விழா  எடுத்துப்பார்...  

                            

      

      உதாரணத்திற்கு சிம்ரன், ரம்பா போல கவர்ச்சி நடிகை ஆடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு -``மதுவைப்பார்- மாதுவைப்பார். இதில் எங்கு அதிக போதை என்றுதான் எழுதியாகணும்! அங்கு போய் சித்தர் பாட்டை தர முடியுமா என்ன?

    இந்த மாதிரி அவதிக்கடையிலும் ஒரு ரோஜா, கிழக்குச் சீமையிலே, உயிரே, கருத்தம்மா, போன்றவைகள் கொடுக்க முடிவதில் சந்தோஷம் இருக்கவே செய்கிறது.

   எனது கவிதை இளம் பருவத்திலேயே வெளிப்படுத்தப்பட்ட ஒன்று. நான் பி.ஏ. இரண்டாமாண்டு படிக்கும்போதே புத்தகம் எழுதி, அது பக்கத்து பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

   ஆனால்–எழுதினது மாணவன் என்பதால் பின்னாளில் அது நீக்கப்பட்டது. அந்த சூழலில் எனக்கு ஒரு வெளிச்சம் வேண்டாமா? அங்கீகாரம் வேண்டாமா?

  1990ல் டைரக்டர் பாரதிராஜாவை போய்சந்தித்து எனது `வைகறை மேகம்’ என்னும் புத்தகத்தை கொடுத்து படித்துப் பாருங்கள் என்றேன்–விரைப்புடன்.

   உடன் அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

  ``நீங்கள் வந்தபின்பு திரைப்படத்துறையில் பெரியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. யதார்த்த சூழ்நிலை, கேமிரா, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் புதுபரிணாமமும், ஞானமும் ரசிகனிடம் வளர்ந்திருக்கிறது. ஆனால் பாடலில் மொழி மட்டும் மாறவில்லை. எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்  மாற்றிக் காட்டுகிறேன் என்றேன்.

  அவர் அப்போது கல்லுக்குள் ஈரம் படபிடிப்பிற்காக கிளம்பிக் கொண்டிருந்தார். விமான பயணத்தில் படிக்கலாம் என்று என் புத்தகத்தை பெட்டியில் போட்டுக் கொண்டார்.

   விமானத்தில் புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கம் புரட்டினதுமே அவர் அசந்துப் போயிருக்க வேண்டும். திரும்பி வந்ததும் `உன் புத்தகத்தை வானத்தில் படித்தேன்’ என்றார்.

   உடன் நான்,`உயர்ந்த விஷயங்களை உயர்ந்த இடத்தில்தான் படிக்க வேண்டும்’ என்றேன் நகைச்சுவையுடன். `திமிர் உனக்கு போகாதுய்யா!? என்று சொல்லி என்னை அவர் அனுப்பிவிட்டார்.

   பிறகு – என் மனைவியின் முதல் பிரசவத்திற்கு வேண்டி விடுப்பு எடுக்க நான் அலுவலகம் போன போது பாரதிராஜாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

   நாங்கள் எதிர்ப்புக்கிடையில் காதல் மணம் புரிந்தவர்கள். மனைவிக்கு உதவவோ துணையாக இருக்கவோ யாருமில்லை. மனைவிக்கோ தலைபிரசவம். என் பாடலுக்கும் அன்று தலைபிரசவம்.

   எனது பலவருட கனவு நனவாகப் போவதில் ஆனந்தப்பட்டு டாக்டரம்மாவிடம் எனது மனைவியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அட்லாண்டிக் ஹோட்டலுக்கு ஓடினேன்.

    அறை எண்: 410.

    அங்கே இளையராஜா, கங்கை அமரனெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். என்னை அமரவைத்து ``நீ நல்லகவிஞனாக இருக்கலாம். ஆனால் டியூனை கேட்டதும் ஓடிப் போவார்களே அதிகம்’’ என்றுச் சொன்னார்கள்.

   ``சரி, சிட்சுவேஷனைச் சொல்லி என்னை டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்!’’ என்றேன்.

    ஒரு வேளையில்லா இளைஞன் –மலைவேளை –கனவுகளை நேசிக்கும் அவன் பாடவேண்டும் என்று மொட்டை இளையராஜா பாடிக் காட்டினார்.

   எனக்கு மூளையில் பதியவில்லை. இன்னொருமுறை என்றேன். பாடினார். மூன்றாவது முறை பாடச் சொன்னதும் இளையராஜாவுக்கு என் பேரில் நம்பிக்கை விட்டுப் போனது. தன் உதவியாளர் சுந்தர்ராஜனிடம் ,`நீ பாடிக்காட்டு’’ என்றார்.

   ``இல்லை...இல்லை நீங்களே பாடுங்கள்?’’ என்றேன்.

   அவர் பாடிவிட்டு, ``அவசரமில்ல. எழுதி நாளை எடுத்துவா! என்றார். ``இல்லை இப்போதே தருகிறேன் என்று `இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடலை விளம்பினேன்.

   அவர்கள் மட்டுமில்லை, பாரதிராஜாவும் அசந்துப் போனார்கள். இதுதான் என் முதல் பிரவேசம்.

   யாரையுமே  நம்பாத டிபார்ட்மென்ட் –சினிமா . அங்கே இருப்பவர்கள் ஐஸ் வாட்டரைக்கூட ஆற்றிதான் குடிப்பார்கள். சினிமாவில் நுழைவது கடினம். இரும்புக் கோட்டையான அதில் நானோ காற்றுப் போல நுழைந்தேன். அதற்குக் கதவு திறந்து விட்ட டைரக்டர் பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் நான் என்றென்றைக்கும் நன்றிச் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

    விமர்சகர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கவிழ்க்கலாம்.பிரபல வித்வான்களைவிட சுப்புடுவுக்கு அதனால்தான் புகழ் அதிகம்.

    `அந்தி மழைப் பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ –என்று ராஜபார்வையில் ஒரு பாடல்.

    இந்த பாடலுக்காக விமர்சகர்கள் என்னை போட்டு துவைத்து விட்டார்கள். அப்பாட்டை பாடும் கமல் பிறவிகுருடன். அவனுக்கு எப்படி மழைத்துளியில் இருக்கும் முகத்தைப் பார்க்க முடியும் என்பது கேள்வி.

    கேள்வி சரிதான்.

    ஆனால் படத்தையும், அது எந்த சூழ்நிலையில் வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்த பாடலை படத்தில் பாடுவார். கமல் வயலின் வாசிப்பார் எஸ்.பி.பி.பாடினதால் நாயனுக்கு சந்தோஷத்தில் கற்பனை பறந்து அப்படி பாடினான். அதில் என்ன, தவறு இருக்கிறது? குருடன் கற்பனை செய்யக்கூடாதா என்ன?

    நான் இதுவரை 4000 பாடலுக்குமேல் எழுதியிருக்கிறேன். இதில் 3990 பாடல் மெட்டுக்குதான் எழுதினேன்.

   கண்ணுக்கு மையழகு, நீ காற்று –நான் மரன், விழியில் நுழைந்து.. இப்படி வெகு சில மட்டுமே நான் நேராய் எழுதிக் கொடுத்தது.

   மெட்டு ஏன் போடுகிறார்கள்?

   ஒரு பாடலுக்கு மனநிலை முக்கியம். காலை, மாலை, இரவு, பாடும் நபரின் வயது. இப்படி பல விஷயங்கள் முக்கியம்.

   நெஞ்சில் ஓர் ஆலயம் –படம்.

   கண்ணதாசன், விஸ்வநாதன் ராம்மூர்த்தியெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். டைரக்டர் ஸ்ரீதர் காட்சியை சொல்கிறார்.

   ``புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாககிடக்கும் கணவன், மனைவியிடம் நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறான். உடன் அவள் பாட வேண்டும்’’ என்று ஸ்ரீதர் சொன்னதும் கவியரசர் ``நான் ரெடி, உடனே பாட்டு தருகிறேன்’’ என்கிறார்.

    ஆனால், டைரக்டரோ ``இல்லை மெட்டு போட்டு தான் பாட்டு எழுதணும் என்கிறார் அப்பாடல் விசும்பலுடன் வர வேண்டும்- என்கிறார்.

   ஒரு பெண்ணிற்கு உடல் தேவையை விட மனத்தேவை முக்கியம். உன் சுகம்போதும். முத்தம் போதும்; உன் வாசம் போதும்; உன்மார்பில் சாய்ந்தது போதும்; காயாத உன் எச்சில் போதும்- என்று அவள் நினைத்தால், அவளை கட்டாயப்படுத்தக்கூடாது.

   ஸ்ரீதர் எதிர்பார்த்தபடி அன்று போடப்பட்ட மெட்டுதான் (சொன்னது நீ தானா..) சொல்! சொல்!

   ரோஜா படத்தில் எனக்கொரு அனுபவம்.

   திருநெல்வேலி பெண் காஷ்மீர் பணி பார்த்து பரவசப்பட்டு வெட்கத்துடன் நாயகனை தழுவிக் கொள்கிறாள். அதற்கு ஒரு பாட்டு வேணும் என்றார் மணிரத்னம்.

   `இது காஷ்மீரமா-இங்கு கார்காலமா; எந்தன் கோயில் புறா, இந்த குளிர் தாங்குமா?

    இதை நான் எழுதிக் கொடுத்ததும், மணிரத்னம் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டி `பாட்டு பிரமாதம்!’ என்று வரிக்கு வரி பாராட்டினார். `அழகான வர்ணனை, அற்புதம்’ என்றுச் சொல்லவும் எனக்கு உச்சி குளிர்ந்துப் போயிற்று.

   அத்தனை பாராட்டினவர் கடைசியில், ``ஆனால் இந்தப் பாட்டு வேணாம். வேறு எழுதிக் கொடுங்கள்!’’ என்றார். எனக்கு அதிர்ச்சி. எதுவும் விளங்கவில்லை.

    ``சார்! நீங்கள் என்னை பாராட்டினீர்களா... இல்லை அடித்தீர்களா? இது ஏன் வேணாம்? சொல்லுங்கள்!” என்றேன்.

    ``சொல்றேன், காஷ்மீர், கோயில்புறான்னு எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா ரசிகனுக்கு அப்புறம் விஷீவலாக தர எனக்கு என்ன இருக்கு? அதனால எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து ரசிகனை யூகிக்க வைக்கிற மாதிரி எழுதுங்க!’’ என்றார்.

   பிறகு மாற்றி எழுதிக் கொடுத்ததுதான் புதுவெள்ளை மழைபொழிகிறது....? பாடல்.இதில் அவர் எதிர் பார்த்த குளிர் இருக்கிறது. இது எந்த ஊரில் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகனை எதிர்பார்க்க வைத்து-படத்தில் பார்க்கும்போது பதில் கிடைக்கும்படி செய்திருப்பது மணிரத்னத்தின் ஸ்பெஷல்!

   இந்தக் காட்சிப் பற்றி ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்.

   ``அந்தக் காட்சியில் வருவது நிஜ பனிமழை இல்லை. நிஜ பனிமழையை படம்பிடிக்க முடியாது என்பதால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தெர்மோகால் வாங்கி, அரைத்து தூள் பண்ணி எடுத்துபோய் தூவினார்கள். அது கிரேட் ஸீக்ரட்! தயவு செய்து இதை நான் சொன்னேன்னு யாரும் டைரக்டர் மணிரத்னத்திடம் சொல்லிவிடாதீர்கள்’’ என்று இந்த சம்பவத்தை வைரமுத்து தெரிவித்தார்.

   (ஆகையால் தயவு செய்து யாரும் இதை மணிரத்னத்திடம் சொல்லிவிட வேணாம் ப்ளிஸ்...)

   குறிப்பு; கவிஞர் வைரமுத்துவின் நிகழ்ச்சி ஏற்பாடு; நண்பர் கவிஞர் சேதுவும் பாரதிகலை மன்றமும்.

    கவிஞர் வைரமுத்துவின் புலமையும் திறமையும் ஊரறிந்த உண்மை. அவரது தமிழுக்கு வில்லையில்லை. அதற்குமப்பால் அவர் கொஞ்சம் கர்வகாரர் என்று குறிப்பிடுவார்கள். காசு-பணத்தில் கறார் என்று அவரை குறைசொல்பவர்களும் உண்டு.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles