என் மகன் பூபதிக்கு ஒரு நல்ல டத்தில் நல்ல குணமுள்ள பெண்ணாகப் பார்த்து மணம்
முடித்து வைக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள்
கொஞ்சம் நஞ்சமல்ல.
பலவிதமான எதிர்ப்புகள்- பலரது துன்புறுத்தும் வசை மொழிகள்...மீண்டும் என் மகன்
திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில்
அக்கறையுள்ள சிலரின் ஏகடியம், அப்படியும் நடந்தால் ஊனப்பட்டுவிட வேண்டும் என்ற
நச்சரவு எண்ணத்தாரின் இடையூறுகள், என் இனத்தாரிடையே
எப்படியும் நான் பெண் எடுத்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையாக
இருந்தவர்களின் எதிர்ப்புகள் அத்தனையையும் கடந்து என்
ஆசைப்படியே கடந்த மே மாதம் 24ம் தேதி என் மகன் பூபதிக்கும், தஞ்சாவூர் கோவிந்தராசு
முதலியார் மகள் தனலட்சுமி என்ற குணவதிக்கும் மிகச்
சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணம் நான் எதிர் பார்த்ததிற்கும் மேலாக வெகு விமரிசையாக நடைபெற்றதிற்குக்
காரணமாக இருந்த நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் கோபால்சாமி தென் கொண்டாருக்கும், அவரோடு சேர்ந்து உதவிய அனைவருக்கும்
இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்
கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரில் எனது வாழ்க்கையில் அனைத்துச் சம்பவங்களையும் தொகுத்துத்
தந்து விட்டேன் என்று அர்த்தம் இல்லை. எனது
சில நினைவுகள் மட்டுமே தான் இங்கே இடம் பெற்றுள்ளன.
இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் காட்சிகளாக என் முன் உருவெடுத்து நிற்கின்றன. அந்த
உண்மைகளை நான் சொல்லத் தொடங்கினால்
பூகம்பத்தின் முழக்கத்தை அல்லவா எதிர் கொள்ள நேரிடும்!
ஆனாலும் காலம் வரும் போது நான் தண்ணீராகிக் கொண்டு அந்த நெருப்புருண்டைகளை
விழுங்குவேன்!
காலம் வரட்டும்!
இத்தனை வாரங்களும் தொடர்ந்து வாசகப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் 'குங்குமம்' மூலம்
சந்தித்துக் கொள்ள நல்ல வாய்ப்பினை நல்கிய
அதன் ஆசிரியருக்கு எனது நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.