விழா  எடுத்துப்பார்...  

                            

      

       அது உண்மை. மது, மாது விஷயத்தில் அவர் ரொம்ப ஸ்டிரிக்ட், பெண்களுக்கு மரியாதை செலுத்துவது இவரது சிறப்பு.

   இப்போதெல்லாம் சினிமா உலகம் டல்லடிப்பதால், அதை நம்பியிருக்காமல் பிசினஸ் வழியிலும் நட்சத்திரங்கள் இறங்கிவிடுவது சகஜமாகி இருக்கிறது. நெப்போலியனும் அதற்கு விதிவிலக்கல்ல.

   அவர் குவைத் வந்தபோது ராஜா எனும் பிசினஸ் நண்பரை அறிமுகப்படுத்தினேன். நெப்ஸ் அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு-அடுத்த ஆறுமாதத்திலேயே குவைத்தில் ஏற்றுமதிக்கு வியாபார தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

   டெல்லிகணேஷ்:

   நம் நாட்டில் எப்படி நூற்றுக்கணக்கில் கட்சிகள் இருக்கின்றனவோ, அதே மாதிரி குவைத்திலும் நூற்றுக்கணக்கில் இந்திய அமைப்புக்கள் உள்ளன. யோசித்துப் பார்த்தால் அரபுநாட்டுக்குப் பணம் சம்பாதிக்க வந்தோமா இல்லை பொழுது போக்கவா என்று சிலருக்கு தோன்றும்.

  நம்மூரில் திருமணம், கோயில், பார்க், பீச் விஷேசங்கள் என்று பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கே டி.வி, வீடியோவை விட்டால் எப்போதாவது நடக்கும் கலை நிகழ்ச்சிகள் தான் குடும்பத்தையும் நாட்டையும் விட்டுவிட்டு பாலைவனத்திற்கு வந்திருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வடிகால்!

   அந்த அடிப்படையில் நிகழ்ச்சிகள் தர போட்டாப் போட்டி தமிழர்களுக்கு மட்டும் மூன்று அமைப்புக்கள் உள்ளன. (மலையாளிகளுக்கு 33 அசோசியேஷன்கள்!)

    மூன்று அமைப்புக்களிலும் சமயத்தில் பனிப்போர் நடப்பதுண்டு. ஒரு அமைப்பு நடிகர் ஒருவரை கொண்டு வந்துவிட்டால், அடுத்த அமைப்பு  அதைவிட சிறப்பாய் வேறு ஏதாவது செய்தாக வேண்டும் –யாரையாவது நாமும் அழைத்து வந்தாக வேண்டும் என்று களத்தில் இறங்குவதுண்டு.

    இந்த பனிப்போரில் சில நட்சத்திரங்களுக்கு யோகம் அடிப்பதுண்டு. அப்படி அதிர்ஷ்டம் பெற்றவர்களில் டெல்லிகணேஷும், வெண்ணிற ஆடை மூர்த்தியும் உண்டு.

    நாடகங்களையே அவர்கள் மறந்து சினிமாவில் முழு அளவில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், பாரதி கலைமன்றம் அவர்களை நாடகம் போட அழைத்தது. டெல்லிகணேஷும் சரி என்று ஒப்புக் கொண்டு, தன்னிடமிருந்த பழைய ஸ்கிரிப்ட்டை அனுப்பி தந்தார்.

    அது இந்த காலகட்டத்திற்கு பழசாக இருந்தாலும் கூட, குறுகிய கால இடைவெளியில் நாடகம் போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளூரில் ரிகர்சல் நடந்தது.

   டெல்லிகணேஷும் நான்கைந்து நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார். அவர் வந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார். வெ.ஆ.மூர்த்தி தனக்கு ஷூட்டிங் இருக்கிறது என்றும் சொல்லி நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்புதான் வந்தார்.

    நிகழ்ச்சிக்கு முன்பு அவர் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பினதில் கிளைமேட் ஒத்துக் கொள்ளாமல் அவரது தொண்டை கட்டிக் கொண்டது. மூர்த்தி என்றாலே –ஏதாவது வினோதமாய் ஓசை எழுப்புவார் –மேனரிசம் பண்ணுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

   வினோத ஓசை மட்டுமில்லை-நாடகத்தில் சொற்ப சமயமே தலைகாட்டும் வசனத்தைக்கூட அவரால் பேசமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்.(பாடகர்கள் எப்படி தங்கள் குரல்வளத்தை பாதுகாத்துக் கொள்கிறார்களோ, அதுமாதிரி கலைஞர்களும் அவசியம் பாதுகாத்துக் கொள்ளக்கூடாதோ)

    பெரும் செலவுபண்ணி, நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள். ஏர் டிக்கட், ஹோட்டல், சாப்பாடு, கலைஞர்களுக்கு சம்பளம் என்று கொடுத்து அழைத்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது கலைஞர்கள், ரசிகர்களுக்கு நிகழ்ச்சிகளை நன்றாக தரவேண்டாமா? கடல்கடந்து வாழும் ரசிகர்களை ஏமாற்றலாமா?

    வெ.ஆ.மூர்த்தி இயல்பில் நன்றாக பழக்க்க்கூடியவர். சகஜமாய் பேசுபவர். ஜாலி டைப். ஆனால் அந்த பயணத்தின் போது அவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. கொஞ்சம் சலிப்பு ஏற்படும்படி ஆயிற்று. ராசிபலனிலும், ஜோசியத்திலும் கைதேர்ந்தவரான மூர்த்தியின் ராசி அப்போது சரியில்லை போலும்.

    அன்று நாடகமும் அத்தனை சோபிக்கவில்லை. பாலைவன பிரதேசத்தில் நகரத்தை விட்டு வெகு தொலைவில் காம்ப்பில் தங்கி, மிகுந்த ஆர்வத்துடனும் சிரமத்துடனும் வண்டிப்பிடித்து நிகழ்ச்சிகு வந்த தொழிலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று கல் எறியாத குறை. நாடகம் சுமார் என்பதை உணர்ந்து டெல்லி மோனோ ஆக்டிங் செய்து ரசிகர்களை குஷிபடுத்த முயன்றார்.

   டெல்லிகணேஷ் ரொம்ப சாதாரணமாய் காட்சியளிக்கிறார். பேச்சில் தமாஷ், ஈகோ இல்லை. நல்லவிதமாய் ஒத்துழைக்கிறார்.

   லஞ்ச், டின்னர் பார்ட்டிகளில் மோனோ ஆக்டிங் பண்ணி பிரமாதமாய் கவர்கிறார் கமலுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தையும், அவர் தன்னுடன் பேசும் பழகும் விதத்தையும் அப்படியே நடித்துக் காட்டுகிறார். மனிதர் மிமிக்ரி ட்ருப் நடத்தலாம். அந்த அளவிற்கு அசத்தல்.

   பர்ச்சேஸ் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித டேஸ்ட், கிரேஸி மோகன் பர்ச்சேஸில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் Ferro Rocher - தேங்காய் சேர்த்த சாக்லெட் என்றால் உயிரைவிடுவார். ``இந்த சாக்லெட்டிற்கு என் சொத்தையே எழுதி தருவேன்’’ என்பது அவர், ஆர்கனைசர் ஆனந்தி நடராஜனிடம் அடிக்கும் கமென்ட்.

   வரதராஜன், தனக்கு மட்டும் பொருட்கள் வாங்காமல், தனது நாடக குழு உறுப்பினர் அனைவருக்கும் பரிசுகள் வாங்கி சுமந்துப் போனார். டெல்லிகணேஷ் கொஞ்சம் குடும்பபிரியர்! தனது குடும்ப அங்கத்தினர்களுக்கு வேண்டி பொருள்கள் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

   அந்த சமயம் இந்திய சுதந்திர பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி சிவாஜிகணேசனை இந்திய தூதரகம் அழைத்து வந்திருந்தது. அவரை போய் பார்க்க வேண்டும் என்று டெல்லிக்கு விருப்பம்.சிவாஜியும் அழைத்தாராம்.

   ஆனாலும் டெல்லிக்கு தயக்கம் இந்திய தூதரக மரியாதையில் வந்திருக்கும் அவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் தானும் போனால் அது சிவாஜிக்கு மரியாதையாக இருக்காது. அவர் மூத்த கலைஞர். அங்கே அவர்தான் பிரதானம். அந்த இடத்தில் நானும் போய்- ரசிகர்களில் சிலரது கவனம் என்பக்கம் திரும்பினால் அது நன்றாக இருக்காது என்று ஒதுங்கினார்.

   பிறகு எல்லாரும் எடுத்துச் சொல்லவே- சிவாஜியை சந்தித்து ஆசிபெற்று மகிழ்ந்தார்.

        இலக்கியவாதிகள்:

   குவைத்திற்கு வந்து வேலைக்கு சேர்ந்ததுமே கல்கி ஆசிரியர் என்னிடம் ``குவைத் சிறப்பிதழ் தயாரித்து தர முடியுமா?’’ என்று கேட்டார். பெருமையுடன் `கல்கி’ குவைத் சிறப்பிதழ் தயாரித்துக் கொடுத்தேன்.

    அதன் பிறகு குமுதத்தில் குவைத் வேலைவாய்ப்பு பற்றி எழுதும்படி அப்போது ஆசிரியர் பொறுப்பிலிருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்னார். எழுதினேன். தினத்தந்தியில் குவைத் வேலைவாய்ப்பு –வாழ்க்கை முறையை பற்றி தொடராக எழுதச் சொன்னார்கள்.

    `பாலைவன சொர்க்கம்’ என தொடராய் எழுதினேன். அதை மணிமேகலை பிரசுரம் புத்தகமாக்கி ``இது வேலை வாய்ப்புக்காக அரபுநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இது வெளியே வரவேண்டும்.’’ என்றார்.

    அப்புத்தகத்தை வெளிப்படுத்த வேண்டி மணிமேகலை பிரசுரம், சென்னை மியூசிக் அகாடமி மினிஹாலில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. அமரர் ஆசிரியர் மணியன் முதல் மாலன், எஸ்.வி.சேகர், லேனா, சத்யமூர்த்தி என்று பலரும் அவ்விழாவில் கலந்துகொண்டு பேசினர்.

   ஆசிரியர் சாவி அவர்கள் உடல் நல குறைவால் வர இயலவில்லை. எனது எழுத்திற்கு வெளிச்சம் போட்டு தந்த தினமலர் அந்துமணி மேடைக்கு வராமல் வாசகர்களோடு ஐக்கியமாகி இருந்தார். அவர் எப்போதும் அப்படிதான்.

    அந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்த மணிமேகலை பிரசுர ரவி தமிழ்வாணன் வியந்து ``இதெ அரங்கிலும் வெளியேயும் பல வெளியீட்டு விழாக்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். உங்களால் மட்டும் எப்படி இந்த அளவிற்குக் கூட்டத்தை திரட்ட முடிகிறது?’’ என்று பாராட்டினது இதமான விஷயம்.

    எல்லாமே நண்பர்கள் கூட்டம் வந்தவர்கள் எனக்காக என்று சொல்லிவிட முடியாது. பலவித வி.ஐ.பி களும் பேசுகிறார்கள் எனும்போது அவர்களை பார்க்கவும் வருவது இயல்புதானே! அடுத்து ப்ரண்டலைனர்ஸ் புத்தக வெளியீடு நாரதகான சபாவில் நடந்தபோதும் கூட அப்படித்தான்.அரங்குகள் வெளியேயும் கூட்டம்!

    ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது சும்மான்னாலும் ஒப்புக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு இருந்துவிடாமல் –திரும்ப நேரிலும் போனிலும் ஞாபகபடுத்துவது அவசியமாக இருக்கிறது. இது அவசர உலகம். அன்றாட தலைவலிகளுக்கிடையே நிகழ்ச்சியை ஞாபகபடுத்துதல் வேண்டும்.

   குவைத்தில் –எப்போதும் சினிமாகாரர்களை மட்டும்தான் அழைக்கணுமா- இலக்கியவாதிகளை அழைக்கலாமே  என்று அன்று துணை தலைவியாக இருந்த திருமதி ஆனந்தி நடராஜன் அவர்களிடம் தெரிவித்தேன்.

   ``யாரை அழைக்கலாம் –நீங்களே ஏற்பாடு செய்யுங்கள்’’என்றார்.

    சில பெயர்களைச் சொல்ல, எழுத்தாளர் சுஜாதா, லேனாதமிழ்வாணன், சிவசங்கரி-ஓக்கே ஒவ்வொருவராக அழைக்கலாம் என்றனர்.

    சரியென்று சுஜாதா அவர்களிடம் பேசினேன். அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஆறுமாதம் கழித்து அமெரிக்கா செல்லும் வழியில் வருகிறேன் என்றார். லேனாவிற்கும் அப்போது வரமுடியவில்லை. சிவசங்கரி அவர்களை அறிமுகப்படுத்தி அவரும் சம்மதித்து, பாரதிகலை மன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடாயிற்று.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles