M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

என்னைக் கண்டதும் பெரிய கண்டம் தப்பியது போல ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். எனக்கோ கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

அதற்குப்பிறகு வேக வேகமாக மேக்கப் போட்டுக்கொண்டு நாடகத்தை ஆரம்பித்தோம். சிறப்பான முறையில் நடந்தது நாடகம்.

நாடகம் முடிந்த பிறகுதான் எங்களுக்கும் வயிறு என்று உண்டு என்ற நினைவே வந்தது. இத்தனைக்கும் முதல் நாள் மதியம் சாப்பிட்டது!

நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பதைப்பற்றி எந்த அனுதாபமும் பிரண்ட் ராமசாமிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி லேட்டாகி வந்துவிட்டீர்களே என்ற குறைதான் அவருக்குப் பெரியதாகத் தோன்றியது. இதன் முழுமையான தோற்றத்தை அவர் சென்னையில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதே நாடகம் பிறகு ஒரு நாள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது நாடகத்திற்குத் தலைமை வகித்த பெரியவர், என்னைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்துவிட்டு அமர்ந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்துப் பேச வந்த பிரண்ட் ராமசாமி, "தலைவர் அவர்கள் இங்கே மனோரமாவை மிகப் பிரமாதமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ஆனால், இதே மனோரமாவிற்குத் தொழிலில் போதிய அக்கறை இல்லை என்பது உங்களுக்குத் தெரியாது. சென்ற முறை, திருநெல்வேலி நாடகத்திற்கு இவர் வராமல் காலை வாரி விட்டு விட்டார்!" என்று ஒரு பயங்கரக் குற்றச்சாட்டைத் தூக்கிப்போட்டு விட்டார். சிரமத்தோடு நான் போய் நடித்ததைப் பற்றிக் காட்டிக்கொள்ளவேயில்லை! இதைக் கேட்டு நானும் என் அம்மாவும் பெரிதும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தோம் அதற்குப் பிறகு அந்த நாடகத்தில் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். பிரண்ட் ராமசாமியும், மற்றவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியபோதும் மனம் உடைந்துபோன நான் பின்னால் நடிக்க முடியாது என்று உறுதியாக இருந்துவிட்டேன்!

அவ்வளவு கஷ்டப்பட்டுப் போயும் ஒன்றும் பயன் இன்றிப் போனபிறகு வேறு என்ன நாடகம் வேண்டிக் கிடக்கிறது! இத்தனை அவமதிப்புகளுக்கு மத்தியில் மனப்புண்ணுக்கு தைலம் தடவியது போல் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் பொதுவாகவே நமது நடிகைகளுக்கு ஒரு பெரும் ஆசை நிரந்தமாகவே உண்டு. இதில் போட்டாப் போட்டிகளும் ஏற்படுவதுண்டு என்றுகூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், எனக்கு மட்டும் என்னவோ இந்த ஆசையோ - எண்ணமோ எப்போதுமே ஏற்பட்டதில்லை. அதைப் பற்றி அக்கறைப்பட்டது இல்லை. ஒரு நாள் மதிய வேளை. நான் வீட்டில் உள் வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் பூபதி படித்து கொண்டிருந்தவன் ஓடி வந்து "இந்திப் படவுலக சிரிப்பு நடிகர் மெகமூத் வந்திருக்கிறாராம்; வரலாமா என்று டிரைவர் கேட்கிறார்" என்றான்.

எனக்கு ஒரே வியப்பு! நம்மைத் தேடி நம் வீட்டிற்கு பிரபலமான இந்திப் படவுலக சிரிப்பு நடிகர் வந்திருக்கிறாரா! ஆச்சரியம்தான் என்றவாறு டிரைவரிடம், "எதுக்கு வந்திருக்கிறார்?" என்று கேட்டேன்.

டிரைவர், "ஏதோ பட விஷயமாக இருக்கும் போலிருக்கு" என்றார்.

"சரி; வரச் சொல்லுங்க" என்று சொல்லியனுப்பினேன்.

சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி மெகமூத் வந்தார். உட்கார வைத்தோம். சரி; வரச் சொல்லியாகி விட்டது. உட்கார்ந்தும் விட்டார். எப்படிப் பேசுவது? மொழிப் பிரச்சனை தலையில் இடித்தது.

எனக்கு இந்தியோ ஆங்கிலமோ தெரியாது. அவருக்குத் தமிழ் தெரியாது. ஊமையர் ஜாடைதான் உதவிக்கு வருமோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என் மகன் பூபதி தக்க சமயத்தில் உதவிக்கு வந்தான். அவனைப் படிக்க வைத்ததின் முதல் பயணை அன்று பெற்று மகிழ்ந்தேன்!

மெகமூத் ஆங்கிலத்தில் சொல்வதை எனக்குத் தமிழிலும், நான் தமிழில் சொல்வதை அவருக்கு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துச் சொன்னான்.

மொழிப் பிரச்சனை தீர்ந்தது. இடையிடையே மெகமூத் ஓரிரு தமிழ் வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைப் போக்கினார் மெகமூத்.

மெகமூத் சின்னஞ்சிறு வயதில் ஓடி விளையாடிய இடம் நமது சென்னை மாநகரின் மீர்சாகிப்பேட்டையாம். தமிழ்நாட்டுக்காரர்களான அவர்கள் பம்பாயில் தொழிலை முன்னிட்டு நிரந்தரமாகத் தங்க நேரிட்டு விட்டதான்! நீண்ட காலம் வட இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் தமிழ் மொழி மறந்துவிட்டது! மெகமூத் தமிழ் நாட்டுக்காரர் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தான் ஒரு இந்திப் படம் எடுக்க இருப்பதாகவும், அதில் நான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டார்.

எனக்கு இந்தி தெரியாதே என்று மறுத்தேன். ஆனால், மெகமூத் அவர்கள் "நீங்கள் நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை எடுப்பேன். இல்லாவிட்டால் கைவிட்டு விடுவேன்" என்றார்.

ஒருவாறு நடிக்கச் சம்மதித்தேன். அதற்காக தனியாக ஒரு இந்தி வாத்தியாரை வைத்து இந்தி படித்தேன்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles