HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      நல்லி என்பது இவரது குடும்பப் பெயர். மார்க்கண்டேய மகிரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா `நல்லி சின்னசாமி செட்டியார் பட்டுச் சேலை வியாபாரத்திற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார். காஞ்சியிலிருந்து ஜவுளி வியாபாரத்தை சென்னையில்  1928ல் முதலில் மயிலையிலும் பிறகு பனகல் பார்க்கிலும் துவங்கினார்.

       1953ல் நல்லி சின்னசாமி செட்டியாரின் மகனும், குப்புசாமி செட்டியாரின் தந்தையுமான நல்லி நாரயணசாமி செட்டியார் அவர்கள் தனது 42வது வயதில் புகழுடம்பை எய்திய போது குப்புசாமி செட்டியாருக்கு வயது 12 தான். தாயார் கண்ணம்மா, இரண்டு சகோதரிகள் ஆகியோரை ஆதரிக்கும் பொறுப்பு ஒரு புறம், வியாபாரத்தை கவனிக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம், இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் கல்லூரி செல்லும் வாய்ப்பை இழந்து கடை நிர்வாகத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். தந்தையார் விட்டுச் சென்ற பணியை, அவரது ஆசியைத் துணையாகக் கொண்டு தொடர்ந்தார். வாடிக்கையாளர்களின் அன்புக்கும், பண்புக்கும் பாத்திரரானார். ஜவுளி வியாபாரத்தில் இவரை வளர்த்து ஆளாக்கியது இவரது சித்தப்பா திரு. நல்லி ரெங்கசாமி செட்டியார்.

        கடின உழைப்பு, நேர்மை, ஊக்கம், தளராத உறுதி,  செய்யும் தொழிலே தெய்வம் என்று போற்றுகின்ற தன்மை, நன்னடகம் போன்ற உயர்ந்த குணங்களால் ஆரம்பத்தில் 200 சதுர அடியில் அமைந்திருந்த கடையை நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இன்று 20,000 சதுர அடிக்கு ஒரு தெருவிலிருந்து மறு தெருவிற்கு எட்டும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

       கல்லூரிக்குப் போக முடியாமல் போனதே என்ற ஏக்கத்தை தணித்துக் கொள்ளும் விதமாக, தனிப்பட்ட முறையில் நிறைய நூல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். இப்படியாகத் தனக்கென தனியாக வீட்டில் ஒரு வளமான நூலகத்தையே அமைத்துக் கொண்டுள்ளார்.

        இவரது தொழிலுக்கு உதவிய உபயோகமான சிந்தனைகளைத் தந்தது ஹென்றி ஃபோர்டின் சுயசரிதை, தொழிலில் போட்டிகளை, சிக்கல்களை எவ்விதம் சமாளிப்பதற்கென்ற அறிவை இவருக்கு ஊட்டியது அந்த நூல், தொழிலில் இன்று இவர் தர்மத்தையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பதற்குக் காரணம் காந்தியடிகளின் ``சத்திய சோதனை ஏற்படுத்திய பாதிப்பு, அதே போல இராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி அமுதம் இவர் கலைப் பணி மற்றும் கடவுள் பணிகள் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.

        ``நடந்து வந்த பாதையை நன்றியுணர்வோடு எப்போதும் நான் திரும்பிப் பார்த்து, எங்கள் பெரியவர்களை நெஞ்சுருகிக் கண் பனித்துக் கை கூப்புவேன் என நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறார் நல்லி.

         இந்தியாவின் பிரபல நகரங்கள் மட்டுமின்றி, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவிலும்  `நல்லி கிளை விட்டிருக்கின்றது. கலைமாமணி  பத்மஸ்ரீ டாக்டர் முதற்கொண்டு பலவித விருதுகளும் பெற்று அந்த விருதுகளுக்கும் பெருமை சேர்த்து வரும் நல்லியின் எளிமையும்,  குழந்தை போல பழகும் விதமும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று.

         வர்த்தகத்திற்கிடையிலும் கலை, இலக்கிப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் செய்யும் தொழில் பட்டு என்றாலும் பட்டை விட அழகிய, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிற பாட்டு இவருக்கு மிகவும் பிடிக்கும். இசையில் பரம ரஸிகர் இவர். ஸ்ரீ கிருஷ்ணகான சபா, நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாடமி, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா பிரம்மகான சபா போன்ற இசை அமைப்புகளின் தலைவர்.

         சென்னை கன்னிமாரா நூலகத்தின் புரவலர், புத்தகக்கடைகளுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் தவறாமல் சென்று வருபவர். புத்தக வெளியீட்டு விழாக்களில் முக்கிய விருந்தினராக எப்பொழுதும் அழைக்கப்படுபவர். பல நூலாசிரியர்களுக்கும் பதிப்பாசிரிகளுக்கும் பொருளுதவி செய்திருக்கிறார். இவரே பல நூல்கள் எழுதியுமிருக்கிறார். அவை பெரும்பாலும் வணிகம்,நிர்வாகம்,வாழ்வியல்  சார்ந்தவை. இவற்றில் சில மராத்தி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசு பெற்றவை.

        இவர் கல்வி கற்றது இராமகிருஷ்ண மடத்துப் பள்ளியில் அங்கே அவர்கள் போதித்த நீதிநெறி, அற வழிச் சிந்தனைகள் இவர் வாழ்க்கைக்கு வழிகாட்டின. அதன்படி இராமகிருஷ்ண மிஷன் பள்ளி நடத்தும் எந்த நல்ல காரியத்திலும் இவரது பங்கு கண்டிப்பாக இருக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தா நினைவு மண்டபக் குழுவிலும், கல்வி அறக்கட்டளையிலும் இவர் பங்கேற்று அலை சீராக நடைபெற வழிவகை செய்துள்ளார்.

       பழகுவதில் இனிமை, எதிலும்,தெளிவு,எண்ணத்தில் தூய்மை என நற்பெயர் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்.

யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும், எவரும் நினையாததை நடத்தித் தீர வேண்டும் என்கிற தொலை நோக்கும், திண்மையும் இவரது அரும்பெரும் குணநலன்கள். தொழில் அதிபராக, எழுத்தாளராக,பேச்சாளராக், கலை ரசிகராக, பண்பட்ட நண்பராகப் பல பரிமாணங்கள் கொண்டவர். தன் அனுபவங்களை எளிமையான தமிழில் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்தவர். பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு உலகப் பார்வையை வளர்த்துக் கொண்டவர்.

         பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற மனிதர். வாடிக்கைக்காரர்களை வெறும் வேடிக்கைப் பொருளாகப் பாவிக்காமல், அவர்களை மிகச் சிறந்த நண்பர்களாக சுவீகரித்துக் கொண்டு, தேவையானவற்றைப் பூர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெறுதலே இன்பம் எனும் எண்ணம் கொண்டவர். வியாபாரத்தையும் ஒரு கலையாகக் கண்ணுற்று போற்றி வளர்க்கும் தன்மை இவரது சிறப்பம்சம்.

       1928ல் சென்னையில் துவங்கி 72 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் `நல்லி யின் நல்ல பட்டாடைகள் நானிலம் முழுவதும் இன்றளவும் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் பேறு பெற்றுள்ளது என்றால் அது அந்த இறைவனின் பரிபூரண கடாட்சத்தினால்தான் என்றால் மிகையாகாது. பட்டுக்கொரு நல்லி என்ற பெருமைக்குரியவர். அன்பையும், அபிமானத்தையும் அபரிமிதமான மதிப்பையும் பிறர்க்குக் கொடுத்துத்தான் அவற்றைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய பண்பாளர்.

          முதலாளி- தொழிலாளி சிறந்த நல்லுறவிற்காத சென்னை ரோட்டரி சங்கம் (2005,2006) இவருக்கு விருதளித்து கெளரவித்துள்ளது.

           நல்லி அவர்களின் ஆத்ம  நண்பரும், எழுத்தாளரும் அறிஞருமான சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனரான திரு.ஏ.நடராஜன் நல்லி பற்றி எழுதியுள்ளதில் இங்கு கொஞ்சம்:

           பல ஆண்டுகளில் எங்கள் நட்பு வேகமாக இறங்கி இனிமையான நெருங்கிய நட்பாக இன்று முகிழ்த்திருக்கிறது. `அருணோதயம் பதிப்பகத்தின் முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அருணன் அவர்கள் முப்பது புதிய நூல்களை வெளியிட்டார். அவற்றில் என் சிறுகதைத் தொகுப்பும், செட்டியார் எழுதிய `வெற்றியின் வரலாறு நூலும் இடம் பெற்றிருந்தன. செட்டியாரின் நூல் உருவானதில் எனது அணில் பங்கும் இருந்தது.

          செட்டியார் அவர்களை ஒரு வெற்றிகரமான வர்த்தகராக, பெரும் தனவந்தராக நான் பார்த்த தருணங்களை விட, கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரசிகராக, மனித நேயமிக்க மகத்தான பண்பாளராக அவரைப் பார்த்த தருணங்களே அதிகம். எதிலும் ஒரு பொறுப்பு வேண்டும் என்பன போன்ற சில வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைத் தனக்குத்தானே வகுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்து வரும் ஒரு இலக்கண புருஷராக நான் அவரைப் பார்த்து தினம் தினம் வியக்கிறேன்

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles