HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நாடும் கொடியும்

   

அந்த மாநாட்டில் பேசிய மேடம் காமா இந்தியர்களின் அவல வாழ்க்கையையும், ஆண்டுதோறும் 35 மில்லியன் பவுன்களை இந்தியாவிலிருந்து சுரண்டிச் செல்லும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்காரப் புத்தியையும் எடுத்துரைத்து, இந்திய விடுதலைக்கு இந்த மாநாடு ஆதரவு தர வேண்டும் என்று ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தார், தீர்மானம் நிறைவேறியதும் இந்திய தேசியக்கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் காட்டிய மேடம் காமா இதுதான் இந்தியச் சுதந்தரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி, இந்தக் கொடி இப்பொழுது வானவளாவப் பறக்கிறது. இது 1905 ஆம் ஆண்டிலே லண்டனில் உருவாகி, பெர்லினில் பறந்து இப்பொழுது உங்கள் மத்தியில் பறந்து கொண்டிருக்கிறது.

 

இந்தியச் சுதந்தரத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த எத்தனையோ இளைஞர்களின் புனித இரத்தத்தால் உருவாக்கப்பட்ட கொடி இது! இங்கே குழுமியுள்ள கனவான்கள் அனைவரையும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இந்திய சுதந்தரக் கொடிக்கு வணக்கம் செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் உள்ள சுதந்தர விரும்பிகளையெல்லாம் இந்தக் கொடியோடு ஓத்துழைக்குமாறு இந்தக் கொடியின் பெயரால் நான் கேட்டுக் கொள்கிறேன்! என்று முழங்கினார் மேடம் காமா.

 

அவர் அப்படிக் கூறியதும் ஏதோ ஒரு மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அங்கே அமர்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் எழுந்து நின்று மேடம் காமாவால் உயர்த்திக் காட்டப்பட்ட இந்தியத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்!

 

இவ்வாறு இந்தியத் தேசியக் கொடியை முதன் முதல் அந்நிய நாடுகளில் பறக்க விட்ட முதல் பெண்மணி மேடம் காமாதான்! அந்த மாநாட்டில் மட்டுமல்ல; வேறு எந்தக் கூட்டத்தில் அவர் பேசினாலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட பின்னர்தான் பேசுவது வழக்கம்.

 

1905 ஆம் ஆண்டில் ஒருநாள் லண்டன் நகர இந்தியா ஹவிஸ் மாளிகையில் மேடம் காமாவும் வீரசாவர்க்காரும், வ.வெ.சு. ஐயரும், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது இந்தியத் தேசியக் கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையைக் கூறியபோது அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் முதல் மூவண்ண இந்தியத் தேசியக் கொடியாகும்.

 

அப்பொழுது கொடியின் மாதிரியை உருவாக்க சிவப்புத் துணி கிடைக்காததால் மேடம் காமா தம் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்தார் என்றும், அதை இணைத்து மாதிரிக் கொடியை வீர சாவர்க்கார் உருவாக்கினார் என்றும் ஒரு செய்தி, பிரபல இந்தியப் புரட்சி வீரரான மன்மதநாத் குப்தா எழுதிய அவர்கள் அபாய நிலையில் வாழ்ந்தார்கள் (They lived dangerously)  என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. 1905 இல் லண்டனில் உருவான அந்த இந்தியத் தேசியக் கொடி அதே  ஆண்டின் பெர்லின் நகரிலும், 1906 ஆம் ஆண்டில் வங்காளத் தலை நகரான கல்கத்தாவிலும ஏற்றப்பட்டது? 1907 ஆம் ஆண்டில் ஸ்டட்கார்ட் நகர சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் பறக்க விடப்பட்டது என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேடம் காமாவும், வீரசாவர்க்கார் முதலிய புரட்சி வீரர்களும் சேர்ந்து தயாரித்த முதலாவது தேசியக் கொடியில் அடிப்பக்கம் இடம் பெற்ற ஆரஞ்சு (காவி) வண்ணம் வெற்றியையும், தைரியத்தையும், பச்சைப் பட்டையில் உள்ள எட்டுத் தாமரை மலர்கள் எட்டு இந்திய மாநிலங்களையும் (அப்பொழுது இந்தியா எட்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது.) குறிப்பதாகவும், வந்தே மாதரம் என்பது தாயகத்தை வணங்குகிறோம் என்பதைக் குறிப்பதாகவும், உதயசூரியனும், பிறை வடிவமும் இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குறிப்பதாகவும் அப்பொழுது விளக்கம் தரப்பட்டது.

 

இந்த முதல் தேசியக் கொடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் வீர சாவர்க்கார்தான் என்று மேடம் காமாவே குறிப்பிட்டிருக்கிறார்.
 

அதே 1907 அக்டோபர் 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் வால்டோர்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் நடந்த ஒரு கூட்டத்திலும் மேடம் காமா இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அதற்கு அனைவரையும் வணக்கம் தெரிவிக்கச் செய்து அதன் பின்னர் இந்தியா விடுதலை பெறவேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

 

1908-இல் லண்டனுக்குத் திரும்பிய மேடம் காமா அங்கேயும் இந்தியா ஹவுஸ் விடுதியில் சில கூட்டங்களை நடத்தி வீரவுரையாற்றினார். இந்தியத் தேசியக் கொடியையும் பறக்க விட்டார். அப்பொழுது மேடம் காமாவின் நடவடிக்கைகளால் நடுக்கமுற்ற பிரிட்டீஷ் அரசு தன் ஒற்றர் மூலம் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது, ஒரு சமயம் அந்த வீராங்கனையைக் கொலை செய்து விடவும் முயற்சி செய்தது.

 

பிரிட்டிஷ் உளவாளிகளின் தொல்லையைத் தாளமுடியாத மேடம் காமா பாரிஸ் நகருக்குச் சென்று வந்தே மாதரம் என்ற பத்திரிகையைத் தொடங்கி புரட்சி இயக்கத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

 

மூன்றாவது கொடி

 

அதன் பின்னர் இந்திய அரசியலில் அன்னிபெஸண்ட் அம்மையாரின் தொண்டும் லோகமான்யத் திலகரின் சேவையும் வெகுவாக ஓங்கின. ஹோம் ரூல் இயக்கம் என்ற அன்னிபெஸண்ட் அம்மையாரின் இயக்கம் இந்தியாவின் படித்த வர்க்கத்தினரை வெகுவாகக் கவர்ந்தது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் இந்திய மக்களைத் தட்டியெழுப்பி சுயாட்சி உரிமைபெறும் போராட்டத்தில் ஈடுபட அறை கூவி அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை வகித்தார். மிகவும் தீவிரவாதத் தலைவர் என்று கருதப்பட்ட லோகமான்ய பால கங்காதர திலகர் கூட அன்னிபெஸண்ட் அம்மையாரோடு ஒத்துழைத்துச் சுயாட்சிக் கோரிக்கையை (ஹோம் ரூல்) ஏற்றுக் கொண்டார்.

 

சுதேசியப் பொருள்களை ஆதரித்தல், அன்னியப் பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை வளர்த்தல், சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தல் முதலியவை அடங்கிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. டாக்டர் அருண்டேல் தலைமையில் தேசியக் கல்வி வளர்ச்சி சங்கம் ஒன்றை ஆரம்பித்த அன்னிபெஸண்ட் சென்னை அடையாறில் தேசியப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். நியூஇந்தியா என்ற ஒரு பத்திரிகையையும் தொடங்கினார்.

 

அந்தக் காலகட்டத்தில்தான், 1917 ஆம் ஆண்டில் மூன்றாவது தேசியக் கொடி உருவாயிற்று. திலகரும். அன்னிபெஸண்ட் அம்மையாரும் சேர்ந்து உருவாக்கிய கொடி அது.

 

அந்தக் கொடியில் மேலிருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முதல் ஏழு நட்சத்திரங்கள் (சப்தரிஷி நட்சத்திரங்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம்பிறையும் அதற்குமேல் ஒரு நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

 

உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டிருந்தது.

 

இது அப்போதைய இலட்சியங்களையும் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பூரண சுயராஜ்யம் என்ற கோரிக்கையே உதயமாகாத அந்தக் காலத்தில் சுயாட்சி உரிமைக்கு வழிவிடும் டொமினியன் அந்தஸ்தே போதும் என்ற நிலை அப்போது இருந்ததால் பிரிட்டிஷ் கொடிக்கும் தேசியக் கொடியில் இடம் அளிக்கப் பெற்றிருந்தது.

 

ஆனால், தேசியக் கொடியில் யூனியன் ஜாக்குக்கு இடமளிக்கப் பட்டிருந்ததைத் தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சியோடு சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். நாட்டு மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தங்களை வழிநடத்திச் செல்ல வேறு ஒரு புதிய தலைவரை எதிர்பார்க்கத் தொடங்கினர்.

 

1915 ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலே உயிர் நீத்தார். அதே ஆண்டின் இறுதியில் மற்றொரு பிரபல காங்கிரஸ் தலைரவரான பெரோஷா மேத்தாவும் காலமாகி விட்டார். பண்டித மதன் மோகன் மாளவியா மிதவாதிகளின் தலைவராக இருந்ததால் அவராலும் காங்கிரசுக்கு வழிகாட்ட முடியவில்லை. 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்திஜி அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தார்.

 

1917 குஜராத் விவசாயிகள் பிரச்சினை, 1918 ஆமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம், 1919 ஆம் ஆண்டில் ரெளலட் சட்ட எதிர்ப்பு சத்தியாக்கிரகம், 1920 பாஞ்சாலப் படுகொலைக்கு எதிராகவும் கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாகவும் மேற்கொண்ட சாத்வீக சட்ட மறுப்பின் ஆடிப்படையிலான ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த காந்திஜி, 1921 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இயக்கத்தின் சக்தி மிக்க தலைவராக மாறிவிட்டார். 1920 இல் லோகமான்ய பால கங்காதர திலகரும் மரணமடைந்து விட்டார். அப்பாழுது காங்கிரஸ் இயக்கத்தின் தலைமைப் பீடம் வெற்றிடமாக இருந்தது!

 

அந்த இடத்தை காந்திஜி சுலபமாகக் பூர்த்தி செய்தார். 1920 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான ஓர் ஆண்டு ஆகும். இந்திய மக்கள் மனதில் அலைவீசி நின்ற அரசியல் விருப்பங்களும், ஆசைகளும் ஒருமுகமாகப் பொங்கி எழுந்து உலகமே என்றும் காணாத வகையில் ஒரு மகத்தான ஒத்துழையாமை இயக்கத்தில் நாட்டை ஆழ்த்திய ஆண்டு அதுதான்! காந்தி என்ற சூரியன் இந்திய அரசியல் வானில் தன் செம்பொற் கிரணங்களை வீசிப் படர்ந்து பூரண ஜோதியுடன் தோன்றி ஒத்துழையாமை இயக்கத்திற்கு வழி காட்டியதும் தலைமை தாங்கியதும் அந்த ஆண்டில்தான்! அவருடைய அற்வுதமான செயலாற்றலையும், ஆன்ம சக்தியையும் கண்டு உலகமே பிரமித்து நின்றது அக்காலத்தில்தான்! அகில இந்திய சுயாட்சி சங்கத்தின் (ஹோம் ரூல்) தலைமைப் பதவியைக் காந்திஜி ஏற்றுக் கொண்டதும் அதே ஆண்டில்தான்.

 

நான்காவது கொடி

 

1921 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டம் நடந்தது. காந்திஜி காங்கிரசின் தளகர்த்தரானார்.

 

அப்பொழுதுதான் இந்தியாவின் இன்றைய தேசியக் கொடியின் முன் மாதியின மூவண்ணக் கொடியும் அறிமுகமானது. அதை உருவாக்கியவர் ஆந்திர இளைஞர் ஒருவர் தான். அவர் உருவாக்கிய அந்தக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்பு மக்களை (இந்து, முஸ்லிம்), குறிக்கிறது என்றார் அந்த இளைஞர்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 

தொடரும்

More Profiless