சி மைதான நாடகத் தியேட்டருக்குள் ஓடினோம்! இதற்கிடையில் நாங்கள் வராததால் பிரண்ட் ராமசாமி, எனக்குப் பதிலாக அதே நாடகத்தில் சிறு வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த வேறொரு நடிகையை நடிக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

அந்த நடிகைக்கோ ஒரே திகில் காரணம், என்னுடைய வேடம் அவ்வளவு பெரியது; நிறைய வசனங்கள். அதனால் திடீர் என்று எப்படிச் செய்யப் போகிறோமோ என்ற தொழில் பயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles