HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
உயிரும் மெய்யும்

சிறுகதை

    

    ``அவசியம் நீங்க டெல்லி போய்தானாகணுமா.... எனக்கென்னவோ பயமயிருக்குங்க!

    கணவனுக்கு எதிரே அமர்ந்து அவனுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த உஷா கண் கலங்கினாள்.

    வேங்கடம், சட்டென வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, ``ஏண்டி இப்படி படுத்தறே? உங்கிட்டயும் கேட்டுட்டுதானே செக்யூரிட்டி கார்டா போறதுக்கு எழுதிக் கொடுத்தேன்? அன்னிக்கு சம்மதிச்சவளுக்கு இப்போ என்ன வந்ததாம்?

    ``அப்போ ஏதோ தோணிச்சு. சரின்னுட்டேன். அதுக்கப்புறம் மனசே சரியில்லே. கெட்ட கெட்ட கனவா வருது. தூங்க முடியலே!

    ``இனி முடியாது! பிரதமரோட பாதுகாப்பு குழுவுல தேர்ந்தெடுக்கப்படறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. அது ஒரு பாக்கியம், பல நாட்டுப் பிரதிநிதிகளும், ஜனாதிபதிகளும் கலந்துகொள்கிற அதில் பிரதமரின் செக்யூட்டிகளில் ஒருவராகி போகும்போது ஒரு வெயிட் கிடைக்கும்.

   அதுக்கப்புறம் போன்ஸ், இன்க்ரிமென்ட், பாராடு, பதக்கம், பரிசு, பிரமோஷன் எல்லாமே உண்டு. நம்ம பகுதியில் நூற்றுக்கணக்கானோர் இதுக்காக பேர் கொடுத்திருந்தும், அந்த வாய்ப்பு எனக்கு மட்டும்தான் கிடைச்சிருக்குங்கிறதை நீ மறந்துடக்கூடாது.

  வேங்கடம் கை கழுவி வர, யூனிஃபாரத்தை கொண்டு வந்து நீட்டினாள், அவர் சட்டையை மாட்ட, நெஞ்சு முடியை ஸ்பரிசித்தபடி பொத்தான்களை போட்டுவிட்டு அவனது கண்களை ஏக்கத்துடன் ஏறிட்டாள்.

   ``அந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை, குண்டு வைத்து தகர்ப்போம்னு தீவிரவாதிங்கிட்டருந்து மிரட்டல் வந்திருப்பதா பேப்பர்ல செய்தி போட்டிருக்கான். டி.வி.யிலயும் சொன்னான்!

   ``மிரட்டல் வெடிக்குண்டு புரளி எல்லாம் சகஜம். அதையெல்லாம் பார்த்தா முடியுமா? அப்படியே வெடிக்குண்டு இருந்தாலும் `பாம்ஸ்குவாடு கண்டுபிடிச்சு அழிச்சிரும். சேச்சே! ஒரு போலீஸ்காரனோட பெண்டாட்டி இத்தனை கோழையா இருக்கலாமா....? என்று வேங்கடம் அவளது கன்னத்தில் தட்டினார். ``போய் ஆக வேண்டியதை பார்!

   வேங்கடத்திற்கு பெருமையாக இருந்தது. சந்தோஷமாகவும். அங்கே அகில உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போலீஸ்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க, தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பத்து பேரில் தானும் ஒருவன் என்கிற பூரிப்பு!

   உஷா பைத்தியக்காரி! பயமாம். மனசு சரியாயிருந்ததாம்! எதெடுத்தாலும் தடங்கல்! இடைஞ்சல்! சென்டிமென்ட்ஸ்! அழுகை!

   பாதுகாப்பு என்பது ரிஸ்க்தான், ரிஸ்க்கைப் பார்த்தால் முன்னேற முடியுமா? மிரட்டலும் தீவிரவாதமும் இருப்பதால்தான் பாதுகாப்புக்கு அழைக்கிறார்கள். எதுவுமேயில்லையென்றால் எதற்கு செக்யூரிட்டி?

    ஸ்டேஷனிலும் மேலதிகாரி முதல் (உள்ளுக்குள் பொறாமையிருந்தாலும்) அனைவரும் அவரை பாராட்டினர். எல்லோரும் சேர்ந்து விருந்தளித்து வாழ்த்துச் சொல்லி அனுப்பினர்.

   அன்று புறப்படும் நாள்.

   அதிகபட்ச திரில்லோடு இருந்தவரை உஷாவின் இறுகிய முகம் வெறுப்பேறிற்று. ``இன்னும் நீ சமாதானம் ஆகலியா....? என்க முகத்தைத் திருப்பினாள்.

   ``இப்போ நான் என்ன பண்ணுனுங்கிறே? பேசாம பயணத்தை கேன்சல்?

    அவன் சத்தம் போட, ``அதெல்லாம் வேணாம்.

   ``அப்புறம்?

   ``உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! வெளியூர் போகும்போது பிள்ளைகளை அழைத்து என்ன வேணும்னு கேட்கணும்னு!

    ``ஓ.....அதுதானா! ஏய் ....பசங்களா இங்கே வாங்க! என்று அறைக்குள் குரல் கொடுத்தார் வேங்கடம், மனைவி கோபித்துக் கொள்ள மற்றொரு சாக்கு!

   இது பெரிய தலைவலி, வழக்கமானதும்கூட, ஏதாவது வாங்கி வராவிட்டாலும் குத்தம். வாங்கி வந்தாலோ குத்தங்கள்!`இது சரியில்லை அது சரியில்லை ஏமாந்துட்டீங்க நல்லா ஏமாத்திபுட்டான் என்று இடி! `உங்கள்கிட்ட போய் சொன்னேன் பாருங்க! போலீஸ்கள் வேறு எதுக்கும் லாயக்கில்லை! என்று ஒட்டுமொத்த போலீஸ் இனத்திற்கே சாபம் விடப்படும்.

    கல்லூரியில் படிக்கும் மகள் அனுஷா, ஏற்கனவே தயாராயிருந்த பட்டியலை தீட்டி, ``டெல்லியில் சுடிதார் ரொம்ப பேமஸாம்ப்பா, விலை மலிவும்கூட என்று குதூகலித்தாள். அந்த பட்டியலில் வகுப்புத் தோழிகளும் அடக்கம்.

    ``டெல்லில எங்கே?

    ``லஜ்பத் நகர்ப்பா தோழிகள் சொன்னார்கள்?

          மகன், ``எனக்கு எதுவும் வேணாம்ப்பா என்று அலட்சியப்படுத்தினான். ``நான் தாஜ்மஹால் பார்க்கணும். என்னையும் அழைச்சுப் போவீங்களா.....?

    ``இந்த டூர் போய் வந்ததும் அலவன்ஸ் பணம் நிறைய கிடைக்கும்.அதை வச்சு குடும்பம் முழுக்க ஒரு டெல்லி டிரிப் ஒக்கேயா....?

    இரண்டு நாள் ரயில் பயணத்தின் அலுப்பிற்கு டெல்லி குளிர் ரொம்பவும் இதமாயிருந்தது. பனிப்புகை! போலீஸ் காம்ப்பில் பல மாநில தலைகளும் நிரம்பியிருந்தன. வேங்கடத்திற்கு ஹிந்தியை தவிர மற்ற எல்லாம் புரிந்தது. ஹிந்தி கற்காததிற்காக கோபம் எழுந்தது.

    ``இன்று ரெஸ்ட் எடுங்கள். நாளை முதல் டிரெயினிங் என்று அதிகாரி அன்புடன் விரட்ட, பிறகு நேரம் கிடைக்குமோ என்னவோ இன்றே பர்ச்சேஸை முடித்து விடலாம் என்று வேங்கடம் கிளம்பினார்.

    மனைவிக்கு போன் பண்ண, ``சுடிதாரை மறந்துராதீங்க என்று நலம் விசாரித்தாள்.

    ஆட்டோ பிடித்து லஜ்பத் நகர் நெருக்கடியில் சுடிதார்கள்! பிறகு கரோல்பாக் மண்டே மார்க்கெட்! சரோஜினி நகர் மார்க்கெட்! பெட்டியும் மனசும் நிரம்பிற்று. என்னதான் தண்டச்செலவு என்றாலும்கூட குடும்பத்திற்கு எனும்போது ஒரு திருப்தி சந்தோஷம்!

    எஞ்சிய நேரத்தில் `தாஜ்மஹால் போகலாமா என்க, ``வேணாம். நிகழ்ச்சி ஆக்ராவில்தான் அது முடிந்து பார்த்துக்கலாம்! என்றனர்.

    மறுநாள் அதிகாலை முதலே குளிரில் கடுமையான டிரில்! ப்ரேட்! டிரெயினிங்! ஜாமர் வாகன விளக்கம்! கண்ணிவெடி பற்றின பாடம்! அதைச் செயலிழக்கச் செய்யும் பயிற்சி!

    அந்த விஷயங்கள் ஆர்வமூட்டின. நாட்டுப்பற்று! குண்டுகள், கண்ணிவெடிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து செயலிழக்க வைக்க வேண்டும் என்கிர வெறி எழுந்தது.

    ``நம் நாட்டில் என்ன இல்லை? எல்லா வளமும் இருந்தும் சாதி மதங்களை வைத்து அரசியல் பண்ணுகிறார்கள். பலகீன உணர்வுகளை தட்டிவிட்டு பிளவு! மனஸ்தாபம்! தீ மூட்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்! மக்களின் அத்யாவசிய தேவைகளை கவனிக்க முடியாமல் எப்போதும் தீவிரவாதிகளின் தலைவலி நம்மை பலகீனப்படுத்துகின்றன.

    ``இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாய் ஊருக்குத் திருப்பி அனுப்ப வேண்டியது நம் கடமை. பொறுப்பு. அவர்களுக்கு ஒரு அசம்பாவிதம் என்றால் நம் நாட்டுக்கு ஆபத்து. ஆகையால் உயிரை பணயம் வைத்தாவது தலைவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

    மேலதிகாரியின் பேச்சு உணர்ச்சிகரமாயிருந்தது. ஆணி அடித்தது  போல மனதில் பதிந்தது.

    வேங்கட்த்தை ரஷ்ய அதிபரை பாதுகாக்கும் குழுவில் சேர்ந்திருந்தனர். அவருடைய வாகனத்திற்கு எஸ்கார்ட்!

    அவருக்கு அதிலும்கூட மகிழ்ச்சியே. நம்பிரதமரை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ரஷ்ய அதிபரை இப்போது அருகிலிருந்து பார்க்கவும் பேசவும் அருமையான வாய்ப்பு!

    அதிகாலையிலேயே சீருடை, ஆயுதங்கள் சகிதம் ரஷ்ய அதிபர் தங்கியிருந்த ஹோட்டலில் அவர்கள் சல்யூட் அடித்தனர். அவர் எளிமையாக தெரிந்தார். ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து நலம் விசாரித்தார். அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர். பெருமையாயிருந்தது.

    ஆக்ரா நிகழ்ச்சிக்கு வண்டிகள் புறப்பட்டன. அதிபரின் குண்டு துளைக்காத காருக்கு தொட்டு முன்னால் வேங்கடத்தின் வாகனம்! வழியெல்லாம் மக்களை ஓரங்கட்டி, தட்டிக்கு அந்த பக்கமிருந்து பலத்த கையசைப்பு!

    அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. சில கடமைகளை நிறைவேற்றும்போது கிடைக்கிற ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. இதையெல்லாம் ஊருக்கு திரும்பிப் போனதும் அலுவலகத்திலும் வீட்டிலும் பீற்றிக் கொள்ளலாம்!

     எங்கு பார்த்தாலும் வாகனங்களின் அணிவகுப்பு! அறிவிப்பு! சிகப்பு விளக்குகளின் பளிச்! பளிச்! பாய்ச்சல்!

     நகரத்தை தாண்டி மலைபிரதேசத்தின் வரவேற்பு!

     அங்கே பசுமையான காடுகள், மரம் செடி கொடிகளின் அடர்த்தியில் பனித்துளிகள் கொட்டிக் கொண்டிருந்தன. பாறையிலிருந்து நீர்வீழ்ச்சி! அவற்றின் மேல் சூரியக் கதிர்களின் அட்டகாசம்!

    இயற்கையை ரசித்தபடி வண்டி ஒடிக்கொண்டிருக்கும் போது வளைவு சாலையில் நுழைந்தபோது திடீரென வண்டிக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

    பீப்..பீப்...பீப்....

   உடன் வண்டிகள் நின்றன.

   ``என்ன...என்ன ....? என்று வயர்லெஸ்கள் முழங்கின.

   ``வழியில்  கண்ணிவெடிகள் இருக்கலாமோன்னு சந்தேகம்!

    ``கிளியர் இட்!

    செக்யூரிட்டிகள் தப...தப..என குதித்து அதிபரின் காரைச் சுற்றி நின்று கொண்டனர்.

    ``கிளியர் இட் ஃபாஸ்ட்!

    வேங்கடமும் இன்னும் சிலரும் கையில் டிடெக்டருடன் இறங்கினர். அவர்களுக்கு பின்னால் மோப்ப நாய்!

    ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் டிடெக்டர் கொலை வெறியுடன் அலறிற்று. நாய் முந்திக்கொண்டு போய் மண்ணைத் தோண்ட, முடிச்சாய் என்னவோ அந்த இடத்தில் வெளிப்பட.

    ``சம்திங் ஹியர் சார்! என்று வேங்கடம் அதை எடுக்க முனைய-

    ``நோ! டோண்ட் டச்! என்று கமாண்டர் கத்தி வாய் மூடும் முன்பு

    ``டமால்...!

    நொடியில் அந்தப் பகுதியே புகைக் காடாய் மாறி தீ மூட்டமாயிற்று.

    அடுத்த அரைமணி நேரத்தில்-

    ``தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு! கண்ணி வெடியிலிருந்து ரஷ்ய அதிபர் அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பினார்.

   அக்கிரமம்  -அநியாயம் வெறியாட்டம் பரபரப்பிற்காகவே ஒளிபரப்புக்களை நடத்திவரும் பிபிசி, சி.என்.என். போன்ற உலக தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் காட்சியை திரும்ப திரும்ப காட்ட ஆரம்பித்தன.

    உலகத் தலைவர்கள் எல்லோரும் ரஷ்ய அதிபரை அவர் உயிர் பிழைத்ததிற்காக மாற்றி மாற்றி பாராட்டி, கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க, அவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

    ஆனால்.

    அவரது உயிரை காப்பாற்ற வேண்டி கண்ணிவெடிக்கு பலியாகி பீஸ்...பீஸாகிப் போன செக்யூரிட்டிகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. வாய் திறக்கவில்லை.

    நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிப்பதாக ஒரு வரி நூல் விட்டதோடு சரி.

   பணம் பதவி-அதிகாரம் வசதிகள் மனிதனை வித்தியாசப்படுத்தலாம். ஆனால் உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே!

   இந்த இழப்புக்கு என்ன விமோசனம்?

   இதை அறியாத வேங்கடத்தின் மனைவி கணவர் வருவார். பணம் பதக்கம் கிடைக்கும். ப்ரமோஷன் ! சம்பள உயர்வு! அதை வைத்து பெரிய வீடாக மாறலாம். தண்ணி கஷ்டம், மின்சார பிரச்சினை இருக்காது. என்றாலும்

   சுடிதார்களும் தாஜ்மகால்களும் அப்பா கொண்டு வருவார் சக மாணவர்களிடம் அலட்டிக் கொள்ளலாம் என்று பிள்ளைகளும் கனவு கண்டுகொண்டிருந்தனர்.

   வேங்கடத்தைப் பாரட்டி பின்னால் சான்றிதழ்களும், இடைத்தரகர்களைத் தாண்டி உதவித் தொகைகூட வந்து சேரலாம்.ஆனால்-

   நாட்டின் இறையான்மையை காக்கவேண்டி தன்னையே பலி கொடுத்த வேஙகடம் அந்த குடும்பத்திற்கு திரும்பக் கிடைப்பாரா? அவரை எத்தனை பேர்கள் எத்தனை நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

   தலைவரின் உயிர்ருக்கு மில்லியன் டாலர்கள் என்றால் இந்த தியாகிகள் உயிருக்கு என்ன விலை....?

                                        (குமுதம் வார இதழ்)

 

 

.

More Profiles