ஒரு நாள் நான் வீட்டில் இல்லாதபோது, எந்தப் பெண்ணை நான் சந்திக்க கூடாது என்று
இருந்தேனோ, அதே பெண் என் வீட்ற்கு திடீர் என்று
வந்துவிட்டாள். என் தாயாரின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியிருக்கிறாள். நான்
இல்லை என்றதும் போகவில்லை வீட்டிலேயே நான் வரும்
வரை தங்கிவிட்டாள். நான் வந்ததும் என் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள்.
"என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள்" என்று
கெஞ்சினாள்.
அவளது கெஞ்சலும் கண்ணீரும் என்னைத் தடுமாறச் செய்தாலும் அவளிடம் பல உண்மைகளையும்
நியாயங்களையும் சொன்னேன். "நீங்கள்
பிராமணர். நாங்கள் உங்கள் ஜாதி இல்லை. இதற்கு எல்லோரும் எதிர்ப்பார்கள். நானும்
காதல் திருமணம் செய்து கொண்டு கண் கலங்க
நின்றவள். அதனால் ஏற்படும் துன்ப துயரங்களை எதிர்க்கும் வலிவு வேண்டும். அதற்கு நீ
தகுதியானவள்தானா என்பது எனக்குத் தெரியாவிட்டாலும்
வீண் இழப்புக்களும் துன்பங்களும் உனக்கு வரவேண்டாம். பேசாமல் வீட்டுக்குப்
போய்விடும்மா" என்றெல்லாம் சொன்னேன்.
அவள் பிடிவாதமாக இருந்தாள். அத்துடன் சில பெரிய மனிதர்களிடம் இருந்து
தொலைபேசியில் இந்தத் திருமணம் கட்டாயம் நடக்க வேண்டும்
என்று உத்தரவுகளுடன் கூடிய பயமுறுத்தல்கள் வேறு வந்தன!
எல்லாரும் ஓரணியில் நிற்கவே, சரி என்று முறையாக என் மகனின் காதல் திருமணத்தை நடத்தி
வைத்தேன்.
அவனது இல்லறம் நன்கு அமைய வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை.
என் வேண்டுதல்களின் சக்தி இரண்டு மாதங்கள்தான் போலும்!
அதற்குள் திருமகளாக வந்தவள் வெடிமகளாக மாறிவிட்டாள்!
இரண்டே மாதத்தில் எங்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தனது பிறந்தகத்திற்குப்
புறப்பட்டு விட்டாள்.
முன்பு அவள் கெஞ்சினாள் - இப்போது அவளிடம் நான் கெஞ்சினேன்!
எனது கடந்த கால வாழ்க்கையை எடுத்துக் கூறி என்னைப் போல் உனக்கு நேர்ந்து விடக்கூடாது
என்றேன். "நீ பிராமணப் பெண் மறுமணம்
இல்லை என்று சொல்வார்கள். நீ வாழவேண்டிய குழந்தை போகாதே" என்றேன்.
அத்துடன் "நீங்கள் தனியாக குடும்பம் நடத்துவதாக இருந்தால் அதற்கும் ஏற்பாடு
செய்து தருகிறேன்" என்றேன்.
என் பேச்சு எதுவும் அவள் காதில் ஏறவில்லை. போயே போய் விட்டாள். என் மகன் கருகிய பூப்
போல மாறிவிட்டான். அவளிடம் அளவு கடந்த
அன்பு வைத்திருந்தான் அவன்!
அவனது அன்பு, கனவில் வந்த பெண்ணிடம் வைத்தது போல் ஆகிவிட்டது!