சென்னைக்கு வந்து கே.ஆர்.ஆர். நாடக மன்றம், எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றம், பிரண்ட்
ராமசாமி நாடக மன்றம் போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினேன்.
இதற்கிடையில் காலச்சக்கரத்தின் அடியில் சிக்கி நான்கு வருடங்கள் தேய்ந்து விட்டன!
எனது குடும்ப வாழ்க்கையின் பிரிவு தற்காலிகமானது என்று நம்பியிருந்த எனது தலையில்
இடிப்பது போல் ஒருநாள் 'விவாகரத்து நோட்டீஸ்' வந்தது. அந்த நோட்டீஸ் எனது எண்ணத்தைப்
பொடிப்பொடியாக்கிவிட்டு ஓய்ந்துவிட்டது.
சோகச் சுமையைத் தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக்கொண்டேன்.
ஆனால், ஒரு உண்மையையும் அப்போதுதான் நான் உண்ரந்தேன் -
'தங்கள் நாடக மன்றத்தை விட்டு விட்டு நான் வெளி நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி
நாடகக் கம்பெனியின் நிரந்தர நடிகையாக இருக்கச் செய்வதற்காக அவர்கள் நடத்திய
நாடகம்தான் 'காதல் - திருமணம்' என்பதெல்லாமே தவிர உண்மையல்ல அதில் நான் ஒரு 'ஏமாந்த
கதாபாத்திரம்' என்பதை உணர்ந்த போது எனக்கு ஊமை அழுகையைத் தவிர வேறு எதுவும் உதவ
முன்வரவில்லை.
வாழ்க்கை நீரோட்டத்தில் எத்தனையோ சூழல்களில் இருந்து தப்பி எதிர் நீச்சல் போட்டு,
எனக்கென்று ஒரு நிம்மதியான சூழலை ஏற்படுத்திக் கொண்டு கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக்கொள்ள தலையைச் சற்று நிமிர்த்த முனைந்தபோது மீண்டும் ஒரு அடி.
அதுவும் பயங்கர இரும்புக் கரம் கொண்டு அடித்த அடி!
என் தாயார் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு தனது கணவனைவிட்டு அநியாயமாகப்
பிரித்தெறியப்பட்டு பயங்கரமான, கொடுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்!
என் தாயாராவது மூன்று குழந்தைகளைப் பெற்றபிறகு தனது கணவனைப் பிரிந்தார். நானோ ஒரு
குழந்தைநய்ப் பெற்ற பதினைந்தாம் நாளே என் இல்லற வாழ்க்கையை இழந்தேன்.
இந்தச் சோகச் சித்திரம் எங்களோடேயே முற்றுப் பெற்றுவிடும் என்றுதான் நம்பியிருந்தேன்.
காரணம் இனி எங்களில் பெண்கள் யாரும் இல்லை - இந்த அவலம் தொடர்ந்து வராது என்ற தெம்பு.
ஆனால் என்ன கொடுமை!
அது என் மகனையும் தொட்டு ருசி பார்த்தே விட்டது!
என் பூபதி ஒரு பி.எஸ்.ஸி. பட்டதாரி. அவன் படித்தது பிரசிடென்ஸி கல்லூரியில்.
அப்போது அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது பிரண்டைப் பார்க்க ஒரு இளம்
பெண் அடிக்கடி வந்து போவாளாம்.
இப்படி வந்த போய்க்கொண்டிருந்த பெண்ணுக்கும் என் மகனுக்கும் எப்படியோ சந்திப்பு
ஏற்பட்டு, அது பழக்கமாக மாறி, பின்னால் அதுவே காதல் என்ற வலையாகப் பின்னிக் கொண்டது.
இதுபற்றி நான் பின்னால் அறிய நேர்ந்தபோது மிகவும் பயந்துவிட்டேன். என் மகனிடம்
எவ்வளவோ சொல்லி அவர்களது தொடர்பைத் தடுக்க முயன்றேன்.