|
தொடர்ச்சி....
'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள். அது உண்மை. சிவாஜி கணேசனின்
குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். அந்தக் குடும்பத்தில்
கமலம்மாள்தான் முக்கிய பொறுப்பு வகித்தார். அனைவரையும் ஒற்றுமையாக. அன்பு காட்டி.
பாசம் காட்டி வளர்த்தது எல்லாமே கமலம்மாள்தான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'பராசக்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி
வில்லனாக. . காமெடியனாக. குணசித்திர நடிகராக, புராண
வேடம். சரித்திர வேடம் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நவரசத்தையும்
வெளிப்படுத்தி நடித்து சாதனைகளைப் புரிந்தார். அவருடைய
சாதனைக்கு இந்திய அளவில் எந்த நடிகரும் ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.
முன்பெல்லாம் திரைப்படங்களில் பெரிய பெரிய வசனங்களாக இருக்கும். அது வசனம் பேசும்
காலம். நாடகக் கம்பெனியிலிருந்து சினிமா கம்பெனிக்கு
வந்தவர்களில் சிவாஜி கணேசன் மட்டும்தான் நல்ல தமிழில் வசனம் பேசக் கூடியவராக
இருந்தார். அதனால் அவருக்கென்று தனி வசனங்களை சிறப்பாக
எழுதிக் கொடுத்தார்கள். 'மனோகரா', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'ராஜாராணி', 'அன்னையின்
ஆணை',' அன்பு', 'இரத்தத் திலகம்', 'கர்ணன்', 'திருவிளையாடல்'
போன்ற படங்களின் வசனங்கள் சிறப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் நடிக்க
வருபவர்களிடம் "உங்களுக்குப் பிடித்த படத்திலிருந்து வசனங்களைப் பேசிக்
காட்டுங்கள்" என்று கூறினால் அவர்கள் தயங்காமல் பேசுகின்ற வசனங்கள் மேற்கண்ட
படங்களின் வசனங்களைத்தான். குறிப்பாக பராசக்தி படத்தின் நீதி
மன்ற காட்சி. இந்த முறையில்தான் பலபேர் திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம்
பெற்றிருக்கின்றனர்.
சிவாஜி கணேசனுடன் பாலையா, லலிதா, பத்மினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து
1954 ஆம் ஆண்டு வெளிவந்த 'தூக்கு தூக்கி'
திரைப்படத்தில்தான் டி.எம்.சௌந்தர்ராஜன் முதன் முதலில் சிவாஜி கணேசனுக்காகப்
பின்னணிப் பாடினார். சிவாஜி கணேசனின் குரலைப் போலவே டி.எம்.
சௌந்தர்ராஜன் குரலை மாற்றிப் பாடியிருந்ததால் பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படத்தின்
பாடல்கள் "இரண்டு ஹீரோக்களாக" படத்தின் பாடல்களும், சிவாஜி
கணேசனும் இணைந்திருந்தனர்.
1948-49 திராவிடக் கழக இயக்கத்திலிருந்து அண்ணா விலகி தி.மு.க.வை ஆரம்பித்தார்.
ஒரு சிலர் பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.க.வில் சேர்ந்தனர்.
அப்போது சிவாஜி கணேசன் எந்தக் கட்சியிலும் சேராமல் அண்ணா, பெரியார் ஆகியோரின்
கொள்கைகளை மட்டும் ஆதரிப்பவராக இருந்தார்.
அப்பொழுது ஒரு புயல் நாட்டிற்குள் வந்தது. அது பல இடங்களில் மக்களின் வாழ்க்கையை
சீரழித்தது. இந்தச் சூழ்நிலையில் 'புயல் நிவாரணத்திற்கு
பணம் வசூல் செய்து தாருங்கள்' என்று அறிஞர் அண்ணா அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
சிவாஜி கணேசன் விருதுநகரில் உள்ள தெருவில் துண்டை விரித்து பராசக்தி படத்தின்
வசனம் பேசி பணம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்து
விட்டு சேலத்துக்கு படப்பிடிப்பிற்காக சென்று விட்டார்.
அண்ணா அதிகமாக புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா
நடத்தினார். அந்த பாராட்டு விழாவிற்கு அண்ணா நிச்சயம்
தன்னை அழைத்து கௌரவிப்பார் என்று சிவாஜிகணேசன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நடந்த
விழாவிற்கு அவரை அழைக்காதது மட்டுமன்றி அதிகம் வசூல்
செய்து தந்தவர் எம்.ஜி.ஆர் என்று அவரை அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் கழகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த சிவாஜி கணேசனை நீக்கி
விட்டு எம்.ஜி.ஆரை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.
சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படித்தான் அரசியல் ரீதியான இடமாற்றம்
ஏற்பட்டது. அதன் பிறகுதான் காங்கிரஸ்காரராக இருந்த எம்.ஜி.ஆர்
தி.மு.க. காரராகவும், தி.மு.க காரராக இருந்த சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராகவும்
மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
காங்கிரஸில் தேசியம் கலந்த அரசியல் இருந்தது. அதற்குக் காமராஜர் தலைமை வகித்தார்.
அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு சிவாஜிகணேசன்
காங்கிரஸ்காரராக மாறினார். பெருந்தலைவர் காமராஜர் சாகும்வரை அவரது தலைமையின் கீழ்
விசுவாசமான தொண்டனாய் பணியாற்றினார்.
சிவாஜி கணேசன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு 'சிவாஜி நாடக மன்றம்' என்ற பெயரில்
நாடகக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அதை தனது தம்பி
சண்முகத்திடம் ஒப்படைத்தார். நாடகத்திலும் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பில்லாமல்
இருந்த பல நடிகர் நடிகையர்களை தனது நாடகங்களில் நடிக்க
வைத்து அவர்களது வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்தார்.
சிவாஜி நாடக மன்றத்தின் பல நாடகங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் அண்டை
மாநிலங்களிலும் கூட நடந்தன. அவற்றில் மிக முக்கியமான நாடகம்
"வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகமாகும். இந்த நாடகத்தை படமாக்குவதற்கு டைரக்டர் பி.ஆர்.
பந்துலு முன் வந்தார். சக்தி கிருஷ்ணசாமி படத்திற்கு வசனம்
எழுதச் சம்மதித்தார். கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் நடித்தார். படம் 100வது நாளையும்
தாண்டி ஓடி வெள்ளிவிழாவைத் தொட்டது. ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட
விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசை சிவாஜி கணேசனுக்குக் கொடுத்தார்கள். சிறந்த
படத்திற்கான தேசிய விருதையும் கட்டபொம்மன் படம் பெற்றது.
"வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி
வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து
நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர்.
பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த
நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது.
சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி
கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது
பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். இது
சிவாஜிகணேசனுக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல- இந்தியாவே பெருமைப்படும் அளவிற்குக்
கிடைத்த விருதாகும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது நண்பரும் அமெரிக்க நாட்டுத் தூதுவருமாக இருந்த
ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கக்
குழந்தைகள் விளையாடுவதற்குப் பரிசாக ஒரு யானைக் குட்டியை வழங்கினார். இவரைப் பற்றி
விசாரித்து அறிந்து - அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜான்
கென்னடியின் மிகமிக முக்கிய விருந்தாளியாக கலாச்சாரப் பரிமாற்றத்தின் கீழ்
அமெரிக்காவிற்கு சிவாஜி கணேசனை அழைத்தார்கள்.
சிவாஜிகணேசன் பாரிசிலிருந்து நேராக அமெரிக்கா சென்றார். ஹாலிவுட் நடிகர்கள்
எலிசபெத் டெய்லர், ரிச்சர்ட் பட்டன், மார்லன் பிராண்டோ ,
மர்லின் மன்றோ. பாப்ஹோப், சார்ல்டன் ஹெஸ்டன், ஹாலிவுட் ஹீரோக்கள் ஜிம் கார்னர், ஜேக்
லெம்மன் போன்றவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பும், சிவாஜி
கணேசனுக்குப் பெரிய மரியாதை செய்யவும் ஏற்பாடாகியிருந்தது.
தொடர்ச்சி.... | 1 |
2 |
3 |
4 |
5 |
|