M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

படம் பற்றி பேசி முடித்ததும் அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, தென்பகுதி தமிழ்ப் பெண்ணைப் போல் சேலை கட்டி காட்டச் சொன்னார். அப்படிக் கட்டிக் காண்பித்ததும். நடித்தால் நீங்களே நடிக்க வேண்டும் என்றார் மெகமூத்.

பம்பாயில் ஷூட்டிங் நடந்தபோது மெகமூத்தின் குடும்பப் பெண்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அன்பானவர்கள். அவர்கள் குடும்பப் பெண்கள் அனைவருக்குமே கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிகிறது. என்னிடம் அவர்கள் எல்லாம் அந்த மழலைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஒரு தனி இன்பம் தோன்றும்.

அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியாகக் கலந்து விட்டிருந்தேன். அது ஒரு மகிழ்ச்சியான காலம்.

ஷூட்டிங் முடிந்ததும் நானேதான் எனது வசனங்களையும் டப்பிங் பேச வேண்டும் என்றார் மெகமூத்.

அதேபோல் ஒரே நாளில் 90 'லூப்'களை பேசி முடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். அதுதான் 'குன்வாரா பாப்' என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை)

அந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்னை டி.வி.யில் கூட இரண்டு முறை காட்டினார்கள்!

தமிழ் நட்சத்திர மண்டலத்திற்குள் எனக்குக் கிடைத்த இடைஞ்சல்கள், மனச் சஞ்சலங்களுக்கு மத்தியில் இது ஒரு இனிமையான நினைவாக என்னுள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது.

எனது நாடக உலக ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிக் கூறியிருக்கிறேன். ஆனால், நாடகக் கம்பெனிகளில் நடைபெறும் பல சுவையான தில்லு முல்லுகளைப் பற்றிச் சொல்லவில்லை. அதில் இரண்டைக் கூறினால் உங்களுக்குப் படிக்க சுவையாக இருக்கும் என்பதற்காக இங்கே தருகிறேன்.

நான் வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நேரம் பரமக்குடியில் தொடர்ந்து நாடகம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது நாடகக் கம்பெனியின் முக்கிய நடிகை அவரை நான் 'அக்கா' என்றுதான் அழைப்பேன். சென்னைக்குப் போவதற்குத் தயாராகி விட்டார். நாடகக் கம்பெனியின் முக்கியஸ்தர்கள் பலவாறு தடுத்தும் சென்னைக்குப் போவதில் உறுதியாக இருந்தார் அவர்.

முதல் நாள் இரவு நாடகம் முடிந்ததும், மறுநாள் காலையில் சென்னைக்குப் புறப்படுவதற்கு பெட்டியில் சேலைகள், முக்கியமான பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து பூட்டி பெட்டியைத் தன் தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கினார்.

காலையில் கண் விழித்துப் பெட்டியைப் பார்த்தபோது பகீர் என்றது அவருக்கு! காரணம், அவரது உடமைகள் அனைத்தும் அடங்கிய அவரது பெட்டியை இரவு யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள்!

சென்னைக்குச் சென்று பிரபலமான நட்சத்திரமாக மின்னப் போகும் அவரது கனவுகள் எல்லாம் அந்தப் பெட்டியோடு போய்விட்டது. அதில் இன்னும் என்ன மோசம் என்றால், அன்றையபொழுதில் அவர் குளித்து விட்டுக் கட்டிக்கொள்ள மாற்றுப் புடவை கூட இல்லாமல் போனதுதான்! திருடன் யார் என்றே தெரியவில்லை!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles