HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
போதி மரம்

சிறுகதை

 

    பெரியவர் கனகசபைக்கு கண்களைக் கூசிற்று. பசி வயிற்றைப் புரட்டிற்று. கைகால்கள் தளர்ந்து போய் வர, அப்படியே ஆலமரத்தடியில் கல்லில் சரிந்து அமர்ந்தார்.

    சட்டையில் வியர்வை படர்ந்து அங்கங்கே திட்டுக்கள்! வேட்டியில் பழுப்பும் அழுக்கும், தலையும் தாடியும் வெள்ளைப் புதராய் பிசிறியிருக்க, கண்களுக்கு கீழ் கறுப்புக் கோடு. கன்னம் ஒட்டி, உதடுகள் வெடித்து....

    நமக்கு இது தேவையா....மனிதாபிமானத்திற்கு விலையில்லாதபோது நம் முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைந்த நீர்!

    அவருக்கு தன்னைப் பற்றிக்கூட கவலையில்லை. இந்த கிராமம்! இதன் வளம்! குடியான மக்கள்! அவர்களின் சந்தோஷம்!

    ஆலமரத்தில் பறவைகள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன. விழுதுகள் ஆங்காங்கே தூண்களாய் மன்ணில் பதிந்திருக்க, புதர்களும் ஈச்சம் குத்துக்களும் காய்ந்திருந்தன.

    ஏரிக்குள் பாலம் பாலமாய் வெடிப்புக்கள். ஆடு மாடுகள் புல்லுக்காக வெயிலில் அலைந்து கொண்டிருந்தன. இப்போது வறட்சி-மனித மனங்கள் போலவே.

    அந்த நாட்களில் ஏரிக்குள் தண்ணீர் கரை வரை அலைமோதும். நீர் வாத்துக்கள் மூழ்கி முழ்கி எழும். மதகு வழி நீர் கண்ணாடியாய் பாய, மீன் குஞ்சுகள் மிதந்து வரும் பொடிப்பசங்கள் அவற்றை பிடித்து அழகு பார்ப்பார். வண்ணாந்துறையில் வேட்டி அடிபடும் சப்தம்! சட்டையைக் கழற்றி மீனை வடிகட்டி, மணல் துகள்கள், கிளிஞ்சல்கள் மட்டும் மிஞ்சவே ஏமாறுவர். நனைந்த சட்டைக்காகவும், பள்ளிக்கூடம் விட்டு நேராய் வீட்டுக்கு வராததிற்காகவும் வீட்டில் கிடைக்கும் அடிகள் பசுமையான நினைவுகள்.

     கனகசபை மரத்தடியிலிருந்த பிள்ளையாரைப் பார்த்தார். அதனிடமும் ஏழ்மை. முன்பெல்லாம் எண்ணெய் தடவப்பட்டு, பூஜை செய்யப்பட்டு, பெண்கள் தங்கள் திருமணத்திற்காக சுற்றிச் சுற்றி வருவர். இப்போது பிள்ளையாரும் பட்டினியில்.

     இனி என்ன செய்யப் போகிறேன்? எப்படி செயல்பட போகிறேன்?

    யோசித்தபோது அவருக்கு மலைப்பாயிருந்தது. பின்பக்கம் கிறீச்...கிறீச்சென சப்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார்.

    குரங்குகள்!

    அவைகளும் வறுமையில் அடிப்பட்டி நலிந்திருந்தன. அவரைக் கண்டதும் குட்டி குரங்கு குதித்து....குதித்து ... ஆர்ப்பரித்தது.

    ``என்னடா.....?

    ``கொர்...கொர்...என்று விட்டு மந்தி நகத்தைக் கடித்தது, வேறுபக்கம் பார்த்தபடி தலையை சொறிந்தது. கனகசபையின் கை அவரையறியாமல் இடுப்பு வேட்டியின் மேல் தடவிற்று.

    முன்பெல்லாம் அவர் மடியில் கடலைப் பருப்பும், தின்பண்டமும் சுட்டிக் கொண்டு வந்து போடுவார். குரங்குகள் வழக்கமான சந்தேகத்தை வெளிப்படுத்திவிட்டு, அவற்றைப் பொறுக்கி அவசரமாய் தாவையில் அடக்கிக்கொண்டு  -தாவி கிளையில் அமர்ந்துகொண்டு அசை போடும்.

    அவருக்கு சந்தோஷமாயிருக்கும். இப்போது ஏமாற்றம். ``மன்னிச்சுடுங்க, இப்போ எங்கிட்டே எதுவுமில்லை என்று முனகினார்.``நான் வெத்துபயல். எனக்கென்று எதுவுமில்லை யாருமில்லை!

    கண்களை கழற்றிக் கொண்டுவர, அவர் தன் கைகளை மடக்கி தலையணையாக்கிக் கொண்டு அன்னாந்து படுத்து, கண்களை மூடினார். மனதிற்குள் பழைய நினைவுகள் சிதற ஆரம்பித்தன.

                     **********************

    கனகசபை அந்த ஊர் பள்ளியின் தலைமையாசிரியாராக இருந்தவர் மட்டுமில்லை, ஊருக்கு பள்ளிக்கூடம் வரவும் காரணமாயிருந்தவர், மனைவி இளம் வயதிலேயே இறந்து விட, அந்த சுகம் மறைந்துவிடக்கூடாது என்று தனிமையை ஏற்றுக் கொண்டவர்.

    ஊரில் என்ன பிரச்சினையென்றாலும் மக்கள் அவரிடம்தான் ஓடிவருவர். அடிதடி, சண்டை, மண்டை உடைந்து ரத்தம், காய்ச்சல், வாந்தி ,பேதி, தலைவலி, மஞ்சக்காமாலை ....என்று வருகிற அன்றாட நோய்களை கவனிக்க மருத்துவ வசதி கிடையாது.

    சின்ன சிகிச்சைக்குக்கூட டவுனுக்குப் போக வேண்டும். மருத்துவத்தைவிட வண்டி கட்டி, பஸ் பிடித்து போய் வரும் செலவு அதிகம் என்பதால் நாட்டு மருந்து சாப்பிட்டு வீணாய் போனவர்களை காப்பாற்ற வேண்டி அவரே ரெடிமேட் மருந்துகள், தைலம், பிளாஸ்தீரி, குளுகோஸ் எல்லாம் வாங்கி வந்து வைத்திருப்பார்.

    யாருக்குத் தேவையென்றாலும் முதலதவி செய்வார் இலவசமாய்.

   ஊர்ப் பசங்கள் ஆடு, மாடு மேய்ந்து ,கிட்டிப்புல் விளையாண்டு, படிப்பு கசந்திருக்க, அவர்களுக்கு டியூஷன் சொல்லித் தருவார். அந்த நாட்களில் இவர் வீட்டுக்கு மட்டும்தான் செய்தித்தாள்கள் வரும்.

    வீட்டு வாசலில் பந்தல் போட்டு, இரண்டு பெஞ்சு, தண்ணீர் பானை வைத்திருப்பார். யார் வேண்டுமானாலும் அங்கே அமர்ந்து பேப்பர் படிக்கலாம்.

   ஊரில் தண்ணீர்ப் பிரச்சினையா, ரோடு வேணுமா, பஸ் வசதியா எல்லாத்துக்கும் அவர்தான்.

   அங்கே போராடி போஸ்டாபீஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். தெருவிளக்குகள், பஞ்சாயத்தில் தொலைக்காட்சி! இப்படி ஊரின் தேவைகளுக்கு அவரை விட்டால் ஆள் இல்லை. என்கிற அளவிற்கு ஜனங்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.

    இரண்டு வருடங்கள் முன்பு ஊரில் வறட்சி,ஏரியில் தண்ணீர் இல்லாமல் சாகுபடி நடக்கலை. குடிநீருக்கே பிரச்சினை,பஞ்சம் பட்டினி.

    ஆனால் அதற்கு முந்தைய வருடம் பேய்மழை! ஆறு கரை புரண்டோடி, ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்து குடிசைகள் சேதமாகியிருந்தது. இரண்டு சூழலிலுமே ஊருக்கு பாதிப்பு. இவற்றை சரிபண்ண முடியாதா என்ரு யோசித்தபோது.

    ஆற்றை அகலப்படுத்தி, ஏரிக்கும் ஆற்றுக்குமிடையே கால்வாய் வெட்டி இணைத்துவிட்டால் கரைபுரண்டோடும் வெள்ளம் ஏரியில் சேமிக்கப்பட்டு குறைந்தது இரண்டு போகம் சாகுபடியாகும்.

    கால்வாய் பற்றி சொன்னபோது எல்லோரும் வாய்பிளந்தனர்.``நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு நிதி வேண்டும். நிலங்களை யார் விட்டுக் கொடுப்பார்களாம்? என்று மலைத்தனர்.

   `முதலில் என் நிலத்தைத் தருகிறேன். அதுவும் இனாமாக!

   ``வாத்தியார்- உங்களுக்குப் பென்சன் வருது. அதனால் நிலம் தேவையில்லை. ஆனா அதையே நம்பியிருக்கிற எங்க கதி?

   `சும்மா தர வேணாம். அதுக்கு உண்டான விலை போட்டுக்குங்க!

   `பணம்?

   `நான் ஏற்பாடு பண்றேன்! என்று கனகசபை தொகுதி எம்.எல்.ஏவைப் பார்க்க, அவர் கைவிரித்தார். `இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. விட்டிருங்க!

    `நடக்கிற காரியமில்லாதபோது தேர்தல் சமயத்துல இந்தக் கால்வாய் கொண்டு வருவேன்னு வாக்கு கொடுத்தீங்களே ....அது ஏன்?

    `வாக்கு கொடுத்தது வாஸ்தவம். இல்லேங்கலே, கொடுத்த வாக்குக்காக மட்டுமா ஓட்டுப் போட்டாங்க? காசு வாங்கிக்கலே? குடம், புடவை, குத்துவிளக்குன்னு கைமாத்தாதானே ஓட்டு விழுந்தது?

    `சனங்க அதெல்லாம் கேட்டாங்களா.....நீங்களா கொடுத்து கொடுத்து கெடுக்கறீங்க! அதெல்லாம் போகட்டும், அரசாங்கத்திடம் முறையிடலாமில்லே!

    `அதெல்லாம் எத்தனையோவாட்டி ஆச்சு, நிதி நெருக்கடிஎன்று எம்.எல்.ஏ நழுவினார். இப்போது கால்வாய் வெட்டிக் கொடுத்துவிட்டால் ஊர் கொழுத்து விடும்.எவனும் தன்னை மதிக்கமாட்டான். அப்புறம் தன் காசுக்கு ஓட்டு விழாது தவிரவும் அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதிக்கு விஷயம் இல்லாமல் போய்விடும் என்பதும் அவரது நழுவலுக்குக் காரணம்.

    கனகசபை கலெக்டரை பார்த்தார், எம்.பி.மந்திரி என மனுக்கள் கொடுத்தார். பலனில்லை, அதிகாரிகள் எள்ளி நகையாடினர்.

    அவர் தளர்ந்திருந்தபோது பக்கத்து டவுனிற்கு பிரதம மந்திரி வர, சிறந்த சமூக சேவகர் என்கிற முறையில் அவருக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

    அவர், பிரதமரிடம் தன் திட்டத்தை தெரிவிக்க, அதன் பலன் ஒரு மாதத்திலேயே தெரிந்தது, நிதி ரெடி! செயல் திட்டமும் ரெடி என்றதும் எம்.எல்.ஏ.வந்து பாசத்தோடு ஓட்டிக்கொண்டார்.

    இத்திட்டத்தில் தனக்கும் பங்கு உண்டு என காட்டிக் கொண்டு நிதியில் `பங்கு போட ஆரம்பித்தார், கால்வாயில் அவரது பினாமிகளுக்கு கான்ட்ராக்டுகள்!

     கனகசபை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கான்டராக்ட் யாருக்கு கொடுத்தால் என்ன வேலை நன்றாக நடக்க வேண்டும் என்று விட்டுவிட்டார்.

    ஆனால் சிமெண்ட், செங்கல், என்று எல்லாவற்றிலும் சுருட்டல் நடக்க, அவருக்கு கொதிப்பாயிற்று, ஆட்களுக்கு பாதி சம்பளம் கொடுத்து, போலி சிமெண்ட், தரமில்லாத கற்கள் என வந்திறங்க அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

   உடன் எம்.எல்.ஏயை பார்த்து விபரம் சொல்ல, `அப்படியா... என்றார்.எதுவுமே தனக்கு தெரியாததுபோலம் `உடனே நான் கவனிக்கிறேன்! என்று அனுப்பினார்.

   ஆனால் எந்த கவனிப்புமில்லாமல் போக `பிரதமருக்கு நேரடியாய் புகார் அனுப்புவேன் என்று அவர் மிரட்ட  -`சேச்சே...அதெல்லாம் வேணாம். வாங்க பேசுவோம்! என்றார்கள்.

    டவுனுக்கு பேசப் போனபோது

   `கனகசபை சார்! உங்களோட சேவைக்கு நான் தலைவணங்குகிறேன். எனக்கே தெரியாம நடந்த ஊழலை நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்! ஆனால் கட்சிக் காரன் பாருங்க.என்னால அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியலே. அதனால இனிமேல் கால்வாய்க்கு தேவையான மெட்டீரியலை நீங்களே உங்கள் பொறுப்பில் வாங்கி தந்திருங்க! இந்தாங்க பணம்!

     `ஐயயே....அதெல்லாம் வேணாம்.பணவிஷயம் உங்கள்ட்டயே இருக்கட்டும். உங்க ஆளுங்களே பார்க்கட்டும்!

     `இல்லை. நீங்க மறுக்கக்கூடாது. வாஸ்தவத்தில் சொல்லப் போனால் என்னிடம் உள்ள ஆட்களையே என்னால் நம்ப முடியவில்லை. நம்பிக்கையான ஆட்கள் இல்லாததால்தான் உங்கள் உதவியை நாடுகிறேன். இது நம் ஊர் கால்வாய். உங்கள் முயற்சியில் சேங்ஷன் ஆயிற்று. உங்கள் மேற்பார்வையிலேயே எல்லாம் நடக்கட்டும். அதைத்தான் ஜனங்களும் விரும்புவர்.

     பணப்பெட்டியை வற்புறுத்தி அவரிடம் திணித்தனர். துணைக்கும் பாதுகாப்பிற்கும் என்று நான்கைந்து ஆட்களையும் கொடுத்தனர்.

    மறுநாள் அவரைக் காணவில்லை.

   பணப்பெட்டியுடன் கனகசபை தலைமறைவு! ஊர் நலன் என்று இத்தனை நாள் அவர் போட்டதெல்லாம் வேஷம். அவருக்கு வடமாநிலத்தில் குடும்பம் உள்ளது. அங்கே போய்விட்டார் என செய்தி பரப்பப்பட்டது.

    அதற்கு ஏற்றபடி அவரும் மாதக்கணக்கில் வராமல் போகவே ஊர் மக்களும் அதை நம்ப ஆரம்பித்தனர். கால்வாய் வேலையும் பாதியில் நின்று போயிற்று.

    எம்.எல்.ஏ.வின் ஆட்களால் அடித்து சிதைக்கப்பட்டு, நினைவிழந்து வெளிமாநிலத்தின் ஆஸ்பத்திரியில் கிடந்த கனகசபை  -உடல்தேறி விஷயம் தெரிந்து வந்தபோது.

   ஊர் மக்கள் அவரை ஏற்றக்கொள்ள தயாராயில்லை. வஞ்சகன், துரோகி, திருடன், கொள்ளைக்காரன் என விரட்டியடித்தனர்.

    முட்டாள் ஜனங்கள்! இவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ தெரியவில்லையென்று மனம் வருந்தி ஆலமரத்திடம் வந்து இப்போது தஞ்சமடைந்திருந்தார்.

                        *****************

    ஆலமரக் கிளைகளுக்கிடையே சூரியக் கதிர்கள் ஊசியாய் கண்களை வந்து தாக்க, கனகசபை, கையை தட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தார். வயிறு கபகபத்தது. தூரத்தில் கடலைக் காட்டில் ஆட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

    அவருக்கு பலகீனமாயிற்று. குடிக்க தண்ணீர் கிடைக்குமா என பார்த்தபோது முதுகின் மேல் என்னவோ வந்து விழ

    திரும்பிப் பார்த்தார்.

    ஈர மண்ணுடன் நிலக்கடலை கொத்துக்கள் இது எப்படி இங்கே என்று யோசித்தபோது மரக்கிளையிலிருந்து குரங்குகள் இன்னும் இரண்டு செடியை அவர்மேல் தூக்கிப் போட்டு குதூகலித்தன.

    மனிதர்களிடம்தான் நன்றி இல்லை. இவைகள் வசிப்பது மட்டும் உயரத்தில் இல்லை. மனதளவிலும் உயர்ந்த இடத்தில்! கண்மல்க கையெடுத்து கும்பிட்டார்.

    அன்னாந்து பார்க்க ஆலமரத்தில் பறவைகள் ரீங்கரித்தன வந்தன. அமர்ந்தன. பழம் தின்றன. வயிறு நிரம்பினதும் மரத்தின் மேலேயே எச்சமிட்டுவிட்டு பறந்து போயின.

    அந்த நிகழ்ச்சி அவரது மூளையை தாக்கிற்று. சிந்திக்க வைத்தது. ஆலமரம்! அது எத்தனை உயர்ந்தது!

    அது பலருக்கும் நிழல் தருகிறது. பழம்! தன் பழத்தையே சாப்பிட்டு தன் மேலேயே எச்சமிடுவதற்காக அது பறவைகளை கோபித்துக் கொள்ளவில்லை. தவிர்க்கவோ தப்பாக நினைக்கவோயில்லை. மறுபடியும். மறுபடியும் அது தனது சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

    நாம் மட்டும் ஏன் தப்பு செய்யும் மனிதர்களைப் பார்த்து தளர்ந்து போக வேண்டும்? சேவையில் இறங்கின பின்பு நன்றி எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. நம் பணி எப்போதும் போல தொடரணும். இங்கில்லாவிட்டாலும் வேறு எங்காவது!

    கனகசபை புதுப்பொலிவுடன் எழுந்தார். அந்த `போதி மரத்திற்கு நன்றி சொல்லி தெம்புடன் நடக்க ஆரம்பித்தார்.

                                                  (`குங்குமம் வார இதழ்)

 

 

.

More Profiles