HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

   சில வருடங்களுக்கு முன் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் ஒரு கவிஞரும் கூட, கவிதைகள் எழுதுவதை பொழுதுபோக்காகக் கொண்ட இவர் மூன்று கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். சமூக சிந்தனைமிக்க இவர் குவைத்தின் ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் தலைவராக இருந்து பல சமூக சேவைகளுக்கு உதவி வருகிறார்.

  பள்ளி நாட்களில் தினம் ஆறு மைல் நடந்து போய் படித்த நாட்களை நினைவு கூறும் இவரின் உதவியால் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் பலர். இரண்டு நாடுகளில் சார்ட்டட் அகெளண்ட்டன்ட் (சிஏ) பட்டம், எம்பிஏ பட்டம், நிதித்துறையில் முனைவர் பட்டம் (பி.எச்டி), எம்ஐஎம்ஐஎஸ், ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளமா படிப்பு, இன்னும் பல பட்டங்கள் பெற்றுள்ள இவரிடம் ``இவ்வளவு வேலைகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையில் எப்படி உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் சிரித்துக் கொண்டே ``மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிறார்.

  வைத்திய கல்லூரியில் சேர முடியாமல் போனதை ஒரு தோல்வியாகக் கருதி மனம் சோர்ந்து விடாமல், வைத்தியப் படிப்பிற்கு சிறிதுமே சம்பந்தமில்லாத அக்கெளண்டன்சி படிப்பை முழு மனத்தோடு ஏற்று அதில் வெற்றி பெற்று தன் குடும்பத்திற்கும், தனது சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும் பெரியசாமி ஒரு வெற்றி பெற்ற தமிழர் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.

  எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கவேண்டும், என்ற மனத்திடமும் ஓயாத உழைப்பும், அந்த உழைப்பில் நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் இவர், தான் ஏறி செல்லவேண்டிய படிகள் இன்னும் பல உண்டு என்று கூறும் இந்த தன்னடக்கம் கூட இவரின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.  

  செந்தமிழ் அரசு:

  ``உயர் கல்வியுடன், கலை கலாச்சாரம் இலக்கியம் பேச்சு-பாட்டு என்று பிற துறைகளிலும் ஈடுபட்டு, கற்று, பயிற்சிபெற்று நான் பெயர் பெறுவதற்கு மூலகாரணம்-மறைந்த எனது தந்தை திரு.எம்.பி.ராமனாதன் அவர்கள்தான். என் வெற்றி முழுக்க அவருக்கே அர்ப்பணித்திருக்கிறேன் என்று மனம் உருகுகிறார் திரு.செந்தமிழ் அரசு.

  அலுவலக வேலைக்கு அப்பாற்பட்டு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல், சமூகப் பணியுடன் குவைத்தில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இவர் பல வழிகளிலும் தன் பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

  நடிக்கிறார், தூர்தர்ஷனில் 1980 முதல் செய்தி படிக்கிறார். இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். குவைத் பாரதிக் கலை மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றவர் இப்போது தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தின் தலைமை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அத்துடன் ஃப்ரண்டலைனர்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் தொண்டில் இவருக்கு கணிசமான பங்கு உண்டு.

  சென்னைவாசியான அரசு பி.எஸ்ஸி, கணிதம் தியாகராயர் கல்லூரியிலும் பிறகு DMiT (இன்ஸ்ட்ரும்மென்டேசன்) MIT யிலும், முடித்து 1971-ல் பணியை பெல்ஸ் கன்ட்ரோல்ஸ் கம்பெனியின் சேல்ஸ் என்ஜினியராக ஆரம்பித்தார்.

  படிப்படியாக ரீஜினல் மானேஜர் வரை உயர்ந்து 1992 -94 இல் குவைத் FOXBORO வில் பணிபுரிந்து திரும்ப சென்னை திரும்பி அதே பெல்ஸ் கன்ட்ரோல்! பிறகு FOXBORO , யோகோகாவா கம்பெனிகளில் பெரிய பதவிகள் வகித்து 1999 இல் திரும்ப குவைத்! அதே FOXBORO வில் சேல்ஸ் மானேஜர்!

  ஐந்து வருடங்களில் இந்தியா திரும்பி குவைத்திற்கு 2006 ல் மறுபடியும் வந்து பிரபல ATSCO வில் சேல்ஸ் மார்க்கட்டிங்கின் எக்ஸிகியூடிவ் மானேஜராக பொறுப்பேறு சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

  சுறுசுறுப்பு, நேரந்தவறாமை, தொடர்புகளை வலுப்படுத்துதல், அனைவருடனும் நட்போடு கூடிய அணுகுமுறை, சிறியவர்-பெரியவர் என பார்க்காமல் எல்லோருடனும் காட்டும் அன்யோன்யம் இவரது வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்திருக்கின்றன.

  ஒளிவு மறைவின்மை, எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வது, கஸ்டமர்களின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வது என இவரிடம் பல திறமைகள் புதைந்து கிடக்கின்றன.

  மனைவி திருமதி ஷீலா இவரது அலுவலகம் மற்றும் சமுதாய பணிகளுக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்.

  மகள் வனிதா மருத்துவர், மகன் திரு.பழனியப்பனும் மருத்துவர் லண்டனில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

 இவரது சேவை:

 கல்லூரியிலேயே, மாணவ யூனியன் செயலாளராகவும் NCC யிலும் ஆரம்பமாயிற்று.

  பள்ளி, கல்லூரி வாழ்வில் பேச்சு மற்றும் பாடல் போட்டிகளில் பல பரிசுகளும் பெற்றிருக்கிற அரசு- 1960 முதல் மெல்லிசை கச்சேரிகளில் பாடி வருகிறார்.

  சீனா சண்டை சமயத்தில் அந்த நாட்களில் நல்லதொரு தொகை-இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்து வழங்கியதை இப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறார் அரசு.

  அந்த தொண்டுள்ளம் இப்போதும் குவைத்திலும்  Frontliners நிகழ்ச்சி மூலம் கார்கில் நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிதி, சுனாமி நிதி என தொடர்ந்து கொண்டிருக்கிறது இவரிடம்.

   கிங்ஸ்லி, காமேஷ், ராஜாமணி, வில்லியம்ஸ் போன்றோரின் இசைக்குழுவில் பாடியிருக்கிற அரசுக்கு இளையராஜா, கங்கை அமரன், எஸ்.பி.பி., தேவா, எம்.எஸ்.விஸ்வநாதன் என பிரபல இசை வித்தகர்களுடன் நல்ல நட்பு உண்டு.

  வயதும் உடலும் ஒத்துழைக்கும் வரை சம்பாதித்து ஊர் திரும்பினதும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பது இவரது லட்சியம். 

  டாக்டர் உஷா ராஜாராம்:

  பெரும் செல்வில் சீட்டு வாங்கி, படித்து டாக்டர்களாக வெளியே வருபவர்களில் பலர் மருத்துவத்தை வியாபாரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். போட்ட பணத்தை எடுக்க வேண்டிய நோயாளிகளை கசக்கிப் பிழியும் நிலமையும் இல்லாமலில்லை.

 ஆனால் டாக்டர் உஷா ராஜாராம் ரொம்ப ரொம்ப வித்தியாசம்.

  25 வருடங்களாய் குவைத்தில் தன் மருத்துவ சேவையாலும், மனிதாபிமானத்தோடு கூடிய பொதுச் சேவையாலும் மிகவும் போற்றுதலுக்குரியவராய் இருந்து வருகிறார்.

  குவைத் சட்டதிட்டப்படி அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் சொந்தமாய் பிராக்டீஸ் செய்யக்கூடாது என்பதால் ஓய்வுநேரத்தை தங்கள் சுய தேவைக்காக மட்டுமே செலவிடும் டாக்டர்களே அதிகம்.

  ஆனால் உஷா ராஜாராம் பதிப்புக்குள்ளாகும் ஏழை எளிய படிப்பறிவில்லாத உழைப்பாளிகள், பணிப்பெண்கள் என எல்லோருக்கும், தனியாகவும், சேவை அமைப்புகள் மூலமாகவும் பெருமளவில் உதவிவருகிறார்.

  இவரிடம் ஈகோ கிடையாது. செல்வாக்கு என எல்லாமிருந்தும் கர்வத்தையும் சுயநலத்தையும் கிட்டே சேர்க்காதவர்.

  சென்னையைச் சேர்ந்த திருமதி உஷா ராஜாராம் தான் படித்த ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் நேர்மையாகவும் உண்மையாகவும் உதவும் குணத்துடன் செயல்பட வேண்டும் என்கிற லட்சியத்தை தன்னுள் பலமாக விதைக்க உதவிற்று என்று பெருமைப்படுகிறார்.

  ஸ்டான்லியில் மருத்துவ பட்டமும் அதன்பிறகு அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் உள்ள மிட்ஷிகன் யினிவர்சிடி மூலம் குழந்தைகள் மருத்துவம் மற்றும் Neonatology  யில் முதுநிலை பட்டமும் பெற்றவர் இவர்.

  1982 இல் குவைத்தில் அல் ஜஹரா அரசு மருத்துவமனையில் சேர்ந்து அங்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் Preterm குழந்தை கவனிப்பில் இவருக்கும் இவருடன் உள்ள குழுவினருக்கும் நல்ல பெயர்.

  உஷா, 4 வருடங்கள் அங்கு  Paediatric  டிபார்ட்மெண்ட் சேர்மனாகவும் பொறுப்பு ஏற்றிருந்தார். இவரது சிறப்பான சேவையை பாராட்டி ஜஹரா ஏரியா கவர்னர் 1998 ல் உஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவித்திருக்கிறார்.

  மெக்கானிக்கல் என்ஜினியரான இவரது கணவர் திரு.ராஜாராம் நேஷனல் இன்டஸ்ட்ரீஸ் குரூப்பில் கான்கிரீட் பிரிக்ஸ் தயாரிப்பின் தலைமை பொறுப்பேற்று வெற்றிகரமாய் செயல்பட்டு வருபவர்.

  திருமதி உஷாவின் சேவைக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துவரும் இவரும் பலவித ஆன்மீக மற்றும் சேவை அமைப்புகளில் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

  சின்ன குழந்தைகளுக்கு நம் பாரம்பர்யம், கலாசாரம் வாழ்வியல், சுய முன்னேற்றம் போன்றவற்றை ஆர்வமுடன் இருவரும் கற்றுத் தருகின்றனர்.

   டாக்டர் உஷா ராஜாராமின் தரமான கவிதைகளும் கொள்கை கோட்பாடுகளை வலியுறுத்தும் கட்டுரைகளும் பல புத்தகங்களிலும் வெளியாகி பாராட்டுப் பெற்றுள்ளன.

   இவர்களது மகன் டாக்டர் மகாதேவன், மணிப்பால் யுனிவர்சிடியில் மருத்துவ பட்டமும், கனடா மனிடோபாவில் கார்டியாலஜியும் முடித்தவர்.

 ஆடிட்டர் சந்திரசேகர்:

  ``நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி வளர்த்து ஆளாக்கின என் தாயும், ஆர்மியிலிருந்த எனது தந்தையும் அவர் கற்றுத்தந்த வாழ்வு நெறி விஷயங்களும்தான் எனக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று பெருமைப்படுகிறார். குவைத்  Albazie co வின் Director Assurance  திரு.சந்திரசேகரன்.

  திருச்சியில் உத்தமர்கோயில் பிச்சாண்டார் கோயிலை சேர்ந்த அப்பா, பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று குடும்பத்தை அங்கேயே வைத்துவிட்டு அவர் ஆர்மியில் தனியாக இருந்தவர்.

  ஆர்மியின் ஒழுக்கம், நீதி, நேர்மை, நேரந்தவறாமை போன்றவற்றை குழந்தைகளிடம் வலியுறுத்தும் அதே சமயத்தில் பிள்ளைகளின் படிப்பு-பொழுதுபோக்கு விஷயங்கள் கட்டுப்பாடு விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுப்பார்.

  திறமை மற்றும் முயற்சி எடுப்பதற்கு அவர் உற்சாகம் தருவார். வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை உணர வைத்து பிள்ளைகளை வளர்த்திருந்தார்.

  ``அப்பா எங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி ஊட்டி வளர்த்தார். பிறரை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பார். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதை வைத்து திருப்திப்பட வேண்டும்;

  நம்மைவிட மேலே இருப்பவர்களை பார்த்து ஏங்காமல், நமக்கும் கீழே உள்ளவர்களை ஒப்பிட்டு அவர்களுக்கு கிடைக்காத பலதும் நம்மிடம் உள்ளதே என்று மகிழவேண்டும்; கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கடைபிடித்த விஷயங்கள் எங்களுக்கு நல்ல அடிப்படையாய் அமைந்தன என்று சந்திரசேகர் விளக்குகிறார்.

  இவர் திருச்சி ஈ.ஆர்.ஸ்கூல்; செயின்ட்ஜோசப்பில் பி.யு.சி., சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.காம்.என 1980 ல் வெளியே வந்து சென்னையில் சி.ஏ. 1984 ல் முடித்தார்.

  ஆடிட்டர்களுக்கு நம்மூரை விட பாம்பேயில் வாய்ப்புகள் அதிகம் என்று, அங்கு தொலை தொடர்பு துறையில் பணிபுரிந்த மூத்த சகோதரர் மூலம் அங்கே சென்றார்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles