HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

   வேகம், சுறுசுறுப்பு, எளிமை, சிறந்த கஸ்டம் சர்வீஸ் இவரது வெற்றிக்குக் காரணங்கள் வாழ்க்கையில் கஷ்டபடாமல் வளர்ந்திருந்தாலும் கூட பிறர் கஷ்டம் உணர்ந்திருப்பதால் சம்பாத்தியத்தில் 25 சதவிகிதம் நலிந்தோருக்காக உதவி வருகிறார்.

   அலைச்சலும், டென்ஷனும் நிரம்பிய துறை இது என்றாலும் கூட இம்ரன் இதை விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பதுடன், நிறைந்த லாபம் தரும் இத்தொழிலை ஊரிலும் சொந்தமாய் ஆரம்பித்து நடத்துவதை லட்சியமாய் கொண்டிருக்கிறார் இவர் கிரிக்கெட் வீரரும் கூட.

   நம்பிக்கை தான் வாழ்க்கை என நம்பும் இவர் தனது வெற்றிக்கு நம்பிக்கையும் முயற்சியும் தான் மூலதனம் என்கிறார்.  

  சீனா-தனா  (சையத் அப்துல்காதர்)

  ``இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவுமில்லை.

   எதற்கும் ஒரு முயற்சி வேண்டும். தளரா மனம்! கடுமையான உழைப்பு! ஒரு சிக்கல் வந்துவிட்டால் `ஐயோ... எனக்கு மட்டும் ஏனிப்படி வருகிறது! என்று கலங்கி அமர்ந்துவிடக் கூடாது.

  இன்று வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை அலசி ஆராய்ந்தோமானால் கஷ்டப்படாமல் தோல்விகளை சந்திக்காமல் எவருமே முன்னுக்கு வந்ததில்லை என்பது புரியும் ஆப்ரஹாம் லிங்கன் பலமுறை தோற்று இறுதியில் ஜனாபதி ஆனார்.

   சீனா தானா என பிரியமாய் அழைக்கப்படுகிற துபாய் இந்திய தொழிலதிபர்களில் குறிப்பிடத் தகுந்தவரான திரு.சையத் அப்துல்காதர் தெளிவுடன் பேச ஆரம்பித்தார்.

   பெரிய பெரிய கம்பெனிகளின் அதிபர் என்கிற மமதை இல்லாத தன்மை! நகைச்சுவை ததும்பும் பேச்சு! இலக்கியத்தின் மேலுள்ள ஆர்வம்! பொதுக் காரியங்களுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பாடுபடும் பாங்கு! ஈகைக் குணம்!

   இவை எல்லாவற்றையும் விட நாட்டுப்பற்று! மொழிப்பற்று! துபாயில் காலூன்றியிருந்தாலும் கூட நம் நாடு-நம் மக்களின் முன்னேற்றம் எனச் சிந்தித்து செயல்படும் பேருள்ளம்!

   மணிமேகலைப் பிரசுரத்தின் அதிபர் திரு. ரவி தமிழ்வாணந்``குவைத்தில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் இந்தியர்களை உள்ளடக்கி FRONTLINERS  எனும் புத்தகம் 10 பகுதிகள் எழுதி அதன் மூலம் 60 லட்ச ரூபாய்க்கு மேல் இந்தியாவில் பல அறக்கட்டளைகளுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து உதவி வருகிறீர்களே!

   அது மாதிரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்ப் பண்பாளர்களையும் சந்தித்து எழுதித் தாருங்கள் என்று துபாய்க்கு என்னை அழைத்திருந்தார்.

   அன்று திரு.சீனா தானாவின் வீட்டில் அவரது உபசரிப்பில் நெகிழ்ந்து போனோம். எழுத்தாள நண்பர் கஸாலி முதற்கொண்டு உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், வெளியூர் விருந்தினர் என்று பலரும் அவரது உபசரிப்பில் திளைத்துப் போனார்கள்.

    சீனா தானா கோர்வையாய் அதே சமயம் அழுத்தம் திருத்தமாய் சொல்ல வந்த விஷயங்களை தெளிவுபடுத்துகிறார். மேடையிலும் கூட இவருக்கு பேச்சு `வாய் வந்த கலை!

   சுமார் 30 ஆயிரம் அலுவலர்களுக்கு மேல் அரபு நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் ஆட்களுக்கு வேலை தருகிற கம்பெனி என்கிற சிறப்புப் பெற்றுள்ள ETA  அஸ்கான் கம்பெனியின் துணை நிறுவனமான SKY Group of   கம்பெனியின் டைரக்டரும் CEO  வுமான திரு சையத் அப்துல்காதரின் எளிமை நம்மை ஈர்க்கிறது.

   கீழ்க்கரையைச் சேர்ந்த இவரது தந்தை திரு.முகமது அப்துல்ஹமீது மிகவும் கண்டிப்பானவர் . நீதி, நேர்மை என்று எப்போதும் அவர் அறிவுறுத்துவார். அறிவுக்கு அப்பா வழிகாட்டுதலுக்கு அம்மா என்று இவருக்கும் இவரது அண்ணன் திரு. சையது சலாஹீதீனுக்கும் அடித்தளம் சிறப்பாக அமைந்தது. இவர் சின்ன தம்பி என்பதால் சி.த.சீனா தானா.

   அம்மா வாழ்வின் நெறிமுறைகளையும் நல்ல விஷயங்களையும் சொல்லி தன்னம்பிக்கை ஊட்டுவார். ``வாயிருந்தால் வங்காளமும் போகலாம் என்கிற தாயின் தாரக மந்திரம் இவருக்கு டானிக்காக அமைந்தது.

   சங்கோஜமில்லாமல், தாழ்வு மனப்பான்மையில்லாமல் இளம் பருவம் முதலே வெளியே எல்லோருடனும் பழகிய அனுபவம் வளர்ச்சிக்கு அவருக்குப் பெரிதும் உதவிற்று.

   `சி.த- 1966ல் லயோலாவில் பி.காம் முடித்து அப்பாவின் சிங்கப்பூர், மலேசியா,கொழும்பு நவரதன வியாபாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

   வியாபாரத்தில் லாப-நஷ்டங்கள் சகஜம் லாப நஷ்டங்களை சகித்துக் கொள்ளலாம். சமாளித்து விடலாம். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தை?

   ஹாங்காங்கில் வியாபாரம் செழிப்பாக இருந்த சமயத்தில் சீனர் ஒருவர் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட இவர் கடனாளியாக வேண்டி வந்தது. எதிர்பாராத அதிர்ச்சி, ஏமாற்றம், அதிலிருந்து மீள முடியுமா என்கிற பயமும் ஏற்பட்டது.

   இருந்தாலும்கூட பெற்றோர்களின், உறவினர்களின் அறிவுரை மனம் தளராமல் இருக்க உதவிற்று. அந்த நேரத்தில் கடன் கொடுத்த குஜராத்திகள் நெருக்கடி தராமல் ஆறுதல்படுத்தினது மறக்க முடியாத விஷயம்.

   வியாபாரத்திற்கு அப்பாற்பட்டு குஜராத்திகளுடன் இவருக்கு நல்ல உறவு இருந்து வந்தது. அவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றால் முஸ்ஸீம்களைப் பஞ்சாயத்துக்கு அழைக்கிற அளவிற்கு அவர்களிடம் நட்பு!

   இறைநம்பிக்கையும், தைரியமாயிரு எல்லாம் சரியாயிடும் என்று பெரியவர் திரு.பி.எஸ்.அப்துல்ரஹ்மான் அவர்கள் கொடுத்த ஊக்கமும், உதவியும் இவரை அந்தக் கடனிலிருந்து படிப்படியாக மீள வைத்தது.

   1980ல் துபாயில் ETA வின் ஒத்துழைப்புடன் ALHASEENA நகைக்கடையை பார்ட்னராக ஆரம்பித்து ஐந்து வருடங்கள் நடத்தினார்.

   பிறகு இந்தியா திரும்பி ரியல் எஸ்டேட் தொழிலில் தனியாய் இறங்கினார். ஆரம்பகாலம் சி.த.மிகவும் கஷ்டப்படவேண்டி வந்தது. ரயில் பயணம், சாதா ஹோட்டல் வாசம் என தன் தேவைகளை சுருக்கிக் கொண்டார்.

   அந்த நேரம் சகோதரர்  சலாஹீதீன் வசதியாக இருந்தார். அவரிடம் உதவி கேட்டால் மகிழ்ச்சியாகச் செய்வார். அவரும் உதவி வேண்டுமா என்று கேட்கவும் செய்தார்.

   ஆனால் சி.த.வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாளித்தார். அது அவரது உள் மனதில் இருந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடு!

    கஷ்டமான நேரத்தில் பிறரை எதிர்ப்பார்க்கக்கூடாது. உதவி செய்ய ஆள் இருப்பதை ஒரு தெம்பாக வைத்துக் கொண்டோமானால் பயம் தோன்றாது. உதவ முன் வருகிறார்கள் என்று உடனே கை நீட்டிவிட்டோமென்றால் அப்புறம் முயற்சி எடுக்கத் தோன்றாது. நமது உழைப்பில் தீவிரம் இல்லாமல் போய்விடும்.

   சொந்த முயற்சியிலேயே ரியல் எஸ்டேட்டில் வளர்ந்து பிறகு 2000 ஆண்டு முதல் சகோதரருடன் சேர்ந்து பல தொழில்களிலும் இறங்க ஆரம்பித்தார்.

   அதில் ஒன்றுதான் ஸ்கை குரூப் கம்பெனிகள், கேட்டரிங், கூரியர், அட்வர்டைசிங், ஜெனரல்டிரேடிங்,பில்டிங் மெட்டீரியல் விநியோகம் போன்று பத்துவிதமான பிரிவுகளை இது உள்ளடக்கி -200 பேர்களுக்கு மேல் இங்கு வேலை பார்க்கிறார்கள்.

   சி.த. பதற்றப்படுவதில்லை. பிரச்னைகளை சர்வசாதாரணமாய் அணுகி அனுபவஸ்தர்களில் ஆலோசனையைப் பெற்று சுமூகமாய் முடிவெடுப்பது இவரது சிறப்பு.

   எஜமான் பாவத்துடன் நிர்வாகம் செய்யாமல் அலுவலர்களை அரவணைத்துப் போகும் அதே நேரத்தில் தவறு கண்டால் கடுமையாய்க் கண்டிப்பார்.

   அதனால் நிர்வாகம் சீர்கெடாமல் இருப்பதுடன் அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.

   மனைவி திருமதி ஒளிமுத்து இவருக்குப் பக்கபலமாக இவர்களின் 4 மகள்களும் சிறப்பாய் செட்டிலாகியுள்ளனர். மகன் திரு.முகமது அலி ETA ல் Properties develop ல் மேனேஜ்மென்ட் எக்ஸிக்யூட்டிவாயிருக்கிறார்.

  இந்தியாவில் ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவதுடன் வேலை வாய்ப்பு தரக்கூடிய கல்லூரி படிப்பை உருவாக்குவதும், இவரது நோக்கம்,மேற்படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார். இதற்காக ஊரில் Industrial Technical Institute ஆரம்பிக்கவிருக்கிறார். இதைப் பார்த்துக் கொள்ள தகுதியான நபர்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளும் செய்ய சி.த. தயாராக இருக்கிறார்.

   சி.த. மத நல்லிணக்கம் வளர்க்க புத்தகங்கள் வெளியிடுகிறார். திருச்சூர் ஆனின் உள்ளர்த்தங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். துபாயிலிருந்து சமூகக் கண்ணோட்டத்துடனும், நல்ல கருத்துகளுடன் கூடிய பொழுது போக்கு அம்ச தொலைக்காட்சிக்கு உதவிகரமாய் இருக்கிறார்.

   இலக்கியம்-மற்றும்-சமூக நோக்குடன் கூடிய நிகழ்ச்சிக்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார்.

    ``உண்ண உணவும், உடுக்க உடையும், உறைய உறைவிடமும் தந்த ஏக இறைவனே புகழுக்குரியவன்; அவனே நம்மை நேர்வழி செலுத்துகிறான். பகைவனையும் மரியாதை செய்- அகிம்ச வழியைப் பின்பற்று.

                                          - நபிகளின் வாக்கு

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

                                           -திருக்குறள்

எந்நாட்டார் போற்றும் இறைவா போற்றி

தென்நாடு போற்றும் சிவனே போற்றி.

                                            -மாணிக்கவாசகர்

நன்றியுடன் இந்த மூன்று விஷயங்களையும் மேற்கோள் காட்டி மேடையில் பேசுவது இந்த சீனா-தானாவின் சிறப்பு.

  தனது இந்த நிலைமைக்கு காரணமாக உள்ள சகோதரர் சலாஹீதீனை இவர் நினைவு கூருகிறார்.

   திரு.சையது எம்.சலாஹீதீன்;

  திரு.சீனா தானா வளர்ச்சிக்கு பெ.த.என்று அழைக்கப்படும் அவரது சகோதரர் -`பெரிய தம்பி திரு.சையது எம்.சலாஹீதீனை நன்றியுடன் நினைவு கூருகிறார். இவர் ETA அஸ்கான் குரூப்பின் நிர்வாக இயக்குனர். சி.த.வுக்கு 4 வயது மூத்தவரான இவர் வியாபாரத்தில் ஈடுபட வேண்டி கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போயிற்று.

  அனைவருடனும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

   அப்பாவின் நவரத்தின வியாபாரத்தில் பிறகு திரு.பி.எஸ். அப்துல்ரஹ்மானுடன் சலாஹீதீன் துபாய் வந்தவர்.

  B.S.A அந்த நாட்களில் ALGHURAIR  உடன் சேர்ந்து ASCOn கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி துபாயில் ஆரம்பிக்க அதை சலாஹீதீன் நிர்வகித்தார்.பிறகு கட்டுமானத்திற்குத் தேவையான எலக்ட்ரிகல், A/C  போன்ற துணை உபகரணங்களுக்காக எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்ஸி கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.

    பிறகு ஷிப்பிங், விமானம், லிஃப்ட், மெக்கானிக், எலக்ட்ரிகல் என 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் பெற்று இக்கம்பெனி இன்று வளைகுடா நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் பெரும்பாலும் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரப்படுகிறது.

    திரு.சலாஹீதீனின் (ETA)  கருணை உள்ளத்தால் துபாயில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வதுடன் இந்தியாவிற்கும் பல வகைகளில் பொருளாதார வளர்ச்சி கிடைத்து வருவது உண்மை.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles