விழா  எடுத்துப்பார் ...  

                            

      

      அரபுநாட்டில் படமெடுக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. பாரதிராஜா, குவைத் நாட்டின் எண்ணெய் வளம் எண்ணெய் கிணறுகள், பற்றி நிறைய விசாரித்தார்.

   உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்கள், திருமணம், சம்பளம், உடைகள் என்று ஆர்வத்துடன் கேட்டவருக்கு, ``எனக்கும் ஷேக் போல உடை அணிய ஆசை. ஏற்பாடு பண்ணுவீர்களா?’’ என்றார் குழந்தைபோல.

   உடன் பிரபல கம்பெனியின் மானேஜரான நாகா துணி எடுத்து கொடுக்க திருச்சி ஹோட்டல் நடத்தும் டில்லி பாஷா ஒரு மணி நேரத்தில் தைத்துக் கொண்டு வந்துவிட்டார்.

   அந்த உடையை குவைத் ஷேக் ஒருவரே பாரதிராஜாவுக்கு அணிவித்து பூரித்துப் போனார். முதல்மரியாதை சிவாஜி போல ஆசைக்கும், விளையாட்டு சிந்தனைக்கும் வயதில்லை என்பதை இந்த ராஜாவுக்கு நிரூபிக்கிறமாதிரி இருந்தது.

   அவரது அடுத்த ஆசை-பாலைவன கப்பலை பார்க்க வேண்டும் என்பது. நண்பர் புகழ் `ஒன்றென்ன ஆயிரம் ஒட்டகங்களை காட்டுகிறேன் வாருங்கள்’’ என்று ஒட்டக காம்பிற்கு அழைத்துப் போனார். பாலைவனத்தில் அங்கே ஆடுகளை அடைப்பது போல ஒட்டகங்களை அடைத்து வைத்திருந்தனர். அவற்றிற்கு இவர் பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்தார்.

   பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை தேவதைகள் வருவார்களே... அது மாதிரி வெள்ளை ஒட்டகங்களை பார்த்ததும் இவரது மகிழ்ச்சி அதிகமாயிற்று.

   அந்த சமயம் குவைத்தி ஒருவர் ஒட்டகத்தில் ஏறி வர,`` சார்! நீங்களும் ஏறி பயணம் செய்கிறீர்களா? என்றதும்,``ஓ...யெஸ்! நான் ரெடி!’’ என்று கிளம்பினார். அந்த குவைத்தி முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு பணம் கொடுத்தால் அனுமதிக்கிறேன் என்றான். அவனுக்கு 750 ரூபாய் பேரம் பேசி, பணியவைத்து கொடுத்து சம்மதிக்க வைத்தோம்.

   ஆனால் அது கால்ஷீட் கொடுக்காமல் முரண்டு பண்ணிற்று. பிறகு அதற்கும் பிஸ்கட் கொடுத்து சரிபண்ணி எடுத்தோம்.

    `நம்மூரில் நான் ஷாப்பிங்கே போவதில்லை போனாலும் ஒன்று ரசிகர்கள் தொல்லை –அல்லது பொறுமை இருப்பதில்லை. இங்காவது சுதந்திரமாலய் எடுக்கிறேன் என்று சிட்டி செண்டரில் அலசோ அலச என்று அலசினார்.

    ``மனைவியிடம் எப்படியும் நல்ல பெயர் வாங்கிவிடுவதென்கிற தீர்மானமா?’’ என்று கேட்டேன்.

    ``ஹீம்...எங்கே! அந்த பாக்கியம் எந்த கணவனுக்கும் கிடைக்கப் போவதில்லை!’’ என்று சிரித்தார். அதை கேட்க சந்தோஷமாயிருந்தது. இவருக்கும் இதே கதிதான் போலிருக்கிறது!

     `தாஜ்மஹால்’ படம் பற்றியும், மகன் மனோஜ் பற்றியும் கேட்கலாமா கூடாதா என்கிற தயக்கத்துடன் அணுக, ``எது வேண்டுமானாலும் கேளுங்க’’ என்று தட்டிக் கொடுத்தார் (நிஜமாலுமே)

   ``மண்வாசனை, கிழக்குச்சீமையிலே போன்று தமிழ் மணம் கமழ பெயர் வைத்த நீங்கள் தாஜ்மஹால் என்று பெயரிட்டதேன்?’’

    ``சினிமாவில் எப்போதுமே இது ஒரு சாபம். ஒருவர் ஒரு கோணத்தில் படம் எடுத்து வெற்றிகண்டு விட்டால், அதே மாதிரியான எதிர்ப்பார்ப்பு வளர்ந்துவிடுகிறது. முன்பு 16 வயதினிலே, கிழக்கேப் போகும் ரயில் தான் எடுத்ததும் –பாரதிராஜாவுக்கு கிராம படம்தான் எடுக்கவரும் என்று பேச ஆரம்பித்தார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்க சிகப்பு ரோஜாக்களை தந்தேன். பிறகு கிராமபடம், காதல், அரசியல் என்று வெரைட்டியாக தர ஆரம்பித்தேன். படதலைப்பு விஷயத்திலும் கூட அப்படிதான்.

   காதல் எனும் புனிதத்தை குறிப்பிட காதல் சின்னமான `தாஜ்மஹால்’ பெயர் பொருந்தம்மாக இருக்கும் என்று கருதி வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

   ``இந்த `’ சென்டிமென்ட் உங்களுக்கு எப்படி வந்தது? ராதிகா, ராதா. ரத்தி. ரேவதி, ரஞ்சனி, ரஞ்சிதா, ரேகா என்று நடிகைகளுக்குப் பெயர் வைத்த நீங்கள் இப்போது அதை விட்டு விட்டதேன்?’’

   பாரதிராஜாவுக்கு, சற்று கேலிப் புன்னகையை வீசி, ``நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ தெரியாது, எனக்கு இந்த மாதிரி சென்டிமென்ட்களிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. இந்த பெயர் விவகாரமெல்லாம் வெறும் விபத்து. புதுமுகங்களை புகுத்தும்போது ராதிகா, ரத்தி என பெயரிட்டது. அந்த நேரத்தில் தோன்றின யோசனைதான். பிறகு அருணா, விஜயசாந்தியை அறிமுகப்படுத்தலியா? முதலில் இரண்டு பெயர்களில் `’ இருக்கவும், பத்திரிகைகள் `’ எனக்கு ராசி என எழுதி எழுதி சுற்றியிருப்பவர்களும் அதை நம்பி, அதே மாதிரியே வைத்துவிடலாமே என்று தூண்டினர்.

    என்னால் அறிமுகப்படுத்தப்படும் நடிகைகளும்கூட இதை நிஜமென நம்பி, `’வில் பெயர் ஆரம்பித்தாலே, தாங்களும் வெற்றிபெற முடியும் என நினைத்து, அப்படியே பெயர் வைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கவே –அதற்கு நான் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

  ``நீங்கள் பல நடிகர் –நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பல ஆர்டிஸ்ட்களை உருவாக்கியிருக்கிறீர்கள்-இவர்களில் உங்கள் பெயர் சொல்லும்படி இருப்பது யார் யார்?’’

    ``நான் அறிமுகப்படுத்தினாலும்கூட, அவரவர்கள், அவரவர்களின் சொந்த திறமையில்தான் வளர்கிறார்கள். அதனால் யாரும் என் பெயரைச் சொல்ல வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பாரதிராஜாவின் பெயரைச் சொல்கிற மாதிரி இருக்கிற ஒரே நபர் பாரதிராஜாதான்.

    ``தமிழ் சினிமாவில் யதார்த்தமாகவும், கிராமியமனம் கமழவும் இனிய சங்கீதத்தை வழங்கியவர்கள் என்கிற ஆதங்கத்தில் இதை கேட்கத் தோன்றுகிறது. இளைராஜாவை விட்டு ஏன் பிரிந்தீர்கள்? திரும்ப அவருடன் எப்போது சேரப் போகிறீர்கள்?’’

    ``இளையராஜா ஒரு ஜீனியஸ் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து யதார்த்தத்தை வெளிப்படுத்தினோம் என்பதும் உண்மை. எங்களிடையே உள்ள பாசம்-உணர்வுகளுக்குள் இப்போதும் எந்த விரிசலுமில்லை. சில நேரங்களில் சில விஷயங்கள் காரணம் தெரியாமலேயே நிகழ்ந்து விடுகின்றன.

    அவர் என்னுடன் மட்டுமன்றி, பல்வேறு ரசனை திறமையுள்ள டைரக்டர்களுடனும் பணியாற்றி, தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அது மாதிரி நானும் பலருடனும் இணைந்து பலவித பரிவர்த்தனைகளையும் வெளிப்படுத்த வேண்டாமா? எனது திறமையின் இன்னொரு வெளிப்பாடும் முகமும் வெளிச்சத்துக்கு வரவேண்டுமே.

   நிச்சயம் நான் முழுவதும் கற்றவனில்லை. திறமை முழுவதையும் இதுவரை வெளிப்படுத்திவிட்டதாகவும் நினைக்கவில்லை. காலகட்டத்திற்கு ஏற்ப-ரசனைக்கு ஏற்ப நானும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. புதிய பரிணாமங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன்! என்னைக்கிருந்தாலும் திரும்பவும் இளையராஜாவும் நானும் இணைவோம் என்பது உறுதி.’’

   ``பாரதியாரின் மேல் உள்ள பற்றுதான் உங்களை இந்த பெயர் வைத்துக்கொள்ள தூண்டிற்றா? அப்படியானாலும் அவருடைய கருத்துக்களை வலியுறுத்தி படங்கள் எடுப்பீர்களா?’’

   ``மன்னிக்கணும்.. பாரதியார் ஒரு மகான். நான் ஒரு சாதாரணன். அவருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளர்ந்து விடவில்லை. என் சகோதரி மற்றும் சகோதரர் பெயர்களை இணைத்து இப்படி வைத்துக் கொண்டேன். அது பாரதியாரை ஞாபகபடுத்தினால்-அதற்காக நிச்சயம் பெருமைப்படுகிறேன் நன்றி’’.

   ``சினிமாவுக்கு ஏன் வந்தோம் என்று நினைத்ததுண்டா?’’

    ``சத்யமா இல்லை. ஊரில் இருக்கும்போது பெரிய அளவில் எனக்கு படிக்கமுடியவில்லை. அதற்கான வசதியும் இல்லாமல் போயிற்று. பிழைக்க வழி தேடினபோது பலவித எண்ணங்கள் மனதில் ஒடின.

   சின்ன வயதில் நிறைய கதைகள் படிப்பேன். கதை எழுதி கதாசிரியராக மாறலாமா என யோசித்திருக்கிறேன். கதாசிரியன் என்றால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத்தான் போய் சேரமுடியும்.

   அடுத்த சாய்ஸ் பாலிடிக்ஸ்! அதில் நண்பர்களைவிட விரோதிகளே அதிகம் உருவாகிவிடுவர். புகழ் கிடைத்தால் கூட இன்று ஜெயித்தாலும் நாளை தோல்வி என்கிற நிலைமை.

    சினிமா ஒன்றுதான் உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி ஏற்கிற மீடியா. 300 பக்க விஷயத்தை இரண்டரை மணிநேரத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துவிட முடிகிற பவர் இதற்கு இருப்பதால் இந்தத் துறையை நானே விரும்பி தேர்ந்தெடுத்தேன். எத்தனை தோல்விகள் வந்தாலும் இன்னும் விரும்பிக் கொண்டேயிருப்பேன்.

   காரணம் நாம் எங்கே போனாலும், என்னை அடையாளம் கண்டுக்கொண்டு விஷ்பண்ணுகிறார்கள். பேச வருகிறார்கள். நான்கு பேரை கவர முடிகிற துறை சிறப்பாய் அடையாளம் காட்டப்படுகிற துறையில் இருக்கிறேன் என்பதே பெருமைபடுகிற விஷயம்தான்! இந்த அபரிமித பேர்-புகழால் சுதந்திரமும்- சுதந்திரமாய் வெளியே போக முடியாமல் போவதும் ஒரு குறைபாடு தான் என்றாலும் கூட அதை நான் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.’’

   ``பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் உங்களை பாதிப்பதுண்டா?’’

   ``நிறையவே பாதிக்கின்றன. என் சிந்தையை ஆக்கபூர்வமாய் செயல்படவிடாமல்,டிஸ்டர்ப் பண்ணிவிடுகின்றன. அதனால் அந்த மாதிரி விஷயங்களை நான் பார்ப்பதுமில்லை. அவற்றிற்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.’’

   ``உங்களது முன்கோபம் பற்றி....?’’

   ``ஒரு காலத்தில் நான் ரொம்ப கோபக்காரனாக, தடாலடியாக இருந்தது உண்மை. ஆனால் இப்போதெல்லாம் ரொம்பவும் அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளேன், இருந்தாலும் கூட ஒரு விஷயத்தை மட்டும் என்னால் ஜீரனிக்க முடியவில்லை.

    நான் ஒரு டைரக்டர் எனக்கு சில விஷயங்களை தெரிந்திருக்கலாம்- என் துறையில் நான் தேர்ச்சி பெற்றிருக்கலாம். அதற்காக- உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்துமே எனக்குத் தெரிந்திருக்கும்-அல்லது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்து கேள்விமேல் கேள்வியாய் கேட்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

   நானும் சராசரி மனிதன்தான், சினிமாவிற்கும் அப்பாற்பட்டு எதற்கு எனக்கு இத்தனை முக்கியவத்துவம் கொடுக்க வேண்டும்! எனக்கென்றில்லை எந்த சினிமா கலைஞன் என்றாலும் சரி, அவனது திறமையை ஆராதியுங்கள்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles