HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
அணில்

சிறுகதை

        

    ``இந்த அணில் சாதாரணமானதில்லை. சாட்சாத் இராமபிரானின் ஆசிர்வாதம் பெற்றது. என்னடா சொல்றே நீ.....?

    ஜோஸ்யக்காரன் கேட்டுவிட்டு கூண்டை தட்ட, உள்ளே அடைபட்டிருந்த அணில் கீச்...மூச்சென்று அலறி ஆமோதித்தது. வாலை தூக்கி சாமரம் வீசிற்று.

    ``கிளி, தேவாங்கு, எலின்னு பார்த்திருக்கோம். இது என்ன அணில்? கிழவி ஒருத்தி பொக்கைபல் காட்ட, ``ஆத்தா! அதெல்லாம் உன் காலம்! இப்போ எல்லாமே பேஷனாயிருச்சு. ம், என்ன சொல்றீக? இவன் கால்பட்டா சுபிட்சம்! இங்கே யாருக்கு பார்க்கணும் ஜோஸ்யம்? ஜாதகத்தை எடுத்து வாங்க!

    அவன் சப்பணமிட்டு அமர்ந்திருந்தான். தலையில் ஏழு ஊர் அழுக்குடன் முண்டாசு! பணியன் வேட்டியில் பழுப்பேறி கப்படித்தது வெளுப்பாய் மீசை! காந்தத்தில் ஒட்டின இரும்புத் துகள்கள் போல பிசிறாய் தாடி!

     ஜோஸ்யனின் உருவத்தைவிட, பேச்சு வசீகரமாயிருந்தது.

     மனிதர்கள் மனிதர்களைவிட, தங்களைவிட ஜோதிடத்தை நிறையவே நம்புகிறார்கள். அதற்கு காரணம் பிரச்சினைகள்! போராட்டம்!

    இங்கே யாருக்கு பிரச்சினையில்லை! பணக்கஷ்டம். மனகஷ்டம். தொழில் நஷ்டம்! பொருளாதார பின்னடைவு. கடன்! சுபம்! கபடம்! பொய்-பித்தலாட்டம்! ஜனனம் மரணம். வஸ்து விற்றல் வாங்கல்! உறவுகள், வஞ்சனை! எதிரிகள்! துரோகம். படிப்பு, அட்மிஷன், வேலைவாய்ப்பு! கல்யாணம் கருமாதி! நோய், பிணி, பகை, புகை என தாரளமாய் சங்கடங்கள் இவற்றிலிருந்து மீளவும், ஆளவும் துடிக்கிறார்கள்.

   இப்போதும்-

  அந்த வீட்டுப் பிரச்சினை அவர்களது மூத்த மகன் ஜெகனின் வேலைவாய்ப்பு! திண்ணையில்- அக்கம் பக்கத்து பெண்கள்! டிவியின் அழுகை சீரியல்களையெல்லாம் தியாகம் பண்ணி வம்பே வாழ்வாக அங்கே குழுமியிருந்தனர்.  அவரவர்களுக்கு தத்தம் ரகசியங்களை பொத்தி வைத்து அடுத்தவர்களின் விஷயங்களை ஊதிவிடும் ஆவல்!

    வீட்டம்மா, ``ஏய் ....ஜனனி! ஒடிப்போ அண்ணாவோட ஜாதகத்தை எடுத்து வா! என்று விரட்டினாள்.

    ``அண்ணனுக்குதான் இதெல்லாம் பிடிக்காதே!

    ``அவன் வெளியே போயிருக்கானே! ஆள் வரதுக்குள்ளே பார்த்திரலாம்!

     ஜகனின் ஜாதகம் வந்தது. ஜோதிடன் அதை அணிலின் பாதத்தில் சமர்ப்பித்து ஆசிபெற்று, சுலோகம் ஜபித்து புரப்பட ஆரம்பித்தான்.

    சில விநாடிகள் கண்களை மூடி மெளனம். உதடுகளில் முணுமுணுப்பு!

    ``ஜகனுக்கு இப்போ  சனி திசை! புள்ளையாண்டானுக்கு வேலை பறிபோயிருக்கணுமே!

     ``ஆமா.

     ``ரெண்டு குழந்தைங்க!

     ``ஐயோ....ஆமா.

     ``ஆசாமி

 முன்கோபி!

பிடிவாதக்காரன்!                              

``ரொம்ப சரி என்று அம்மா வியப்புடன் சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள் அவர்களின் கண்களிலும் கூட வியப்பு!

     ``இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்?

      ``ஜகனோட வேலை! பக்கத்து டவுன்ல துபாய் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்! கடை வேலை, முப்பதாயிரம் சம்பளம். ஜகனும் போய் பார்த்துவிட்டு வந்திருக்கான். அவனுக்கு இந்த வேலை கிடைக்குமா? வெளிநாட்டு யோகம் அவனுக்குண்டா?

     ஜோதிடம் மறுபடி மெளனம். கண்களை மூடி விரல் கணுக்களை எண்ணினான். சோளி உருட்டினான்.

    ``கவலைப்படாதீங்க, பையனுக்கு விமான் யோகம் நிச்சயம் உண்டு.

    ``ரொம்ப சந்தோஷம்!

    ``ஆனா..

    ``என்ன?

    ``வேலையைப் பெற கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பணைவிரயம்! நேராய் கிடைக்க வேண்டிய வாய்ப்பு சுத்தி வளைச்சு செலவு வைக்கும். அது தேவையா.....?

    ``செலவானாலும் பரவாயில்லை. பின்னால சுபிட்சம் வந்தா சரி! வீட்டுல வேறு வருமானமில்லை. விவசாயத்துல நஷ்டம். அவனுக்கு கீழ ரெண்டு தங்கைங்க கல்யாணத்துக்கு காத்திருக்குங்க. தம்பிங்க பாதி படிப்புல.எல்லாத்தையும் அவன்தான் கரை சேர்த்தாகணும்!  

   ``அப்போ எதுக்கும் கவலைப்படாதீங்க. இந்த அணிலின் கிருபை அவனுக்கு நிச்சயம் உண்டு! என்று அவன் எழவும், தட்சணை தாராளமாய் வைக்கப்பட்டது. அதன் பின் ஊர் முழுக்க ஜோதிடனுக்கு மாபெரும் வரவேற்பாயிற்று.

     மறுவாரம்.

    வீட்டில் அம்மா அப்பா, அப்பப்பா,அம்மம்மா, மாமா, மச்சினிச்சி, தாரம், தங்கைகள், தம்பிகள் எல்லோரும் கூட்டணி அமைத்து உசுப்பிவிடவே ஜெகனின் மனதும் மாறியிருந்தது.

    அவன் அங்கே போனபோது இளைஞர்கள் பட்டாளம் அலுவலகத்தின் முகப்பை ஆக்ரமித்திருந்தது. மாலை வரை காத்திருந்து ஏஜண்ட்டை சந்தித்துவிட்டு திரும்பும்போது, அம்மா வாசலிலேயே மறித்து ``என்னாச்சுப்பா....? என்று அவசரப்பட்டாள்.

    ``வேலை உறுதி, ஆனா விசா, டிக்கட்டுன்னு எழுபத்தைஞ்சாயிரம் கட்டணுமாம்!

     ``அதனாலென்னப்பா! உன்னாலதான் இந்த குடும்பம் பிழைக்கணும். தம்பிகள் தலையெடுக்கிறவரை ரெண்டு வருஷமோ நாலு வருஷமோ கஷ்டப்பட்டா பிறகு திரும்பி வந்திரலாமே!

   ஜெகனுக்கும் அந்த யோசனைதான், மனைவி குழந்தைகளை பிரிய வேண்டும் என்பது மட்டும் சங்கடமாய் இருந்தது. இரவில் தூக்கமில்லாத அவனை மனைவி அரவணைத்து, ``பிரியணுமேன்னு வருத்தமாயிருக்கா? என்று வாசமும் பாசமும் ஏற்றினாள்.

    ``அது ஒரு பக்கம். பெரிய தொகை திரட்டணுமேங்கிற கவலை மறுபக்கம்.

    ``பணத்துக்காக நீங்க பாக்க வேணாம்.என் வளையல், நகை -பத்தலேன்னா  தாலி கொடியையும் தரேன்!

    ``எல்லாத்தையும் தந்துட்டு நீ என்ன பண்ணுவியாம்!

    ``நாம் ஒண்ணும் விக்கலியே! அடமானம் தானே! பின்னாடி மீட்டுக்கலாம். மனசுல எதையும் வச்சுக்காதீங்க! எல்லாம் அணில் புண்ணியத்துல நல்லபடியா நடக்கும்.

    ``அணிலா....?

    ``ஆமா, ராமரோட அணில்! நேத்து என் கனவுல வந்தது! என்று அவள் அவசரமாய் மழுப்பினாள்.

    பணம் கட்டின ஒரு மாதத்திலேயே முப்பது பேர்களுக்கு விசா ரெடி! ஏஜண்ட் அவர்களிடம் மும்பாயில் ஒரு விலாசம் கொடுத்து, ``அங்கே  போய் மெடிக்கல் எம்பஸியில் பதிவு பண்ணினதும் டிக்கட் தருவார்கள். அப்படியே அங்கிருந்து நேராய் பயணப்பட வேண்டியிருக்கும், ஒரு வாரம் மும்பாயில் தங்குவதிற்கான ஏற்பாட்டுடன் கிளம்புங்கள்! என்று வழியனுப்பினார். ``வேலைக்குப் போனதும் பாவப்பட்ட இந்த ஏஜண்ட்டை மறந்திராதீங்க!

   ``சேச்சே! அப்படியெல்லாம் செய்வோமா? குடும்பத்துக்கு விளக்கேத்தி வச்ச தெய்வம் நீங்க!

    ஊரிலும், தெருவிலும், மூலை முடுக்கிலிருந்த கடவுள்களுக்கு பயணம் சொல்லிக் கொண்டு ஜெகன் புறப்படும்போது நெஞ்சு பாரமாய் அழுத்திற்று. இப்படி எல்லோரையும் விட்டுவிட்டுப் போகத்தான் வேண்டுமா என்றிருந்தது. மற்ற எல்லாவற்றிற்கும் முன்னால் பணம் ஜெயிக்கிறது. சிரிக்கிறது. ஆளை அடக்குகிறது. ஆள்கிறது. அமர்த்தி வைக்கிறது.

    முப்பது இளைஞர்களுக்கும் உள்ளுக்குள் பெருமிதம் ஜோதிடன் அன்று சொன்னது இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. ஆளைப் பார்த்தால் பரதேசி போலிருந்தான். ஆனால் அவனது வாக்கில்தான் எத்தனை துல்லியம்!

    நாட்டில் நல்ல ஜோதிடர்களும் இருக்கிறார்கள்!

   எல்லோருமே போலியில்லை.ஏமாற்றுக்காரர்களில்லை!

   அவர்கள் மும்பாய்க்கு ரயில் பிடித்து, அங்கு மாதுங்காவில் அந்த விலாசத்தில் ஏஜன்ஸியைப் பார்க்க, ``ரெண்டு நாள் பொறுங்க! டிக்கட் ரெடியாயிரும்!என்றனர்.

   ``ரெண்டே நாள்ல போயிரலாமா? இங்கே ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்களே மெடிக்கல் டெஸ்ட்டுன்னும், துபாய் எம்பஸியில் பதிவு பண்ணணும்னும்....?

    ``அதெல்லாம் அங்கே போய் செஞ்சுக்கலாம். எதுக்கு இங்கே அனாவசிய செலவு?

    ``செலவுக்காக பாக்க வேணாம். முறைப்படி வேண்டியதை செஞ்சிரலாமே!

    ``வேணாம்.எதுக்காக அனாவசிய செலவு? இங்கே இப்போ மெடிக்கல் பண்ணினாலும், அங்கேயும் போய் செஞ்சாகணும். அதுக்கு ஒரேயடியாய் அங்கேயே செஞ்சுக்கலாமே!

    அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

    அணிலின் அருளில் எங்கே போனாலும் நல்லவர்களாக எதிர்படுகிறார்கள்! பொய் சொல்லி-ஏமாற்றி பணம் பிடுங்கும் ஏஜண்ட்டுகளுக்கு மத்தியில் இப்படியும்கூட ஒருவரா! வாழ்க!

   அவர்களுக்கு பெருமிதம் பிடிபடவில்லை.

   மும்பையில் அதிக நாள் தங்காமல் அதிக செலவில்லாமல், மூன்றாம் நாளே விமானம் பிடித்து, துபாயில் போய் இறங்குகிற வரை அந்த பெருமிதம் இறங்காமலிருந்தது.

   ஏர்போர்ட்டில் துபாய் கம்பெனி ஆட்கள் காத்திருந்து அவர்களை அழைத்துப் போவார்கள் என்று ஏஜண்ட் சொல்லியிருந்தான்.ஆனால்.

    அப்படி யாரும் அங்கு வரவில்லை.

    அன்று ராத்திரிவரை காத்திருந்து தமிழ் தெரிந்த ஒருவரிடம் விபரம் சொல்ல-

    ``அடப்பாவிகளா! உங்களை யாரோ நல்லா ஏமாத்திட்டாங்க! என்று அதிர்ச்சி தந்தார்.

    ``என்ன சார் சொல்றீங்க?

    ``ஆமாம்.இது வேலைக்கான விசா இல்லை. டூரிஸ்ட் விசா, வெறும் ஆயிரம் ரூபாய் செலவு பண்ணினால் இது கிடைக்கும்.அது போகட்டும்  -அங்கே ஊரில் மெடிக்கல் பண்ணினாங்களா?

    ``இல்லை சார், தேவையில்லேன்னுட்டாங்க!

    ``ஆமாம், வேலை விசாவுக்குத்தான் மெடிக்கல் தேவை. டூரிஸ்ட் விசாவுக்கு தேவையில்லை! அது போகட்டும், பணம் நிறையக் கொடுத்தீங்களா?

    ``ஆமாம் சார். பேராசைப்பட்டு வெளிநாட்டு வேலைன்னு ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து, நகை நட்டு வயலையெல்லாம் அடமானம் வைத்து வந்துவிட்டோம். பணமும் போச்சு, மானமரியாதை எல்லாமும் போச்சு! என்ன பண்றதுன்னு தெரியலே!

    ``நடந்தது நடந்துபோச்சு! இனி உடனே ஊருக்குத் திரும்பிப் போயிருங்க. இங்கேயிருந்து கஷ்டப்பட வேணாம்! என்று புத்திமதி சொல்லிவிட்டு அவர் நழுவினார்.

     அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை வயிறு பற்றி எரிந்தது. அந்த ஏஜண்ட்டை சும்மாவிடக்கூடாது! அந்த ஜோதிடனையும் கூட! என்னவோ....வெளிநாட்டு வேலை காத்திருக்கிறதுன்னு சொன்னானே....! அவனையும் விட்டு வைக்கக்கூடாது. கண்டந்துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்கிற ஆத்திரம் எழுந்தது, ஆனாலும் இனி எப்படி எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊர் திரும்புவது என்று அவர்கள் இடிந்து போயிருக்க.

   அந்த ஏஜண்ட்டும், ஜோதிடனும் வேறு வேறு நபர்கள் இல்லை என்பதும், எங்கே அடித்தால் மக்கள் வீழ்வார்கள். என கணக்குப் பண்ணி, சும்மாயிருந்த இளைஞர்களுக்கு ஆசைக்காட்டி உசுப்பிவிட்டு, ஆள் தேவை என பேப்பரில் விளம்பரம் கொடுத்து, பணம் சுருட்டி தலைமறைவாகி விட்டிருந்தான் என்பதும் யாருக்குத் தெரியப் போகிறது?

    அவன் இப்பவும் ஏதோ ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு டவுனில் சிங்கப்பூருக்கு ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்துவிட்டு, அணிலுடன் செளக்யமாக சுற்றிக் கொண்டிருந்தான் என்பது பின்குறிப்பு!

                                                   (மாலை மலர்)

 

 

.

More Profiles