விழா  எடுத்துப்பார் ...  

                            

      டி.என்.சேஷன்:

     ஃப்ரன்ட்லைனர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முதலில் ப.சிதம்பரத்துடன் டி.என்.சேஷனையும் அழைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். இரண்டு ஜாம்பவான்கள் எனும்போது குவைத்திலுள்ள இந்தியர்கள் அனைவரின் கவனமும் இப்புத்தகத்தின் மேல் திரும்புமே!

   ஆனால் சிதம்பரம், சேஷன் இருவருடைய சுபாவம், ஈகோ எல்லாம் ஒத்துப்போகுமா என்கிற ஐயம் எழுந்தது. இருவரையும் ஒன்றாய் அழைப்பதைவிட தனித்தனியாய் அழைக்கலாமே என்று நண்பர்கள் அபிப்ராயப்பட்டனர்.

   டி.என்.சேஷனை பற்றி – அவர் ஒரு தடாலடி மனிதர் –சின்னத்தவறு என்றால் கூட பொறுக்கமாட்டார்-பொரிந்து தள்ளிவிடுவார் என்று கேள்வி பட்டிருந்ததால் அவர் வேணுமா –நமக்கு சரிப்பட்டு வருவாரா என்கிற பயம் இருக்கவே செய்தது.

   சேஷனை முன்பின் அறிமுகமில்லை. தினமலர் அந்துமணி  அவர்களிடம் சொன்னதும், நூருல்லாவை அனுப்பி வைத்தார். என் சார்பில் நண்பர் ராஜசேகர். சேஷனை தயக்கத்துடனும் பயபக்தியுடனும் போய் சந்தித்து அழைக்க, ``உடனே சரி’’ என்று விட்டார்.

   ``அகில இந்திய அளவில்-குவைத்திலிருக்கிற வெற்றிப் பெற்ற இந்தியர்களை உள்ளடக்கி உருவாக்கியுள்ள புத்தகம் நிச்சயம் நமக்கு பெருமை சேர்க்கும். அவசியம் வரேன். ஆனால் என்னால் தனியாக வர இயலாது. என் மனைவியையும் அழைத்து வர டிக்கட் ஏற்பாடு செய்வீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்-சேஷன்.

   ``இல்லை சார். இரண்டு முதல் வகுப்பு டிக்கட் என்கிறபோது சற்று சிரமமாயிருக்கும்’’ என்று நண்பர் சொல்ல, ``அப்படியா... பரவாயில்லை. என் மனைவிக்கும் சேர்த்து விசா மட்டும் எடுத்துவிடுங்கள் டிக்கட் நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சேஷன் தெரிவித்ததாக நண்பர் என்னிடம் போனில் தெரிவித்தார்.

    ``அவருக்கு இன்னொரு டிக்கட் ஏற்பாடு செய்ய முடியுமா?”

    ``சேஷன் எவ்ளோ பெரிய நபர்! எத்தனை திடகாத்திரமாய் எலக்‌ஷன் வேலைகளை கவனித்தவர்! அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு (எம்.பி.எலக்‌ஷனில் நின்றதால் பொது ஜனங்களின் முகசுளிப்பை பெற்றுவிட்டார் என்பது துரதிர்ஷடம்) தனக்கு இரண்டு டிக்கட் கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லலாம். அதை விட்டுவிட்டு நம்மிடம் விண்ணப்பிக்கிறார் என்கிறபோது.

   அந்த நேர்மைக்கும், தன்னடக்கத்திற்கும் என்ன விலையும் கொடுக்கலாம் என்று தோன்றிற்று. எக்காரணம் கொண்டும் அவருக்கு செலவு வைக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அவருக்குவேண்டி இரண்டு முதல் வகுப்பு டிக்கட்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு செய்தோம்.

     சேஷன் வருகிறார் என்றதும், குவைத்திலுள்ள இந்திய அமைப்புக்கள் குறிப்பாய் மலையாள அமைப்புக்கள் தங்களது நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக் கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தன.

   அவர் பிற நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக நாட்கள் தங்க வேண்டும் அந்த அதிகபடி செலவுகளை யார் ஏற்றுக் கொள்வது என்று கேட்டேன்.

   ``பிரச்சனையில்லை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சேஷனிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்றனர். சேஷனிடம் விபரம் சொல்ல ``சரி, வருவதே வருகிறேன். பிறரின் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறேன்’’ என்று சம்மதித்தார்.

    ஆனால், ``தயவு செய்து எந்த பிசினஸ் அல்லது கமர்சியல் நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்காதீர்கள், நான் வரமாட்டேன். என்னைக் கேட்காமல் அந்த மாதிரி நிகழ்ச்சி எதையும் ஒப்புக் கொள்ள வேண்டாம்’’ என்று விட்டார்-கறாராய்.

    அந்த சமயத்தில் எங்கள் ஸ்பான்சர்களில் ஒருவரான `ஹைவே சென்டர்’ எனும் பிரபல டிபார்ட்மென்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு.கே.ஜி.ஆப்ரஹாம் தனது ஸ்டோரின் ஐந்து ஆண்டு நிறைவு விழாவில், சேஷன் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார். அதற்கும் சேஷன் ஒப்புக் கொள்ளவில்லை.

    வேறொரு நகைகடை திறப்பு விழாவிற்கும் அவரை அழைத்தார்கள். ``திறப்பு விழாவிற்கு வந்தால் நல்ல கிஃப்ட் தருகிறோம்’’ என்றனர். தானே வருகிற கிஃப்ட்டை ஏன் விடவேண்டும் என்று சேஷனின் காதை மெல்ல கடித்தேன்.

    அவர் ஒரே வார்த்தையில் ``ஸாரி’’ சொல்லிவிட அவரது மனைவியை உசுப்பிவிட்டு (நகை ஆசைக்கு மயங்காத மனைவிகள் உண்டா என்கிற நப்பாசையில்) நீங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்களேன்!’’ என்றோம்.

    ``ஐயையோ நான் மாட்டேன். உங்களுக்காவது இரண்டு நாள் உறவுதான். நான் அவருடன் கடைசிவரை வாழ வேண்டியவள். என்னை விட்டிருங்க! என்று கையெடுத்து கும்பிட்டார்.

    சேஷனுக்கு குழந்தைகள் இல்லையென்பதாலோ என்னவோ மாணவர்களின் நிகழ்ச்சிகளில் அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். குவைத்திலும் ஏழு இந்திய பள்ளிகளின் நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்.

    சேஷனுடன் பழகும் போதுதான் தெரிகிறது-அவர் தனிமையில் ஒரு குழந்தைபோல பழகுவது. சிதம்பரம் தனிமையில் கறாராகவும், பொது மேடையில் சாந்தமாகவும் இருப்பார். இவரோ பொதுமேடையில் கர்ஜிக்கிறார். பழகும்போது இவரைப் பற்றின அபிப்ராயமெல்லாம் மாறிவிட்டது.

   சேஷன் எனும்போது `கான்ட்ரவர்ஸி’ இல்லாவிட்டால் எப்படி? குவைத்திலும் அந்த மாதிரி சம்பவங்கள் நிகழ்ந்தது வாஸ்தவம்.

    ஏற்கனவே குறிப்பிட்டபடி சேஷனை அதிக நாட்கள் தங்க வைப்பதில் ஒரு நாள் வாடகையை ஏற்றுக் கொள்வதாக முதலில் ஒப்புக் கொண்டிருந்த மலையாள அமைப்பு ஒன்ரு இடையில் முரண்டு பண்ண ஆரம்பித்தது.

    ``நாங்கள் பணம் தரமுடியாது. என்ன சேஷனை வைத்து பணம் பண்ணுகிறீர்களா?’’ என்று தகறாருக்கு வந்தனர். பணம் பண்ணுவதானால் எதற்காக சேஷனை அழைக்கணும் ஏதாவது சினிமா நட்சத்திரத்தை அழைத்தால் போதாதா?

     அவர்களின் வார்த்தைகள் எங்களை நோகடித்தன. பாவிகள், இதே மாதிரி சேஷனிடம் சொல்லி வைத்து, அவரும் அந்த மாதிரி என்னை நினைத்து ரசாபாசமாகிவிடப் போகிறதே –என்கிற பயம் இருக்கவே செய்தது.

    எதற்கும் இந்த பிரச்சனையை அவரிடம் சொல்லிவிடலாம் என்று பேச்சை ஆரம்பித்தேன். உடனே அவர்,``மோகன்தாஸ்! இதோ பாருங்கள்! உங்களை எனக்கு இதற்கு முன்பு தெரியாது. பத்திரிகை மூலமாகத்தான் அறிமுகம். யார் என்ன பேசினாலும் கவலையில்லை. நீங்கள் என்னை அழைத்து வந்திருக்கிறீர்கள். எனது மதிப்பும் மரியாதையும் இப்போது உங்களிடம் உள்ளது. உங்களை மீறி எதுவும் செய்ய மாட்டேன்’’.

   அவர் அப்படிச் சொல்லவும் எங்களுக்கு வார்த்தைகளே வரவில்லை.

   அந்த மலையாள அமைப்பின் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை ஆறு முப்பது என்று அறிவித்திருந்தார்கள். சரியாய் ஆறு இருபதுக்கு சேஷன் ஹாலில் ஆஜர்!

   அங்கே அரங்கில் சுமார் நூறுபேர்தான் இருந்தனர். நிகழ்ச்சிக்கு வரவேண்டிய இந்திய தூதுவரும் வந்து சேரவில்லை.

   ஆறு முப்பதிற்கு சேஷன், ``நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா?’’ என்றார். அவர்கள் தயங்கி ``இன்னும் அம்பாஸிடர் வரவில்லை. இன்று வேலைநாள் என்பதால் ஏழரைக்குத்தான் கூட்டம் வரும்!’’ என்றனர்.

   ``எனக்குக் கூட்டத்தைப் பற்றி கவலையில்லை சொன்ன நேரத்திற்கு ஆரம்பியுங்கள்! இல்லாவிட்டால் நான் பாட்டிற்குப் போய்விடுவேன்,’’ என்றதும் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.

    அம்பாஸிடர் பதினைந்து நிமிடம் லேட்டாகதான் வந்து சேர்ந்தார்-வேறு நிகழ்ச்சி முடிந்துவர அவருக்கு லேட்டாயிற்று.

   சேஷன், தான் பேசும்போது, `நாம் முன்னேற முடியாமல் இருப்பதிற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று –எதையும் நேரப்படி செய்யாமை. உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சியையோ எடுத்துக் கொள்ளுங்களேன்! இன்று புதன்கிழமை-வேலைநாள் என்பதும்- ஏழரைக்குத்தான் மக்கள் வர இயலும் என்பதும் தெரிந்த விஷயம் என்கிறபோது –எதற்காக ஆறரைக்கு நிகழ்ச்சியை அறிவிக்கிறீர்கள்? சொன்னால் சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் நிகழ்ச்சியை ஒப்புக் கொள்ளவேக் கூடாது’’ என்று ஒரு போடு போட்டார்.

   அன்று அவர் போட்ட போட்டில் மறுநாள் பாரதி கலைமன்றம் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக இருந்த அம்பாஸிடர், என்னை போனில் அழைத்து, ``இந்த சேஷனுக்கும் நமக்கும் ஒத்துவராது . நாளை வேறு ஒரு நிகழ்ச்சி முடிந்து நான் வரவேண்டும். அதற்கும் லேட்டானால் இவர் விளாசுவார். வேண்டாம் ``ஆளை விடுங்கள்!’’ என்று ஒதுங்கிக் கொண்டது மறக்க முடியாத நிகழ்ச்சி.

    இன்னொரு நாளில்-

    ஏழாரைக்கு ஒரு நிகழ்ச்சி சேஷனுக்கு இருந்தது. ஆறாரைக்கு திரு.தாமஸ் சாண்டி அவர்கள் தன் பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு அவசியம் வந்தாகணும் என்கவே, ``சரி வருகிறேன். ஆனால் ஏழு மணிக்கு என்னை விட்டுவிட வேண்டும், ஏழாரை நிகழ்ச்சியில் நான் தாமதிக்காமல் கலந்துக்கணும்!” என்றார்.

   ``அப்படியே ஆகட்டும்’’ என்று அவர் சம்மதிக்க சேஷனை சரியாய் ஆறாரைக்கு அங்கு ஆஜர் படுத்தினோம். அங்கு சேஷனை வைத்துக் கொண்டு மேடையில் அவர்கள் பாட்டிற்கு பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். அவரை அழைக்கிற முகமே தெரியவில்லை.

    மணி ஆறு ஐம்பது. சேஷனின் முகம் இருண்டுப் போயிற்று. ஆறு அம்பத்தைந்துக்கும் –அந்த நிகழ்ச்சி முடிகிற மாதிரி தெரியவில்லை. அங்கே என்னவோ நடக்கப் போகிறது என்பது புரிந்தது.

    டென்ஷனுடன் காத்திருந்தோம். சரியாய் ஏழாயிற்று பாருங்கள்-சேஷன் சட்டென எழுந்து விட்டார். ``மோகன்தாஸ்- வாங்க போகலாம்!’’ என்று விருட்டென வெளிநடப்பு செய்ய, ஏற்பாட்டாளர் பின்னாலேயே ஓடி வந்து ``வாங்க சார்! ரெண்டு வார்த்தை பேசிவிட்டு –போயிருங்க!’’ என்க- நோ! என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க –உங்க மனசுல? என்று முறைத்துவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles