M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களுக்காக ஒரு விஷயம்:- நான் ஒரு படத்தில் அல்லது ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு; நான் தோன்றும் முதல் காட்சியிலேயே எனது கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் பின்வரும் காட்சிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்று பின் தள்ளிவிடமாட்டேன். எனது கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு குழப்பம் இருக்கக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.

இதில் தோற்றம் முக்கிய அம்சம். நாம் என்ன கதாபாத்திரம் ஏற்கிறோமோ அந்தக் கதாபாத்திரத்தின் உருவமாக நாம் மாறிவிட வேண்டும். உதாரணமாக நான் குறத்தியாகவோ - ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவோ - அல்லது பெரிய படாடோ பமுள்ள பணக்காரியாகவோ வருகிறேன் என்றால் அந்தக் கதாபாத்திரத் தோற்றத்தை ரசிகர்கள் கண்முன் நிறுத்த வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் - நாடக நிர்வாகிகள் என்னென்ன உபகரணங்கள் - உடைகள் தருகிறார்கள் என்பதோடு மேலும் என்னென்ன உபகரணங்களை அல்லது அணிகலன்களைச் சேர்த்து அணிந்துகொள்ள வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும். கூடுமானவரை நமது உருவ அமைப்பில் மாறுதல் செய்து கொண்டு சென்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

'அவர்கள் இவைகளைத் தானே தந்தார்கள்' என்றில்லாமல் 'நடிப்பது நாம்' என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். உருவத்தோற்றத்திற்கு நாம் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு கதாபாத்திரத்தின் சிறப்பு பளிச்சென்று வெளிப்படும். நமது நடிப்பும் நன்கு எடுபடும். ஆகவே, நடிப்புக்கு முன் கதாபாத்திரத் தோற்றத்தை ரசிகர்கள் மனதில் பதிய செய்வது நமது வெற்றிக்கு இன்றியமையாததாகும்.

ஒரு நட்சத்திரத்தின் நீண்ட கால திரை உலக வாழ்க்கைக்கும் புகழுக்கும் அடிப்படையாக அமைவது படவுலகமும் - ரசிகர்கள் உலகமும்! ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு மேற் கூறிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவையாகும். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும் நட்சத்திர வாழ்க்கை.

என் காதுபட சில நட்சத்திரங்கள், "எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனால் இந்த சினிமாக்காரர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்? ரசிகர்கள்தான் முக்கியம் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்டவர்களை இப்போது நான் மட்டுமல்ல, ரசிகர்களும் எங்கே? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகர் - நடிகைக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தால் அது அவர்கள் செய்த புண்ணியம்; அவர்களது திறமை!

ஆனால் எந்த ரசிகரும் தங்கள் நட்சத்திரத்தை மற்றவர்களைவிட தூக்கி நிறுத்துவதற்காக சினிமாப்படம் எடுக்க வருவதில்லை. ரசிகப் பெருமக்களிடம் நிலைக்க வைத்து வாழவைப்பவர்கள் திரைப்படவுலகினர்தான். எந்த ரசிகர்களும் 'நாங்கள் இருக்கிறோம். நீங்கள் ஒழுங்காகப் படப் பிடிப்புக்குப் போகவேண்டியதில்லை' என்று கூறுவதும் இல்லை. 'தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நிறையப் படங்களில் சிறப்பாக நடித்திட வேண்டும்' என்று தான் ஆசீர்வதிப்பார்கள்.

இதே போல் 'எனக்கு நிறையத் தயாரிப்பாளர்கள் நடிக்கச் சான்ஸ் தருகிறார்கள். அதனால் ரசிகர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை' என்று எந்தப் புத்திசாலியும் சொல்லமாட்டார்! ரசிகர்கள் ஆதரவு இல்லாவிட்டால் எந்தத் தயாரிப்பாளர் தேடி வந்து அல்ல - தேடி போனாலும் நடிக்கச் சந்தர்ப்பம் தரப்போகிறார்? அதுமாதிரியே தயாரிப்பாளர்கள் நடிக்கச் சந்தர்ப்பம் தராவிட்டால் எப்படி ரசிகர்களைப் பெற முடியும்? அதனால்தான் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு நடிகர் அல்லது நடிகையின் இரண்டு கண்களைப் போன்றவர்கள் என்று கருதுகிறேன். இதில் எதை இழந்தாலும் இழப்புத்தான் - சரிவுதான். ஆகவே ரசிகர்களையும் மதித்து நடக்க வேண்டும் தயாரிப்பாளர்களையும் திரை உலகத்தினரையும் மதித்து நடக்க மறந்துவிடவும் கூடாது. நல்லெண்ணத்தையும் நல்ல பெயரையும் இருதரப்பிலும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதோடு, காலத்திற்குக் காலம் மாறுபடும் ரசிகர்களின் ரசனையையும் புரிந்து மதித்து அதற்கு ஏற்ப நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பில் மாற்றங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் புது யுக்திகளையும் காட்டி நடிக்கவேண்டும். இதைப் புரிந்து செயல்படாத நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர்களையும் இழந்து, ரசிகர்களையும் இழந்து தவிக்க நேரிடும். குறிப்பாக பொறுப்புணர்ச்சியும் மரியாதை காட்டுதலும் முக்கியம் தேவை! நமக்கு (கலைஞர்களுக்கு) எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும். அவற்றை ஸ்டூடியோ வரை எடுத்துச் செல்லக் கூடாது!

என்னைப் பொறுத்தவரையில், எனக்கு எவ்வளவோ பிரச்சனைகள் தொல்லைகள் உண்டு. அவைகள் அனைத்தையும் வீட்டில் இருந்து ஷூட்டிங் புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறக்கும் வரைதான் என் மனதில் வைத்திருப்பேன். கார் கதவை திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரத்தின் குணத்திற்குரிய முழுக் கலைஞராகத்தான் உட்காருவேன். அத்தோடு வீட்டை மறந்து விடுவேன்.

ஸ்டூடியோவோ - படப்பிடிப்பு நடக்கும் எந்த இடமோ - அங்கே நான் கலைஞர்களோடு, தொழில்நுணுக்க மேதைகள் மற்றும் தொழிலாளர்களோடு ஐக்கியமாகி விடுவேன். மறுபடியும் வீட்டுக்குப் புறப்படும்போது தான் வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைப்பேன். தொழில் முன்னேற்றத்திற்கு இந்த மனப்பாங்கு மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். நான் யாரிடம் மரியாதையுடன் கூடிய அன்பும் பாசமும் செலுத்துகிறேனோ அவர்களோடு எல்லாம் என்னால் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பழக முடியாத துர்ப்பாக்கியசாலியாக இருந்திருப்பதை நினைத்து பல நேரங்களில் நான் தனிமையில் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles