விழா  எடுத்துப்பார்...  

                            

      

       சிவசங்கரி ``நான் இந்திய விமான சர்வீஸில்தான் வருவேன்.’’ என்று கூடவே தனது `இலக்கிய –இந்திய ஒருமைபாடு’ புத்தகத்தை நிறைய கொண்டு வந்து குவைத் வாசகர்களிடம் விநியோகித்துக் கொண்டார்.

   ராணி ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் ஏற்கனவே ஒரு முறை அரசாங்க அழைப்பின் பெயரில் குவைத் வந்து –பிரமாதமாய் தொடர் எழுதி புத்தகமும் போட்டிருந்தார்.

    இரண்டாம் முறையாக அவர் –கவிஞர் வைரமுத்துவையும் அழைத்து வந்து, பாரதிகலை  மன்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினார்.

   ஆசிரியர் சாமி அவர்கள் ரொம்ப யதார்த்தம் வயதிற்கும் மீறின சுறுசுறுப்பு. வேகம், கலகலப்பு அவரது சிறப்பு . நிகழ்ச்சி முடிந்ததும் ஊருக்கு திரும்பிவிடாமல் மேலும் இரண்டு நாட்கள் இருந்து குவைத்தை சுற்றிப் பார்த்து- பாலைவன பகுதியிலிருக்கும் தொழிலாளர் கேம்ப்களுக்கு விஜயம் செய்து அவர்களுடன் கலந்து பேசினது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

    நடிகைகள்:

   கலைநிகழ்ச்சிக்காக நட்சத்திரங்கள் வரும்போது, நடிகைகளுக்கு விசா எடுப்பதில் எப்போதுமே பிரச்சனைதான். நடிகைகளுக்கு முன்பெல்லாம் விசா கிடைப்பதில்லை. இப்போது கொஞ்சம் தளர்த்தியிருப்பதாகவே தெரிகிறது.

   தமிழைப் பொறுத்தவரை முதன் முதலில் விசாபெற்ற நடிகை என்கிற பெருமையை தட்டிச் செல்பவர் நித்யா. வரதராஜனுடன் நாடகம் போட வந்து நாடக கதாபாத்திரமாக அசத்தினது மட்டுமின்றி ஒரு சகோதரி என்கிற மாதிரியான உணர்வை ஏற்படுத்திச் சென்ற பெருமையும் அவருக்குண்டு.

   பாரதிகலை மன்றத்திற்காக நாடகம் நடிக்க வந்த இருமுறையுமே அவர் சாந்தம். முதல் முறை திருமதி ஆனந்தி நடராஜனின் வீட்டிலேயே தங்கி, ரிகர்சல் பார்த்து, குடும்பமாக ஐக்கியமாகி திரும்பிப் போகும் போது கண் கலங்கினவர்.

    பொதுவாக நடிகைகளிடம் அதுவும் தமிழ் நடிகைகளிடம் ஒரு கெட்ட பழக்கம் –யாராவது மாட்டினால் பேசி-குலவி-பெரிய அளவில் பர்ச்சேஸ் பண்ணி அண்ணாரின் பர்ஸை காலி பண்ணிவிடுவார்கள் –என்பார்கள்.

   நித்யா இதற்கு விதிவிலக்கு என்கிறார் சென்ட்ரல் வீடியோ அதிபரான முஸ்தபா குவைத்தில் வீடியோ சிடியில் முதலிடத்திலிருக்கும் சென்ட்ரல் வீடியோவை, விசிட் செய்யாத கலைஞர்களே இல்லை எனலாம்.

    தமிழில் ஆரம்பித்த ஹிந்திவரை அனைவரையும் வரவழைத்து, உபசரித்து, பரிசளித்து அசத்துவது முஸ்தபாவின் சிறப்பு, வரதராஜன் நித்யாவை பர்ச்சேஸிற்காக அழைத்துச் சென்றுள்ள முஸ்தபா ``இவர்களை கடைகளுக்கு அழைத்துச் செல்வதில் எனக்கு பயமே இல்லை’’ என்கிறார். ``இவர்கள் இருவருமே நிறைய பொருட்கள் வாங்குவார்கள். ஆனால் அதற்குண்டான பில்லை இவர்களே செலுத்திவிடுகிறார்கள்.

   பர்ச்சேஸிற்காக எவ்வளவு பணம் மாற்றி எடுத்து வருகிறார்களோ, அதற்குமேல் பொருட்கள் வாங்க இவர்கள் ஆசைப்படுவதில்லை.

   அதே  மாதிரி இருவரின் அணுகுமுறையும், பக்குவமான பேச்சும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    ஒரு விஷயத்தை மறுப்பதிலும்கூட எதிராளியின் மனம் கோணாமல், புன்முறுவலுடன் பதிலளிக்கும் பக்குவத்தை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அதே மாதிரி கலைஞர்கள் என்கிற நிலைக்கும் அப்பாற்பட்டு சின்னச் சின்ன காரியங்களிலும் கவனம் செலுத்தி ரசிகர்களின் நட்புக்கு மரியாதை செலுத்தி தங்களால் முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுவதிலும் வல்லவர்கள்.

   தமிழை பொறுத்தவரை முதன்முதலில் நடிகைகளை அழைத்து வந்து `ஸ்டார் நெட்’டை செளத் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திற்று.

   அதில் சின்னிஜெயந்த், கஸ்தூரி, மஹேஸ்வரி கலந்துக் கொண்டனர். மேடையில் கஸ்தூரியின் குழைவான பேச்சும் சரி, உடையும், நாட்டியமும் சரி கவர்ச்சி. மகேஸ்வரி ரொம்ப அடக்கம்.

    நடிகைகளை அழைத்து வரும்போது உள்ள பெரிய சங்கடம் அவர்களுக்குத் துணையாக வரும் தாய்குலங்கள். சிலர் சாது, நடிகைகள் சும்மாயிருக்க, சில தாய்குலங்கள் தாலித்து விடுவதுண்டு. நடிகைகளைவிட இவர்களை கவனிக்கவே அதிக செலவு செய்ய வேண்டிவரும்.

   மகேஸ்வரியின் தாய் இயல்பாகவே இருக்கிறார் என்கிறார் முஸ்தபா. ``இதற்கு முன்பெல்லாம் ஸ்ரீதேவியுடனும் மகேஸ்வரியுடனும் பலநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏர்போர்ட்டிலிருந்து நேராய் ஹோட்டல் –அங்கிருந்து நிகழ்ச்சி-பிறகு ஹோட்டல் –மறுபடியும் ஏர்போர்ட் என்று பறந்துவிடுவோம்.

   குவைத்தில் எங்களுக்கு புது அனுபவம் என்று மஹியின் தாய் உருகினார். ``கடைவீதிக்கு அழைத்துப் போவது, சுற்றிக் காட்டுவது என்று அன்யோன்யத்துடன் எப்போதும் கூடவே இருந்து கவனித்துக் கொள்வது நெகிழவைக்கிறது. இனி அடுத்த முறை அழைக்கும்போது ஹோட்டலுக்காக அநாவசிய செலவு செய்யாமல் எங்களுக்கு நண்பர்களின் வீடுகளிலேயே ஏற்பாடு செய்யுங்கள். பணவிஷயத்திலும் கூட நாங்கள் கறார் இல்லை’’ என்று அவர் சொன்னது ஆச்சர்யமான விஷயம்.

   நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை அவர் வெகு ஜாலி டைப் ரொம்ப சோஷியல் –தோளோடு தோள் சேர்த்து பழகாத குறை. யாரையும் எளிதாய் நட்பாக்கிக் கொள்வதாலோ என்னவோ அவரால் `டைம்’ மெயின்டெயின் பண்ண முடிவதில்லை.

   லஞ்ச, டின்னர் அல்லது எந்த ப்ரோகிராம் தீர்மானித்தாலும் குறித்த நேரத்தில் அவரால் வரமுடிவதில்லை. யாராவது நட்புடன் அழைத்தால், அவரை பிடித்துவிட்டால் ஹாய்...என்றுச் சொல்லி அவருடன் சேர்ந்து போய் சுற்றிவரும் அஞ்சாத துணிச்சல் அவருக்கு.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டாக்டர் லதாவின் பார்வையில் மஹேஸ்வரி ஜெம். சாதுவாக குடும்பப் பெண்ணாக அவர் அனைவரையும் கவர்கிறார். நேரம் தவறாமை, பேச்சிலும் செயலிலும் வியக்க வைக்கும் அளவில் பண்பாடு காக்கிறார்.

    கலை நிகழ்ச்சி முடிந்து, கிஃப்ட் வாங்கி தந்த போது கூட மஹேஸ்வரியும் சரி, அவரது அம்மாவும் சரி, ``எதுக்கு இதெல்லாம்? அதான் சம்பளம் கொடுத்துவிட்டீர்கள். நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள்...!’’ என்று மறுத்தார்கள்.

    அடுத்தமுறை நிகழ்ச்சிக்காக பேசினபோது ``உங்களுடன் நன்றாக பழகியாயிற்று. அதனால் அட்வான்ஸெல்லாம் வேணாம். நிகழ்ச்சியைத் தீர்மானித்து தேதியைச் சொல்லுங்கள் போதும் வருகிறோம்.’’ என்றார்கள் பெருந்தன்மையுடன்.

   இந்தியன் வுமன்ஸ் லீக் எனும் கேரள பெண்களை கொண்ட அமைப்பு குவைத்தில் இயங்கி வருகின்றது. பல பிரச்சனைகளாலும் பாதுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அடைக்கலமில்லாமல் அவதிபடும் `ஹவுஸ்மெயிட்’களுக்கு சாப்பாடு, துணிமணி அவர்கள் ஊருக்கு திரும்பிப் போக டிக்கட் என்று இவர்கள் உதவி வருகின்றனர்.

   இதற்கு நிதிதிரட்ட வேண்டி இந்த அமைப்பு வருடம் இரண்டுமுறை மேளாக்களும், எக்ஸிபிஷன்களும் நடத்துவதுண்டு. அதில் பிரதானமாய் அங்கம் வகிப்பது நடிகை ரேவதி.

  அறக்கட்டளை என்பதாலும், பிறருக்கு உதவுவதற்காக என்பதாலும் ரேவதி பணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே வந்துப் போகிறார். தான் மட்டுமன்றி தன்னுடன் சுகாசினி, சுகன்யா, போன்றோரையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி, நிதி திரட்டி தந்துவிட்டு செல்வதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்.

   இவர்கள், தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றாலும்கூட ரொம்ப சிம்பிள். கமர்சியலாக கடைகளுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ ஒப்புக் கொள்வதில்லை. நடிகை என்கிற கவர்ச்சியை மூலதனமாக்கி ரசிகர்களை மயக்கி கிடைத்தவரை லாபம் என்று பழகுவதில்லை. ரேவதி சுகாசினி இருவருக்குமே அடிப்படையில் உதவும் குணமும், சமூக சேவையில் நாட்டமும் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

  முதல்முறை சுகாசினி வந்து சென்றபோது ஊரிலிருந்து அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்படும் ஹவுஸ்மெயிட்களை பற்றி ஊரில் எழுச்சி ஏற்படுத்த வேண்டி சுகாசினி அறிக்கைகள் கொடுக்க-அது குவைத் இந்திய தூதரகம் வரை பிரச்சனையாக்கப்பட்டது.

   இந்த மாதிரி ஏமாற்றங்கள் நடக்காமலிருக்க வேண்டி இந்தியாவிலிருந்து ஹவுஸ்மெயிட்களை அனுப்புவதிற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

 

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் –என்.ஆர்.சம்பத்:

   `இந்தியா ஏழைநாடு, ஏழைகள் நிறைந்த நாடு’ என்கிற மாதிரியான அபிப்ராயம் உலக அளவில் பரவியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

   ஆனால் உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பெருமளவில் தொழிலிலும், பிசினஸிலும், பெரிய பதவியிலும் கொடிகட்டி பறக்கின்றனர். குவைத்தை எடுத்துக்கொண்டால் எழுபது சதவிகித தொழில்கள் இந்தியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

  இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்கள் பலருமுண்டு. அந்த மாதிரி பெருமை சேர்ப்பவர்களில் திரு.என்.ஆர்.சம்பத்தும் ஒருவர்.

  இவர் குவைத் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்ஸேஞ்ச் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் குவைத்திலிருந்து ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி இவர்களின் மூலமே அனுப்பப்படுகிறது.

 யாராக இருந்தாலும், எந்த ஒரு பெரிய பதவிக்கும் எளிதாய் வந்துவிடுவதில்லை. ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னிலும் கடுமையான உழைப்பும், திறமையும் நிச்சயம் இருக்கும் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

   சென்னையைச் சேர்ந்த இவர் இந்து தியோலோஜிகல் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். கடுமையான சட்டதிட்டம், நெறிமுறைகள், ஒற்றுமை, நேர்மை, நாட்டுப்பற்று, இறைபற்று, தியாக மனப்பான்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், கடின உழைப்பு, சமுதாய சேவை போன்ற விஷயங்களை பள்ளி தனக்கு கற்றுத் தந்தது என்று பெருமைப்படுகிறார் திரு.சம்பத்.

   பத்துவயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாத்தாவும் பிரபல வக்கீலுமான என்.சி.விஜயராகவாச்சாரியார் எடுத்து வளர்த்திருக்கிறார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles