விழா  எடுத்துப்பார்...  

                            

      சேஷன், தேசபக்தி அறக்கட்டளை என வைத்திருக்கிறார். அதற்கு நிதி சேர்க்கலாமா என்று கேட்டேன். ``வேணாம், இதை மேடையில் அறிவித்தால் நான் அதற்காக வந்தது போலாகிவிடும்’’ என்று மறுத்துவிட்டார்.

   சேஷனுக்கு பக்தி அதிகம். அது அறிந்து சில பக்தி மார்க்கங்கள் தங்களின் பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அவரை அழைக்க- ``நான் இங்கு பக்தியை பரப்ப வரவில்லை. அரபு நாட்டிற்கு வந்து நான் பூஜையில் கலந்துக் கொள்வது வேறு மாதிரியாக பேசப்படும் . பக்தி மனதில் இருந்தால் போதும்’’ என்று மறுத்துவிட்டார்.

   ஐந்து நாட்கள் எங்களுடன் இருந்தும் கூட, அவர் போனுக்காக ஒரு பைசா செலவு வைக்கவில்லை. சென்னைக்குச் சென்றதும் மனம் உருகி, ``குவைத் பயணத்தை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்’’ என்று பேக்ஸ் அனுப்பினது நெகிழ வைத்தது.

   டைரக்டர் கே.பாலசந்தர்:

   டைரக்டர் பாலசந்தரை நம்மூரில் எளிதாய் சந்திக்கவும் பேசவும் முடியுமோ என்னவோ தெரியவில்லை. அவர் கோபக்காரர் என்று அருகிலிருப்பவர்களே தயக்கம் காட்டுவதுண்டு?

   ஆனால் குவைத் தமிழ் ரசிகர்கள் மூன்று நாட்கள் அவருடன் இயல்பாய் நெருங்கி பழக முடிந்தது.

   பாலசந்தரிடம் ஒரு பழக்கம், தன்னைவிட எளியவராயினும், புதியவராயினும் அவர்களை அவர் பாராட்டத் தயங்குவதில்லை. தனது தகுதி மறந்து, உணர்ச்சி பொங்க பாராட்டித் தள்ளிவிடுவார். அது அவரது பெருந்தன்மை.

   ரஜினி -25 விழாவிலும், படையப்பா விழாவிலும் அவரது குருவாக இருந்தும்கூட சிஷ்யனை அவர் கெளரவித்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.

   நான்கு தலைமுறைகளாக முதல் இடத்திலேயே இருந்து ஜாம்பவான்கள் பலரையும் உருவாக்கின கே.பி.க்கு வேறு யாரும் விழா எடுக்கும் முன்பு நாம் எடுத்துவிட வேண்டும் என்று தோன்றிற்று.

   டி.வி.செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் அவர்கள் ஏற்பாடு செய்துக் கொடுத்தார். கே.பி.யிடம் விபரம் சொன்னபோது, ``நான் பொதுவா பாராட்டு விழாக் கெல்லாம் ஒத்துக்கிறதில்லை. எதுக்கு இதெல்லாம்?’’ என்று தயங்கினார். ``வேணுமா?’’

    ``வேணும் சார் உங்களின் 40 வருட சாதனையை பாராட்டுவதில் குவைத் தமிழர்களுக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும். ரசிகர்கள் வற்புறுத்தவே (ஏன் தொல்லை தாங்காமல்!) ``சரி பார்க்கலாம்” என்றார்.

     அப்புறம் விட்டிருவோமா என்ன-அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரை தொந்தரவு செய்து தேதியை வாங்கினேன். அந்த தேதியில் இன்னொரு விஷேசம்-அன்றுதான் அவரது சிஷ்யரான ரஜினிக்கு டெல்லியில் பத்மபூஷன் பட்டம் (30.03.2000) கொடுக்கப்பட்டது. அதே நாளில் `குரு’வுக்கு குவைத்தில் `படவுலக பிரும்மா’ எனும் பட்டத்தை நாங்கள் வழங்கினோம்.

    பாலசந்தர் வருகிறார் என்பதை அறிந்ததும்  அகில இந்திய அளவில் அவருக்கு குவைத்தில் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அவரது ஏக்துஜே கெலியே படம்! அனைவரும் விரும்பின படமாயிற்றே அது!.

    அந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை தரவே, விழாவை மிகபெரிய அளவில் நடத்துவது என்றும், பெரிய ஹால் பிடித்து பெரும்பான்மையான ரசிகர்களும் கண்டுகளிக்க செய்வது என்றும் முடிவெடுத்தோம்.

    குவைத்திலுள்ள வெற்றிப்பெற்ற இந்தியர்களை உள்ளடக்கி நண்பர்களின் துணையுடன் நான் தொகுத்து வெளியிட்டுவரும்  Frontliners  புத்தகம் மூலம் இந்தியாவில் Wehelp  எனும் அறக்கட்டளை உருவாக்கி உதவி வருகிறோம். இப்புத்தகத்தின் மூன்றாம் பகுதி மூலம் கார்கில் நிதிக்கு மூன்று லட்சரூபாய் வழங்கினோம். அப்புத்தகத்தை நடிகர் சரத்குமார் வந்து வெளியிட்டிருந்தார்.

   பொதுவாக, ஒவ்வொரு முறையும் புத்தகம் தயாரித்த பின்னர்தான் அதன் வெளியீட்டு விழாவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிப்போம்.

   ஆனால் கே.பி.விஷயம் நேர் எதிர். அவர் தேதி கொடுத்ததுமே அவரது பாராட்டு விழாவிலேயே Frontliners  நான்காம் பகுதியை வெளியிடலாம் என்று –தீர்மானித்து –குவைத்திலிருக்கிற பத்து இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில்  `ரேங்க்ஹோ’ல்டர்களை தொகுத்து வெளியிட்டு அவர்களுக்கு ஊக்கம் தரலாம் என ஆரம்பித்தோம்.

   அத்துடன் KB -40 எனும் சிறப்பு மலரையும் தயாரித்தோம், எங்களுடன் செளத் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டில் `சியாரா’ அமைப்பும் சேர்ந்துக் கொண்டன.

   பாலசந்தர் டி.வி.சீரியலில் எப்போதும் பிஸி. அவரை போனில் பிடிப்பதே சிரமமாயிருக்கும். அவரது தொடர்புகளை வரதராஜன் பார்த்துக் கொள்ளவே, எனது வேலை எளிதாயிற்று.

   ரிசர்வ் டைப்பான கே.பி.-குவைத்தில் மூன்று நாட்கள் அனைவருடனும் சகஜமாய் பேசி- பழகினது இன்ப அதிர்ச்சி. அவர் தனக்கு ஹோட்டலில் ரூம் போட வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. ``எது வசதியோ அதன்படி ஏற்பாடு செய்யுங்கள் போதும்!’’ என்றுவிட்டார்.

   ஹோட்டலை விட வசதியாக-பிரபல பிளாஸா ஹோட்டலில் பைனான்ஸ் கன்ட்ரோலராக இருக்கும் கவிஞர் பெரியசாமியின் வீட்டிலேயே அவருக்கு தங்க ஏற்பாடு செய்தோம். (பெரியசாமி எங்களுக்கெல்லாம் எல்லைசாமி மாதிரி. சிறந்த பண்பாளர், கவிஞர் மனிதாபிமானி).

   அன்றைய நிகழ்ச்சியில் குவைத் இந்திய தூதுவர் முதலில் கலந்து கொள்வதாக இல்லை. பிறகு பாலசந்தரை சந்தித்ததும். அவரும் கலந்துக் கொண்டார். தூதரக அமைச்சர் திரு.கருப்பையாவும் கலந்துக் கொண்டு KB -40 சிறப்பிதழை வெளியிட்டார்.

    பாலசந்தரின் படங்களிலிருந்து காட்சிகளையும் பாடல்களையும் குழந்தைகள் அரங்கேற்ற அவர் மிகவும் ரசித்தார்.

    செளத் இந்தியன் சொசைட்டி, ஹோம்வீடியோ போட்டி நடத்தி, அதை பாலசந்தரை வைத்தே தேர்வு செய்ய வைத்து, சிறந்த படத்திற்கு பாலசந்தர் அவார்டை அவர் கையாலேயே வழங்கிற்று.

    வழக்கம்போல வயதையும் மீறி பாலசந்தர் உற்சாகமாகவே பேச ஆரம்பித்தார். ``வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள் பேசின மேடையில்-சுமாராக பேசக்கூடிய நானும் பேசுவது தயக்கமாகதானிருக்கிறது. சென்னையில் உள்ள எனது இயல்பான டென்ஷன் வாழ்க்கையிலிருந்து மூன்று நாட்கள் விடுபட்டு சம்மந்தியை கவனிப்பதுபோல கவனித்துக் கொண்டு எனது வாழ்வில் பத்து வயதை குறைத்து உற்சாகம் தந்திருக்கிறீர்கள்’’  என்று கே.பி.உருகினார்.

   கே.பி.-சில விஷயங்களில் ரொம்ப கறார். அனாவசியமாய் அடுத்தவர்களுக்கு செலவு வைக்கக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார். பர்ச்சேஸிற்கு போனபோது கூட ரொம்ப யோசித்து யோசித்துதான் வாங்கினார்.

   இந்த நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து சினிம பிரபலங்களை வரவழைக்கலாம் என்று நினைத்தோம் கே.பி.``வேணாம்சாமி! எதுக்கு ஆடம்பரம்?” என்று மறுத்துவிட்டார். ``நான் சொன்னால் பலரும் வருவார்கள். ஆனால் எனக்காக தங்கள் சொந்த வேலையை விட்டுவிட்டு யாரும் வரவேணாம். வீண் செலவுகளை தவிர்த்து-ஏதாவது நல்ல காரியத்திற்கு உதவி பண்ணுங்கள்’’ என்று யோசனை தெரிவித்தார்.

   அதன்படியே இந்த நிகழ்ச்சியின் மூலம், ஊனமுற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவரும் அமர்சேவா சங்கத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கினோம்.

   வரதராஜன் ஏற்கனவே நாடகம் போட குவைத் வந்திருப்பதால் பர்ச்சேஸில் அவர் கைதேர்ந்திருந்தார். ஆனால் பாலசந்தர் பெரிதாய் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. படப்பிடிப்பிற்கு பயன்படும் திரைச்சீலைகள், வால்பேப்பர், பேனா, பென்சில் போன்ற ஸ்டேஷனரி பொருட்களில்தான் கவனம் செலுத்தினார்.

   உள்ளூர் ரசிகர்களுக்கு நெருங்கி பழகமுடியாத வாய்ப்பு குவைத் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதே மாதிரி உள்ளூரில் கிடைக்காத சுதந்திரம் அவருக்கு குவைத்தில் கிடைத்ததாக கே.பி.மனநிறைவோடு குறிப்பிட்டது எங்களுக்கு சுகமாயிருந்தது.

   இந்த மேடையில் வைத்து நண்பர்கள் அரசவை சேகரின் `என் வாசப்பூவே’ நூலும் பெரியசாமியின் `தளிர்கள்’ நூலும் பாலசந்தரால் வெளியிடப்பட்டது.

      டைரக்டர் பாரதிராஜா:

  பார்வைக்கு கொஞ்சம் முரடாகத் தெரிந்தாலும் பழகுவதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறார். டைரக்டர் பாரதிராஜா.

  கோபக்காரர், அத்தனை எளிதாய் யாரும் அவரை நெருங்கிவிட முடியாது என்பார்கள். சென்னையில் எப்படியோ தெரியாது. குவைத் பாரதி கலை மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த போது அனைவரிடமும் சகஜமாகவே பழகினார்

   தாஜ்மஹால் படம் சரியாக போகாததில் மனதிற்குள் தளர்வு இருந்தாலும்கூட அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

      வெளிநாட்டு பயணம் என்பது அவருக்கொன்றும் புதிதில்லை. ஜனவரியில் லண்டனிலிருந்து வந்த அழைப்பை ஏற்காத அவரை புகைப்பட நண்பர் யோகா வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார்.

   பொதுவாக சினிமாக்காரர்கள் என்றால் விமானத்தில் முதல்வகுப்பு டிக்கட் கேட்பார்கள் ஹோட்டலில் தனித்தனி அறைகள் போடச் சொல்வார்கள்.

   ஆனால், சொந்த செலவில் போகும்போது முதல்வகுப்பின் பயணம் செய்யும் பாரதிராஜா, பிறருக்கு வீண் செலவு வைக்கக்கூடாது என்று சாதா வகுப்பு போதும் என்றதுடன், தனக்கும் வண்ணப்பட யோகாவுக்கும் தனித்தனி ரூம்கள் வேண்டாம். ஒரே ரூம் போதும் என்று தெரிவிக்கவும் ஆச்சர்யமாயிற்று.

    நம் பிரபலங்கள் வெளிநாடு சென்று வந்ததும் அங்கு இட்லி சாம்பார் கிடைத்தது. தோசை கிடைத்தது என்று பெருமையாக எழுதுவதுண்டு. அதை மனதில் வைத்துக் கொண்டு கவிஞர் வைரமுத்து வந்தபோது, இட்லி-வடை ,பொங்கல், நம்மூர் சாப்பாடு என்று ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம்.

   பிரமாதமாக இருக்கிறது என்று சாப்பிட்ட அவர் ``இட்லி தோசையெல்லாம்தான் நம்மூரில் சாப்பிடுகிறோமே.. அரபிநாட்டு உணவு வகைகள் ஆர்டர் செய்யுங்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம்’’ என்றிருந்தார்.

  பாரதிராஜாவும் அதே மாதிரி கேட்ககூடும் என நினைத்து அவர் குவைத் வந்திறங்கியதும் இரவு சாப்பாட்டிற்கு இன்டர்நேஷனல் உணவு வகைகளை அவர்கள் தங்கியிருந்த பிளாசா ஹோட்டலில் அதன் பைனான்ஸ் கன்ட்ரோலரும் தமிழருமான பெரியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

   ஆனால் பாரதிராஜாவோ,``நாங்கள் பயணகளைப்பில் வந்திருக்கிறோம். ஏர் இந்தியாவில் நல்ல சாப்பாடும் கொடுத்தார்கள். ஆகையால் எனக்கு லைட்டாக ரசமும், கொஞ்சம் சாதமும் இருந்தால் போதும்!’’ என்றார்.

   `மண்வாசனை’ தந்தவராயிற்றே! எங்களுக்கு ஆச்சர்யம். வேறு ஏதாவது பெரிதாய் கேட்டிருந்தால்கூட ஏற்பாடு செய்திருக்கலாம். நடுராத்திரியில் ரசம்?

   எங்கேப் போவது? உடன் நண்பர் ராஜன் தன் வீட்டிற்கு போனில் ரசம் வைக்கச் சொல்லி வாங்கிவந்து கொடுக்க, மணக்க சாப்பிட்டார்.

   பாரதிராஜா கலகலப்பாக பேசுகிறார். ஆனால் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தால் உடன் மூக்கு சிவந்து விடுகிறார்.

   சாதா ரசிகர்கள் என்றாலும் சரி, பாரதிராஜா தோளோடு தோள் சேர்த்து, அரவணைத்து பழகுகிறார். படம் எடுத்துக் கொள்கிறார். அவர்கள் பரிசு பொருட்கள் கொண்டு வந்தால்,``எதுக்குப்பா இதெல்லாம்? நீ இங்கே என்ன வேலை பார்க்கிறாய்? குடும்பத்துக்கு என்ன அனுப்புகிறாய்-என்று கரிசனத்தோடு விசாரித்து. திருப்திப்பட்டால் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.

   கடைவீதிக்கு போகும்போது எதிர்வரும்- மறிக்கும் ரசிகர்களை கண்டு மிரளாமல் ``இது தான்யா உண்மையான அன்பு–இதுதான் என் சம்பாத்யம்’’ என்று உருகுகிறார். ``நான் உங்களுக்கெல்லாம் சினிமா கொடுத்ததை தவிர, வேறு என்னய்யா செஞ்சுட்டேன். எதுக்காக –இத்தனை பாசம்?’’ என்று கண் கலங்குகிறார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles