M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

உயர்ந்த மனிதன் சிவாஜி

தொடர்ச்சி....

கே.ஆர். ராமசாமி தஞ்சாவூரில் தன்னுடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்தார். தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்தன. கே.ஆர். ராமசாமி 'மனோகரா' நாடகத்தை நடித்துக் கொண்டே நடத்தினார். அதில் பத்மாவதியாக கணேசன் நடித்தார். அண்ணா எழுதிய 'ஓர் இரவு' நாடகத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார் கணேசன் நடிக்கவில்லை. அண்ணாவுடனே இருந்து கொண்டார். அண்ணா அரசியல் கூட்டங்களுக்கு செல்லும்பொழுது கணேசனும் உடன் செல்வார். இதில் பல்வேறு அனுபவங்கள் இவருக்கு கிட்டியது.

Sivaji'சக்தி நாடக சபா' என்ற நாடகக் கம்பெனியை சக்தி கிருஷ்ணசாமி என்பவர் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார். அந்த நாடகக் கம்பெனியில் பெரிய நடிகர்களாக எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் இருந்தனர். இவர்கள் இருவரும் ஜுபிடரின் படத்திற்காக சினிமாக் கம்பெனிக்கு சென்று விட்டார்கள். எனவே சக்தி நாடக சபாவிற்காக நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர்கள் தேவைப்பட்டார்கள்.

அதனால் சக்தி கிருஷ்ணசாமி கணேசனின் நண்பர்களை அண்ணாவிடம் அனுப்பி கணேசனை அழைத்து வரச் சொன்னார். அண்ணாவும் அவரை அனுப்பி வைக்க மீண்டும் கணேசன் மேடையேறினார்.

பெங்களூர் காந்தி நகர் குப்பி தியேட்டரில் சக்தி நாடக சபாவின் நாடகம் நடந்துக் கொண்டிருந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வந்தது. கணேசனின் குடும்பம் இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்ட குடும்பம் என்பதால் அதைக் கொண்டாடும் வகையில் கதர்க் கொடியைக் கையிலேந்தி 'கதர்க் கப்பல் தோன்றுதே' என்று ஆடிப்பாடி நடித்தார் கணேசன்.

பெங்களூரில் அடிக்கடி ஜாதிக் கலவரம் நடந்துக் கொண்டிருந்ததால் சக்தி நாடக சபா வேலூருக்கு வந்தது. அங்குதான் கணேசன் 'சிவாஜி கணேசனாக' மாறி நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் வெற்றி நாயகனாக வலம் வரக் காரணமாயிருந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவர்கள் கணேசனின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் 'நூர்ஜஹான்' நாடகத்தில் மிகவும் அழகான பெண் தோற்றத்தில் சாஸ்திர பூர்வமான நடனம், கதகளி ஆகியவற்றை ஆடிக் காட்டுவார் கணேசன்.

அதன்பிறகு வேலூரில் முகாமை கலைத்துவிட்டு ஆந்திராவில் உள்ள சித்தூருக்குச் சென்றார்கள். அந்த காலத்தில் மொழிப் பிரச்னையில்லை. நாடகம் என்றால் நாடகம்தான். அங்கு சித்தூர் நாகையா என்ற பெரிய நடிகர் கணேசனை வந்து சந்தித்தார்.

வேலூர், குடியாத்தம் போன்ற இடங்களில் பல நாடகங்களை நடத்தியவர்கள் பின் தேனிக்கு பக்கத்தில் உள்ள பெரிய குளம் சென்றார்கள். இந்த சமயத்தில் சக்தி கிருஷ்ணசாமிக்கு சினிமாவில் கதை, வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்க அவர் சென்று விட்டார். அவர் சென்று விட மீண்டும் கஷ்டம் வந்தது.

இந்தச் சூழ்நிலையில் கணேசனுக்கு ஒரு புதிய வாய்ப்பு வந்தது. அப்பொழுது 'பராசக்தி' என்றொரு நாடகம் பெரும் புகழோடு நடந்துக் கொண்டிருந்தது. ஏ.வி.எம் ஸ்டூடியோவின் படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்துடன் கலந்து பேசி பாணட்னர்ஷிப்பில் படமாக எடுக்க முடிவு செய்தனர். இந்தப் படத்தில் முக்கிய வேஷத்தில் நடிப்பதற்கு புதுமுக நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள். அப்பொழுதுதான் பி.ஏ. பெருமாள் மனதில் நாடகத்தில் நடித்தக் கொண்டிருந்த கணேசனின் ஞாபகம் வந்தது. கணேசன் நடிக்கின்ற நாடகங்களை வேலூரில் அவர் அடிக்கடி பார்த்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக 'பராசக்தி' படத்திற்கு கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் 'சக்சஸ்' என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் 'சக்சஸ்' என்று சொன்னார்.

'சக்சஸ்' என்று கூறியது 'சத்தத்' போல் கேட்பதாகவும், மீன் மாதிரி வாயத் திறக்கிறான் என்றும் சவுண்ட் என்ஜினியர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்.

ஆயிரக்கணக்கான கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கித் தந்த ஏ.வி.எம் செட்டியாரோ 'ஏம்பா இந்தப் புது பையனப் போட்டு விஷப் பரீட்சை செய்றீங்க. கே.ஆர். ராமசாமி அல்லது டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்களை நடிக்கச் சொல்லி படத்தை முடியுங்க' என்று சொல்லியிருக்கிறார். மற்றவர்களும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இவ்வளவு தூரம் கணேசனை பலர் அவமானம் செய்தும் 'கணேசனை வைத்துப் படத்தை எடுக்காதீர்கள்' என்று பி.ஏ. பெருமாளிடம் பலர் கூறியும் அதையெல்லாம் மீறி "என்ன ஆனாலும் சரி... கணேசனை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்" என்று ஒற்றைக் காலில் நின்றார் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவரது மன உறுதியும் கணேசன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகர் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைப்பதற்கு காரணமாக இருந்தது.

1952 ஆம் ஆண்டு பராசக்தி வெளிவந்த அதே ஆண்டில் தனது மகன் சிவாஜி கணேசனுக்கு கமலம்மாவைப் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார் அன்னை ராஜாமணி அம்மாள். சீர்திருத்தக் கல்யாணமாக மே மாதம் 1ம் தேதி சுவாமி மாலையில் நடந்தது. ரத்தினம் பிள்ளை திருக்குறள் படிக்க - கவிஞர் கண்ணதாசன் மணமாலையை எடுத்துக் கொடுக்க- தனது அக்கா மகள் கமலாவின் கழுத்தில் அணிவித்தார் சிவாஜி கணேசன். இந்தக் கல்யாணத்திற்கு பி.ஏ. பெருமாள், எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, அரங்கண்ணல், கவிஞர் கண்ணதாசன், டி.ஏ. மதுரம், எஸ்.வி சகஸ்ரநாமம், டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் வந்து கலந்துக் கொண்டனர்.

திருமணம் முடிந்து முதலில் கோடம்பாக்கத்தில் குடியேறிய சிவாஜி கணேசன் பின்னர் ராயப்பேட்டை பெஸண்ட் ரோட்டில் இப்போது சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ் இருக்கும் இடத்தில் குடியேறினார். இதற்கு முன்பே சிவாஜிகணேசனின் தகப்பனார் சௌத் போக் ரோட்டில் உள்ள ஒரு பெரிய வீட்டை வாங்கி விட்டதால் அந்த வீட்டிற்கு 'அன்னை இல்லம்' என்று பெயரிட்டு அனைவரும் குடியேறினார்கள். அங்கு வந்தபிறகு சிவாஜியின் கலையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது அந்த ரோட்டுக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயரிட்டிருக்கிறது தமிழக அரசு.

சிவாஜி கணேசனுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும்.இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். மூத்த மகள் பெயர் சாந்தி. மூத்த மகன் பெயர் தளபதி ராம்குமார். இளைய மகன் பிரபு, மகள் தேன்மொழி. சிவாஜி கணேசனின் குடும்பம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். ராஜாமணி அம்மாள் உயிருடன் இருந்தபோது நூறுபேர் இருந்தார்கள். இப்பொழுது அறுபது சொச்சம் பேர்தான். அண்ணன் தங்கவேலுவை அவரது குழந்தைகள் பெரியப்பா என்றுதான் அழைப்பார்கள். தம்பி சண்முகத்தின் எல்லாக் குழந்தைகளும் அவரை அங்கிள் என்றுதான் அழைப்பார்கள். வீட்டில் உள்ள ஒரே அப்பா. சிவாஜி கணேசன் மட்டும் தான்.

தொடர்ச்சி....  |  1  |  2  |  3  |  4  |  5  |

More Profiles