விழா  எடுத்துப்பார்...  

                            

      

      ரசியுங்கள். பாராட்டுங்கள் அதற்கப்பால் தனிமனித ஆராதனை,போற்றல்-புகழ்ச்சி எல்லாம் எதற்கு? அவரவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள்,பொறுப்புக்கள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு வெறித்தனமான ஆராதனைகள் எதற்கு என்று நினைக்கும்போது கோபம் எழுகிறது.

    ``எத்தனையோ நடிகர்களை உருவாக்கி வெற்றிபெற வைத்த நீங்கள் –உங்கள் மகனை மட்டும் வெற்றிபெற வைக்க முடியாமல் போனதேன்?’’

    ``சொந்த மகனை வைத்து படமெடுக்கும் போது ஏற்படும் இயல்பான தர்மசங்கடங்களுக்கு நானும் விதிவிலக்காக இருக்கவில்லை என்பது உண்மை, ஐயோ... இவனை இந்த பாடு படுத்துகிறோமே.... என்று அப்பாவாய் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயம்.

    தாஜ்மஹாலில் வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர்கள் எல்லோருமே தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருப்பது நிஜம். இந்த பாரதிராஜா மட்டும்தான் தோல்வியடைந்திருக்கிறான்.

   ஜனங்கள் என்னிடம் யதார்த்தத்தையே எதிர்பார்க்கிறார்கள். எப்போதும் கொடுக்கும் யதார்த்தத்திலிருந்து சற்று விலகி....ஃபேன்டளியாக கற்பனையாக கிராமத்தை காண்பித்தால் ரசிப்பார்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன். ஜனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இனி நான் உஷாராக இருப்பேன். ரசிகர்கள் எப்போதும் யதார்த்த பாரதிராஜாவையே எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த தோல்வி எனக்கு தானே தவிர- நடிகன் மனோஜிற்கு அல்ல. அவர் நிச்சயம் சிறந்த கலைஞன் தான். என் கணிப்புகள் பெரும்பாலும் தவறுவதில்லை. மனோஜ் சிறந்த நடிகனாக –பேரும்புகழும் பெறப் போவது உறுதி.’’

      கவிஞர் வைரமுத்து:

  கவிஞரின் நாக்கில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கூட்டத்தை தன்பக்கம் வசப்படுத்திவிடும் ஆற்றல். குவைத்தின் பாரதிகலை மன்ற நிகழ்ச்சியில் பேசும் போதும் அப்படித்தான்.

   ஏற்றி, இறக்கி எங்கே ஆழம் கொடுக்கணும், எங்கே குரலை உயர்த்தனும், எங்கே ஜோக்கடிக்கணும், எங்கே உணர்ச்சிபூர்வமாக பேணும் என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படி. தமிழ் என்று சொல்லும்போது ஒரு ஆவேசம். மைக்கின் முன்னால் வந்து நின்று அப்படி... சட்டையை சுருட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். பாருங்கள், இரவு பனிரண்டு வரை எவரும் அசையவில்லை.

   அது அவரது வெற்றி என்பதைவிட, தமிழுக்கு அவர் வாங்கித் தந்திருக்கிற வெற்றி.

   பாரதிகலை மன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

தமிழன்; ``மற்ற கவிஞருக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என் நிறம் என்று சொல்வார்கள். ஆமாம், இது தமிழனின் தனி நிறம்.வெயில்தேசத்து நிறம். உழைப்பின் நிறம், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அம்மண்ணை தமிழன் மேம்படுத்தும் நிறம்.

   வெப்ப நாட்டில் பிறந்த அனைத்திற்குமே வீரியம் அதிகம். மலையில் பூக்கிற பூவைவிட, தரையில் பூக்கும் மல்லிகைக்கு வாசம் அதிகம். மலைநீரைவிட, ஓடை நீருக்கு சுவை அதிகம், மலை பாம்பைவிட, கட்டுவிரியனுக்கு விஷம் அதிகம். அப்படியிருக்கும் போது வெப்பநாட்டில் பிறந்த தமிழன் மட்டும் எப்படி சோடை போவான்?

    சிங்களத் தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ் தோழன் அழகு செய்தான். எகிப்து நாட்டின் நதிகரையில் இளந்தமிழர் பவனி வந்தனர். இன்று ஐரோப்பியர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் தமிழனின் மூளை ஏகமாய் விலை போகிறது.

    தமிழன் எங்கு வேண்டுமானாலும் உழைப்பான் –தமிழ்நாட்டைத் தவிர –என்பார்கள்.

    இரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒரு டீகடை உருவாகிறது. இரண்டு புலவர் சந்தித்தால்  மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் வேண்டும் என்பார்கள். இரண்டு மராட்டியர் சந்தித்தால் ஒரு தொழிற்சாலை உருவாகும் இரண்டு பஞ்சாபிகல் சந்தித்தால் ஒரு துப்பாக்கி உருவாகும்.

    இரண்டு தமிழர்கள் சந்தித்தால்....

   முதலில் சந்திக்கட்டும். அப்புறம் மற்றது பற்றி பேசலாம் என்று கிண்டலாக சொல்வார்கள். நம்மவர்கள் சந்திப்பதே பெரும் காரியமாக கருதப்படுகிறது. அந்தக் கருத்தை மாற்றி ஒரு ஒற்றுமை எழ வேண்டும். நம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல.

   மிடுக்கும் துணிச்சலும் மிக்கவர்கள். அஞ்சாநெஞ்சினர். அதற்கு கவிஞர் பாரதியே ஒரு உதாரணம்.

   சுதந்திர போராட்ட சமயத்தில் மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்த சென்னை வந்திருந்தார். அருகில் ராஜாஜி, சத்யமூர்த்தி, வா.ரா.போன்றவர்கள் நிற்கிறார்கள்.

   பாரதி விறுவிறுவென்று உள்ளே போனார். அவர் காந்தியிடம் முன்னரே அப்பாயின்ட்மென்ட் வாங்கவில்லை. காற்றுக்கும் தமிழுக்கும் எதற்கு அப்பாயின்ட்மென்ட்?

    ``நான் புதன்கிழமை ஒரு நிகழ்ச்சி வைத்திருக்கிறேன். உங்களால் தலைமை தாங்கி நடத்தித் தர முடியுமா?’’ என்று கேட்டார்.

    புதன்கிழமை எனக்கு வேறு நிகழ்ச்சி இருக்கிறது. வியாழன் வருகிறேன்.’’ என்றார் காந்தி.

    ``வியாழன் எனக்கும் வேறு நிகழ்ச்சி இருக்கிறது வருகிறேன். என் நிகழ்ச்சிக்கும் உங்களது ஒத்துழையாமை இயக்கத்திற்கு நன்றி!’’ என்று சொல்லிவிட்டு வந்தபாடே திரும்பி போய்விட்டான் பாரதி.

    சாகும்வரை அவனிடம் அந்த கம்பீரமும் விரைப்புமிகுந்தது. தமிழ் எனும் மின்சாரம் அவனது உடலில் பாய்ந்துக் கொண்டிருந்தது.

கவிதை என்பது-

 -- வானத்தை அளந்து உள்ளங்கையில் உருட்டிவிடுவது;

 -- கடலை திரட்டி சங்கில் வைத்து விநியோகிப்பது.

 -- பிரபஞ்சத்தை சின்னச்சின்ன துளியாக்கி பார்வைக்கு சமர்விப்பது;

    இசையமைப்பாளர்கள் சப்தங்களை இசையால் கிழித்துப் போடுகின்றார்கள். கவிஞனோ அவற்றை தமிழால் தைத்து –தருகிறான்!

   கவிதைக்கு வார்த்தைகள் ரொம்ப முக்கியம். வார்த்தைகளை கவனமாக யோசிக்க வேண்டும்.

   கற்பனையில் வருவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடாது. சொற்களை நிறுத்தி வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.இடம்-பொருள் பார்த்து அவற்றை பிரயோசிக்க வேண்டும்.

   உதாரணத்துக்கு `தஞ்சாவூர் மண் எடுத்து....’ பாடலை எடுத்துக் கொள்வோம்.

   அந்த சிலையின் கழுத்துக்கு –சங்ககிரிமண் இடுப்புக்கு கஞ்சனூர்;

   கூந்தலுக்கு கரிசல்காட்டுமண்; உதட்டுக்கு தேனூர்; காலுக்கு பட்டுக்கோட்டை; நகத்துக்கு பாஞ்சாலங்குறிச்சி;

   வார்த்தைகளை மட்டுமின்றி எழுத்தை இடம் மாற்றினால் கூட, பொருள் வித்தியாசப்பட்டுவிடும். உதாரணத்திற்கு ஒலி-ஒளி-ஒழி வலி,வளி,வழி!

   அதே மாதிரி வார்த்தை பிரயோகங்களுக்கு இடம் பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு –வா ஒரு சொல் தான்.

   வா-என்று தாய் அழைத்தால் அதற்கு அர்த்தம் ஒன்று. நண்பன் அழைத்தால் வேறு அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து வேறு பெண்னை அழைத்தால்... அது ஃபயர் படம்! ராத்திரியில் குழந்தையை தூங்க வைத்து மனைவி கணவனை அழைத்தால்... அதற்கு அர்த்தம் வேறு!

   அந்த நாட்களில் –புகழேந்தி எனும் கெட்டிக்கார புலவன் இருந்தான். அங்கே ஒட்டக்கூத்தன் எனும் விமர்சகன். அவன் அதைவிட கெட்டிக்காரன். அவன் எப்போதும் தன் கையில் குரடு ஒன்று வைத்திருப்பான். பிழை கண்டுபிடிப்பதே அவனது வேலை!

   புலவனின் பாடலில் பிழை கண்டுபிடித்து, பிழை ஒன்றுக்கு ஒரு காதை எடுத்துவிடுவான்.

  அரசசபையில் ஒரு சமயம் புகழேந்திப் புலவர் ``மல்லிகையே வென்சங்கா, வண்டு ஊத’’ என்று பாடல் ஒன்று பாட, ஒட்டக்கூத்தன் அதில் பொருள் பிழை இருக்கிறதென்றான். உடனே சபையில் இருப்பவர்கள் திகிலோடு புகழேந்தியை பார்த்தனர்.

   புலவனுக்குத் தண்டனை ஒரு காதா, இருகாதா இல்லை காதே இருக்காதே என அச்சம்.

    ஒட்டக்கூத்தன்,``புலவரே! மல்லிகையை சங்கு என்கிறாய். வண்டு அதன் மேலிருந்து ஊதுகிறது  என்கிறாய். இது எப்படி சாத்தியம்? சங்கை மேலிருந்து ஊத முடியாது. ஒலிவராது. பின்பக்கம்தான் ஊத வேண்டும்!’’ என்று விளக்கம் சொல்ல –சபை சபாஷ் என்று நிமிர்ந்து அமர்ந்தது.

   இதற்குப் புலவர் என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தது. புகழேந்தி எழுந்தார். ``மன்னிக்கணும். கள் குடிப்பவனுக்கு தலை எது, கால் எது என்று தெரிவதில்லை. அதுபோல்தான் கள் குடிக்கும் வண்டும், மல்லிகையின் மேல் ஊதிற்று!’’ என்க சபையில் ஒரே ஆரவாரம்.

   தமிழ்பற்றி இவ்வளவு பேசும் நான் ஏன் திரைப்படத்திற்கு வந்தேன்? எப்படி வந்தேன்?.

    ``நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன்?’’ –வைரமுத்து

   ஒரு படைப்பாளினின் பணி, வெறுமனே படைத்து போட்டுவிட்டு போய்விடும் வடு மட்டுமல்ல.

   அவற்றை கட்டிக் காப்பதும், தூசு துடைப்பதும், துலக்கி வைப்பதும், போகுமிடமெல்லாம் சுமப்பதும், சுமந்து சென்று வெளியே பறைசாற்றுவதும் அவனது பொறுப்பு; கடமை!

   பாமர-படிக்காத தமிழனுக்கு இன்று திரைப்படம் தான் வாசக சாலையாய் இருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழ்படிக்க வழியில்லை, வாய்ப்பில்லை.

   அவர்களுக்கெல்லாம் திரைப்படமும், பாடல்களும் தான் இன்று தமிழை போதிக்கிறது. புரிய வைக்கிறது. சினிமா பாடலுக்கு அத்தனை வீரியம் இருக்கிறது. அதுதான் நவீன உலகத்தின் புதிய புத்தகம்.   அதில் அங்கங்கே சில தவறுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக சினிமாவை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிட முடியாது.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles