HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

அன்பு சிதம்பரம்;

   சம்பாதிப்பதிற்காக வேலையோ, தொழிலையோ செய்பவர்கள் உண்டு. ஆத்மதிருப்திக்காக இயங்குபவர்களும் உண்டு. தொழிலையே ஆத்மதிருப்தி தருவதாக அமைத்துக் கொள்பவர்கள் வெகு சிலரே.

   அந்த வகையில் மகிழ்ச்சி-திருப்தி-மனநிறைவோடு செயல்பட்டு வருகிறார் மதுரை திரு. அன்பு சிதம்பரம்.

   இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் (திருவாளர்கள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,குழந்தைக் கவிஞர் செல்வ கணபதி, திருமதி உமையாள் ராமனாதன் (அழகப்பா கல்லூரி ) போன்றோர் அதே ஊர்).

   இவரது தந்தை திரு. அன்பு நாச்சியப்பன் காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்ட தியாகி. அவர் காமராஜ். சா.கணேசனுடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அலிப்பூர் சிறையில் ஒன்றரை வருடம் ஒன்றாக இருந்திருக்கிறார்.(ஆர்டர் ஆகி 6 மாதம் மட்டும்).

    அதன் பிறகு அப்பா மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் நிர்வாகியாக இருந்தவர். சிதம்பரம் எஸ்.எஸ்.எல்.சி வரை சொந்த ஊரிலும் 1958 இல் மலேசியா சென்ரு சீனியர் கேம்ப்ரிஜ்ட் வரை படித்தார். மலேசியாவில் அடையாள அட்டை அவசியமான ஒன்று. அதற்கான புகைப்படங்களை பார்த்து பொழுதுபோக்காக சிதம்பரம் புகைப்படக் கலையை கற்றுக் கொண்டது. பின்னாளில் தொழில் தொடங்க அடிப்படையாக அமைந்துவிட்டது.

    1975 இல் மதுரைக்கு வந்து கால் பதித்த அன்பு கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை தவணைமுறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். அந்தத் தொழிலில் நல்ல வருவாய் இருந்தாலும் கூட இவருக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது.

     அந்த நாட்களில் ஓட்டுனர் லைசென்ஸ்கள் பெரிய பெரிய புத்தக அளவில் தரப்பட்டு அவற்றை எடுத்துச் செல்வது சிரமமாய் இருந்தது. அவற்றை மலேசியா அடையாள அட்டை போல எளிதாய் எடுத்துச் செல்வது போல ஏன் அமைக்கக் கூடாது என்று இவருக்கு தோன்றிற்று.

    அதற்காக சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுக்கும்போது முதலில் மங்களகரமாய் இருக்கட்டுமே என்று பிள்ளையார்பட்டி விநாயகரை படம் எடுத்தார்.

    அது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி ஆன்மீகப் பக்கம் இவரை மாற்றிற்று. அந்த ஈடுபாடு கோயில் கோயிலாக சென்று மூலஸ்தான விக்ரகங்களை படமெடுக்க வைத்தது.

    அந்தப் படங்களை இவர் பிரிண்ட் போட்டு சம்மந்தப்பட்ட கோயில்களில் அன்பளிப்பாக தர-விற்பனைக்கே கொடுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தவே இவருக்கு இதுவே தொழிலாகவும் மாறிவிட்டிருக்கிறது.

    புகைப்படக்கலையை  வியாபார ரீதியிலோ-விளம்பரம் எளிதில் கிடைக்கும் வழியிலோ- அரசியல்-சினிமா-பத்திரிகை துறை என திசை திரும்பாமல் முழுக்க முழுக்க ஆன்மீகம் கடவுள் என அமைத்துக் கொண்டது இவரது சிறப்பு.

    என்னவோ எடுத்தோம்-விற்றோம் என்றில்லாமல் ஆத்மார்த்தத்துடனும், நேர்த்தியுடனும் படங்களை அப்படியே ஒரிஜினலாக பிரதிபலிப்பது இவரது சாதனை.

    ``படங்களை பார்க்கும்போது, வணங்கும்போது மக்களுக்கு பக்தி உணர்வும் திருப்தியும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வணங்குபவர்களுக்கும் பலன்! அதன்மூலம் எனக்கும் பலன் கிடைக்கும் கிடைக்கிறது. எங்கள் வம்சமும் விருத்தியடைகிறது என்று பூரிக்கிறார்.

    படங்களை, பெரிய அளவிலிருந்து- கையடக்க அளவு வரை விதம் விதமாய் பிரிண்ட் செய்து லேமினேட் செய்து வெளியிடுவதுடன் ஆன்மீக புத்தகங்களும் அன்பு வெளியிட்டு வருகிறார். அதிலும்கூட இவருக்கு திருப்தி!

    ஆன்மீகம் என்றாலும் கூட நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கும், மக்களின் ரசனைக்கும் ஏற்ப படங்களை கம்ப்யூட்டரில் சரி பண்ணி பிரிண்ட் செய்து வெளியிடுகிறார்.

    ஆண்டவனின் அருள்தான் இவரது பலம் என நம்புகிறார். மழை மாங்கல்யம் மழலை போல- ஆத்மதிருப்திக்குக்கூட ஆண்டவனின் அருளாலேயே சிறக்க முடியும் என்கிறார் அன்பு.

     பிள்ளையார்பட்டி படங்களால் பிள்ளையாரும் பிரபலமடைந்திருக்கிறார். அவரால் இவரும்!

 உண்மை உழைப்பு-நேர்மை இவரது தாரக மந்திரம்.

            ஏதாவது காரணத்தால் படம் சரியாய் அமையவில்லை என்றால்,முதலீட்டிற்கு நஷ்டம் வருமே என்று அவற்றை இவர் வெளியே அனுப்பி காசு பார்க்க நினைப்பத்தில்லை, தரம் இவரது முதல் மூலதனம் தரமில்லாத படங்களை பத்திரப்படுத்தி வருடந்தோறும் ராமேஸ்வரம் செல்லும்போது அங்கு கடலில் கொட்டிவிடுகிறார். அதற்காக கவலைப்படுவதில்லை, தரம்தான் முக்கியம்.

    அன்பு சிதம்பரத்தின் கைவண்ணம் பிரபலம் என்றாலும்கூட இவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எளிமை! பரோபகார குணம்! இவ்வுலகில் பிறருக்கு கொடுத்துப் பார்க்கிற சந்தோஷத்திற்கு ஈடினை எதுவுமில்லை என்று உணர்ந்து அன்பளிப்புகளை ஏராளமாய் தாராளமாய் வழங்கி வருகிறார்.

    அன்பு இந்தியா முழுக்க அநேகமாய் எல்லா கோயில்களுக்கும் சென்று படமெடுத்து படமாக்கியிருக்கிறார்.

    மதுரை மடப்புரம் பிரபல கோயிலை படம் பிடிக்கச் சென்றபோது லாரி இடித்து விபத்தில் எந்த தேசமுமில்லாமல் தப்பித்ததையும் சக்கரத்தாழ்வார் கோயிலில் கேமிரா ஃப்ளாஷ் உடைந்தாலும் கூட படம் நன்றாக அமைந்ததையும் காசியில் ஹிந்தி தெரியாமலிருந்தாலும் கூட அங்கு அனுமதிபெற்று படம் எடுத்ததை நினைவு கூர்கிறார்.

    வாழ்வில் தன் மன நிறைவுக்கு ஏற்றமாதிரி அமைந்த துணைவி கண்ணம்மைக்காக பெருமைப்படுகிறார். இவர்களது மூன்று மகள்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. மகன் திரு. சிவக்குமார் பி.எஸ்.ஸி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து அன்பு சிஸ்டம்ஸ் எனும் பெயரில் கம்ப்யூட்டர் சேல்ஸ்&சர்வீஸ் சிறப்பாக செய்து வருகிறார்.

     அன்பு, காசி நாட்டுக்கோட்டை சத்திரம் துணை தலைவராக இருக்கிறார். (காசி-கல்கத்தா-கயா போன்ற கோயில்களில் நடந்துவரும் நான்கு கால பூஜையில் மூன்று கால பூஜை நகரத்தார் மூலம் நடப்பது விசேஷ செய்தி.)

    இவர் சார்ந்த நகரத்தார் அமைப்பு, காசி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் காட்டேஜ்கள் கட்டிவிட்டு, அந்தந்த கோயில்களுக்கு வருமானம் ஈட்டித் தருகிறது.

     பழமுதிர்ச்சோலை பாதயாத்திரை குழுவின் தலைவரான இவர் வருடந்தோறும் அன்னதானம் செய்து வருகிறார்.

     `ஆன்மீகப் பதிப்புச் செம்மல் முதற்கொண்டு பல பட்டங்களும் கெளரவங்களும் பெற்றிருக்கிற இவர்-

      பெரிதாய் மதிப்பது நிறைவான- மகிழ்வான- திருப்தியான-அமைதியான-குறைவில்லா வாழ்வை தந்துள்ள ஆண்டவனின் அருளை, கருணையை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles