விழா  எடுத்துப்பார்...  

                            

      

       தாத்தாவின் பராமரிப்பில் சம்பத் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, கொள்கை வீரனாகவும் வளர முடிந்தது.``எனது வெற்றிகளும், சாதனைகள் எல்லாமே எனது தாத்தாவால் கிடைத்தவையே ‘’ என்று சம்பத் உருகுகிறார்.

  லயோலாவில் எம்.காம்.முடித்து அங்கேயே லெக்ச்சரராக பணியில் சேந்தார். அந்த சமயம் வங்கி தேர்வு எழுதி ப்ரபேஷனரி ஆபீசராக ஸ்டேட் பாங்கில் சேர்ந்தார். 37 வருடம் SBI  யில் சர்வீஸ் பார்த்திருக்கிற சம்பத்தின் விருப்பமான சப்ஜெட் –NRI பற்றியது. இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிற சம்பத் –உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து NRI  பத்திரங்களை மார்க்கட் பண்ணியிருக்கிறார்.

  NRI சர்வீஸில் அவரது நட்பான அணுகுமுறையும், பிரச்னைகளை சுமுகமாய் தீர்த்து வைக்கும் திறமையும் வங்கிக்கு பலவிதங்களில் உதவியிருக்கின்றன.

  சம்பத், இந்தியாவில் பலவித பயிற்சிகளும் பெற்றதுடன் ஜெர்மனி BHF  பேங்கில் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.

  இவர் கடைசியாக பேங்க் ஆபிசர்களுக்கு முக்கியமான பயிற்சி ஸ்தாபனமாக இருக்கும் ஸ்டேட்பாங்க் ஸ்டாஃப் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்திருக்கிறார்.

   ``ஸ்டேட்பாங்கில் எனது பயிற்சியும், பெற்ற அனுபவமும் என்னை தொழில் ரீதியாக சிறந்த ஒரு பேங்கராக ஆக்கியிருக்கிறது.ஸ்டேட் பாங்க் மூலம் கடின உழைப்பு, நேர்மை,நாணயம், டீம் ஓர்க் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் சம்பத் பெருமையுடன்.

   குவைத்தில் 1982 முதல் 5 வருடங்கள் இதே கம்பெனியில் பணிபுரிந்திருக்கிற சம்பத் இப்போது குவைத் இந்தியா எக்ஸேக்சின் தலைமைப் பொறுப்பை ஏற்று-இந்தியர்களுக்கு சிறந்த சர்வீஸ் கொடுப்பதற்கு பலவித திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

  எந்த ஒரு வெற்றிக்கும் டீம் ஓர்க் தேவை எனது சக ஊழியர்களும் எனக்கு பெருமளவில் ஒத்துழைப்பு தருகின்றனர்.

  சம்பத்தின் மனைவி திருமதி மாலினியும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் 15 வருடங்கள் ஆபீஸராக பணிபுரிந்து குடும்பத்தை கவனிக்கவேண்டி விடுப்பு பெற்றவர். மகன் அரவிந்த் மும்பையில் படித்து வருகிறார்.

  சம்பத்திற்கு பக்க பலமாயிருக்கும் மாலினி, இசையில் அதிக நாட்டமுள்ளவர்.

  சம்பத்தின் பொழுபோக்கு, இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் மியூசிக், சுற்றலா செல்லுதல், மானேஜ்மெண்ட் சம்பந்தமான புத்தகங்கள் படித்தல்.

  சொந்த திறமையுடன், மனிதநேயம் வளர்த்து இந்திய சமுதாயத்திற்கு உதவி செய்து, அதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, கம்பெனியை என்றும் முதல் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது இவரது ஆசை.

     வி.ஐ.பி க்களோடு வி.கே.பி:

  ஒரு நாள் என் ஆபீஸ் தொலைபேசி மணி ஒலித்தது. தொலைபேசியை எடுத்தேன். மறுமுனையில் ``என் பெயர் மோகன்தாஸ் Frontliners  என்று ஒரு புத்தகம் தயாரிக்கிறேன், அதுவிஷயமாக உங்களைச் சந்திக்க வரலாமா?’’ என்றார். நான் குறிப்பிட்ட நேரத்தில் அவர் வந்தார் மிக எளிமையான தோற்றம். நூறு நாவல்களுக்குமேல் எழுதியவர் –வார பத்திரிகைகளுக்கு தொடர்ந்து எழுதுபவர். ஒரு சிறுகதை பத்திரிகையில் பிரசுரமானாலே தலைகால் புரியாமல் தடுமாறும் மக்கள் மத்தியில் இப்படி ஒருவரா? எழுத்தோடு சமூகசேவை, மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனம்; எதிலும் தீவிரம்-இவைதான் என்.சி.மோகன் தாஸ்.வெறும் தொலைபேசியில் தொடர்பு வளர்ந்து, நெருங்கிய நண்பராகிவிட்ட முதல் வி.ஐ.பி இவர்தான். இவரின் அறிமுகம்தான் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

  அரசியல் உலகமே வியந்து பாராட்டிய ஒரு மேதை. இந்திய பொதுத் தேர்தலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். இப்படி பெருமைகளைச் சேர்த்துக்கொண்ட திரு.டி.என்.சேஷன் அவர்களுடன் நானா? அதுவும் அவருடன் இருந்து, விழாக்களில் கலந்து கொண்டது மட்டுமல்ல, அவருக்கு பிரத்தியேக விருந்து உபசாரம் செய்து, அவருடன் அமர்ந்து உரையாடி, விமான நிலையம் வரை சென்று வழியனுப்பியது ஒரு இனிய அனுபவம் மட்டுமல்ல, எனக்கு ஒரு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி, அதைவிட எனக்கு பெருமையான  விஷயம், அவர் இந்தியா சென்று எழுதிய கடிதம். ஒரு உயர்ந்த மனிதரின் உன்னத சிந்தனையை பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சிகள் என் நினைவில் நிற்கும் நிஜங்கள்.

  அந்த வரிசையில், சுப்ரீம் ஸ்டார் சரக்குமார் அவர்களை  Fromtliners  சார்பில் என்.சி.கோகன்தாஸ் அழைத்து வருகிறார், கார்கில் நிதி திரட்டுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். அதுவும் நான் பணிபுரியும் ஹோட்டலில், தங்குகிறார், பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். புகழின் உச்சியில் நிற்கும் அவரை புகழ் போதை மயக்கிவிடவில்லை. அவரோடு குவைத் வீதியில் Shoping  போன நிகழ்ச்சிகள்,கடைகளில் நுழைந்து பேரம் பேசி பொருள்கள் வாங்கியவை எல்லாம் இனிய நினைவுகள், மிக எளிமையாக பழகும் சரத், நிஜ வாழ்க்கையில் நடிக்கதெரியாத ஒரு சிறந்த நடிகர். எதையும் வெளிப்படையாக பேசும் சரத், எனக்கு கிடைத்த நண்பர்களில் மறக்க முடியாதவர் . சென்னையில் அவரை சந்தித்தபோது, குவைத் நினைவுகள் அவர் மீட்டி மகிழ்ந்தது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி.

  கவியரசு வைரமுத்து அவர்களும், ராணி ஆசிரியர் அ.ம.சாமி அவர்களும் வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் விருந்தினர்கள். அனேகமாக எங்கள் ஹோட்டலில்தான் தங்குவார்கள். இவர்களும் அங்கு தங்குவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. கவிதைகளில் ஆர்வம் கொண்ட எனக்கு, கவியரசுவை வரவேற்பதில் பெரிய மகிழ்ச்சி. வைரமுத்து அவர்களுக்கு நகைச்சுவை கலந்த சிந்தனை எப்படி வருக்கிறது? அவருடன் ஒன்றாக உணவருந்தி, ஒரே காரில் பயணம் செய்து, அவரின் பாடல்களை விமர்சனம் செய்து, அவர் எழுதிய பாடலை அவரையே கொஞ்சம் பாட சொல்லி மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவம். அவரின் முன்னணியில் நான் மேடையில் எனது கவிதையைப் பாட அவர் அதை பாராட்டி பேசியது எனக்கு நிறைவான நெகிழ்ச்சி, அவரோடு காரில் சென்றபோது அவர் சொன்ன `கடி ஜோக்குகள்’ வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. சென்னையில் எனக்குக் கிடைத்த இன்னொரு வி.ஐ.பி நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

  ரவி தமிழ்வாணனுக்கு ஒரு திடீர் வரவேற்பு விழா சுமார் 100 நண்பர்கள் கூடியிருந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக உள்ளே நுழைந்ததும் உடனேயே மேடையில் எனக்கு ஒர் அழைப்பு. ரவி அவர்களை வரவேற்று பேசும்படி. ரவியை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை. தொலைபேசியில் ஒரு தடவை பேசியதோடு சரி. அவரைப்பற்றி என்ன பேசுவது? எனக்கு சட்டென்று நினைவிற்கு வந்தது தமிழ்வாணனின் கல்கண்டு புத்தகமும் ரவியின் பெரியப்பா திரு. வைரவனும் தான். திரு.வைரவன் அவர்களை எனக்கு எனது கல்லூரி நாட்களிலேயே நல்ல பரீட்சயமுண்டு. வைரவன் அவர்களுடன் நான் பழகிய நிகழ்ச்சிகளை சொன்னதும் ரவி ஆச்சரியத்தில் வியந்துவிட்டார். வைத்திய குறிப்பு பற்றி நான் சொன்ன கிண்டலை இரசித்தார். அன்று அந்த வி.ஐ.பி.யோடு ஏற்பட்ட நட்பு, இன்று பேரூன்றி வளர்ந்துவிட்ட ஆலமரம்.

  நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் குவைத் வந்தபோது தங்கியது எங்கள் ஹோட்டலில்தான். அவர் மீண்டும் இந்தியா செல்லும்போது கண்ணீர் கொப்பளிக்க விடைபெற்ற நிகழ்ச்சி பாரதிராஜா படத்தில் வரும் நிகழ்ச்சியல்ல. அது ஒரு நிஜம். சென்னையில் இருந்து போன் பண்ணும்போது ``அண்ணே! எப்படி இருக்கீங்க? எப்ப சென்னைக்கு வாரீங்க?’’ என்று கேட்கும்போது நட்பு மட்டுமல்ல அவரின் நல்ல மனதும் தெரிகிறது.

  பாரதிராஜா –பட உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். எங்கள் ஹோட்டலுக்கு அவர் வரும்போது அவரை வரவேற்க வரவேற்பு மண்டபத்தில் காத்திருந்தேன். அவரும் வந்தார். மிக எளிமையாக இருந்தவர். கலைமாமணி யோகா அவர்களோடு வந்திருந்தார். லிப்டில் அவரின் அறைக்கு செல்லும்போது ``என்ன என் அறையை மிக உயரத்தில் உள்ள தளத்தில் கொடுத்துவிட்டீர்களே –தலை சுற்றுகிறது’’ என்றார். ``இமயத்தின் அறையும் உயரத்தில் தான் இருக்கணும்’ என்று நான் சொல்லவும் வாய்விட்டு சிரித்தார். நான் கேட்ட ஒரு கேள்விக்கு சாப்பாட்டு மேசையில் தாளம் போட்டு இராகத்தோடு பதில் சொன்னதை சிரித்து ரசித்தேன். குவைத் ஆடையை உடுத்திக்கொண்டு  Chicken னை ரசித்து சாப்பிட்டது. தனியாக அவருடன் வீதியில் நடந்தது, சினிமாவைப்பற்றி அறையில் விவாதித்தது எல்லாமே ஒரு சுகமான இராகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, `என் நண்பர் பெரியசாமிக்கு இது’ என்று பாரதிராஜா எனக்கு பொன்னாடை போர்த்தி என்னைக் கட்டிக்கொள்ள, நிழல்பட கலைமாமணி அதை படம்பிடித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. சென்னை சினிமா உலகில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய நண்பர்கள் பாரதிராஜாவும், யோகவும்.

   பாரதிராஜா வந்துபோன கையோடு பாலசந்தர். 40 வருடம் சினிமா உலகில் தென்றலாய் வந்து புயலாய் சின்னத் திரையில் வலம் வருபவர். குவைத் வந்தார். அவரால் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காகவே நண்பர் ரவி தமிழ்வாணன் மூலம் அவரின் மணிமேகலைப் பிரசுரத்தில் அவசரமாக எனது ``தளிர்கள்’’ என்ற கவிதைத் தொகுப்பை பிரசுரித்தும் அதை பாலசந்தர் அவர்கள் மேடையில் வெளியிட்டு, என் கவிதைகளை விமர்சித்து பேசியது எனக்கு பெருமை சேர்த்த நிகழ்ச்சி.

  அதிகம் பேசாத பாலசந்தர் விவாதிக்கத் தொடங்கினால் கருத்துக்களை கொட்டும் வேகம் என்னை அசத்தியது. அவரோடு பழகி, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, ஒன்றாக நடந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது 3 நாட்கள்தான் என்றாலும் 40 வருட விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இவர் நான் சந்தித்துப் பழகிய இன்னொரு வி.வி.ஐ.பி.

  நான் சந்தித்து, பழகின தமிழக வி.ஐ.பிக்கள் வரிசையில் இன்னும் பலர். அரசியல் வித்தகர் பா.சிதம்பரம், நகைச்சுவை பட்டிமன்ற மன்னன் லியோனி, திரைப்பட பாடகர் மனோ, டி.வி.புகழ் வரதராஜன், வெண்ணிறாஆடைமூர்த்தி, சின்னி ஜெயந்த்....... நீண்டு செல்லும் பட்டியல்.

  இன்னும் விரிவாய் எழுதலாம் என்று நினைக்கிறேன். (மோகன் தாஸ் கத்தரிக்கோலுடன் மிரட்டுகிறார் பாருங்கள்.) நிறுத்திக் கொள்கிறேன்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles