அன்றைய தினம் நான்தான் பாஞ்சாலிக்குக் கண்ணன் உதவியது போல சேலை கொடுத்து உதவினேன்.
பிறகு கம்பெனியில் இருந்து அந்த நடிகைக்குத் தேவையான சேலைகளும் மற்ற பொருட்களும்
வாங்கித் தரப்பட்டன.
இதன் மூலம் இப்போது நிலைமை என்ன
நாடகக் கம்பெனியின் கடனாளியாகிவிட்ட அவர், தனது இஷ்டத்திற்கு உடனடியாக வெளியேற
முடியாது. அதனால் அவர் சென்னை போகும்
எண்ணத்தை அந்தப் பெட்டியோடு விட்டுவிட்டு தொடர்ந்து நாடகங்களில் நடிக்க
வேண்டியதாயிற்று.
சில நாட்களுக்குப் பிறகு யார் திருடன் என்பது மெல்ல வெளியானது.
அந்தக் காலத்தில் இப்போது நாடகங்களில் நடிப்பதற்கு நடிகைகள் கிடைப்பது போல்
சாதாரணமாகக் கிடைக்க மாட்டார்கள். இதில் இருக்கும்
ஓரிரு நடிகைகளும் போய்விட்டால் நாடகக் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான். இதனால்,
போகப் போவதாகக் கூறும் நடிகைகளைத்
தடுத்து நிறுத்த இப்படி ஏதாவது குறுக்கு வழியில் வேலை செய்து போகவிடாமல்
செய்துவிடுவார்கள்!
இதில் மற்றொரு வேடிக்கை ஊருக்குப் போக இருந்த நடிகையின் பெட்டிக்குப் பக்கத்தில்
வைத்திருந்த மற்றோர் நடிகையின் துணிப்பையையும்
தவறுதலாகச் சேர்த்து அபேஸ் செய்து விட்டார்கள்!
பெட்டியைப் பறிகொடுத்த அந்த நடிகை யார் தெரியுமா? திருமதி. சுலோசனா முத்துராமன்
அவர்கள்தான்!
இதேபோல் எனக்கும் ஒருமறை டேக்காக் கொடுத்துவிட்டார்கள்.
சென்னையில் யாரிடமோ இருந்து சினிமாவில் நடிக்க உடனே புறப்பட்டு வரும்படி என்
பெயருக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது. இந்தத் தந்தி
நாடகக் கம்பெனி உரிமையாளர்கள் கையில் சிக்கிக்கொள்ளவே படித்துப் பார்த்துவிட்டு
சுக்குநூறாக அதைக் கிழித்துப் போட்டுவிட்டார்கள்.
இதனால் தந்தி விவரம் எனக்குத் தெரியவில்லை.
இரண்டு மூன்று மாதம் கழித்து அவர்களாகக் கூடிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களில்
ஒருவர் 'மனோரமா தந்தியைப் பார்த்துப் போயிருந்தால்
இப்போது சினிமாவில் நடித்துப் பேர் வாங்கிக் கொண்டிருக்கும்?' என்று கூற மற்றவர்கள்
அப்போது பிரபலமாக இருந்த ஒவ்வொரு நடிகரின்
பெயரையும் சொல்லிச் சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது
எனக்கு வந்த தந்தி விஷயம்.
அது அவர்களுக்கு ஜாலி - எனக்கோ வயிற்றெரிச்சல்!
சினிமாவில் நமது உருவத்தைப் பார்த்துவிட மாட்டோ மா என்று தவம் இருந்த நேரத்தில்
இப்படி ஒரு சதி!
இதேபோன்று மற்றோர் நிகழ்ச்சி! எனக்கு ஒருமுறை கடுமையான காய்ச்சல் வந்து உடம்பு
முழுவதும் அம்மையின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கி
விட்டன அன்று மாலை நாடகம்.
என்னால் சரியாகக்கூட நடக்க முடியவில்லை. அதனால் அன்று நான் நடிக்க முடியாது என்றேன்.
அம்மை போட்டிருக்கு என்றேன்.
அன்று நான் நடிக்காவிட்டால் நாடகம் நடக்காது; வேறு நடிகையையும் உடனடியாகத் தேடிப்
பிடிக்க முடியாது. அதனால் நாடகக்
கம்பெனிக்காரர்கள், நாடகம் நடந்த ஊரில் இருந்து ஒருவரைக் கூட்டி வந்து என்னிடமும்
என் அம்மாவிடம், எனக்கு வெறும் காய்ச்சல்தான்; அம்மை
இல்லை என்று கூறும்படிச் சொல்லிக் கொடுத்து விட்டார்கள். அந்த மனிதரும் என்னைப்
பார்த்து அப்படியே பாடத்தை ஒப்புவித்துப் போய்விட்டார்.
அதை நம்பி நானும் மேக்கப் போட்டு நடித்துவிட்டு மேக்கப்பைக் கலைத்தால், கன்னம்
ரெண்டும் பயங்கரமாக வீங்கி உடம்பு முழுவதும் கொப்புளக்
கோலங்கள்.
அன்று படுக்கையில் விழுந்த நான் எழுந்திருக்க ஒரு வாரம் ஆகியது.
சில நிகழ்ச்சிகளை பிற்காலத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சி
பூக்கும். அவை சோகம் சூழ்ந்தவை என்றாலும் கூட ஒரு
உவகை பெருமிதம் தோன்றும்.
வேறு சில நிகழ்ச்சிகளை நாம் நினைக்கவே விரும்பமாட்டோ ம். அவைகளை எப்படியாவது மறந்து
விட மாட்டோ மா என்ற தவிப்பில் இருப்போம்.
என்றாலும் அவைதான் நம் மன ஆழத்தில் இருந்துகொண்டு அடிக்கடி தலையை நீட்டிக்
கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான்
நீங்கள் படிக்கப் போவது!
சென்னை ஓட்டல் அட்லாண்டிக்கில் 'கல்யாணராமன்' படத்தில் 100வது நாள் விழா நடந்து
கொண்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசிய
கவிஞர் கண்ணதாசன் "டைரக்டர் கே. பாலசந்தர் எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி
பெருமைப் பெற்றிருக்கிறார். ஆனால்
என்னால் அப்படி அறிமுகப்படுத்த முடியவில்லை. என்னால் மனோரமாவை மட்டும்தான்
அறிமுகப்படுத்த முடிந்தது" என்று என்னைப் பற்றி சிலபல
பாராட்டுக்களைக் கூறிவிட்டு அமர்ந்தார்.
அடுத்துப் பேசிய டைரக்டர் கே. பாலசந்தர், "கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும்
மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும்,
அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் நூறு
பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை
அறிமுகப்படுத்தியதும் - இரண்டும் சரி சமமானதுதான். அந்த நூறு பேருக்கு சமமான
திறமைசாலி மனோரமா" என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப் போனார்.
போகும்போது என்னிடம் "மனோரமா, யார் யாருக்கோ
பாராட்டு விமு நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து
விழாக்கள் நடத்துகிறார்களா இல்லை. நான்
அமெரிக்காவில் இருந்து வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப்
போகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் அவர் சொன்னபடி நடை பெறவில்லை. உயிரும் உடலுமாகச் சென்ற அவர் உடல் மட்டுமே
திரும்பி வந்தது. இந்த துயர நிகழ்ச்சிக்குப்
பிறகு எத்தனையோ பேர் எனக்குப் பாராட்டு விழாக்கள் நடத்துவதற்காக அனுமதி கேட்டார்கள்.
நான் ஒரேயடியாக மறுத்துவிட்டேன். அத்துடன்
அந்த நிகழ்ச்சியை மறந்துவிடலாம் என்று முயல்கிறேன் முடியவில்லை.
1983ம் ஆண்டில் ரொம்பவும் பிடிவாதமாக இருந்து கந்தன் ஆர்ட்ஸ், என்ற நாடக
சபாக்காரர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். நான்
எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை என்பதால் அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
விழா ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்த போது இலங்கையில் பயங்கர இனக்கலவரம்
ஏற்பட்டது அதில் பல ஆயிரக்கணக்கான
தமிழர்கள் - தாய்மார்கள் - குழந்தைகள் என்று வித்தியாசம் இல்லாமல் சிங்கள
வெறியர்களால் கொன்று குவிக்கப்பட்டார்கள். தமிழ் இனமே
ரத்தக்கண்ணீர் வடித்தது.
இப்படிப்பட்ட கொடிய சூழ்நிலையில் எனக்கு விழா ஒரு கேடா?
என்னிடம் மிகுந்த பாசமும் - அன்பும் - நட்பும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள்
கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போது நான் எனக்கு விழா
கொண்டாடிக் கொண்டால் நானும் ஒரு தமிழச்சி ஆவேனோ?
என் அடி வயிறு பற்றி எரியும் போது எப்படி என்னால் பூபாள ராகம் பாட முடியும்?
அதனால், விழா நடத்த ஏற்பாடு செய்த அந்த நல்ல உள்ளத்தவர்களை அழைத்து "கண்டிப்பாக
விழா நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் நான்
வரமாட்டேன்" என்று கூறி நிறுத்திவிட்டேன்.
இப்படியே எனக்காக ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால்
நடைபெற முடியாமலேயே போய் விட்டது!