HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

     ``கண்ணதாசனுக்கு ஒரு சமயம் புதிதாய் அப்போது விற்பனைக்கு வந்திருந்த பிரெஞ்சு மதுவை அருந்தி பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் கையில் காசில்லை, சொந்த அண்ணனிடம் கேட்டும் கிடைக்காத போது உருவானது தான் பழநி படத்தின் `அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே, பாடல்!

    `ஒரு சமயம் கண்ணதாசன் பாடல் எழுதாமல் தாமதிக்க- ரிகார்டிங்கில் ஓடிக்கொண்டிருந்த எம்.எஸ்.வி. அயர்வில் தூங்கி-சற்று தாமதமாய் வர-

    `அதிசயமாய் சொன்ன நேரத்திற்கு முன்பு வந்து எம்.எஸ்.வி.வரவில்லை என்கிற ஆதங்கத்தில் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ!

    ``சிவாஜிக்காக சாந்தி படத்தில் யாரந்த நிலவு பாடலை கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி.இசையில் டி.எம்.எஸ்.பாடிவிட்டார். ஆனால் அதன் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சிவாஜி இழுத்தடித்துக் கொண்டுபோக தயாரிப்பாளருக்கு சங்கடம். சிவாஜியிடம் கேட்க,

    ``கவிஞர் சிறப்பாக எழுதி-டி.எம்.எஸ்.சிறப்பாக பாடி-எம்.எஸ்.வி.பிரமாதமாய் இசையமைத்துள்ளார்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலாக நான் நடிக்க வேண்டுமே-அவர்களையும் நான் மிஞ்சியாக வேண்டுமே அதற்காக தயார் பண்ணிக் கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது! என்றாராம்.

    எம்.எஸ்.வி.பாராட்டுவிழாவில்-`மன்மதராசா மாலதி- இசைக்கச்சேரி நிகழ்த்தி ரசிகர்களை ஆட வைத்தார். வயது காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும், நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாமல் எம்.எஸ்.வி அரங்கத்தைவிட்டு கிளம்ப வேண்டி வந்தது.

    உடன் என்னை அழைத்து ``கோபமில்லையே என்னால முடியலை- வருத்தப்படாதீங்க மோகன்தாஸ் அவர்களே.... என்று கன்னத்தை வருடினார். மெய் சிலிர்த்துப் போயிற்று.

    எம்.எஸ்.வி. நேரிலும் கூட வயது வித்யாசமில்லாமல் எல்லோரையுமே பெயரைக் குறிப்பிட்டு.... அவர்களே நலமா? என்று தான் பேச்சை ஆரம்பிக்கிறார்.

    இன்று நாடு முழுவதும் இருக்கும் இசைக்குழுக்களுக்கு எம்.எஸ்.வி.தான் முன்னோடி! சபாக்களில் மட்டும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும் என்றிருந்த இசைக்கச்சேரியை -1958ல் எல்லோரும் ரசிக்கும்படி இசைக்குழு ஆரம்பித்த நண்பர்கள் வட்டத்தில் இவரும் உண்டு.

    `இன்று அது வளர்ந்து இசைக்குழுக்களுடன் புழுக்களும் புகுந்துவிட்டன என்று மெல்லிசை மன்னர் வருந்துகிறார்.

   இன்று தனக்கு ஆதரவில்லை என எம்.எஸ்.வி. வருத்தவில்லை. ``மாற்றங்கள் எப்போதும் தேவை. அதுதான் இயற்கை யதார்த்தம். புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு. அந்த நாட்களில் எனக்கு முன்னோடிகள் வழிவிட்டிருக்காவிட்டால் நானும் வளர்ந்திருக்க முடியாதே! அதனால் திறமை எங்கிருந்தாலும்- எப்படி வெளிப்பட்டாலும்- அதற்கு நான் அடிமை!

    கண்ணதாசன், பட்டுக்கோட்டை போல உழைத்து- ரசித்து-அனுபவித்து பாடல்கள் படைத்து `இறக்கும் மனிதர்கள்-இறவா பாடல்கள் வரிசையில் எல்லோரும் இடம் பெற வேண்டும் என்று மனம் நெகிழ்கிறார் மெல்லிசை மன்னர். தனக்கு எடுத்த விழா மூலம் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பு அறக்கட்டளைகளுக்கு 21/2 லட்ச ரூபாய் உதவுவதில் அவரது நெகிழ்ச்சி அதிகமாயிற்று. 

 ஜெயகாந்தன்;

     படைப்பாளிகளை தள்ளியிருந்து பார்க்கும்போது நம் மனதில் உருவகப்பட்டிருக்கும் கம்பீரமும், மதிப்பும், எதிர்பார்ப்பும் நேரில் சந்திக்கும்போது சாதாரணமாய் ஆகிவிடக்கூடிய அபாயம் உண்டு என்று எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுவதுண்டு.

     அது அவர் விஷயத்தில் மட்டுமில்லை, இன்னும் சிலரிடமும் அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கிறேன். படைப்பு கற்பனை. அந்த பாத்திர படைப்புக்கு ஏற்றபடி பேனா விளையாடலாம். அதே மாதிரி குணாதிசயங்களை நேரிலும் படைப்பாளியிடம் எதிர்பார்க்க முடியுமா?

     சுஜாதாவின் எழுத்திலுள்ள இளமையையும் துள்ளலையும் எழுச்சியையும் அவரிடம் எதிர்பார்ப்பது அபத்தம். சுஜாதாவின் எழுத்திற்கு பித்தனாகி அவரை மானசீகமாய் குருவாய் ஏற்றிருந்த சமயத்தில் 25 வருடம் முன்பு நான் கொச்சியில் அவரை சந்தித்தபோது-

     அட இவரா.... என்று ஏமாற்றம் அடைந்தது உண்மை இந்த ஒல்லியும், தளர்ந்த தேகமுமா இந்தப் போடு போடுகிறது என்கிற ஆச்சர்யம். ஆனால் பார்வைக்குதான் தளர்ச்சி. பேச்சில் அதே வீர்யம்! நகைச்சுவை!

     அதே போல முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனும்! அவருடைய நடவடிக்கைகள், உருவம், கறார்தன்மை பற்றி தெரிந்திருந்ததால் ஒரு பயம் கலந்த மரியாதை!

     குவைத்திற்கு ஃப்ரண்ட்லைனர்ஸ் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டபோது அதே பாவத்துடனும் பயத்துடனும்தான் அணுகினேன்.

     ஆனால் பழகும்போது தான் தெரிந்தது- அவர் எத்தனை மென்மை- சகஜம் என்பது! குழந்தை போன்ற அணுகுமுறை!

     ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தனின் எழுத்துகள், பேச்சுகள், எப்போதும் ஏதாவது சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும்- அல்லது கிளப்பிவிடும். அவரது விமர்சனங்களை வைத்து-அவர் மேல் பிரம்மாண்டமாய் ஒரு இமேஜ் இருந்து வந்துள்ளது இப்போதும்,

    சென்ற வருடம் அவருக்கு ஞானபீட விருது கிடைத்த பின்பு-``ஜெயகாந்தனை வாழ்த்துவதற்காக (அக்டோபர் 2005) முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் திரு.ஏ.நடராஜன் கவிதா பதிப்பக அதிபருடன் நானும் செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா என்று அப்போது விடுமுறையிலிருந்த என்னையும் வண்ணப்பட யோகா அழைத்தார்.

    யோகா இனிய நண்பர் மட்டுமில்லை-எழுத்தின் ஆரம்பகட்டத்திலிருந்த போதே என்னை மதித்து, நட்பு பாராட்டி நன்றாக வருவீர்கள் என உற்சாகம் தந்து, சென்னையில் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி தந்திருக்கிற வழித்துணையும் கூட

   ஜெயகாந்தன் என்றால் அவருக்கு உயிர். கல்லூரி நாள் முதல் அவரது தீவிர வாசகனான அவர் கொடுத்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக் கொண்டேன்.

    வீட்டில் ஜெயகாந்தன், மாடியில் இருக்கிறார் என்றார்கள். பெரும்பாலும் அவர் அங்குதானாம். மாடியில் ஓலைவேயப்பட்டு, கிராமத்து குடிசை போன்ற தோற்றம் எளிமை, முழுமையான காற்றோட்டம், சட்டையில்லா வெற்றுடம்புடனும், வேட்டியுடனும் வரவேற்ற ஜெ.கே.வை பார்த்ததும் இவரா.... என்று மனதிற்குள் கேள்வி எழாமலில்லை. புகைப்படத்தில் பார்த்துப் பார்த்து பழகிப் போன அந்த மீசையும், கம்பீரமும் நேரில் தெரியவில்லை.

    அவர் `சண்டைகோழி என்கிற இமேஜ் அந்தக் கணத்திலேயே உடைந்து போயிற்று. சர்வ சகஜமான பேச்சு புன்னகை கொஞ்சங்கூட அலட்டவில்லை. மேதை என்கிற மனோபாவம் இல்லை.

    உண்மையைச் சொல்லப் போனால் ஜெயகாந்தன் என்று சொல்லி வேறு யாரிடமோ அழைத்து வந்துவிட்டார்களோ என்கிற சந்தேகம் எனக்குள்.

    அவர் சால்வையை ஏற்றுக் கொண்டார் (வெற்று மார்பில்). சலிக்காமல் படமெடுக்கவும் அனுமதித்தார்.

    ஏ.நடராஜனும் ஜெயகாந்தனும் பழைய தமிழ் இலக்கியம் பற்றி நினைவுகூர, எனக்கு அது அரிய வாய்ப்பாக தெரிந்தது.

    தொழில்நுட்பம், மீடியாக்களில் தமிழின் தேவைபற்றி ஜெ.கே.வலியுறுத்தினார். இலக்கியம் சாதி பார்ப்பதில்லை. சாதி பார்த்து வளரவில்லை. உ.வே சாமிநாத ஐயர், சிதம்பரம்பிள்ளை,திரிலோக சீதாராம்,அ.வே.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் பற்றியும், அகில இந்திய வானொலியில் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் கொடுத்ததையும் நடராஜன் பகிர்ந்து கொண்டார்.

 தொடர்ந்து சமூகம் பற்றி பேச்சு திரும்பிற்று.

   மிரட்டல்களுக்கு நாம் பயப்படக்கூடாது. நமது தனித்துவத்துவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது

   தொலைக்காட்சி பற்றி பேச்சு திரும்பும்போது-தனியார் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி பற்றி-``அது வாஸ்தவம் தான். ஒரே துறையில் தனியாரும் அரசாங்கமும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அரசாங்கம் தனியாரிடம் போட்டி போட முடியாமல் போகக்கூடும் என்பதற்கு தொலைக்காட்சி சேனல் ஒரு உதாரணம். அரசாங்க அமைப்பில் பல முட்டுக்கட்டைகள் உள்ளன.

   ஏதோ ஒரு பேச்சு வந்தபோது நடராஜன், ``நான் கடவுளை நம்புகிறேன் என்றதற்கு ஜெ.கே.``நம்பிக்கைதான் கடவுள்! என்று சிரித்தார்.

   உரையாடல் கலைஞர், ரஜினி, குஷ்பு என எல்லா பக்கமும் சுற்றி வந்தது. மூத்த- அனுபவஸ்தர்களின் விமர்சனங்கள் எனக்கு சுவையாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது.(ஆனால் அவையெல்லாம் பர்சனல் கருத்துகள் என்பதால் வெளியே எழுதுவது நாகரிகமில்லை)

   அந்த சமயம் பிரபல நடிகை சொன்ன கருத்து பிரச்னையை கிளப்பிவிட்டிருக்க, ஒருவரின் சொந்த கருத்தை பொதுப்படையாக்கக்கூடாது. அதற்கு ரொம்ப முக்கியத்துவம் தந்து பெரிதாக்கிவிடக் கூடாது. ஊரில் நமக்கு அன்றாடம் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்யாவசிய விஷயங்களை விட்டுவிட்டு இதுமாதிரியானவற்றில் கவனத்தை திருப்பி நம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்றார் அழுத்தமாய் ஜெ.கே!

 அங்கே அந்தக் கம்பீரம் தெரிந்தது.

   ஞானபீடம் விருது வாங்கப் போனபோது ஜெயகாந்தன் உடல் நல குறைவால் இருமவே ஜனாதிபதி அப்துல்கலாம் மிக்க அன்போடு, உடனே டாக்டரை பாருங்க என்று வலியுறுத்தியதை ஜெயகாந்தன் உருக்கத்தோடு சொல்ல, அங்கே அவரது கனிவும்-நெகிழ்ச்சியும் வெளிப்பட்டது.

 ஜெயகாந்தன் என்றால் கம்பீரம் மட்டுமில்லை கனிவும் கூடதான்!

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles