நாம் சென்று இருக்கும் காரியம் - இடம் - அதன் சுற்றுச் சூழ்நிலை - மற்றவர்களின்
உணர்வுகள் - இவைகளை ஒருகணம் நினைவில் இருந்து
நழுவிட விட்டுவிடும் பட்சத்தில் எத்தனை பெரிய மாறாத காயத்தை நம் மனதில்
ஏற்படுத்திக்கொண்டு விடுகிறோம் என்பதை உணர்த்த ஒரு
நிகழ்ச்சியைக் குறிப்பிட எண்ணுகிறேன்.
இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாகவும், என்னை
பக்குவப்படுத்தியதாகவும் அமைந்து விட்ட ஒன்றாகும்.
1963-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.:
தி.மு. கழகத் தலைவர் டாக்டர் கலைஞரின் குடும்பத்தோடு குடும்பமாக நானும் என் தாயாரும்
ஒன்றிப்பழகியவர்கள்.
குறிப்பாக கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மமையார் மிகவும் அன்போடு பழகுவார்கள்.
இவர்கள் ஒருநாள் திடீரென்று இறந்துவிட்ட செய்தி
எங்களுக்குக் கிடைத்தது. மிகுந்த வேதனையோடும் - பதட்டத்தோடும் கலைஞரின் வீட்டிற்கு
ஓடினோம்.
பாசமழை பொழிந்து வந்த அந்தத் தாய், உணர்வு இல்லாத உடலாக அங்கே படுக்க
வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் பொங்கிப் பொங்கி
அழுதோம்.
எங்களுக்கு முன்னரே ஏராளமான பேர் அங்கே குழுமி இருந்தார்கள்.
அத்தனை பேரும் அன்றைக்கு அழுத அழுகை இன்றைக்கும் என் மனதில் அப்படியே இருக்கிற
காட்சியாகும்.
கலைஞர் கீழே விழுந்து புரண்டு அழுது வேதனையால் துடித்த துடிப்பை என்னால் மறக்கவே
முடியாது.
அதேபோல் முரசொலி மாறனையும் யாராலும் சமாதானப்படுத்தி இருக்க வைக்கவே முடியவில்லை.
அதுமாதிரியே வந்தவர்கள் அத்தனை
பேர்களுமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் வாய் விட்டு அழுது தங்கள் துக்கத்தை
வெளிப்படுத்தினார்கள்.
ஆண்களின் நிலையே இப்படியென்றால் பெண்களைப் பற்றிச் சொல்லவேண்டாம். அன்று கலைஞரின்
அக்காமார்களும் அவரது துணைவியாரும்,
மற்றவர்களும் கதறிப் புலம்பியதுபோல் நான் வேறு எங்குமே பார்த்ததில்லை.
இப்படி எல்லோருமே புலம்பித் தவிக்கக் காரணம், அஞ்சுகம் அம்மையார், உறவினர் என்றோ,
தம் பிள்ளைகள் என்றோ, நெருக்கமானவர்கள் என்றோ
இல்லாமல் தனது வீட்டிற்கு வரும் அத்தனை பேர்களுடனும் தனது மடிப்பிள்ளைகளைப் போல
பாசமும் அன்பும் கருணையும் காட்டிப் பழகியதுதான்.
அப்படிப்பட்ட அன்பான தாயின் இழப்பு அத்தனை பேர்களையும் நிலைகுலையச்
செய்துவிட்டிருந்தது.
அஞ்சுகம் அம்மையார் இறந்த போது பேரறிஞர் அண்ணா டெல்லியில் இருந்தார். இந்தச்
செய்தியை அவருக்குச் சொல்ல டெலிபோன்
செய்தார்கள். ஆனால் அதற்கிடையில் அண்ணா சென்னைக்கு ரயிலில் புறப்பட்டுவிட்டார்.
அதனால் அவருக்குத் தெரிவிக்க முடியாமற்
போய்விட்டது.
எனவே, கலைஞர், அண்ணா வந்த பிறகுதான் உடல் அடக்கம் நடைபெற வேண்டும் என்று
கூறிவிட்டார். ஆகவே அண்ணா அவர்களின் வரவை எதிர்
பார்த்துக் காத்திருந்தோம்.