விழா  எடுத்துப்பார்...  

                            

      

   வி.கே.பெரியசாமி, குவைத்.

     எல்.ஜி.சி.சேர்மன், திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி:

 நம்மூரில் இப்போதுதான் அயல்நாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் காலூன்ற வழிவகைகள் செய்யப்படுகின்றன. குவைத்தில் நம் எல்.ஐ.சி., பல வருடங்களாகவே உள்ளூர் கம்பெனியான வர்பா இன்சூரன்ஸின் கீழ் இயங்கி வருகிறது.

  சமீபத்தில் எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு வேண்டி அதன் சேர்மன் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி குவைத்திற்கு வந்து மீட்டிங் போட்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு.எல்.ஐ.சி.யை விரிவுபடுத்த அவரது வரவு பெரிதும் உதவியிருக்கிறது.

  தனது தகுதியாலும் திறமையாலும் இப்பதவியை பெற்றுள்ள கிருஷ்ணமூர்த்தி எல்.ஐ.சி.பெரிய அளவில் வளர பாடுபட்டிருப்பது நிஜம். பின்னால் என்னென்ன நடக்கும் என்று வரும்முன் கணித்துக்கூறும் அளவிற்கு இவர் ஒரு பிசினஸ் ஞானி என்றும் சொல்லலாம்.

  அலுவலர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, தட்டிக்கொடுத்து தங்களின் முழு திறமையையும் பணியில் காட்டவைக்கும் கிருஷ்ணமூர்த்தியிடம் என்ன மாயம் இருக்கிறதோ தெரியவில்லை. எல்.ஐ.சிக்கு இவரது பதவிகாலம்-ஒரு பொற்காலம் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

      கலைமாமணி –வண்ணப்பட யோகா:

 டைரக்டர் பாலசந்தர் குவைத் மேடையில் பேசும்போது,``இங்கு கவிஞர் வைரமுத்து, டைரக்டர் பாரதிராஜாவெல்லாம் வந்துபோனார்கள் என்று அறிந்தேன். சந்தோஷம், பாரதிராஜாவை எல்லாம் அழைத்து வருவது சாதாரண விஷயமில்லை. அவர் எளிதில் எங்கும் வருபவரல்ல’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

   அது உண்மை.

   பல வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு அழைப்பு வந்தாலும் கூட எதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியே ஒப்புக் கொண்டாலும் மூட் சரியில்லையென்றால் கடைசி நேரத்தில் பயணத்தை கேன்சல் செய்துவிடும் சந்தர்ப்பங்களும் அவருக்கு  நேர்ந்திருக்கின்றன.

   அப்படிப்பட்டவர் குவைத்திற்கு வர சம்மதித்தார் என்றால் அதற்கு காரணம் கலைமாமணி வண்ணப்பட யோகாதான்.

  யோகா இருபது வருடங்களாக எனது குடும்ப நண்பர். அவரது எளிமை, இனிமையாய்ப் பழகும்விதம், அலட்டலில்லாத திறமை, அணுகுமுறை, இடிவிழுந்தாலும் கூட, வெளியே காட்டிக்கொள்ளாத பக்குவம், நட்புக்குக் கொடுக்கும் மரியாதையெல்லாம் அவரிடம் உள்ள தனிச்சிறப்புக்கள்.

   இந்திரா காந்தி முதல், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவென்று பலருக்கும் அவர் ஆஸ்தான போட்டோகிராபர். அவருக்கு நெருக்கமில்லாத பிரபலங்கள் இல்லை என்று சொல்லலாம்.

  பாரதி கலைமன்றத்தின் (2000 ம் ஆண்டு) பொங்கல் விழாவிற்கு வரதராஜன் –நித்யாவின் நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ``அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் பாரதிராஜாவை ஏற்பாடு செய்துதாருங்கள்’’ என்று அன்றைய தலைவர் திரு.செந்தமிழ் அரசுவும் செயலாளர் திரு.சாக்ரடீஸீம் என்னிடம் சொன்னார்கள்.

   ``பெரிய அளவில் பட்ஜெட் இல்லை. இருந்தாலும் அவர் வந்தால் நமக்கெல்லாம் பெரிய கெளரவமாக இருக்கும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று அன்புக் கட்டளையிட்டனர்.

  நானும் சரியென்று நண்பர் யோகாவிடம் விபரம் சொல்லி,``இங்கே தற்சமயம் பட்ஜெட் இல்லை எப்படியாவது டைரக்டரை அழைத்து வந்தாக வேண்டும்’’ என்று உரிமையுடன் உத்தரவிட அவர் என்ன மாயமந்திரம் செய்தாரோ தெரியவில்லை, பாரதிராஜாவை (அன்பால்) மயக்கி, பாசத்துடன் சம்மதிக்க வைத்து அழைத்து வந்துவிட்டார். பட்ஜெட் பற்றாகுறை என்றதும் விமானத்தில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ததுடன் இருவருக்கும் ஒரே ரூம் போதும் என்று தங்கினதும் பாரதிராஜாவின் சிறப்பு.

      Frontliners

     சென்னை வெளியீட்டு விழா

  Frontliners  புத்தகத்தின் முதல் பகுதி முதலீடு இதழ் ஆசிரியர் திரு. அரிதாசனால் புத்தகமாக்கப்பட்டு, இலக்கியவீதி அமைப்பின் மூலம் சென்னை நாரதகான சபா மினி ஹாலில் வெளியிடப்பட்டது.

  திரு.மூப்பனார் அவர்களிடம் தேதி வாங்குவதில் சிரமம் இருந்தாலும், குறித்த நேரத்தில் அவர் வந்தது சந்தோஷமான விஷயம்.

  புத்தக வெளியீட்டு விழாவில் என்னதான் கவனம் செலுத்தினாலும் ஏதாவது விட்டுப் போகக்கூடும். முக்கிய விஷயமான புத்தகத்தை கிஃப்ட்பேக் பண்ணாமல் விடுபடும் சம்பவம் அங்கும் நிகழ்ந்தது.

  அடுத்தது-நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவேண்டிய செந்தமிழ் அரசு அவர்கள் அலுவலம் காரணமாய் சென்னைக்கு புறநகரில் மாட்டிக் கொண்டு வர இயலவில்லை.

   என்னடா இது –குருக்கள் இல்லாமல் கல்யாணம் எப்படி –என்ன செய்வது என்று பதற்றத்திலிருக்க, தினமலரின் செய்தியாளரான நூருல்லா அவர்கள்-``கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்’’ என்று மேடை  ஏறி, அடுத்த நிமிஷமே மிக பிரமாதமாய் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். (ஆபத்பாந்தவன்!)

  பிறகு அரசு வந்து சேர்ந்ததும், அவர் பிக் அப்பண்ணிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதன், திருவாளர்கள் சன் டி.வி.வீரபாண்டியன், இனியவன், கல்கி ராஜேந்திரன், லேனா, குவைத்திலிருந்து ஆனந்திநடராஜன், பாலம் கல்யாணசுந்தரம், விஜய் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.

   எனது மானசீக குருவான சுஜாதா அவர்கள் அன்புடன் இசைத்து, மேடை ஏறி பேசியது எனக்கு மாபெரும் கெளரவமாயிருந்தது. (எழுத்தின் வேகத்தையும் ஊட்டத்தையும், வீரியத்துடன் கற்றுக்கொண்டாது அவரிடம் தானே!)

   எஸ்.வி.சேகர், தான் பாம்பேக்கு ஏழரைமணி விமானத்தில் பறக்கணும், -அதற்கு முன்பு வாழ்த்திவிட்டுப் போகிறேன் என்று வந்து-வாழ்த்திவிட்டு-பறந்தார்.(ஆனால் அவர் ஏர்போர்ட் போவதற்குள் விமானம் பறக்க ஆரம்பித்து விட்டது சங்கடம் சாமி)

  அமைச்சர் கே.என்.நேரு, வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தது. ஆனால் வேறு ஒரு அவசர வேலை காரணமாக, அவர் வரமுடியாமல் போக, தன் சார்பில் நடிகர் நெப்போலியனை அனுப்பியிருந்தார்.

   எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் மூலம் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

   `பாலைவன சொர்க்கம்’ வெளியீட்டு விழா மூலம் உதவும் கரங்கள் வித்யாகரை அழைத்து, பேசவைத்து தையல்மிஷன் வழங்கினோம்.

   இந்த நிகழ்ச்சி மூலம்- எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாமலிருந்த அரசாங்க பள்ளிக்கூட்டத்திற்கு  ``தண்ணீர் பேங்க்’’  கட்டிக் கொடுத்தது-ஆத்மதிருப்தி தரும் விஷயம்.

   ``இந்த வெளியீட்டு விழாவில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று திண்டுக்கல் சென்று –பட்டிமன்ற புயல் திரு.லியோனியை சந்தித்து அழைத்தேன்.

   ``இதுக்கு எதுக்கு நேரில் வந்து அலையறீங்க-ஒரு போன் பண்ணினால் போதும் ஓடி வந்திருவேனே’’ என்றவர் தன் சகாக்களான பால்ராஜ், குயிலனுடன் தவறாமல் வந்து கலந்துகொண்டார்.

   மேடையில் அதிக அளவில் பேச்சாளர்கள் இருக்கக்கூடாது –நிகழ்ச்சி நீண்டு போய் பார்வையாளர்களுக்கு சலிப்பாகிவிடும் என்பார்கள்.

  எனது நிகழ்ச்சிகளில் எப்போதுமே மேடையிலும் கூட்டம் அதிகமிருப்பதுகூட வாஸ்தவம் அப்படியிருந்தாலும் சலிப்பு ஏற்படாத வகையில் இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டார்களா –என்று நினைக்கும் அளவிற்கு எல்லாருமே கச்சிதமாய் நச்சென்று பேசுவதே வழக்கம்.

   அன்று விழாவின் கடைசி பேச்சாளராக லியோனி அழைக்கப்பட்டார். மனிதர் மைக்கைப் பிடித்ததும் தனது நகைச்சுவையா அரங்கத்தையே அதிரவைத்துவிட்டார். (மூப்பனார் அவர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்தது, காணக்கிடைக்காத காட்சி) வழக்கம்போல தினமலர் அந்துமணி பார்வையாளர்களிடையே அமர்ந்து, ஒரு தாயின் பரிவுடனும் பாசத்துடனும், தன் சிஷ்யனுக்கு கிடைக்கும் பாராட்டை பெருமிதத்துடன் ரசித்து, யாருக்கும் தெரியாமல் வழக்கம் போல நழுவிவிட்டார்.

     வி.ஐ.பி.களின் சாப்பாடும், தங்குமிடமும்

   குவைத்தைப் பொருத்தவரை வருகிற விருந்தினர்களுக்கு உபசரிப்போ, சாப்பாடு பிரச்சனையோ இருந்ததேயில்லை. வி.ஐ.பிகளுடன் எப்போதும் ஒரு படை துணைக்கு இருக்கும் உதவிக்கு.

   அதுவும் நாங்கள் அழைத்து வரும்போது சொல்லவே வேண்டியதில்லை. நம் வி.ஐ.பிகளை பெரும்பாலும் நண்பர் பெரியசாமியின் பிளாசா ஹோட்டலில் தங்க வைத்துவிடுவோம். அல்லது SAS Hotel  சிலருக்கு வீடு செளகர்யம் என்றால் வீட்டிலேயே ஜாகை போடுவதுண்டு.

  வி.ஐ.பிகள் எத்தனை நாட்கள் தங்குகிறார்கள் என்பதைத் திட்டமிட்டு, காலை, மதியம், இரவு என கணக்கிட்டு, நண்பர்கள் வீடு அல்லது ஒவ்வொரு நேரமும், லோக்கல் வி.ஐ.பிகளின் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்படும்.

  இது தவிர, Frontliners  புத்தகம் மூலம், இங்குள்ள நம்பர்-ஒந் முகல்மஹால் ரெஸ்டாரெண்ட், ஓரியண்டல், வில்லேஜின், தாஞ்சூர் ரெஸ்டாரெண்ட் சீசார், தர்பார் ரெஸ்டாரெண்ட் போன்றவற்றில் பெருமையுடன் அவர்களே விருந்தளிப்பார்.

  முகல்மஹாலில் அதன் அதிபர்களான திருவாளர்கள் அசோக் கால்ரா, சூரி, முகேஷ்குமார், ஓரியன்டல் ஷெட்டி, வில்லேஜின் சகாரியா என்றும் உதவிகரம் நீட்டுபவர்கள்.

  இது தவிர –தமிழ் வி.ஐ.பிகள் யார் வந்தாலும் சரி, அல்சஃபி எனப்படும் திருச்சி ஹோட்டலுக்கு விஜயம் செய்யாமல் போவதில்லை. டெல்லி பாஷாவும், பாவா சாஹிப்பும் அங்குள்ள அன்வர்,அக்பர் என அனைவரும் நம் வி.ஐ.பிகளை திக்கு முக்காட வைத்து விடுவது வழக்கம். ஹசாவியிலுள்ள ஹோம்டைப் ரெஸ்டாரெண்ட்டும் பிரபலமான ஒன்று.அங்கு நம்மூர் இட்லி, தோசை, முதற்கொண்டு அனைத்தும் பிரசித்தம்.

  நம்மூர் ஐட்டங்களுடன் அரபி உணவும் சுவைக்க விரும்புவர்களுக்கு அரபி ரெஸ்டாரெண்ட்களுக்கு அழைத்துப் போவதுண்டு. (உப்பு, புளி-காரமில்லாமல் சவ-சவ்வென தயாரிக்கப்படுவதுதான் அரபி வகைகள்!)

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles