HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      காலில் செருப்பு அணியாவிட்டால் கிருமிகள் தொற்றும் நோய் தாக்கும் என்பார்கள். நான் செருப்பில்லாமல் தான் நடக்கிறேன். பொது கழிப்பிடம் கூட போகிறேன். என்னை எந்த நோயும் தாக்குவதில்லை. மாறாக அதற்கு முன்புவரை இருந்த பித்தவெடிப்பு மறைந்துள்ளது! நாம் இயற்கையோடு  ஒன்றி வாழ வேண்டும். செயற்கை தடுப்புகளை நம்பி இருக்காமல் இயற்கை மூலமே எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 பளிச்பளிச்சென விஷயங்களை எடுத்துரைக்கிறார். திரு.அறிவொளி!

    காவி உடை, தாடி, அமைதியான அதே சமயம் ஆழமான தோற்றம். குவைத் தமிழ் பொறியாளர் அமைப்பின் நிகழ்ச்சிக்கு வழக்காடுமன்றம் நடத்த வந்தவரை சந்தித்த போது வியப்பு தோன்றிற்று. இவர் ஒரு களஞ்சியப் புதையல்!

     இவரிடம் எவ்வளவோ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. சாமியார் போன்ற தோற்றம். ஆனால் சாமியாரில்லை. குடும்பஸ்தர், ஆனால் போலியில்லை. குடும்ப சம்பிரதாயம் இது என விளக்குகிறார்.

 சொந்த ஊர் சிக்கல். ஆனால் கடந்த 20 வருடங்களாய் திருச்சியில் ஐக்கியம்.

    பி.ஏ., எம்.ஏ., வித்வான் படிப்பு அண்ணாமலை யுனிவர்சிடியில் படிக்கும்போதே இவருக்கு பேச்சு கலையில் ஆர்வமும் திறமையும் வந்திருக்கிறது. அதை தூண்டி வளர்ந்தது அரசியல்! குறிப்பாக தி.மு.க

    1958-ல் கல்லூரியில் படிக்கும்போதே இண்டர்-காலேஜ் பேச்சு போட்டியில் ஒரே தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசி பெயர் பெற்றிருக்கிறார்.

    1960 வரை அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். சினிமா வசனங்களும், இலக்கிய படிப்பும் இவரது பேச்சுத் திறமைக்கு உரமாக அமைந்தன.

    அந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாய் பங்கு கொண்டவர்- இப்போது ``ஹிந்தியை நாம் அனைவரும் கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

     ``ஹிந்தி நுழைந்துவிட்டால் தமிழ் அழிந்துவிடும் என்று அப்போது சொல்லிச் சொல்லி ஹிந்தியின் மேல் வெறுப்பை வரவழைத்தனர். ஆயிரம் வருடங்கள் மன்னர்கள் ஆட்சி, 200 வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ் அழியலை. பிறமொழிமேல் வெறுப்பை வளர்ப்பதிற்கு பதில், நம் தமிழ் மேல் பற்றை உருவாக்கணும். எந்த ஒரு மொழியையும் ஆதிக்கத்தால் வளர்த்துவிட முடியாது.

    சமஸ்கிருதம் அதற்கு ஒரு உதாரணம். மத அடிப்படைக்கு அப்பாற்பட்டு சமஸ்கிருதம் வளர முடியவில்லையே! இன்று ஹிந்தி நமக்கு தேவை. வேலை வாய்ப்புக்குஇந்தியா முழுக்க தொடர்புக்கு ரொம்ப பயனாய் இருக்கும் ஹிந்தியை இளைஞர்கள் கற்க வேண்டும்

     1960 களில் பட்டிமன்றம், ஆன்மீகம் பக்கம் கவனம் திரும்பியதும் அறிவொளி அரசியலை விட்டுவிட்டார். அரசியல் சேவையைவிட காழ்ப்புணர்வு அதிகமாகிவிடுகிறது. ஆன்மீகம் நல்ல கருத்துகளை பரப்ப உதவுவதால் இதில் ஒரு மனதிருப்தி கிடைக்கிறது.

  அறிவொளி தமிழாசிரியராக அண்ணாமலை முதல் பல கல்லூரிகளில் பணியாற்றி 1982ல் வேலையை விட்டுவிட்டு மருத்துவ துறைக்குள் கால் பதித்தார்.

    அக்குபஞ்சர் , சித்தா, ஹோமியோ, நேச்சுரபதி, யோகா போன்றவற்றில் தேர்ச்சி பெற பின்னணியில் இவரது வைத்ய குடும்பம் அடிப்படையாய் அமைந்தது. ``ஆல்டர்நேடிவ் மெடிசினில் டென்மார்க், கோபன் ஹேகன் யுனிவர்சிடி மூலம் டாக்டரேட்டும் பெற்றுள்ளார்.

    1971 ல் இவரது குருநாதர் சிவராஜ யோகமடம் மாணிக்கவாசக தம்புரானுக்கு பிறகு இவருக்கு `சாக்த தீட்சை கிடைத்தது.

    சமஸ்கிருதம், வேதம் படித்துள்ள அறிவொளி, யோகா குறித்து சமஸ்கிருதத்தில் 820 பக்கத்தில் புத்தகம் எழுதியுள்ளார். சித்தர் பாடல் கருத்துரை முதல் பல தலைப்புகளில் 86 புத்தகங்கள் இவர் வெளியிட்டுள்ளார்.

   சாதி- மதம் பார்க்காத அவரது நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கின்றனர். இவர் 12 வருடங்களாய் செருப்பு அணிவதில்லை சிங்கப்பூரில் செருப்பில்லாமல் நடக்கக் கூடாதாம். ஆனால் இவரை யாரும் எதுவும் கேட்கவில்லை.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சுவையாகவும் சுவாரஸ்யமாவும் நல்ல கருத்துகளை பரப்பும் விதம் நடத்தி தொடர்ந்து வெற்றி நடை போடுகிறார் இந்த மேதை.

 பேராசிரியர் பெரியார்தாசன்;

   பேராசிரியர் பெரியார்தாசன் தமிழ்நாடு பொறியாளர்கள் அமைப்பின் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்க வேண்டி குவைத்திற்கு வந்திருந்தார்.

        மெத்த படித்திருந்தாலும் கூட எளிமை, படு சகஜம் யதார்த்தமான பேச்சு, பேசும்போதே நளினம், உவமை-உவமானம் அபிநயம் என்று கண் முன் ஒரு லைவ் ஷோ கொடுத்து விடுகிறார்.

    மேடையிலும் இடைவிடாமல் சிரிப்பு மழை பொழிகிறார். அத்துடன் சொல்ல வந்த கருத்துகளை அழகாக ஆழமாக பதித்து விடுகிறார்.

 பேச்சுக்கிடையில் ``கைத்தட்டுங்க, சொல்றதை கவனிங்க என்பார். அது ஏன் அப்படி?

    ``நான் மனோதத்துவம் படித்தவன். ஜனங்களின் மனநிலையை அறிந்தவன். ஒரு சொற்பொழிவின் போது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல- பார்வையாளர்களுக்கும் அதில் முழு கவனமிருந்தால்தான் சுவைபடும்.

     கல்யாண வீட்டில் கூட்டமிருக்கும், ஆனால் யாருக்கும் எதிலும் கவனம் இருக்காது. வந்தோமா-மொய் வைத்தோமா, சாப்பிட்டோமா-போனோமா என்றிருப்பார்கள். என் நிகழ்ச்சி அப்படி ஆகி விடக்கூடாது. அப்புறம் எனது உழைப்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

     அதனால் பேச்சுக்கிடையே கையை உயர்த்துவேன். கை தட்டுங்க என்று சொன்னால்-அதில் ஏதோ விஷயம் இருக்கு என்கிற எதிர்பார்ப்பு ஏற்படும், விழிப்பு வரும்.

     கழைக் கூத்தாடி-ரோடுல ``ஜோரா கைத்தட்டுங்க என்பான் பாருங்க-அதையேதான் நான் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடிக்கு போய் மனோதத்துவம் படித்துவந்து பயன்படுத்துகிறேன்.

     நகைச்சுவையாய் பேசும்போது எல்லோருமே கேட்பார்கள்,  விரும்புவார்கள், ஆனால் அதே வேகத்துல மறந்துடுவாங்க.

     கண் பார்ப்பதில்லை; காது கேட்பதில்லை; கண் வழி மனம் பார்க்கிறது! காதுவழி மனம் கேட்கிறது! நாசிவழி மனம் நுகர்கிறது! அதுதான் உண்மை.

 ஆக எல்லா செயல்களுக்கும் மனதை இயக்க வேண்டும்!

     நகைச்சுவையாய் பேசும்போது அவையினரின் மனம் மலர்கிறது. உடனே அந்த சமயத்துல கருத்தை விதைச்சுடறேன்.

     தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் தலைவர் திரு செந்தமிழ் அரசு, பெரியார்தாசனிடம் கலந்து பேசும்போது அவர் பல விஷயங்கள் கொட்டினார். அதுவும் சுவையாயிருந்தது.

     ``32 வருடமாய் நான் ஆசிரியராக இருந்தாலும் கூட இன்னும் கூட மாணவன்தான். (பேராசிரியர்- பேருக்குத்தான் ஆசிரியர்!) எனக்கு மனோதத்துவத்தை தவிர வெளியே பெரிதாய் எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.

      பெரியார்தாசன், குடும்பம், தொழில், சமூகம் என மூன்று வகையிலும் தன் சொற்பொழிவை அமைக்கிறார்.

      அவர் தங்கியிருந்த நண்பர் முத்துக்குமார் வீட்டில் சிற்றுண்டியின்போது, ``வீட்டிலதான் கட்டுப்பாடு, இங்கே ஏன்? என்று இனிப்பு வகைகளை சுவைக்க ஆரம்பித்தார்-குழந்தைபோல, வினோதமாய் இருந்தது.

     ``குடும்பத்தில் கணவன் மனைவி- ஒன்றாகத்தானிருப்பார்கள், நன்றாய் பேசுவார்கள். சிந்திப்பார்கள், ஆனால் எந்த நேரத்தில் முரண்பாடு வரும் ``முறுக்கி கொள்வார்கள் என தெரியாது. குற்றம் குறைகள்! குழந்தை படிக்கலை! முயற்சி செய்யலை! சோம்பல்! வேலை செய்ய முடியலை! பேயடிச்ச மாதிரி இருக்கு!

     இதெல்லாம் மனச்சிதைவால் ஏற்படுவது. இவற்றையெல்லாம் என்னால் எளிதாய் சரிபண்ண முடியும். குடும்ப வாழ்வில் ஒப்பீடு கூடாது. ஒவ்வொருக்கொருவர் பொறாமை கூடாது, கோபம் கூடாது.

     இந்தக் கோபம் என்பது சந்தர்ப்பவாதம் தான்! மேலதிகாரி தனக்கு கீழ் உள்ளவரிடம் கோபப்படுவார். மேலே உள்ளவர்களிடம் பணிந்து போவார். அப்போ அந்த கோபம் என்பது நிஜமில்லை, பொய், கட்டுப்படுத்தக் கூடியதே என்பது புரியும். முயன்றால் நிச்சயம் கட்டுப்படுத்தலாம்.

 பெரியார்தாசனுக்கு நாட்டுப்பற்றுடன் கூடிய சமூக அக்கறை எப்போதுமே உண்டு.

      ``ஐயாயிரம் ஆண்டுகள் பண்பாட்டில் நமக்கு அறிவு. தெளிவு-ஆற்றல் எல்லாம் இருக்கிறது. ஆனாலும்கூட வறுமைதான் உதைக்கிறது. இந்தியாவில் வறுமை இருக்க காரணமேயில்லை.

      சோற்றுக்கூடை சுமப்பவர் பசியோடு இருப்பது பரிதாபம்! நம்மைப் பொறுத்தவரை நமது முழுசக்தியையும் பயன்படுத்துவதில்லை-முழுமையாய் ஆத்மார்த்தத்துடன் உழைப்பதில்லை என்கிற முடிவோடுதான் வேலைக்குச் செல்கிறோம்!

      ஜப்பான்காரன் உழைக்கிறான் அமெரிக்ககாரன் உழைக்கிறான் என்று பேசுவோம்-வாய் கிழிய ஆனால் செயல்பட மாட்டோம்!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles