HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      ஜம்பது படங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துள்ள பெரியார்தாசன் எப்படி சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிகிறது?

      அவர் சிரிக்கிறார், ``வாஸ்தவத்தில் எனக்கு சினிமாபத்தி எதுவும் தெரியாது. லைட், கேமிரா அறிவெல்லாம் சுத்தம் எனது சொற்பொழிவுக்கு வந்திருந்த பாரதிராஜா `நாம் கஷ்டப்பட்டு படமெடுத்தாலும் இரண்டரை மணி நேரம் ஜனங்களை பிடிச்சு வைக்க முடியலை. இடையில் எழுந்து போகிறான். இவர் பேச்சை 4 மணி நேரம் என்றாலும் அமர்ந்து கேட்கிறானே இவரிடம் என்னவோ இருக்கு என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்.

     உண்மையாய்ச் சொல்லப் போனால் புலிமார்க் சிகைக்காயில் புலிக்கும்-அந்த சிகைக்காய்க்கும் உள்ள சம்பந்தம் எனக்கும் நடிப்புக்கும்!

     கருத்தம்மாவின் கதாபாத்திரமும் சரி மற்றவைகளும் சரி, எல்லா புகழுமே டைரக்டர் பாரதிராஜாவுக்கே சொந்தம்!

      யோசித்துப் பார்த்தால் இங்கு எல்லோருமேதான் நடிக்கிறோம். நானும்கூட பாடம் நடத்தும்போது ஷேக்ஸ்பியர், அரிஸ்டாடில் போலவே மாறிவிடுவேன். அந்தந்த கதாபாத்திரத்திற்கான முகபாவங்கள்! ஆகையால் நடிப்பு என்பது எனக்கு இயல்பு என்றே நினைக்கிறேன்.

 இங்கே யார் நடிக்கவில்லை சொல்லுங்கள்?

      கணவன் மனைவியிடையே புழங்காத நடிப்பா பொய்களா? ஒரே நபர் அவர் கடன் வாங்கினவரிடமும், கடன் கொடுத்தவரிடமும் எப்படி வித்யாசமாய் பேசுகிறார், பழகுகிறார்!

      பெரியார்தாசன் நகைச்சுவையாய்- இயல்பாய்- பேச்சில் தோளில் கைப்போட்டு அழைத்துப் போய்க் கொண்டே நல்ல கருத்தை விதைத்துவிடும் விவசாயி!

 இலக்கியவீதி இனியவன்:

      பல வருடங்களாக திரு.இனியவன் அவர்களின் செயல்பாடுகளை அறிந்திருந்தாலும் கூட அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த பத்து வருடங்களாகத்தான்!

   வயது, அனுபவம், அறிவு, திறமை இவற்றிற்கும் அப்பாற்பட்ட எளிமையும், இனிமையும் இவரிடம் ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள்.

   தமிழ்மேல் உள்ள பற்று! இலக்கியம் மட்டுமின்றி சமூகத்தின் மேல் உள்ள அக்கறை! கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாத சாதுத்தனம்!

   முளைக்கும்போதே- பிறரின் திறமையை படைப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்கிடையே-

   திறமைகள் எங்கிருந்தாலும் எந்த விதத்தில் வெளிப்பட்டாலும் அவற்றிற்கு ஆதரவும், ஊக்கமும் தருவது இவரது பெருந்தன்மை!

   நான் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சளைக்காமல், அலுக்காமல் என்னுடன் சேர்ந்து சுற்றுகிற சுறுசுறுப்பு! அப்படி அவருடன் இருக்கும்போது-

   `நிறைகுடமாய், எந்தவித ஆர்ப்பரிப்புமில்லாமல் பண்போடு பழகுகிறாரே-நம்மிடம் மட்டும் ஏன் இத்தனை படபடப்பு? என்று என் மேலேயே எனக்குக் கோபம் எழுவதுண்டு. (ஆனாலும் மாற்றம் எதுவுமில்லை!)

யாரையும் புண்படுத்தாத, அதே நேரத்தில் விமர்சிக்கவும் தயங்காத பக்குவம் இவரிடம்!

   கடந்த 29 ஆண்டுகளில் இலக்கியவீதியின் செயல்பாடுகள் காரணமாய் இனியவனுக்குப் பல துறைகளிலும் உள்ள பிரபலங்கள், செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் நல்ல பழக்கமிருந்தும் கூட அவர்களிடம் எந்த ஆதாயத்திற்கும் போய் நிற்காத கைச்சுத்தம்!

    குவைத்தில் வெற்றிகரமாய்ச் செயல்பட்டு வரும் சேவை அமைப்பான ஃப்ரன்ட்லைனர்ஸ்ஐ நான் உருவாக்க, இவரே காரணம்.

    `தொழில் முதலீடு ஆசிரியர் திரு.அரிதாசனை இவர் எனக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குவைத்திலுள்ள இந்திய சாதனையாளர்களை எழுதவைத்து உருவானதுதான் ஃப்ரண்ட்லைன்ர்ஸ்!

      அதன் சேவைக்காக `வி ஹெல்பு எனும் அறக்கட்டளையை தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவரும் கூட திரு. இனியவன்தான். இந்த இளைஞர் பற்றி, அமுரசுரபி இதழில் நண்பர் `கிளிக் ரவி எழுதியுள்ளதிலிருந்து இங்கே கொஞ்சம் தருவதில் மகிழ்கிறேன்.

     ``பள்ளியில் 9ம் வகுப்பில் படிக்கும்போதே இனியவன், மாணவர் குரல் என்ற இதழில் முதல் சிறுகதை எழுதினார். அது பரிசும் பெற்றது. தொடர்ந்து 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 15க்கும் மேற்பட்ட குறுநாவல்கள் என்று எழுதி இரண்டு பயண இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

     கல்வி இதழில் வெளியான நா.பார்த்தசாரதியின் `பச்சைக் குழந்தைகள் சிறுகதையைத் தொடர்ந்து இவர் `வாழ்வே வேறுதான் என்று ஒரு சிறுகதை எழுதி நா.பா.வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் அதைப் படித்துவிட்டு, அவராகவே கல்கியில் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்! கூடவே சிறுகதையைப் பற்றிய பாராட்டையும் கடிதம் வழியே இனியவனுக்குத் தெரிவித்திருக்கிறார்.

    ``நா.பா.விக்குத்தான் எத்தனை பெரிய மனது! வளரும் எழுத்தாளனை, இதைவிடச் சிறந்த முறையில் பாராட்ட முடியுமோ! என்று வியக்கிறார் இனியவன்.

     இவர் எழுதிய முதல் கதையே விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ``கண்ணன் சிறுவர், இதழ் நடத்திய நாவல் போட்டியில் இவரது பொன்மனம் முதல் பரிசு பெற்றது. கல்கி நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய `வீதியின் கை முதல் பரிசு பெற்றது. இவரது சொந்த ஊரான விநாயக நல்லூருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வேடந்தாங்கலைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள் பற்றியும் இவர் எழுதிய `வேடந்தாங்கள் நூல் சுற்றுலாப் பயணியருக்கு வழிகாட்டி.

    ஊர்ப் பயணங்களில் இன்பம் காணும் இவர் அதையும் பயனுள்ள வகையில் செய்திருக்கிறார். `உத்திரமேரூர் உலா என்ற இவரது பயண நூல் குறிப்பிடத்தக்கது. இனியவன் ஒரு கால கட்டத்தில், தான் எழுதுவதை நிறுத்திக் கொண்டு இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி விழாக்கள் எடுக்கவும் துவங்கினார்.

    இலக்கியவீதி தொடங்கப்பட்ட நாளிலிருந்து மாதக் கூட்டங்களும் ஆண்டுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு அறிமுக எழுத்தாளர் முதல் மூத்த எழுத்தாளர்கள் வரை அனைவரையும் பாராட்டுவதால் இவ்வமைப்பு இரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையில் பாலமாக விளங்குகிறது.

    மூத்த தலைமுறை எழுத்தாளர்களான தி.ஜா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.சரா., இந்திரா பார்த்தசாரதி படைப்புகள் அன்றைய அறிமுக எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியதில் நிறைய புதிய இளம் எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவருக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இலக்கியவீதி மேடை அமைத்துத் தந்திருக்கிறது. ஜனரஞ்சக எழுத்தாளர்கள், ஆழ்ந்த இலக்கிய படைப்பாளர்கள் என அனைத்து இலக்கிய ஆர்வலர்களின் ரசனைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன.

    இலக்கியவீதி துவக்கப்பட்ட அடுத்த ஆண்டு தி.ஜா., ஆதவன், க.நா.க., இ.பா., கி.கஸ்தூரி ரங்கன் இப்படி தில்லியில் வசித்துவந்த அனைத்து எழுத்தாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டம் என்றென்றும் மனதில் நிற்கும் வண்ணம் அமைந்தது.

    மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் பகுதியில் உள்ள குறிப்பிடத்தகுந்த பதினோரு தீவுகளிலும் மாநாடுகள் போன்ற இலக்கிய உலாக்கள் நடத்திய ஒரே அமைப்பு இலக்கியவீதி மட்டுமே!

    ஓவியக்கலை, சிற்பக்கலைக் கல்லூரிகளிலிருந்தும் கலைப் படைப்பாளர்கள் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. வானொலி நிலையங்களுடனும், தொலைக்காட்சியுடனும், இதழ்களுடனும் மாணவர்களுக்காக அறிவியல் திறனை வளர்க்கும் விதத்தில் பல போட்டிகளை நடத்தியுள்ளது.

    இலக்கியவீதியின் வழியாகப் பல எழுத்தாளர்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருந்தாலும் இனியவனின் நினைவில் நிலைத்து நிற்பவர்களாக அவர் கருதும் இரண்டு பேர்களில் ஒருவர் தாராபாரதி. இன்றைய இளைஞர்கள் மனம் சோர்ந்து மடிந்து உட்காரும்போதெல்லாம் `வெறும் கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம் என்ற எழுச்சி வரிகளைத் தனக்குத்தானே ஒரு முறை சொல்லிக்கொண்டால் துள்ளி எழுந்து சோம்பலைப் புறம் தள்ளி வெற்றி நடைபோடலாம். இந்த வைர வரிகளை எழுதி வாழ்வியலுக்கு வளம் சேர்ந்தவர் தாரா பாரதிதான்! இளம் வயதிலேயே அவர் அகால மறைவெய்தியது இனியவனை மிகவும் பாதித்திருக்கிறது.

    அடுத்ததாக இரு கண்களை இழ்ந்த நிலையிலும் தன்னம்பிக்கையை விடாமல் சாதனை செய்துகாட்டிய `தசாவதானி கோவில்பட்டி இராமையா!

    ``அவரை உலகுக்கு அடையாளம் காட்டி அரசுக் கலைஞராகவும் அளவு உயர்த்தியதில் இலக்கியவீதிக்கு பெரும் பங்கு உண்டு என்கிறார் இனியவன். இராமையாவின் மறைவுக்குப் பின் அவரது புதல்வர் கனக சுப்புரத்தினத்தையும் இதே துறையில் இலக்கியவீதி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

     நூலாசிரியர் முன்னிலையில் அவரது நூல் ஒன்று திறனாய்வு செய்யப்பட்டு படைப்பாளர் பதில் கூறுவார். ஒவ்வொரு மாத உலாவின் போதும் சிறுகதைப் போட்டி வைக்கப்பட்டு, பரிசு பெற்ற கதை பார்வையாளர்கள் மத்தியிலேயே படித்துக் காட்டப்படும். ஆண்டு முடிவில் இவை தொகுக்கப்பட்டு நூல்களாகவும் இலக்கிய வீதிலே வெளியிட்டிருக்கிறது.

     இலக்கியவீதி பதிப்புத்துறையிலும் பங்காற்றியுள்ளது. 7 சிறுகதைத் தொகுதிகள், 10 கவிதைத் தொகுப்புகள் இரண்டு நாவல்கள் மற்றும் நாடகம், ஆய்வுக்கட்டுரைகள் என்று பல்வேறு நூல்களையும் வெளியிட்டிருக்கிறது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles