விழா  எடுத்துப்பார்...  

                            

      

      எந்த விஷயமானாலும் தெளிவாய் திட்டமிட்டு செயல்படுவதில் அவர் கறார் என்பது உண்மை. இது அவசர உலகம்.

    காற்று போக்கில்-போனால் நாம் காணாமல் போய்விடக்கூடும். காலவேகத்தில் நிலைத்து நிற்க திட்டமிடுதல் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

   குவைத் வந்தபோது –அவரிடம் எந்தவித கர்வத்தையும் பார்க்க முடியவில்லை. ரசிகர்களின் உண்ர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தார். கடைகளுக்கு விஜயம் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தினார். அவர்கள் தானே முன் வந்து தந்த பரிசுகளை மனம் கோணாமல் ஏற்றுக் கொண்டார். இவர் வலியவர் இவர் சிறியவர் என்று பாகுபாடு பார்க்காமல் பழகினார். பேச்சிலும், பேசும் விதத்திலும் ஒரு அளவுகோல் வைத்து, கண்ணியம், காக்க வேண்டும் என்பதில் அவர் கறாராக இருப்பதாகவே தெரிகிறது.

    எஸ்.வி.சேகர்:

   அரபுநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன்பு பல சிரமங்கள் இருந்தன. கலை நிகழ்ச்சிகளுக்கு விசா வாங்குவதும், அனுமதி பெறுவதும் மிகவும் சிரமமாயிருந்தது.  இது தவிர பயம் வேறு.

   ஒரு சமயம் துபாயில் `பிணம் தின்னி கழுகுகள்’ என்று மலையாள நாடகம் போட்டனர். அதில் இஸ்லாமை பற்றி தவறாக வருகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டு, அந்த நாடக கலைஞர்களை பத்திரமாய் `உள்ளே’ வைத்துவிட்டனர். பிறகு அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு கேரள அரசாங்கமே பெரும் பாடுபட்டது.

      துபாய் கொஞ்சம் ** என்பார்கள். அங்கே `சில’ விஷயங்களுக்கு அனுமதி உண்டு. அங்கேயே அப்படி என்றால் குவைத்தைப் பற்றி கேட்க வேண்டியதில்லை.

   செளதி, கத்தார், ஈரான், ஈராக் அளவிற்கு குவைத்தில் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் கூட வெளியூரிலிருந்து வந்து யாரும் தமிழ் நாடகங்கள் போட்டதில்லை. அதற்கான முயற்சிகளும் யாரும் எடுக்கவில்லை.

   ஈராக் சண்டைக்குப்பிறகு குவைத்தில் முதன்முதலில் நாடகம் போட்ட பெருமை எஸ்.வி.சேகருக்கே போய் சேரும்.

   பாரதிகலை மன்றம் அவரது நாடகத்தை போட முன்வந்தபிறகு-அவரது நாடக குழு முழுவதையும் அழைத்துவர இரண்டு பிரச்சனைகள் உதித்தன. ஒன்று –அத்தனை பேர்களுக்கும் விசா கிடைப்பது சிரமம். அதிலும் குறிப்பாய் நடிகைகளும் ரொம்ப சிரமம்.

   அடுத்தது –ஏர்டிக்கட்! அத்தனை பேர்களும் வந்துப் போகிற செலவு ஆளை சாப்பிட்டுவிடும். என்ன செய்யலாம் என்று யோசித்த போது சேகரே ஒரு யோசனை சொன்னார்.

    ``சிரமப்பட வேணாம். நான் மட்டும் வருகிறேன். எனது நாடக ஸ்கிரிப்ட் மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்புகிறேன். உள்ளூரில் திறமை இருப்பவர்களை வைத்து ப்ராக்டீஸ் பண்ணுங்கள். நான் வந்து ரிகர்சல் பார்த்து நாடகம் போட்டுவிடலாம்’’ என்றார்.

   அந்த மாதிரி அவர் ஏற்கனவே அமெரிக்காவில் நாடகம் நடத்தி கொண்டிருந்தார். அது நல்ல யோசனையாக படவே பாரதிகலை மன்றம் சரி என்று வேலைகளை ஆரம்பித்தது.

   சேகரின் பெரிய தம்பி நாடகம் உள்ளூர் கலைஞர்களால் ஒத்திகை பார்க்கப்பட்டது. சேகர் நான்கு நாள் முன்பே வந்து, அவர்களை தயார் பண்ணி இரண்டு நாட்கள் வெற்றிகரமாய் அரங்கேற்றினார்.

   முதன்முதலில் ஒரு தமிழ் நாடகம், ரிகார்ட் கலெக்‌ஷனில் குவைத்தில் அரங்கேற்றிற்று. என்னதான் ஒத்திகை பார்த்தாலும் உள்ளூர் கலைஞர்களுக்கு மேடையில் சேகரை பார்த்தாலே அலர்ஜி. அவரது வேகத்திற்கும்,டைமிங் ஜோக்குகளுக்கும், கூட நடிப்பவர்கள் ஈடு கொடுக்க முடியாமல் திணறுவார்கள்.

   சேகர் அவற்றையெல்லாம் தன் சமயோசித கமென்ட் அடித்து சரிபண்ணுவிடுவார். ரசிகர்களுக்கு அவைகள் போனஸ் ஜோக்குகளாக அமைந்தன.

    சேகர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வந்து நாடகம் போட்டார். அவரைத் தொடர்ந்து காத்தாடிராமமூர்த்தி, கிரேஸிமோகன், வரதராஜன் எல்லாம் வந்தனர்.

    சேகரின் நாடகத்தில் ஆழமான கருத்துக்களோ, கதையம்சமோ இல்லாவிட்டாலும் கூட மக்கள் வெகுவாய் ரசிக்கின்றனர். நாடகத்திற்கும் அப்பாற்பட்டு அவரது நகைச்சுவை பேச்சும், எளிமையாய் பழகும் விதமும் அனைவரையும் கவர்கின்றன.

   சினிமா கலைஞர்கள், நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே பின்புறமாய் வெளியே போய்விடுவதுதான் வழக்கம். இவர் அதற்கு விதிவிலக்கு. நாடகம் ஆரம்பிக்கும் முன்பு ஒரு முன்னுரை கொடுத்து ரசிகர்களை வசீகரிக்கிறார். நாடகம் முடிந்து-நேருக்கு நேர் நிகழ்ச்சி வைத்து, என்ன கேட்டாலும் பதிலளிப்பார். அதே மாதிரி அரங்கிற்கு வந்து படம் எடுப்பவர்களுக்கு ஈடு கொடுத்து, எல்லோரும் போன பின்புதான் அரங்கத்தில் விட்டு செல்வார்.

   ரசிகர்கள் தான் முக்கியம் என்றாலும் கூட அவர்களை நேருக்கு நேர் யாரும் சந்திப்பதில்லை சேகர் அதற்கு விதிவிலக்கு.

   மேடையில் என்றில்லை-குவைத்திற்கு வரும் போதெல்லாம் ரசிகர்கள் தங்கள் கடைகளுக்கெல்லாம் அவரை அழைப்பார்கள். சின்னக்கடை பெரியகடை என்று பார்க்காமல் எல்லோரையும் மதித்து போய் சந்தோஷப்படுத்துவார்.

  அந்த சந்தோஷம் அவரது நாடக வெற்றிக்கு பயன்படுவதும் உண்மை.

   சில விஷயங்களில் சேகரின் பிடிவாதம் மாற்ற முடியாத ஒன்று. ஒருவர் நன்றாக பழகினால் அவருக்கு முழு ஒத்துழைப்பும் தருவார். பார்ட்டி எசகுபிசகென்றால்-காலி பண்ணாமல் விடுவதில்லை.

   சேகர், தனக்கென்று செகரட்டரி வைத்துக்கொண்டு –அவர்மூலம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வரச் சொல்வதில்லை எல்லாம் நேரடி தொடர்பு குவைத்திலும் அப்படிதான்.

   என்னை மறைவான இடத்தில் தங்கவைத்து ரசிகர்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என் ரூமிற்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரட்டும்-போன் பண்ணட்டும் என்பார்.

   முதன் முதலில் நாடகம் போட்டபோது பாரதிகலை மன்றத்திற்கு திரைச்சீலைகள் இல்லை. சேகரே அவற்றை தயாரித்து கையோடு எடுத்து வந்துவிட்டார்.

   சேகரின் பலமா இல்லை பலவீனமா தெரியவில்லை.ஷாப்பிங் மனிதர் அசருவதேயில்லை. எந்த நாட்டிற்குப் போனாலும் பொருட்களை வாங்கி தள்ளிவிடுவார்.

   ஒரு சமயம் –அவர் குறித்த நேரத்திற்கு நாடக ரிகர்சலுக்கு வரவில்லை. என்னாயிற்று என்று அனைவரும் காத்திருக்க- நான்கு மணிநேரம் கழித்து அரக்கப் பரக்க ஓடி வந்தார்.

   அப்புறம் தான் தெரிந்தது. அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வந்த விஷயம்.

   ``ஏதாச்சும் தப்பு தண்டாவா’’ என்றேன் பதற்றத்துடன்.

    ``இல்லை எங்கள் காரை பஸ் இடித்து விட்டது. எங்கிட்ட மோதாதேன்னு சொல்லி போலீஸில் போய் புகார் கொடுத்துட்டு வரோம்’’ என்றார்.

    குவைத்திலிருக்கிற எங்களுகே போலீஸை கண்டால் அலர்ஜி. போலீஸ் ஸ்டேஷனை பார்த்ததுகூட இல்லை. வந்த இரண்டு நாளிலேயே சேகர் குவைத் போலீஸையும் பார்த்துவிட்டார்.

    ``ஒரு நாட்டிற்குப் போனால் எல்லாத்தையும் தானே பார்க்கணும்’’ என்பது சேகரின் கமென்ட்!

     எஸ்.வி.சேகரின் முதல் நாடகம் குவைத்தில் பாரதிகலை மன்றத்தாலும், அடுத்த நாடகம் சுதர்ஸனாலும் அரங்கேற்றப்பட்டது.

    லியோனி:

   சினிமா-டி.வியில் எப்படி போட்டி  எழுந்துள்ளதோ, அதே மாதிரி பட்டி மன்றங்களிலும் போட்டி எழுந்து, பெரிய அளவில் அலை அடித்து ஓய்ந்திருப்பதாகவே தெரிகிறது.

    சாலமன் பாப்பையாவின் வெற்றி இலக்கியம் என்றால். லியோனியின் வெற்றி அவர் எடுத்துக்கொள்ளும் சினிமா பற்றிய தலைப்புக்களில் இருக்கிறது. பட்டுக்கோட்டையா- கண்ணதாசனா, சினிமா பாடல்கள் இலக்கியம் ஆகுமா-ஆகாதா போன்ற பாமரர்களும் ரசிக்கும் தலைப்புக்கள் அவரது வெற்றி.

    குவைத்தில் லியோனியின் நிகழ்ச்சியை ஒரு அமைப்பு ஏற்பாடு செய்ய, அதற்கு முன்பே, அவரின் முன்னோடியான சாலமன் பாப்பையாவை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலமன் பாப்பையாவுக்கு நடுத்தர மக்கள் என்றால்.லியோனிக்கு நடுத்தர மற்றும் பாமர மக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

    அதனால்தானோ என்னவோ, பணம் விஷயத்தில் அவர் கறாராய் பேசிக்கொள்கிறார். ஒரு நிகழ்ச்சி என்றால் இவ்வளவு என கணக்கு. சினிமா கவர்ச்சியும் அவருக்குத் துணைபுரிகிறது.

    குவைத்திற்கு அவர் இரண்டு முறை தேதி கொடுத்து, கடைசியில் கோடை விடுமுறையில் வந்தார். அது விடுமுறை என்பதால் அவரது மனைவி, மகள் இருவரையும் துணைக்கு அழைத்துவந்தார். இவருடன் பட்டி மன்றத்தில் பேசுவதற்கு தன் சகாக்களான புலவர் பால்ராஜீம்,குயிலனும் கூட வந்திருந்தனர்.

   ஐந்துபேருக்கும் விசா, தங்கும் வசதி, சாப்பாடு விமான டிக்கெட் இவற்றுடன் இவர்களின் சம்பளம் எல்லாவற்றையும் நினைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முதலில் கொஞ்சம் தயங்கினார்.

   குவைத்தில் நிகழ்ச்சிகளை வெளியே திறந்த வெளியில் நடத்த அனுமதியில்லை. அரங்குக்குள்தான் நடத்த முடியும். அரங்கு எனும் போது அதிக பட்சம் 1200 பேர்களை உள்ளடக்கலாம்.

   லியோனி நிகழ்ச்சி எனும் போது, தொழிலாளர்கள் வந்தாலும், அவர்கள் ஒரு தினாருக்குமேல் டிக்கட் (ஒரு தினார்-தற்போது 143 ரூபாய்) வாங்க மாட்டார்கள். ஸ்பான்சர்கள் பிடித்து விழா செலவை கவனிக்க வேண்டும்.

     வந்தது வரட்டும் என்று ஏற்பாட்டாளர் களத்தில் இறங்கினார். லியோனி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

     பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு கலைஞர்கள் வந்தாலும் அவர்களை அழைத்துக்கொண்டு கடைவீதியில் ஒரு நகர்வலம் வருவது வழக்கம்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles