M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

ஒரு பெண் மதிக்கப்படுவதும், மகிழ்ந்திருப்பதும் அவளுக்கு அமையும். மண வாழ்க்கைப் பொருத்ததாகும். எனக்கு வாய்த்த மணவாழ்க்கை எட்டிக் காயைப் போல அமைந்தது! வைரம் நாடகம் சபாவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை ஒருவர் சக நடிகர் காதலித்தார். காதலித்தார் என்பதைவிட காதலிப்பது போல் நடித்திருக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன்! இந்த உண்மைகூட எனக்கு இப்போதுதான் உறைக்கிறது! காதல் காட்சிகளில் நடிப்பேனே தவிர, அப்போது சொந்த வாழ்க்கையில் அதன் தராதரத்தைப் பிரித்து உணரும் வயதோ - அறிவோ எனக்கு இல்லாத காலம் அது. சபா நாடகத்திலும், வெளியில் அமெச்சூர் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன். சபா நாடக சம்பளத்தைவிட அமெச்சூர் நாடகங்களில் அதிகச் சம்பளம் தருவார்கள். இதனால் வெளி நாடகங்களுக்கு நான் போய்விடும் நேரத்தில் சபா நாடகங்களில் நடிக்க சரியான நடிகை கிடைக்காததோடு, நான் இல்லாததால் நாடகங்கள் சோபிக்க முடியாமல் இருந்தன.

இது நாடக சபாவின் உரிமையாளர்களுக்கு பெரிய சங்கடத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். இந்த நேரத்தில்தான் சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் என்னைக் காதலித்து இருக்கிறார். அவரது எண்ணத்தை எனக்கு உணர்த்தும் வகையில் பலவித வழிமுறைகளையெல்லாம் கையாண்டார். ஆரம்பத்தில் அவரது நடவடிக்கைகளை வெறுத்தே வந்தேன். பிறகு படிப்படியாக அவரது எண்ணத்திற்கு நானும் உட்பட்டேன். இதற்கு எனது தாயார் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். ஆனால், நான் உண்மையாக எனது மனதை காதல் வசப்படுத்திக் கொண்டது போலவே அவரும் இருப்பார் என்று முழுமையாக நம்பியதால் அம்மாவின் எதிர்ப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருமுறை எங்கள் வைரம் நாடக சபா தூத்துக்குடியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஒரு நாள் என் அம்மாவுக்கத் தெரியாமல் திருச்செந்தூருக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். அங்கே முருகன் கோயிலில் எங்கள் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தால் எனக்கும் என் தாயாருக்கும் சுமுகமான பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது. திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தாலும் முன்போல் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கப் போவதை நிறுத்தச் சொல்லி விட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இரண்டு மாதத்தில் எனக்கு குழந்தை உண்டானது. ஆனால், அது நிற்கவில்லை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.

மோசமான நிலையில் என்னை கொட்டாம்பட்டி மருத்தவமனையில் சேர்த்துவிட்டு என்ன - ஏது என்றுகூட விசாரிக்காமல் எல்லோரும் வேறு ஊருக்கு நாடகம் நடிக்கப் போய் விட்டார்கள். என்னைக் காதலித்துக் கைப்பிடித்தவர் முதலிலேயே போய்விட்டாராம். நான் மயக்கம் தெளிந்து பார்த்த போது என் தாயார் மட்டுமே கலங்கிய கண்களோடு என் அருகில் இருந்தார். அப்போதே என் மனதில் ஒரு உணர்வு தட்டியது, 'என்கூட எப்போதும் என் தாயார் மட்டுமேதான் இருப்பார் போலும்' என்று. உடம்பு நலமானதும் மறுபடியும் நாடகக் கம்பெனிக்கே போய்ச் சேர்ந்தோம். இதன்பிறகு எனது மகன் பூபதியை கருக்கொண்டேன். கருத்தரித்து ஒன்பது மாதம் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் எனக்கு ஆறு மாதமாக நாடகச் சம்பளமும் தராமல் இழுத்தடித்தார்கள். நானும் ஒன்றும் கேட்காமல் 'நம்ம வீட்டுக்காரர் பார்த்துக் கொள்வார்' என்று இருந்து விட்டேன். ஆனால் கடைசி வரை யானை வாய்க் கரும்பாகவே ஆகிவிட்டது ஆறு மாதச் சம்பளமும்! ஒன்பதாவது மாதக் கடைசியில் பிரசவத்திற்காக நான் ஊருக்கு வந்து விட்டேன்.

இடையில் எனது காதல் கணவர் ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை என்பதோடு எனது பாக்கிச் சம்பளத்தையும் அனுப்பி வைக்கவில்லை. கர்ப்பிணி மனைவியாச்சே, பணத்தேவை இருக்குமே என்று கருதி வேறு பணமும் அனுப்பி வைக்கவில்லை. ஒரு மாதம் ஒரு நொடியைப் போல் ஓடிவிட்டது. என் மகனும் பிறந்து விட்டான். அவனது தந்தைக்குத் தகவல் தரப்பட்டது. பாசம் மிகுந்த தந்தையா அவர்? 15 நாட்களுக்குப் பிறகு வந்தார். வந்தவர், குழந்தை - மனைவியைப் பார்க்க வந்தவராகத் தெரியவில்லை. நாடகத்தில் நடிக்க வைப்பதற்காக மறுபடியும் கையோடு அழைத்துச் செல்ல வந்தவர் போல் தெரிந்தார்.

ஆனால் என் அம்மா, "பச்சைக் குழந்தை - பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை... அவளோ பச்சை உடம்புக்காரி, ௾ந்த நிலையில் ஊர் ஊராக அலையறதுனா.. என்னாலே முடியாது அவ வந்தா அவளை அழைச்சுக்கிட்டுப் போங்க.. நீங்களுமாச்சு உங்க பொண்டாட்டியுமாச்சு. பிஞ்சுக் குழந்தையின் உடம்பு என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்துக்குங்க" என்று கூறி கட்டோ டு மறுத்துவிட்டார். நானும் நிலைமையை யோசித்துப் பார்த்து "இப்போது வரமுடியாது" என்று கூறிவிட்டோம். தன் மனைவி - மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த அவர் இனி வற்புறுத்திப் பயனில்லை என்று கருதியவராகப் போய்விட்டார். அன்றுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு பார்க்கவே இல்லை. என் மகனுக்கு தன் தந்தையைப்பற்றிய உணர்வே இல்லாத நிலை. இப்போது நான், என் மகனுக்காக வாழ்ந்தே தீரவேண்டிய நிலை. என் அம்மாவுக்கு - தன் மகளுக்காகவும் - தன் பேரனுக்காகவும் வாழ வேண்டிய நிலை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles