விழா  எடுத்துப்பார்...  

                            

      

      அந்த மாதிரி கடைகளுக்கு போவதால், ஒன்று பொதுமக்களுக்கு ``வி.ஐ.பி. வந்துவிட்டார்’’ என்று செய்திபரவும்.அடுத்து ஸ்பான்சரின் கடைக்கு பப்ளிசிட்டி மூன்றாவது –வருகிற கலைஞர்களுக்கும் கடைகள் மூலம் பரிசுபொருட்கள் குவியும்.

    லியோனி என்றில்லை, மற்ற கலைஞர்கள் கூட ``இப்படி நகர்வலம் வந்தால் இங்கேயே எங்களை பார்த்துவிட்டு போய் விடுவார்கள். அரங்குக்கு டிக்கட் வாங்கி வரமாட்டார்கள்’’ என்று தயங்கினர்.

    ``அப்படியெல்லாமில்லை. உங்களை கூட்ட நெரிசலில் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் திருப்தி ஏற்படாது. மறுநாள் நிகழ்ச்சியில் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் ஏற்படும் பாருங்கள்’’ என்று அழைத்துச் செல்வோம்.

   இந்த ஃபார்முலா குவைத்தைப் பொருத்தவரை நிஜம். இங்கே லோக்கல் டெலிபோன் கால் இலவசம் என்பதால் விஷயம் சட்சட்டென பரவிவிடுவது வாடிக்கை.

   லியோனி நிகழ்ச்சிகளில் கலகலவென பேசினாலும்கூட, நேரில் கொஞ்சம் ரிசர்வ்டைப்பாகவே தெரிகிறார். ஜாஸ்தி பேசுவதில்லை. கொஞ்சம் நாணத்துடன்கூடிய சிரிப்பு. அவரது மகள் அதற்கு நேர் எதிர், கடி ஜோக்குகளாகச் சொல்லி கடிக்கிறார். லியோனியின் மனைவியும், மகளும்கூட பட்டிமன்றத்தில் பேசுவதுண்டாம்.

   லியோனிக்கு தென் தமிழகத்து ரசிகர்கள் அதிகம். அன்றைய நிகழ்ச்சியில் அரங்கு நிறைவதற்கு அவர்கள் பெரிதும் உதவினர். குவைத்தில் திருச்சி,தஞ்சை,புதுக்கோட்டை,மதுரை மக்கள் அதிகம்.

   நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் லியோனி தன் சினிமா அனுபவம்,கிளாப் அடிப்பது போன்ற விஷயங்களை நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார். பட்டி மன்றத்தில் பால்ராஜ் ஒரு பக்கமும், குயிலன் மறுபக்கமும் எதிர்த்து பேசினர். இருவருமே பார்வைக்கு சாதாரணமாய் இருந்தாலும் பேச்சில் வெடித்து தாக்குகின்றனர்.

   இடைவேளையில் –லியோனி-அதே தலைப்பை (சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா இல்லையா!) ரசிகர்களிடம் கொடுத்து அவர்களில் சிலரையும் பேசச்சொல்லி, அவற்றையும் தன் தீர்ப்பில் கோடிட்டு காட்டியது ரசிகர்களை கவர்ந்தது. நிகழ்ச்சி பனிரண்டு மணிவரை நீண்டும் கூட கூட்டம் கலையாதது லியோனியின் வெற்றி.

குறிப்பு:

  லியோனி, சின்னிஜெயந்த் இருவரின் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு; நண்பர் சியாரா சுதர்ஸன்.

    சின்னிஜெயந்த்:

   கூட்டத்தை கட்டிப்போடுவது என்பது சாதாரண விஷயமில்லை. நிகழ்ச்சியில் கொஞ்சம் போரடித்தாலும் மக்கள் எழுந்து வெளியே போவதும், விசிலடிப்பதுமாயும் இருப்பார்கள்.

   கூட்டத்தை அமரவைக்கும் வித்தை தெரிந்தவர்களில் சின்னிஜெயந்தும் ஒருவர்.

   மிமிக்ரி செய்யவேண்டி சின்னிஜெயந்த தன்னுடன் படவாகோபி. என்பவரையும் அழைத்து வந்திருந்தார். சின்னி ஒரு கால கட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர். இடையில் காதல்,கால்ஷீட் குளறுபடி, கொஞ்சம் மூர்க்க குணம் இவற்றால் சோடை போய் மறுபடியும் ஃபீல்டுக்கு வந்திருப்பவர்.

   மேடையைக் கொடுத்துவிட்டால் போதும் மனிதர் மூன்று மணிநேரம் சமாளித்துவிடுகிறார். குவைத்திலும் அப்படித்தான் வழக்கமான் ரஜினி,கமல்,டைனோசர் மிமிக்ரியுடன், வாரியார், நாகூர் அனிபா பாடல்கள் இவரது ஸ்பெஷாலிடி.

  சின்னியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி `சல்பேட்டா, குல்ஃபா’ என்று அவர் பேசும் குஷாலானை பாஷை! அதற்கு அவருக்கே அர்த்தம் தெரியாது. மேடையில் மிமிக்ரி பண்ணும் போதே எம்.ஜி.ஆர். பாடலுக்கிடையில், கீழே அரங்கில் இறங்கி முதிய பெண்ணை அரவணைப்பு, குழந்தையைத் தூக்கி கொஞ்சல் என அசத்துகிறார்.

   சின்னி, தனக்கு ஹோட்டல் ரூம்தான் வேணும் என்று கண்டிஷன் போடவில்லை. அவருக்கு வந்த கூட்டத்தை பார்த்து மயங்கின இந்திய தூதுவர் நாயர். மறுநாள் சின்னியை அழைத்து பார்ட்டி கொடுத்து பாராட்டினது சின்னிக்கே நம்பமுடியாத அதிர்ச்சி. ``சார் இந்த பாராட்டை சென்னைக்கு கால்போட்டு என் மனைவியிடம் சொல்லுங்க. நான் சொன்னா நம்பமாட்டா!’’ என்று சின்னி அம்பாசிடரை வைத்து வீட்டில் பேர் வாங்கிக் கொண்டார். எல்லா வீட்டிலும் இதே நிலமைதான் போல!

       காத்தாடி ராமமூர்த்தி:

   செலவு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, காத்தாடி மட்டுமே குவைத்திற்கு வந்திருந்தார். நாடகத்தின் பிற பாத்திரங்களை குவைத்தில் உள்ளவர்களே வழக்கம் போல சிறப்பாக செய்தனர். நாடகம் மாபெரும் வெற்றி!

   முப்பது வருட நாடக அனுபவமும், 4500 முறை மேடை ஏறியவருமான காத்தாடி ரொம்ப ரொம்ப சிம்பிள். ``எனக்கென்று ஹோட்டலில் ரூம் வேணாம். நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது தங்கிக்கொள்கிறேன். சைவ சாப்பாடு போதும்’’ என்று கூறிவிட்டார்.

   காத்தாடி ஏற்கனவே அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டிருக்கிறார், இதுவரை `டிவி’ யிலும் 25 சீரியல்கள் செய்துவிட்டார். பாக்யம் ராமசாமியின் அப்புசாமி- சீதாபாட்டி சீரியலும், பஞ்சு-பட்டு –பீதாம்பரம் சீரியலும் மிகவும் பிரபலம்.

   ``எப்போதும் காமெடி நாடகங்கள் தானா, சீரியஸ் நாடகங்கள் போடக்கூடாதா?’’ என்று கேட்டால், சமீபத்தில் பாம்பே சாணக்யாவுடன் சேர்ந்து அப்படி ஒன்று போட்டேன். நாடகம் நல்லாருக்கு என்று ரசித்தவர்கள் கடைசியில் நல்லாதான் இருக்கு. ஆனால்,உனக்கு ஏன் இதெல்லாம்? என்று சபித்துவிட்டனர், நான் என்ன செய்வது? என்கிறார்.

   அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது குவைத் அனுபவங்கள் பற்றி கேட்டேன்.

  ``அமெரிக்கா, சிங்கப்பூர் என்றால் நம்மவர்கள் நம் கலாச்சாரத்தை மறந்து அப்படியே அந்த நாட்டு கலாச்சாரத்துடன் ஒன்றிப் போய்  விடுகின்றனர். ஆனால் குவைத்தில் நம்மவர்கள்- நம்மவர்களாகவே இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மூரின் அவசர ஆர்ப்பாட்டங்களில், நாடகம், நாட்டியம், பஜன், சுலோகம், பாட்டு, திருப்புகழ் என்று நினைத்து பார்க்கக்கூட நேரமில்லை’’

   ``ஆனால், குவைத் குழந்தைகள் இவற்றை தவறாமல் கற்றுக்கொண்டிருப்பதை பார்க்கும்போது சந்தோஷம் எழுகிறது.

   ``நம்மூரில் கார் பயணத்தில் `வேகமாப் போ.... வேகமாப் போ’ என்று விரட்ட வேண்டியிருக்கும். ஆனால், இங்கே `மெல்லப்போங்கள்!’ என்று கெஞ்ச வேண்டிய நிலமை. அந்த அளவிற்கு வாகனங்கள் பறக்கின்றன. அதுவும் 120 கி.மீ.க்கு மேல் பாய்ந்தால் காருக்குள் அபாய மணி அடிக்கிறது. அதை கேட்கும் போதே நடுக்கம். ஆனால், அவர்களுக்கு அது சகஜமாயிருக்கிறது.

   ``அடுத்து நான் முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் ஹிந்தி வட மாநிலத்தவர், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பெரும்பாலும் கடைகளிலும் வெளியேயும் ஹிந்திதான். ஹிந்தி தெரியாததால் நான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். அரபிக் மொழி படிக்காவிட்டாலும் பரவாயில்லை. அரபு நாடுகளில் ஹிந்தி அவசியம் தெரிந்து கொண்டாக வேண்டும் போலிருக்கிறது.

    ``நம் அரசியல்வாதிகள் நம்மவர்களின் மீது கொஞ்சம் கருணை காட்ட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வேண்டுமானால் ஹிந்தி தேவையில்லாமல் இருக்கலாம். வெளியே செல்பவர்களுக்கு ஹிந்தி ரொம்ப ரொம்ப தேவை. அதை படிக்காமல் போனதில் வெட்கப்படுகிறேன்.’’

     இந்த நிகழ்ச்சி ஏற்பாடு: சின்மயா அமைப்பு.

        ரவி தமிழ்வாணன்:

   லண்டன் புத்தக கண்காட்சி –அமெரிக்க பயணத்தின் இடையே மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணன் குவைத்திற்கும் ஒரு விசிட் அடித்திருந்தார்.

   லேனா தமிழ்வாணன் அளவிற்கு இவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் கூட, லேனாவின் புகழும், நிழலும் இவருக்கும் பெரிதும் கை கொடுப்பது நிஜம்.

   லேனாப் போல மேடை பேச்சு அனுபவம் ரவிக்கு இல்லை. ரேடியோ எப்.எம்.-ல் நிகழ்ச்சிகள் தருவதோடு சரி, இருந்தும் கூட தெளிவாய், ஆணி அடித்தது போல ரவி வெளிப்படுத்தின கருத்துக்களுக்கு குவைத் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு!

   `ப்ரண்ட்லைனர்ஸ்’ ஆங்கில புத்தக குழு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் ரவி சிறப்பாக உரையாற்றினார்.

   ரவி தமிழ்வாணன் பேச்சின் சில பகுதிகள்.

   என் அப்பா தமிழ்வாணனின் மறைவிற்கு பிறகு குடும்பமே கதிகலங்கி போயிற்று. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைப்பவர்கள் அவரைப் பார்த்து அவசியம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கின அவர். தனக்கு நெஞ்சு வலி வந்த போது, டாக்டர் கொடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.

   அதை அலட்சியப்படுத்தி உரிய சிகிச்சையும் ஓய்வும் எடுக்காமல் உழைத்ததின் விளைவு ஒரு இரண்டு நிமிட அவகாசத்தில் இறந்துப் போனார். அது அவருக்கு மரண வயது இல்லை.

   உழைப்பும், கடுமையான முயற்சியும் முன்னேற்றத்திற்கு முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியம் நமது உடல், நமது ஆரோக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியம்தான் வளர்ச்சிக்கு உதவ முடியும்.

   ஆகையால் கடும் உழைப்பாளிகளே ...உங்கள் உடல் நலத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள்.

   அதுமாதிரி பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமன்றி குடும்பத்திற்கும் மனைவி, குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தந்துவிட முடியாது.

   பெரும்பாலான குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் வர காரணமே கணவன் மனைவி சரிவர பேசிக் கொள்ளாததும், கலந்து பேசாததும்தான். குடும்பத்தின் பிரச்சனைகளை அன்றாடம் கலந்து பேசுங்கள். எந்த வித மனஸ்தாபமானாலும் ஓடிப்போவது நிச்சயம்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles